Friday, December 25, 2009

மார்கழி மஹோத்ஸவம் - 4 (கோதாஸ்துதி)


நாகேசய: ஸுதநு பக்ஷிரத: கதம் தே
ஜாத: ஸ்வயம்வரபதி: புருஷ: புராண:!
ஏவம் விதா: ஸமுசிதம் ப்ரணயம் பவத்யா:
ஸந்தர்சயந்தி பரிஹாஸகிர: ஸகீநாம்!!

அழகிய திருமேனியுடையவளே!, கொடிய பாம்பில் படுப்பதும், பறவையை வாகனமாகவும் கொண்ட முதுமை கொண்ட ஒருவரை நீ உன் மணாளராக எப்படி வரித்தாய்? என்றெல்லாம் தோழிகள் பரிஹாஸம் செய்யும் சொற்களைத் தாண்டி நீ வரித்திருக்கிறாய் என்றால் அது உனக்கு உள்ள காதலையன்றோ காட்டுகிறது.

நேரடிப் பொருள் இப்படியாக இருப்பினும், ஸ்ரீதேசிகர் இங்கே சொல்லியிருப்பது பின்வருமாறு. கோதை நீ உன் பெருமைக்கு ஏற்ற வரனையே வரித்திருக்கிறாய் என்பது தான். எப்போதும் கைங்கர்யம் செய்பவனாகவும், அழகு, குளிர்ச்சி, மேன்மை, மற்றும் உயர்வு பொருந்திய ஆதிசேஷனை படுக்கையாகவும்ம், வேதஸ்வரூபன் என்று கூறப்படும் சகல சக்திகளையும் உடைய கருடனை வாஹனமாகவும் கொண்ட பரம்பொருளை வரனாக வரித்திருக்கிறாய் என்கிறார்.


த்வத் புக்த மால்ய ஸுரபீக்ருத சாருமெளளே:
ஹித்வா புஜாந்தா கதாமபி வைஜயந்தீம்!
பத்யுஸ் தவேச்வரி மித: ப்ரதிகாத லோலா:
பர்ஹாத்பத்ர ருசி மாரசயந்தி ப்ருங்கா:!!

சகல லோகங்களுக்கும் தலைவியானவளே!, பெருமாள் தனது திருமார்பில் வைஜயந்தி என்னும் மாலையை அணிந்திருக்கிறார். அந்த வைஜயந்தியின் நறுமணத்தால் அம்மாலையின் மீது வண்டுகள் மொய்த்துக் கொண்டிருந்தன. நீ சூடிக்கொடுத்த மாலையை பெருமாள் தனது முடியில் சூடியதால் மணம் மிகுந்த திருமுடிகளாயிற்று. இதன் காரணமாக வைஜயந்தி மாலையைச் சுற்றி வந்த வண்டுகள் அதிலிருந்து அகன்று பெருமாள் தலையில் சூடியிருக்கும், நீ சுடிக் கொடுத்த மாலையைச் சுற்றத் துவங்குகின்றன. அவ்வண்டுகள் அவ்வாறு சுற்றுவது மயில் தோகையால் பெருமாளுக்கு குடை அமைத்தது போல விளங்குகிறது.

ஆமோதவத்யபி ஸதா ஹ்ருதயங்கமாபி
ராகாந்விதாபி லளிதாபி குணோத்தராபி!
மெளளி ஸ்ரஜா தவ முகுந்த கிரிடபாஜா
கோதே பவத்யதரிதா கலு வைஜயந்தீ!!

கோதையே!, பெருமாள் அணிந்திருக்கும் வைஜயந்தி என்னும் மாலையானது எப்போதும் மணம் வீசக்கூடியதுதான், அவனது திருவுளத்துக்கு உவப்பானதுதான், நல்ல செம்மை நிறமும், மென்மையும் உடையதுதான். இத்துணை பெருமையுடயதாக அம்மாலை இருந்தாலும், அது பெருமாளுடைய திருமுடியில் இடம்பெறும் பேறு கிட்டவில்லை. ஆனால் நீ களைந்து கொடுத்த மாலையோ அவனது திருமுடியை அலங்கரித்து வைஜயந்தி மாலையின் தரத்தைத் தாழ்த்திவிடுகிறதே. நீ சூடிக்களைந்த மாலையைத் தலையில் தாங்கி மதிப்பளிக்கிறான் உனது மணாளன்.

த்வந்மெளளி தாமநி விபோ: சிரஸா க்ருஹீதே
ஸ்வச்சந்த கல்பித ஸபீதி ரஸ ப்ரமோதா:!
மஞ்ஜுஸ்வநா மதுலிஹோ விதது: ஸ்வயம் தே
ஸ்வாயாம்வரம் கமபி மங்களதூர்ய கோஷம்!!

பெருமான் தன் தலையில் அணிந்துள்ள, நீ சூடிக் கொடுத்த மாலையை வண்டுகள் சுற்றி வந்து தமது இஷ்டப்படி தேனைக் குடிக்கின்றன. அவ்வாறு அவை மகிழ்ச்சியுடன் தேனைப் பருகி, இனிமையாக ரீங்காரம் பாடுகின்றன. அப்போது அவ்வண்டுகள் ஏற்படுத்தும் ஒலியானது உனது சுயம்வரத்துக்கான மங்கள வாத்தியங்களின் முழக்கமாக இருக்கிறது.

தொடர்ந்து ஸ்துதிப்போம்

Wednesday, December 23, 2009

மார்கழி மஹோத்ஸவம் - 3 (கோதாஸ்துதி)




மாத: ஸமுத்திதவதீ மதிவிஷ்ணுசித்தம்
விச்வோபஜீவ்ய மம்ருதம் வசஸா துஹாநாம்!
தாபச்சிதம் ஹிம ருசேரிவ மூர்த்திமந்யாம்
ஸந்த: பயோதி துஹிது: ஸஹஜாம் விதுஸத்வாம்

தாயே!, நீ சந்திரனது இன்னொரு வடிவமானவள்.நீ விஷ்ணு சித்தரின் மகளாக அவதரித்தாய், சந்திரனோ மஹாவிஷ்ணுவின் மனதிலிருந்து தோன்றியதாக வேதம் கூறுகிறது. சந்திரன் உலகிலுள்ள எல்லோரையும் மகிழ்விக்கும் ஒளியைத் தருகிறான். நீ உனது வாக்கிலிருந்து வந்த அமுத மொழிகளாலும், உனது அழகிய திருமேனி தரிசனத்தாலும் உலகிலுள்ள எல்லோருடைய ஸம்ஸாரதாபத்தை போக்குகின்றாய். கற்றறிந்த பெரியவர்கள் உன்னை பார்கடலில் உதித்த மஹாலக்ஷ்மியின் சகோதரியாகச் சொல்கின்றனர். பாற்கடலில் பிறந்த சந்திரன் மஹாலக்ஷ்மிக்கு சகோதரன் என்றால் உனக்கும் சகோதரனன்றோ.

தாதஸ் து தே மதுபித: ஸ்துதிலேச வச்யாத்
கர்ணாம்ருதை: ஸ்துதிசதை ரநவாப்த பூர்வம்!
தவந்மெளளி கந்த ஸுபகா முபஹ்ருத்ய மாலாம்
லேபே மஹத்தர பதாநுகுணம் ப்ரஸாதம்!!

சிறிதளவே துதித்தாலும் வசப்படும் பெருமாளை, பலரும் செவிக்கு இனிமையான பலநூறு பாடல்கள் பாடி மகிழ்வித்தாலும், உன் தந்தைமட்டுமே 'பெரியாழ்வார்' என்று பெயர் பெற்றார். நீ சூடிக்கொடுத்த மலர் மாலைகளை பெருமாளுக்கு அளித்ததால் அல்லவா, அவருக்கு பெரியாழ்வார் என்ற பெயர் கிடைத்தது. பெருமாளுக்கு உன் மேல் இருக்கும் அன்பாலேயே மற்றவர்களுக்குக் கிடைக்காத அப்பெயரை உன் தந்தை பெற்றார்.

திக் தக்ஷிணாஸபி பரிபக்த்ரிமா புண்ய லப்யாத்
ஸர்வோத்தரா பவதி தேவி தவாவதாராத்!
யத்ரைவ ரங்கபதிநா பஹுமாந பூர்வம்
நித்ராளுநாஸபி நியதம் நிஹிதா: கடாக்ஷா:!!

தேவி, தெற்குப் பகுதியில் (ஸ்ரீவில்லிப்புத்தூரில்) நீ அவதரித்ததால் அத்திசை மிகவும் புண்ணியம் செய்ததாக, எல்லாவற்றிலும் மேம்பட்ட திசையாகிறது. ஸ்ரீரங்கப் பெருமான் உலக நன்மையை நினைத்தவாறே உறங்கினாலும், அவன் நீ அவதரித்த தெற்குத் திசையை உற்று நோக்கியவாறே உறங்குகின்றான். உனது அவதாரத்தால்தான் அவனது தெற்கு நோக்கிய பேறு கிட்டியது.

ப்ராயேண தேவி பவதீ வ்யபதேச யோகாத்
கோதாவரீ ஜகதிதம் பயஸா புநீதே!
யஸ்யாம் ஸமேத்ய ஸமயேஷு சிரம் நிவாஸாத்
பாகீரதீ ப்ரப்ருதயோசபி பவந்தி புண்யா:!!

விசேஷ காலங்களில் கங்கை போன்ற புனித நதிகள் கோதாவரி நதிக்கு வந்து வசிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. அந்த விசேஷகாலங்களில் கோதாவரி நதி தன்னிடத்தில் கூடும் மற்ற நதிகளை மட்டுமல்லாது உலகத்தையே தூய்மையாக்குகிறது. இவ்வாறு கோதாவரி நதி தூய்மையாக்குவது எங்கனம் என்று பார்த்தால் அது உனது பெயரைத் தாங்கியிருப்பதாலேயே என்று தெரிகிறது. உனது பெயரைத் தரித்ததால்தான் உலகனைத்தையும் தூய்மையாக்கும் சக்தி அந்நதிக்கு வாய்த்தது.

*********ஸ்துதி தொடரும்***********

Monday, December 21, 2009

மார்கழி மஹோத்ஸவம் - 2 (கோதாஸ்துதி)


முந்தைய பதிவு இங்கே!

அஸ்மாத்ருசா மபக்ருதெள சிரக்ஷிதாநாம்
அஹ்நாய தேவி தயதே யதஸெள் முகுந்த:!
தந்நிச்சிதம் நியமிதஸ் தவ மெளளிதாம்நா
தந்த்ரி நிநாத மதுரை: ச கிராம் நிகும்பை:!!

தேவி!, சாஸ்திரங்கள் அனுமதிக்காத பாகவத அபசாரங்களைச் செய்வதையே நெடுங்காலமாக கொண்டிருக்கிறோம், இருப்பினும் உனது நாயகனான பெருமாள் எங்களுக்கு அருள்புரிகிறான். தவறு செய்யும் எங்களுக்கும் பெருமாள் அருளுவதன் காரணத்தை கவனித்ததில், அதற்கான காரணம் நீ சூடிக் கொடுத்த பூமாலையால் அவர் வசப்பட்டிர்ருப்பதே என்று தெரிகிறது. சூடிக்கொடுத்த மாலை மட்டுமின்றி வீணையின் நாதம் போன்ற உன் குரலால் தீந்தமிழால் பிரபந்தமும் பாடித்துத் துதிக்கிறாய். உனது இந்த பாடல்களாலும், மலர் மாலையாலும் உன்குழந்தைகளாகிய எங்களை தண்டிக்காது அருள்புரிகிறார் பெருமாள்.


சோணாஸ்தரோபி குசயோரபி துங்கபத்ரா
வாசாம் ப்ரவாஹ நிவஹோபி ஸரஸ்வதீ த்வம்!
அப்ராக்ருதைரபி ரஸைர் விரஜா ஸ்வபாவாத்
கோதபி தேவி கமிதுர் நநு நர்மதாஸி!!

இதுவும் பல நதிகளின் பெயர்களைக் கொண்ட ஸ்லோகமாக இருக்கிறது, சிலேடையாகச் சொல்லியிருக்கிறார் தேசிகர்.

கோதே!, உனது அதரங்கள் செந்நிறமாகவும் (கங்கை), உயர்ந்த கொங்கைகள் உயர்ந்த மிடுக்குடனும் (துங்கபத்ரா), வாக்கில்/சொற்கள் சரஸ்வதியாகவும், உலக பந்தமற்ற பக்தியில் ரஜோ குணமற்றவளாகவும் (விரஜா நதி), நம்பெருமாளுக்கு இயற்கையாகவே உனது சொற்களால் பெருமாளுக்கு பரிஹாசமூட்டுபவளாக (நர்மதை) இருக்கிறாயல்லவா?.

வல்மீகத: ச்ரவணதோ வஸுதாத்மநஸ் தே
ஜாதோ பபூவ ஸ முநி: கவிஸார்வபெளம:!
கோதே கிமத்புதமிதம் யதமீ ஸ்வதந்தே
வக்த்ராரவிந்த மகரந்த நிபா: ப்ரபந்தா:!!


அம்மா கோதை, பூமியில் உள்ள மண்புற்று பூமாதேவியின் செவி/காது என்று வேதம் சொல்கிறது. நீ பூமிதேவியின் அம்சமாக இருப்பதால் புற்று உனக்கும் காதாகிறது. புற்றாகிய உனது காதில் தோன்றிய வால்மிகி மஹரிஷி அற்புதமான ராமாயணத்தை பாடி கவிச்சக்ரவர்த்தியானார். உனது காதில் தோன்றிய வால்மிகி முதன்மையும், தலைமையும் பெற்றார் என்றால், உனது தாமரையொத்த முகத்தில் தோன்றிய பிரபந்தங்கள் எங்களுக்கு அமிர்தமாக இனிப்பது என்ன ஆச்சர்யம்?.


போக்தும் தவ ப்ரியதமம் பவதீவ கோதே
பக்திம் நிஜாம் ப்ரணய பாவநயா க்ருணந்த:!
உச்சாவசைர் விரஹ ஸங்கமஜை ருதந்தை:
ச்ருங்காரயந்தி ஹ்ருதயம் குரவஸ் த்வதீயா:!!

கோதை, நீ பெண்ணானதால் ஆண்மகனான பெருமாளை பல்வேறு வகைகள் அனுபவித்து மகிழ்வதற்கு உனக்கு உரிமையும், கடமையும், முறையும் இருக்கிறது. ஆனால் உன் தந்தையான பெரியாழ்வார் போன்ற பெரியவர்கள் தாங்களும் நீ பெற்ற அந்த அனுபவங்களைப் பெறவேண்டும் என்றால் இயலுமா?. ஆகவேதான் அவர்கள் தங்களுக்கு இறைவனிடம் இருக்கும் பக்தியையே காதலாக்கி, காதலின் பல்வேறு நிலைகளான பிரிந்து வருதல், கூடுதல், தூதுவிடல் போன்றவற்றை அனுபவித்து அதனை பாடினர். ஆனால் உனது பெருமாளிடத்தான் இயற்கையான காதலின் மூலமாக எழுந்த அனுபவங்களை எங்களால் சொல்ல இயலுமோ?.

Wednesday, December 16, 2009

மார்கழி மஹோத்ஸவம் - 1

மார்கழி மாதம் பற்றி 2007ல் 4 பதிவுகள் இட்டேன். அதன் தொடர்ச்சியாக இன்னும் 3 பதிவுகள் இட நினைத்திருந்தேன், ஆனால் சில தவிர்க்க இயலாத காரணங்களால் அதனை அப்போது தொடர இயலவில்லை. தற்போது அதனை தொடர எண்ணம் இருக்கிறது, பார்க்கலாம்.

மார்கழி பற்றிய முந்தைய இடுகைகளின் லிங்க் கிழே!



"ஸ்ரீ தேசிக ஸ்தோத்ரமாலா" என்னும் ஸ்ரீ தேசிகரால் செய்யப்பட்ட ஸ்தோத்ரங்கள் பற்றிய திரட்டு ஒன்றினை நண்பர் ராகவ் உதவியால் படிக்கக் கிடைத்தது. மார்கழியில் கோதையை வழிபடுதல் சிறப்பல்லவா?, அதிலும் ஸ்ரீ தேசிகர் அருளிய ஸ்தோத்ரங்களால் நாச்சியாரை வணங்குதல் விசேஷம் என்று தோன்றுகிறது. ஆகவே "கோதாஸ்துதி" என்ற பெயரில் ஸ்ரீதேசிகர் அருளிய 29 ஸ்லோகங்களைப் ப்ளாக்கில் போடலாம் என்றிருக்கிறேன்.


செளந்தர்ய லஹரி போல விளக்கங்கள் சொல்லுமளவுக்கு எனக்கு இதில் பரிச்சயம் இல்லை. புத்தகத்தில் இருப்பதை மட்டும் தட்டச்சு செய்து சற்றே விளக்கங்களுடன் போடப் போகிறேன். மார்கழி 30 நாட்களில் ஒருமுறையானும் இந்த ஸ்லோகங்களை படித்து இறையருளை வேண்டுவோம்.

ஸ்ரீவிஷ்ணுசித்த குலநந்தந கல்பவல்லீம்
ஸ்ரீரங்கராஜ ஹரிசந்தக யோக த்ருச்யாம்!
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம்
கோதாமநந்யசரண: சரணம் ப்ரபத்யே!!

சாதாரணமாக இல்லங்களில் பிறக்கும் குழந்தையை வம்சம் தழைக்க வந்த குலக்கொடி, குலக்கொழுந்து என்றெல்லாம் இன்றும் பெரியவர்கள் சொல்லக் கேட்கிறோம். இங்கு ஸ்ரீதேசிகரும் அதே வார்த்தையைச் சொல்கிறார். பெரியாழ்வார் என்று போற்றப்படும் ஸ்ரீவிஷ்ணு சித்தரது குலக்கொடியாம் கோதை. அதிலும் நந்தன கல்பவல்லி என்று இந்திரனது உத்தியான-வனமாகிய நந்தவனத்தில் உதித்த, கேட்பவற்றையெல்லாம் கொடுக்கும் கற்பகவல்லிக் கொடி என்று நாச்சியாரை விளிக்கிறார். ஸ்ரீரங்க ராஜனையும் அடியாருக்கு எல்லாந்தரும் சந்தனமரம் போன்றவன் என்று கூறி, ஆண்டாள் என்னும் கற்பகவல்லிக் கொடி தவழும் ஹரிசந்தன மரமானது பார்க்கத் திகட்டாத பரிபூரணமாக இருக்கிறது என்று சொல்கிறார். பொறுமைக்கு உதாரணமாக பூமிதேவியைச் சொல்வது வழக்கம். அதையே ஸ்ரீ தேசிகரும், பூமிதேவியே கோதை நாச்சியாராக வந்தாளோ அல்லது ஸ்ரீமஹா லக்ஷ்மியே மற்றொரு திருவுருக்கொண்டு வந்தாளோ என்று நினைக்கத் தோன்றுகிறது என்று கூறி, வேறு கதியற்ற நான் கோதை நாச்சியாரைச் சரணடைகின்றேன் என்று கூறுகிறார்.

வைதேசிக: ச்ருதிகிராமபி பூயஸீநாம்
வர்ணேஷு மாதி மஹிமா ந ஹி மாத்ருசாம் தே!
இத்தம் விதந்தமபி மாம் ஸஹஸைவ கோதே
மெளநத்ருஹோ முகரயந்தி குணாஸ் த்வதீயா:!!

கோதே!, வேதங்களும் உனது பெருமையைக் கூறத்தொடங்கி வெற்றியடைய முடியாத அளவு பெருமையுடையவள் நீ. அப்படியான உன் பெருமைகள என் போன்ற சிற்றறிவினர்களது தோத்திரத்தில் கூறயிலாதென்பதை அறிவேன். ஆனாலும் உனது குணாதிசயங்கள் எனது மெளனத்தைக் கலைத்து பேசவைக்கும் ஆற்றலைக் கொடுக்கிறது. உனது கல்யாண குணங்கள் எனக்கு வலிமையளித்து உன் புகழைப் பேசவைப்பதால் உன்னைத் துதிக்க முயல்கிறேன்.

த்வத் ப்ரேயஸ: ச்ரவணயோ ரம்ருதாயமாநாம்
துல்யாம் த்வதீய மணிநூபுர சிஞ்ஜிதாநாம்!
கோதே த்வமேவ ஜநநி த்வதபிஷ்டவார்ஹாம்
வாசம் ப்ரஸந்ந மதுராம் மம ஸம்விதேஹி!!

கோதையம்பா!, உன்னைப் போற்றிப்பாடும் திறத்தையும் எனக்கு நீயே அருளவேண்டும். நீ நடந்து வருகையில் உன்கால் சிலம்பு ஏற்படுத்தும் ஒலியினால் மகிழும் பெருமாளுக்கு, நீயருளும் அந்த வாக்குத்திறனால் உன்னை நான் பாடுவது திருவமுதாய் இருக்கும். நீயெனக்கு அருளும் வாக்கு கேட்பவர்களுக்கு தெளிவாய், செவிக்கு இனிதாய் இருக்கும்படியாக அருள்வாய்.

க்ருஷ்ணாந்வயேந தததீம் யமுனா நுபாவம்
தீர்த்தைர் யதாவதவ்காஹ்ய ஸரஸ்வதீம் தே!
கோதே விகஸ்வர தியாம் பவதீ கடாக்ஷாத்
வாச: ஸ்ப்புரந்தி மகரந்தமுசள் கவீநாம்!!

கோதைப் பிராட்டியே!, க்ருஷ்ணனுடைய திருவிளயாடல்களால் பெயர் பெற்றது யமுனை நதி. அந்த கண்ணனின் புகழைப்பாடிய உனது பாடல்கள் (திருப்பாவை, நாச்சியார் திருமொழி), அதே கண்ணனின் சம்பந்தத்தால் பெருமை பெற்று விளங்குகின்றது. உனது பாடல்களின் மூலமாக ஆசார்யர்கள் தத்துவார்த்தங்களை உணர்ந்து அநுபவித்து ஞானம் பெறுகின்றனர். நாவன்மை பெற்ற உனது கடாக்ஷத்தால் ஆசார்யார்கள் சொல்வதில் தேன்-மழை போன்ற கருத்துக்கள் பிறந்து உலகை காக்கின்றன.

**ஸ்துதி தொடரும்**

Saturday, December 12, 2009

ஸ்ரீ மஹா பெரியவாளது வார்ஷிக ஆராதனை..

நடமாடும் தெய்வம், பரமேஸ்வரனின் சமீபத்தைய அவதாரம், அபார கருணா-மூர்த்தி என்றெல்லாம் பெருமையுடன் அழைக்கப்படும் ஸ்ரீ மஹா ஸ்வாமிகள் தனது 13ம் வயதில் ஸன்யாசம் பூண்டு உலக மக்களின் நன்மைக்காவே வாழ்ந்தவர். அவரது 100 வருட பூலோக வாசத்தில் பலமுறை ஆஸேது-ஹிமாசலம் பலமுறை நடைப்பயணமாகவே யாத்ரை செய்து, ஆங்காங்கே த்ரிபுர சுந்தரி, ஸ்ரீசந்திர மெளலி பூஜைகள் செய்து இறையருளை பாரதமெங்கும் நிறையச் செய்தவர்.இன்று அவரது ஆராதனை தினம். காலையில் இருந்தே மனது பழைய தரிசனங்களை அசை போடுகிறது.



பெரியவாளை தரிசிக்கச் சென்றால், 2-3 நாட்கள் அவருடனே இருந்து அருள் மழையில் நனைந்து வருபவர் என் தந்தை. 1990க்கு மேலேயே தரிசன நேரத்தைக் குறைத்துக் கொண்டுவிட்டார் ஆசார்யாள். முன்பு போல் எப்போதும் அவரருகில் இருக்க இயலவில்லைஎன்று மிகுந்த விசனம் கொள்வார். இடையிடையில் மடத்திற்குச் சென்று வருபவர்கள் அவரது உடல் நிலை பற்றிச் சொல்வதைக் கேட்கும் போதும், ஏதோ நமது இல்லத்தில் ஒருவர் உடல் நலமின்றி வருந்துவது போன்ற மனநிலையை உணர்ந்திருக்கிறேன். 16 வருஷங்களுக்கு முன் தாய்-தந்தையுடன் காஞ்சி சென்று தரிசனம் செய்த பிறகு,ஒரு வருஷமாக பெரியவாளது தரிசனம் வாய்க்கவில்லை. காஞ்சி சென்று 3 நாட்கள் தங்கி தரிசனம் செய்து திரும்பினோம். முதல் நாள் தரிசனம் செய்த போது, காஷ்ட-மெளனத்திலும்,நிஷ்டையிலுமே பெரியவா இருந்ததாகத்தான் தோன்றியதே தவிர, அவருக்கு உடல் நலக்குறைவு என்றோ, தள்ளாமையினால் பேச, உட்கார இயலாது இருக்கிறார் என்றோ தோன்றியது,ஆயிற்று இரண்டாம் நாளும் தரிசனம் செய்து பாத பூஜை, பிக்ஷாவந்தன பிரசாதம் எல்லாம் வாங்கிக் கொண்டு திரும்பினோம். மறுநாள் தரிசனம் முடித்து சாயரக்ஷை கிளம்பி சகோதரியைப் பார்க்கச் செல்வதாக் உத்தேசம். ' நாளைய தரிசனத்தின் போது நம்மிடம் பெரியவா ஒரு வார்த்தையாவது பேசுவாளாடா?, என்னதான் அவாளை த்ருப்தியா தரிசனம் செய்தாலும், அவரது குரலைக் கேட்காது திரும்பிச் செல்ல நேருமோ' என்றெல்லாம் சொல்லியவாறு படுத்தார்.

மறுநாள் தரிசனம் செய்யச் சென்றோம், கூட்டம் அதிகமில்லை. பெரியவா தரிசனத்தின் போது என்-தந்தை கண்களில் நீர் மல்க நிற்கிறார், 'க்ஷேமமாக இருப்பாய்,போய்ட்டு வா' என்று உடைகளுக்குள் இருந்த கைகளை விலக்கி ஆசியளித்தார். இதுவே கடைசி தரிசனம் என்பதை நாங்கள் யாரும் நினைத்தும் பார்க்கவில்லை. பெரியவா ஆசிர்வாதம் செய்தார், 2 வார்த்தைகள் பேசினார் என்கிற பரம-த்ருப்தியுடன் காத்திருந்து தீர்த்தப் பிரசாதம் பெற்றுத் திரும்பினோம்.

1994ம் ஆண்டு, நான் அலுவலக விஷயமாக திருக்கோவிலூருக்குச் சென்றிருந்தேன். அன்று சனிக்கிழமை, அலுவலக வேலைகளை மதியத்துடன் முடித்துக் கொண்டு விழுப்புரம் சென்று பெரியவாளது பூர்வீக இல்லத்தை விட்டு, மறுநாள் ஞாயிறன்று காஞ்சியில் பெரியவாளை தரிசனம் செய்ய நினைத்திருந்தேன். மாலை 6 மணி சமயத்தி விழுப்புரத்தை அடைந்த நேரத்தில் பெரியவா முக்தியான செய்தியை அறிய நேர்ந்தது. 1994ம் ஆண்டு, உத்தராயண புண்யகாலம், மார்கழி மாதம், க்ருஷ்ண பக்ஷ, சர்வ ஏகாதசி (ஜனவரி 8ம் தேதி), மதியம் 2.50 மணிக்கு ஜகத்குரு என்றழக்கப்பட்ட ஸ்ரீ பெரியவா ஈசனுடன் இணைந்தார். வருஷங்கள் சென்றுவிட்டன, ஆனால், அன்றிரவே காஞ்சி சென்று அவரது திருமேனி தரிசனம் செய்ததும், பின்னர் நடந்த மஹா-அபிஷேக, ஆராதனைகளில் கலந்து கொண்டதும் இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது.


முக்தி க்ஷேத்ரமான காஞ்சியில் ஸ்ரீ பெரியவாளது அதிஷ்டானத்தில் இன்று மிக விமர்சையாக ஆராதனை நடக்கிறது. மடத்தின் எல்லாக் கிளைகளிலும் ஆராதனை சிறப்பாக நடைபெறுவதாகத் தெரிகிறது. அருகில் இருக்கும் கிளைகளிலோ, அல்லது அவரவர் இல்லத்தில்பெரியவாளை த்யானித்து சித்த சுத்தியும், ஞான வைராக்யமும் சித்திக்க வேண்டிடுவோம்.


அபார கருணா ஸிந்தும் ஞானதம் சாந்த ரூபிணிம்
ஸ்ரீ சந்திர சேகர குரும் ப்ரணமாமி முதான்வஹம்



ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர

Wednesday, December 2, 2009

ஸ்ரீ தத்தாத்ரேயர்....

இன்று தத்தாத்ரேய ஜெயந்தி. கலியில் மக்கள் உய்ய வேண்டும் என்பதற்க்காகவே மும்மூர்த்திகளும் ஒன்று சேர்ந்து ஆச்சார்ய வடிவாக வந்ததே ஸ்ரீ தத்தாத்ரேய ரூபம். பல தெய்வங்களை வழிபட்டாலும் எல்லா தெய்வங்களும் அந்த பரபிரம்ம ஸ்வரூபமே. சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என்ற முத்தொழிலை நடத்தும் மும்மூர்த்திகளும் பரபிரம்மத்தின் மூன்று முகங்களே. இந்த கருத்தைச் சொல்ல வந்ததுதான் ஸ்ரீ தத்தாத்ரேய அவதாரம். மற்ற எல்லா அவதாரங்களுக்கும் ஆரம்பம், முடிவு உண்டு, ஆனால் இந்த அவதாரத்திற்கு முடிவு கிடையாது. மார்க்கண்டேயனைப் போல, ஹனுமனைப் போல தத்தாத்ரேயரும் சிரஞ்சீவி. இவரைப் பற்றி சிறிது அறிவோமா?.




அத்ரி என்று ஒரு மஹரிஷி, இவரது மறுபாதியே அனுசூயை. இவர்கள் தமக்கு புத்திர பாக்கியம் வேண்டி தவமிருந்தனர். அப்போது மும்மூர்த்திகளும் அவர்கள் முன்பு தோன்றி, தாங்கள் மூவரும் அத்ரி-அனுசூயைக்கு மகனாகப் பிறப்பதாக வாக்களிக்கின்றனர். அவ்வாறு தோன்றியவரே தத்தாத்ரேயர். மும்மூர்த்திகளும் தானே வந்து அத்ரி-அனுசூயைக்கு மகனாக பிறந்தமையால் 'த(3)த்த' என்ற பெயர் வந்ததாகச் சொல்வர். இவரது இன்னொரு பெயர் ஆத்ரேயர், அதாவது அத்ரியின் புதல்வர். ஆகவே தத்தாத்ரேயர் என்று இரண்டும் சேர்த்துக் வழங்கப் பெறுகிறார். இவர் பிறந்தது மார்கழி மாதத்து பெளர்ணமி, மிருகசீர்ஷ நக்ஷத்திரம். இந்த அவதாரம் நடந்த ஸ்தலம் சுசீந்திரம் என்றும் கூறப்படுகிறது. ஸ்தானுமாலையனாக இறைவன் இங்கே இருக்கிறார்.

யாயாதி ராஜ வம்சத்தில் வந்த கர்த்தவீர்யார்ஜுனன் தத்தரது சிஷ்யர்களுள் ஒருவன். இவனது குல-குரு கர்க்க மஹரிஷியின் மூலம் தத்தாத்ரேயரைப் பற்றி அறிந்து அவரை நோக்கித் தவமிருந்து வரங்களைப் பெறுகிறான். வரங்களை அளித்து அவனுக்கு தர்மோபதேசமும் செய்விக்கிறார் தத்தாத்ரேயர். இந்த கர்த்தவீர்யார்ஜுனனே பின்னாளில் பரசுராமனால் அழிக்கப்படுபவர். இன்றும் களவு போன பொருட்கள் கிடைக்க கர்த்த வீர்யார்ஜுன மந்திரம் என்ற மந்திரத்தை ஜபம் செய்வர். இந்த மந்திரத்தின் ரிஷி தத்தாத்ரேயரே. தத்தாத்ரேயருக்கு ஆத்ம ஞானமாக விளங்குபவள் அன்னை திரிபுரசுந்தரியே. அவளே தத்தாத்ரேயரின் மூன்று முகங்களாக விளங்குகிறாள். தத்தாத்ரேயர் தான் குருவாக இருந்து பரசுராமருக்கு ஸ்ரீவித்யா உபாசனையை அளித்தவர்.


பரபிரம்ம வஸ்துவே மும்மூர்த்திகளாக அருள் புரிகிறது என்பது வேதாந்த சித்தாந்தம். மூன்றாகத் தோன்றிய ஒன்றே ஞான வைராக்கிய சம்பன்னரான ஸ்ரீ தத்தாத்ரேயர். அவதூதரான இவருக்கு தண்டம், கமண்டலம், காஷாய வஸ்த்ரம் போன்றவை கிடையாது. பாரத்தின் பல இடங்களிலும் பாதுகைகளில் இவரை தியானித்து வணங்கக் கோவில்கள் இருக்கிறது. உத்ரப்பிரதேசத்தில் "குரு மூர்த்தி" என்றாலேயே அது தத்தரைக் குறிப்பதாக இருக்கிறதாம். பிரயாகையில் இவரது கோவில் இருப்பதாக தெரிகிறது. அதேபோல இமாலயத்தில், ஆத்ரேய மலைப்பகுதியில் ஒரு குகையில் பலகாலம் தத்தர் தவம் செய்ததாகவும், அந்த குகையின் பெயரே தத்த குகை என்றும் படித்திருக்கிறேன். இதேபோல ஸஹ்யமலையில் காவிரி உற்பத்தி ஸ்தானத்திற்கு அருகிலும், சித்ரதூர்க்கா மலையிலும், குல்பர்கா அருகில் கங்காப்பூர் என்னும் இடத்திலும் இவர் தவம் செய்த குகைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இங்கே கர்னாடகாவில் நேற்று முதல் மூன்று நாட்கள் தத்த ஜெயந்தி கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. மைசூரில் கணபதி சச்சிதானந்த ஸ்வாமிகள் தமது தத்த பீடத்தில் மிக விமர்சையாக தத்த ஜெயந்தியை கொண்டாடுகிறார்.


தமிழகத்தில் சேந்தமங்கலத்தில் சுயம்பிர்காச அவதூத ஸ்வாமிகள் ஸ்ரீ தத்தரைப் பிரதிஷ்ட்டை செய்து வழிபட்டிருக்கிறார், இன்று அந்த இடமே, தத்தகிரி குகாலயம் என்று வழங்கப்படுகிறது. இங்கே விமர்சையாக தத்த வழிபாடு நடக்கிறது. புதுக்கோட்டையில் சாந்தானந்த ஸ்வாமிகள் புவனேஸ்வரி அதிஷ்ட்டானத்திலும், ஸ்கந்தகிரி (சேலம் அருகே) தத்தருக்கு சன்னதி அமைத்திருக்கிறார். இதேபோல செங்காலிபுரத்தில் ராமானந்த பிரம்மேந்திரர் என்னும் யதி, ஸ்ரீ தத்தருக்கு ஆலயம் அமைத்திருப்பதாகத் தெரிகிறது.


நக்ஷத்திரமாலிகா என்ற ஸ்லோகங்களில் இவர் பதினாரு இடங்களில் இருந்தக் கூறப்பட்டிருக்கிறது. அதன்படி, கோதாவரிக்கு வடக்கே சிம்ம பர்வதத்தில் ஜனித்து, மாயாபுரியில் நித்திரை செய்து, கங்கையில் ஸ்னானமும், கந்தர்வ பட்டணத்தில் தியானமும், குரு-க்ஷேத்திரத்தில் ஆசமனமும், கர்நாடகத்தில் காலை-சந்தியும், கோலாபுரத்தில் பிக்ஷையும், பாஞ்சாலத்தில் உணவும், தூங்காதீரத்தில் பானமும், பத்ரியில் புராண சிரவணமும், ரைவத பர்வதத்தில் இளைப்பாறுதலும், மேற்குக் கடற்கரையில் சாயரக்ஷை சந்தியும் செய்வதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஸ்ரீ தத்தர் நிர்குண உபாசகர்களுக்கு ஸத்குருவாகவும், யோகிகளுக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறார். இவரை நினைப்பதாலேயே பக்தர்களின் சங்கடங்கள் விலகியோடும் என்று சொல்லப்படுகிறது. இவரை உபாஸித்தால் ஞான மார்க்கத்தில் ஈடுபாடும், தீவிர வைராக்யமும் சித்திக்கும் என்று கூறப்படுகிறது. நாமும் ஞான-வைராக்கியம் சித்திக்க அவரை பிரார்த்திப்போமாக.

கோரக்ஷாத்யை: முய ஸுசிஷ்யை: பரிவீதம்

கோ-விப்ராணாம் போஷணஸக்தம் கருணாப்திம்

கோ-லக்ஷ்மீ சாம்புஜப கிரிஜா ஸகரூபம்

தத்தாத்ரேய ஸ்ரீபாத பத்மம் ப்ரணதோஸ்மி.

கோரக்ஷர் போன்ற முக்கிய சிஷ்யர்களால் சூழப்பட்டவரும், பசுக்களையும், பிரம்மத்தை அறிந்தவர்களையும் காப்பதில் தீவிரமாக இருப்பவரும், கருணைக்கடலாகவும், ப்ரம்ம-விஷ்ணு-சிவனது உருவத்தில் இருப்பவருமான தத்தாத்ரேயரின் பாதகமலங்களை வணங்குகிறேன்.