Wednesday, March 25, 2009

கோச்செங்கட் சோழ நாயனார்

சிவ கணங்களில் புஷ்பதத்தன், மாலியவான் என்று இருவர் இருந்தனர். அவர்களுக்குள் தானே சிவத் தொண்டில் சிறந்தவர் என்ற எண்ணம் இருந்தது. ஒரு நாள் நீண்ட விவாதத்தின் முடிவில் ஒருவருக்கு ஒருவர் சாபம் கொடுத்துக் கொண்டனர். புஷ்பதத்தன் மாலியவானை சிலந்தியாகப் பிறக்க சபிக்கிறான். அதேபோல், மாலியவான், புஷ்பதத்தனை யானையாக சபிக்கிறான். காலக் கிரமத்தில் இவ்விருவரும் சோழ வளநாட்டில், காவிரியாற்றின் கரையில் திருவானைக்காவில் என்னும் இடத்தில் சிலந்தியாகவும், யானையாகவும் பிறக்கின்றனர். திருவானைக்காவில் காவிரிக்கரையில் ஒர் வெள்ளை நாவல் மரத்தின் கீழே ஒரு சிவலிங்கம் இருந்ததாம்.

யானையாகப் பிறந்த புஷ்பதத்தன் தனது முற்பிறவின் பயனாக அந்த சிவலிங்கத்திற்கு தனது துதிக்கையால் நீரும், மலரும் கொணர்ந்து பூஜிக்கலாயிற்று. அதே பகுதியில் சிலந்தியாகப் பிறந்த மாலியவான், தனது முற்பிறப்பில் சிவனுக்குத் தொண்டு புரிந்த பூர்வபுண்யத்தால், வெண்மையான நாவல் மரத்தடியில் இருந்த சிவலிங்கத்தின் மீது சருகுகள் விழாதும், சூரிய வெப்பம் தாக்காமலும் இருக்க தனது உடலில் உருவாகும் பிசினைக் கொண்டு ஒர் வலையினை ஏற்படுத்தியது. சிவபெருமானை பூஜிக்க வரும் யானை, ஈசன் மேல் இருக்கும் சிலந்தி வலையினைக் கண்டு வருந்தி, அவற்றை நீக்கியபின் தனது வழிபாட்டினைச் செய்துவிட்டுச் செல்வது தினசரி வழக்கமாகக் கொண்டது. இவ்வாறு சிலந்தி வலை பின்னுவதும், மறுநாள் யானை அதனை அகற்றுவதுமாக இருந்ததை உணர்ந்த சிலந்தி, ஒருநாள் மறைந்திருந்து கவனித்து, தான் பின்னும் வலையைச் சிதைப்பது யானையே என்று உணர்ந்து அதனைக் கொல்ல முடிவு செய்கிறது. மறுநாள் சிவனைப் பூஜிக்க வந்த யானையின் துதிக்கையில் புகுந்து கடிக்கிறது சிலந்தி. வலி தாங்க முடியாத யானை துதிக்கையை தரையில் அடித்து சிலந்தியைக் கொல்கிறது. அப்போது சிலந்தி விஷம் உடம்பில் ஏறியதால் யானையும் உயிர் துறக்கிறது. சிவனுக்கு தொண்டு செய்த யானை சிவலோகம் அடைகிறது. யானைக்குத் துன்பம் ஏற்படுத்திய சிலந்தி மீண்டும் பிறவி எடுக்கிறது. மீண்டும் பிறக்க வேண்டிவந்தாலும், ஈசனுக்கு வலை பின்னிய காரணத்தால் அரச வாழ்வு கிடைக்கிறது.

பல வருடங்கள் குழந்தைச் செல்வம் இல்லாதிருந்த சுபதேவர்-கமலவதி என்ற சோழ அரச தம்பதிக்கு மகனாகப் பிறக்கிறார் சிலந்தியாக இருந்த மாலியவான். குழந்தை பிறக்கும் முன்பு ஜோதிஷ விற்பனர்கள் குழந்தை பிறப்பது குறிப்பிட்ட காலமாக இருக்குமாயின் குழந்தை பூவுலகம் முழுவதும் ஆளும் சிறப்பு மட்டுமின்றி, ஈசன் அருள் பெற்றதாகவும் இருக்கும் என்று கூறுகின்றனர். இதனை அறிந்த அரசி, குழந்தைப் பிறப்பை குறிப்பிட்ட நேரத்தில் நடக்க வேண்டித் தன்னைத் தானே தலைகீழாகக் கட்டித் தொங்கவிடச் செய்கிறார். இவ்வாறு செய்து, குறிப்பிட்ட நேரம் வருகையில் கட்டுக்கள் அவிழ்க்கப் பெற்று வந்து குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். தலைகீழாகத் தொங்கிய காரணத்தால் குழந்தையின் கண்கள் சிவந்து இருந்திருக்கிறது. அதைக் கண்ட தாய், 'என் கோவே! செங்கண்ணா' என்று அழைத்து மகிழ்ந்த சிறிது நேரத்திலேயே தன்னுயிரை இழக்கிறாள் அரசி. அறிதாகப் பெற்ற மகனை நன்கு வளர்த்து, போர்க்கலை மற்றும் வேதாகமங்களிலும் மேம்பட்டவனாக்கி, தக்க பருவத்தில் அவனுக்கு முடிசூட்டுகிறார் சுபதேவர்.

கோச்செங்கட் சோழர் என்ற பெயருடன், இறைவனருளால் தனது முற்பிறப்புக்களை அறிந்த அரசன், ஈசன் மீது பக்தியில் திளைத்து திருவானைக்காவில் வெண்ணாவலுடன் கூடிய ஈசனுக்கு கோவில் எழுப்பினாராம். தனது பூர்வ ஜென்மத்தில், யானையான புஷ்பதந்தனால் தான் ஈசனுக்கு ஏற்படுத்திய வலைக்கு ஏற்பட்ட அழிவாலேயே கோச்செங்கணான் தான் கட்டிய கோவில்களை மாடக் கோவில்களாக, அதாவது யானை நுழையமுடியாதபடி பல படிகளுடனும், குறுகிய வாயிலுடனும் அமைத்ததாகக் கூறுகின்றனர். கோச்செங்கணனார் சுமார் 70 மாடக் கோவில்கள் கட்டியதாகச் சொல்கின்றனர் ஆய்வாளர்கள். தில்லையம்பலத்தானுக்குப் பல விசேஷ உற்சவங்கள் செய்வித்ததாகவும், கோவிலில் மறையோவோர்க்கு வீடுகள் கட்டிக் கொடுத்ததாகவும் தெரிகிறது. இது பற்றி சேக்கிழார் பின்வருமாறு சிறப்பித்துக் கூறுகிறார்.

மந்திரிகள் தமை ஏவி வள்ளல் கொடை அனபாயன்
முந்தை வரும் குல முதலோராய முதல் செங்கணார்
அந்தமில் சீர்ச் சோனாட்டில் அகனாடு தொறும் அணியார்
சந்திர சேகரன் அமரும் தானங்கள் பல சமைத்தார்

அக் கோயில் தொறும் சிவனுக்கு அமுதுபடி முதலான
மிக்க பெரும் செல்வங்கள் விருப்பினால் மிக அமைத்துத்
திக்கு அனைத்தும் தனிச் செங்கோல் முறை நிறுத்தித் தேர் வேந்தர்
முக்கண் முதல் நடம் ஆடும் முதல் தில்லை முன்னினார்

திரு ஆர்ந்த செம்பொன்னின் அம்பலத்தே நடம் செய்யும்
பெருமானை அடிவணங்கி பேர் அன்பு தலை சிறப்ப
உருகா நின்று உளம் களிப்பத் தொழுது ஏத்தி உறையும் நாள்
வருவாய்மை மறையவர்க்கு மாளிகைகள் பல சமைத்தார்

தேவர் பிரான் திருத்தொண்டில் கோச் செங்கட் செம்பியர் கோன்
பூவலயம் பொது நீக்கி ஆண்டு அருளிப் புவனியின் மேல்
ஏவிய நல்தொண்டு புரிந்து இமையவர்கள் அடி போற்ற
மேவினார் திருத்தில்லை வேந்தர் திருவடி நிழல் கீழ்

திருஞான சம்பந்தர் தமது திருவானைக்கா பதிகங்களிலும் இந்த கோச்செங்கட் சோழரைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். அவை பின்வருமாறு:

செங்கட் பெயர்கொண் டவன்செம் பியர்கோன்
அங்கட் கருணை பெரிதா யவனே
வெங்கண் விடையா யெம்வெண்நா வலுளாய்
அங்கத் தயர்வா யினள்ஆ யிழையே.

மண்ணது வுண்டரி மலரோன்காணா
வெண்ணாவல் விரும்பும யேந்திரருங்
கண்ணது வோங்கிய கயிலையாரும்
அண்ணல்ஆ ரூராதி யானைக்காவே.

நேற்று, மாசி மாத சதயம், கோச்செங்கட் சோழரது ஜெயந்தி தினம். இங்குள்ள படம் மற்றும் பாடல்கள் shaivam.org தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது, அத்தளத்துக்கு ந்ன்றிகள் பல.

Thursday, March 19, 2009

கொள்ளு...சாஸ்திரம்....கொள்கை


புராண காலத்தில் உஷஸ்தி என்று ஒரு மஹரிஷி. அவர் தமது மனையாளுடன் காட்டுவழியே செல்கிறார். அப்போது அகோரமான பசியை உணர்கிறார். கையில் உண்பதற்கு ஏதும் இல்லை. காட்டிலும் சுற்றுவட்டாரத்தில் ஏதும் காய்-கனிகள் கண்ணில் படவில்லை. அப்போது அதே வழியில் வந்த குதிரை வண்டிக்காரன் குதிரைக்காக தான் வைத்திருந்த வறுத்த கொள்ளு தானியத்தை சாப்பிடுகிறான். இதைக் கண்ட ரிஷி அவனிடம் தன் பசியினைப் போக்கிக் கொள்ள யாசகம் செய்கிறார். குதிரை வண்டிக்காரனோ, ஐயகோ!, இது எச்சில் பட்டதாயிற்றே, உங்களுக்கு எப்படி தர இயலும், அவ்வாறு தந்தாலும் அது பாபமாயிற்றே என்று சொல்கிறான்.

'பரவாயில்லை, கொஞ்சம் தா' என்று ரிஷி கூற, குதிரையோட்டி தனது இரு கைகளிலும் கொள்ளைக் கொண்டு வந்து கொடுக்கிறான். உஷஸ்தி முனிவர் தமது பத்னிக்கும் தந்து தானும் உண்கிறார். ரிஷி பத்னியோ, தன் கணவருக்கு மீண்டும் பசித்தால் இருக்கட்டும் என்று தமக்கு அளித்ததை தனது புடவைத் தலைப்பில் முடிந்து வைத்துக் கொள்கிறார். இதை ரிஷி கவனிக்காது கொள்ளு தானியத்தினை உண்ட பின் மீண்டும் பிரயாணத்தைத் தொடர்கிறார். சற்று நேரம் ஆன பின்னர் ரிஷி பத்னி தனது பர்த்தாவான உஷஸ்தியிடம், இன்னும் கொஞ்சம் கொள்ளு வேண்டுமா?, என்று கேட்கிறார். அப்போது ரிஷி, சீச்சீ யாருக்கு வேண்டும் அந்த எச்சில் கொள்ளூ" என்று விலக்குகிறார்.

நம்மைப் போலவே, ரிஷி பத்னிக்கும் ஆச்சர்யம், சற்று நேரம் முன்பு இந்த கொள்ளு ஆசாரக் குறைவாகத் தெரியவில்லை, ஆனால் இப்போது இது அனாசாரமாக ஆகிவிட்டதன் காரணம் என்ன என்று நினைக்கிறார். அப்போது மஹரிஷியே தமது பத்னிக்கு பதில் உரைக்கிறார். போகும் உயிரைக் காப்பாற்றுவதே தர்மம் என்ற முறையில் நியம-நிஷ்ட்டை, ஆச்சாரம் போன்ற நித்ய தர்மத்தை உதறி அதர்மமான செயலைச் செய்தார். ஆனால் தனது அனாசாரச் செயலுக்கு பிராயச்சித்தம் என்று சில கர்மாக்களை (உபவாசம் உள்பட), செய்து கொள்ள வேண்டும் என்று கூறி, தாம் செய்த ஒருவேளை அபசாரத்திற்கு பலநாட்கள் பரிகாரம் செய்ய வேண்டியிருக்கும் என்று கூறுகிறார். அக்கொள்ளை அப்போது உண்ணாதிருப்பின் அது ஆத்ம ஹத்திக்கு வழியாகிவிடும். ஆத்ம ஹத்தி பண்ணிக் கொள்வது மஹா பாபம் என்பதால் அனாசாரமான கொள்ளை உண்டதாகவும், இப்போது அவ்வாறான நிலை இல்லாததால் மீண்டும் செய்ய அவசியமில்லை என்று கூறுகிறார்




உஷஸ்தி மிகப் பெரிய தபஸ்வி, அவரே தமது அனாசாரமான ஒரு செயலுக்கு பல பிராயச்சித்தங்களைச் செய்ய வேண்டியிருந்தால், நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் அறிந்தே செய்யும் தவறான செயல்களுக்கு எத்துணை ஜன்மம் எடுத்து பிராயச்சித்தம் செய்ய வேண்டியிருக்குமோ தெரியாது. எப்போது அந்த மஹரிஷி போல பிராயச்சித்தம் செய்துகொள்வது நமக்கு கடினம் என்று தோன்றுகிறதோ, அப்போதே தர்மத்துக்குப் புறம்பான செயல்களை, அவரவர் தமது ஆசாரத்திற்கு புறம்பான செயல்களை தவிர்க்க வேண்டும். இம்மாதிரியான அதர்ம, அனுஷ்டானங்களுக்கு எதிரான கார்யங்களில் இருந்து அம்பிகை நம்மைக் காக்கட்டும்.

Saturday, March 14, 2009

காரடை நோன்பு / காமாக்ஷி நோன்பு



மாசி மாதத்தின் சிறப்பு மஹா சிவராத்ரி என்றால் பங்குனி தொடக்கமே அன்னை அருளுடன் ஆரம்பிக்கச் செய்திருக்கின்றனர் பெரியவர்கள். ஆம்! காரடையான் நோன்பு என்பது அன்னை காமாக்ஷி தன் பதியாம் கைலாஸபதியுடன் சேர்வதற்காக இருந்த நோன்பு. மாசியும் பங்குனியும் கூடும் நேரத்தில் பெண்கள் தங்களது கணவரது நல்வாழ்விற்காக இருப்பது இந்த நோன்பு.
'மாசிச் சரடு பாசி படரும்' என்பதற்கேற்ப சுமங்கலிப் பெண்கள் மாசி முடிந்து பங்குனி ஆரம்பிக்கும் நேரத்தில் காமாக்ஷி அம்மனுக்கு பூஜை செய்து கார் அரிசியில் செய்யப்பட்ட இனிப்பு அடையும், வெண்ணையும் நிவேதனம் செய்து, நோன்புச் சரட்டினைக் கட்டிக்கொள்கின்றனர். சரடைக் கட்டிக்கொள்ளும் போது பிரார்த்தனையாக, 'உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் தருவேன், ஒருக்காலும் என்னைவிட்டு என் கணவர் பிரியாதிருக்க வேண்டும்' என்று அழகுத்தமிழில் அம்மனிடம் பிரார்த்தனை செய்து முதலாக ஒரு சரட்டினை அம்மனுக்கு சார்த்திவிட்டு இன்னொன்றைக் கையில் எடுத்துக் கொண்டு, ' தோரம் கருண்ஹாமி ஸுபகே ஸஹாரித்ரம் தராம்யஹம் பர்த்து: ஆயுஷ்ய ஸித்யர்த்தம் ஸுப்ரீதா பவ ஸர்வதா' என்னும் ஸ்லோகத்தைச் சொல்லி பெண்கள் கழுத்தில் கட்டிக் கொள்வர். இது கன்னிப் பெண்களுக்கும் நல்ல கணவன் வாய்க்கப் பிரார்த்தனை செய்து கட்டிக் கொள்வதுண்டு.

மேலே உள்ள சம்ஸ்க்ருத ஸ்லோகத்தின் அர்த்தம், 'அன்னையே! எனது கணவரின் நீண்ட ஆயுளைக் கருதி, மஞ்சள் கயிற்றாலான சரட்டைக் கழுத்தில் கட்டிக் கொள்கிறேன். நீ சந்தோஷத்துடன் இருந்து எனக்கு அருள் புரிவாயாக' என்பதாகும். இவ்வாறாக கட்டிக் கொண்டபின் நிவேதனம் செய்த அடையில் ஒரு அடையினை கணவனுக்கும் இன்னொன்றை தானும் உண்பார்கள். சிறிது மீதம் வைத்து பசுமாட்டுக்கும் உணவாக தருவது சில இல்லங்களில் வழக்கம்.

பதிவ்ரதா தெய்வம் என்று போற்றப்படும் சாவித்ரி இந்த நோன்பினை செய்து தனது கணவன் சத்யவானை எமனிடமிருந்து மீட்டாள் என்பது புராணம். இந்த நோன்பால் செய்யும் பெண்ணுக்கும், அவளது கணவனுக்கும் நீண்ட ஆயுள், ஆரோக்யம், ஒற்றுமை, குடும்பத்தில் அமைதி முதலிய நன்மைகள் எற்படும் என்பது ஆன்றோர் வாக்கு.
இன்று காரடை நோன்பு : இவ்விடுகை போன வருடத்திய மீள்பதிவு

Wednesday, March 11, 2009

ஸ்ரீ பாஸ்கர ராயர்.... பகுதி-2


முந்தைய பகுதி இங்கே!

பாஸ்கர ராயர் காலத்தில் கர்னாடகத்தில் பாலகீ என்ற ஊரின் சிற்றரசனாக இருந்தவர் சந்த்ரஸேன ஜாதவ் என்பவர். இவர் பாஸ்கர ராயரிடத்து மிகுந்த மரியாதையும், பக்தியும் கொண்டிருந்தார். தமக்கு மழலைச் செல்வம் இல்லை என்று வருந்திய அவர், ஒரு சமயம் ராயரிடத்தில் தனது மனக் குறையினைக் கூறி வருந்துகிறார். ராயரும் தமது பூஜையை முடித்த பின்னர் சிற்றரசனுக்குப் அன்னையின் பிரசாதத்தை அளித்து, அவனுக்கு புத்திரன் பிறப்பான் என்று அனுக்கிரஹம் செய்து அனுப்புகிறார். சில காலத்தில் அவனது மனைவியும் கருவுற்று இருக்கையில் பாஸ்கர ராயரது சிஷ்யர்களில் ஒருவரான நாராயண தேவர் என்னும் உபாசகர் பாலகீக்கு வருகிறார். அவரை வரவேற்று, உபசரித்த அரசன், அவரிடத்து தனக்கு என்ன குழந்தை பிறக்கும் என்று கேட்கிறான். நாராயண தேவர் பெண் குழந்தை பிறக்கும் என்று கூற, அரசன் ராயர் மகன் பிறப்பான் என்று கூறினாரே என்று புலம்புகிறான்.
அரசனது புலம்பலைக் கேட்ட ராயரது சிஷ்யரான நாராயண தேவர் அரசன் தனது குருவின் மேல் ஏற்பட்ட சந்தேகத்தையும், அதனை தன்னிடமே சோதனை செய்ததையும் கண்டு கோபம் கொள்கிறார். அதன் காரணமான அரசனை சபித்து அவனுக்கு ஆணும் இல்லாது, பெண்ணுமில்லாது நபும்ஸகனாக குழந்தை பிறக்கும் என்று சபித்து விடுகிறார். அச்சாபத்திற்கு ஏற்ப அவனுக்குப் பிறக்கும் குழந்தையும் நபும்ஸகத் தன்மையுடனேயே பிறக்கிறது.

பல வருடங்களுக்குப் பின்னர் அவ்வரசன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் பாஸ்கர ராயரை தரிசிக்கும் பாக்கியம் பெறுகிறான். அப்போது அவன் நடந்ததைக் கூறி வருந்தி தன்னை மன்னிக்கும்படியும் தனது குமாரனுக்கு நபும்ஸகத்தன்மை விலக அருளுமாறும் வேண்டுகிறான். ராயர் அக்குழந்தைக்கு புருஷத்தன்மை வருவதற்காக பிரார்த்தனை செய்யத் தலைப்படுகிறார். ஒரு மண்டலம் இதற்காக கிருஷ்ணா நதிக்கரையில் முளிமடு என்ற்ற ஊரில் ஆஸ்ரமம் அமைத்து "த்ருசார்க்யப்ரதானம்" என்னும் விரதத்தை ஆரம்பிக்கிறார். இந்த விரதமானது சூர்யனை நோக்கிச் செய்யப்படுவது. தினமும் நதிக்கரைக்கு வந்து அனுஷ்டானங்களை முடித்துப் பின்னர் ஆஸ்ரமத்திற்குச் செல்வதால் பாஸ்கர ராயருக்கு கால்களில் கொப்புளங்கள் ஏற்பட்டது கண்டு சிஷ்யர்கள் வருந்துகின்றனர். அவர்கள் தமது குருவிடம் நதிக்கு அருகிலேயே ஆஸ்ரமத்தை அமைத்துக் கொண்டு விடலாம் என்று யோஜனை கூறுகின்றனர். அதற்கு குருவோ, நதியை ஆஸ்ரமத்திற்கு பக்கத்தில் கொண்டுவந்திவிடலாம் என்று கூறி, சூரியனை நோக்கி தியானிக்க, ஸூர்யனும் அவர் முன் தோன்றுகிறான். பாஸ்கர ராயர் ஸுர்யனிடத்து தமது விரதத்தைக் கூறி, அவ்விரதம் பங்கம் ஏதுமின்றி முடிவதற்கு ஏதுவாக நதியை ஆஸ்ரமத்திற்கு அருகில் பிரவாஹிக்க வேண்டுகிறார்.

ஸுர்யன் குழந்தைக்கு நபும்ஸகத் தன்மை நீங்க நேரடியாக வரத்தைக் கேளாமல், ஏன் இயற்கையை மீறி இவ்வாறு நதியின் பிரவாஹத்தை மாற்றக் கோருகிறீர்கள்?. இவ்வாறான கோரிக்கை சரியல்லவே என்று வினவுகிறான். தமது பிரார்த்தனையை நடத்திக் கொடுக்காது கேள்விகள் கேட்ட ஸுர்யன் மீதே கோபம் கொண்டு ஸுர்யனிடம், 'குழ்ந்தைக்கு ஆண்மைக் குறைவு தீர்வது உன்னை வணங்குவதாலும், த்ருச பாஸ்கர வழிபாட்டாலும் நடக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் உன்னால் நதியின் பாதையை மாற்ற இயலாவிட்டால் பரவாயில்லை' என்று கூறிவிடுகிறார். ஸுர்யனும் ராயரது கோரிக்கையினை செயல்படுத்தும் விதமாக நதியின் பாதையை மாற்றிக் கொடுக்கிறார். ராயர் தமது விரதத்தை பக்குவமாக நடத்தி அக்குழந்தையை பும்ஸுவனாக/ஆண்மையுள்ளவனாக மாற்றுகிறார். முளிமடு என்னும் அவ்விடத்தில் இன்றும் கிருஷ்ணா நதி முன்பு சென்ற பாதை மற்றும் தற்போதைய பாதை என்று இரண்டு வழிகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். ராயர் பிற்காலத்தில் "த்ருச பாஸ்கரம்" என்னும் நூலை எழுதி, அதில் ஸுர்யனை வழிபடும் முறையினைக் கூறியிருக்கிறார்.

இவர் ஒரு சமயம் கடனால் தவித்து வந்தாராம். அப்போது அன்னையை நோக்கி, 'அபர்ணா' என்றால் பிறரது கடன்களைப் போக்குபவள் என்றும் பொருள், ஆனால் உன்னையே வணங்கும் எனது கடனை போக்க வழி காண்பிக்காது இருக்கிறாயே?' என்று வருந்தியிருக்கிறார். அன்று லலிதாம்பிகையே ராயரது மனைவி உருவில் கடன் கொடுத்தவர் வீட்டிற்குச் சென்று ராயரது கடனை அடைத்தாளாம்.

பிற்காலத்தில் தஞ்சையை ஆண்ட மராட்டிய அரசரது வேண்டுகோளுக்கு இணங்க திருவிடைமருதூர் மஹாதானத் தெருவில் வசித்து வந்துள்ளார். இவர் மாலை வேளையில் தமது இல்லத்தின் முன் இருக்கும் திண்ணையில் சாய்ந்து காலை தூண்களில் தூக்கி வைத்தவாறு சாய்ந்து அமர்ந்திருப்பாராம். அவ்வேளையில் தினம் தெருவில் ஒரு சன்யாசி மஹாலிங்க தரிசனத்திற்கு கோவிலுக்குச் செல்வது வழக்கம். தெருவில் இருக்கும் எல்லோரும் அந்த சன்யாசிக்கு மரியாதை செய்து வணங்குவர். ஆனால் ராயர் கவனியாது இருப்பது கண்டு விரோதம் ஏற்படுகிறது.

ஒருமுறை பலர் முன்னிலையில் பாஸ்கர ராயரது செயலை கண்டித்திருக்கிறார். அப்போது ராயர், தாம் மற்றவர்கள் போல சன்யாசிக்கு மரியாதை செய்வதற்காக தமது சிரம் தாழ்த்தி வணங்கியிருந்தால் சன்யாசியது தலை வெடித்துச் சிதறியிருக்கும் ஆகவே தாம் வணங்கவில்லை என்று கூறியிருக்கிறார். அதனை நம்பாத சன்யாசிக்கு தான் சொல்வதை நிருபிக்கும் விதமாக சன்யாசியின் கமண்டலம் மற்றும் தண்டத்தை ஓர் இடத்தில் வைக்கச் செய்து அதற்கு தலை தாழ்த்தி வணக்கம் செய்கிறார் பாஸ்கர ராயர். தண்டமும், கமண்டலமும் வெடித்துச் சிதறிவிடுகிறது. இதனைக் கண்ட சன்யாசி மற்றும் பொது மக்கள் ராயரது சிறப்பினை உணர்கின்றனர். இவ்வாறு நடக்க காரணம், ராயர் மஹா ஷோடசி என்னும் மந்திர ஜபமே என்று பிற்காலத்தில் தமது சிஷ்யர்களிடத்து சொல்லியிருக்கிறார். மஹா ஷோடசி நியாஸம் செய்பவர்கள் தாமே அர்த்தநாரிச்வர வடிவாகிவிடுவர் என்பது சாக்த சித்தாந்தம்.

இவர் மீமாம்ஸா, வேதாந்தம், மந்த்ரசாஸ்த்ரம் முதலிய பல்வேறு துறைகளிலுமாக நாற்பதுக்கும் மேலான நூல்களை எழுதியிருக்கிறார். பல திருக் கோவில்களை நிர்மாணித்தும், புனருத்தாரணம் செய்தும் இருப்பதாக தெரிகிறது. இவர் எழுதிய லலிதா சஹஸ்ரநாம பாஷ்யத்திற்கு 'செளபாக்ய பாஸ்கரம்' என்றே பெயர். பாஸ்கராநந்தர் என்னும் இம்மஹான் தனது 95ஆம் வயதில் ஸ்ரீபுரம் அடைந்தார் என்று கூறப்படுகிறது,


அத்ருஷ்டோ நாஸ்தி பூ மண்டலாம் சோ,
யஸ்யா: தாஸோ வித்யதே ந க்ஷிதீச:
யஸ்ய அஸாத்யா நாஸ்தி வித்யா கிமன்யைர்
யஸ்ய ஆகார: ஸா பராசக்திரேவ

[இந்த பூ மண்டலத்தில் அவரால் பார்க்கப்படாத இடமே இல்லை, அவருக்கு சிஷ்யனாகாத அரசனே இல்லை, அவரால் அறியப்படாத வித்யை இல்லை, அவரே பராசக்தி வடிவானவர்]
என்பதாக பாஸ்கர ராயரது பதம் பணிவோம். அவரருளால் திருவருள் பெறுவோம்.

Thursday, March 5, 2009

ஸ்ரீ பாஸ்கர ராயர்....பகுதி-1

ஆதிசங்கரர் பல முறை லலிதா சஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் பண்ண நினைத்து தமது சிஷ்யரிடம் சஹஸ்ர நாமச் சுவடிகளை எடுத்துவரப் பணித்த போதும், சிஷ்யர் விஷ்ணு சஹஸ்ரநாம சுவடிகளையே தந்தாராம். 2-3 முறை இவ்வாறு நடக்க, ஏன் இப்படி என்று சிஷ்யரிடம் கேட்கையில், சிஷ்யர் தாம் சுவடிகளை எடுக்கையில் ஒரு சிறு பெண் வந்து சுவடிகளை தந்ததாகவும், அதனைச் சரிபார்க்காது தாம் கொண்டுவந்து தந்ததாகக் கூறுகிறார். இவ்வாறு 2-3 முறை விஷ்ணு சஹஸ்ர நாமச் சுவடிகளை அன்னையே தந்ததாக அறிந்த சங்கரரும், அது அன்னையின் ஆணை என்று உணர்ந்து விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம் மட்டும் செய்தாராம். செளந்தர்ய லஹரி, பவானி ஸ்தோத்ரம், என்று பலவிதங்களில் அன்னை பராசக்தி மீது ஸ்லோகங்களை அருளிய ஆதிசங்கரர் லலிதா சஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் பண்ண இயலவில்லை. அதையே பிற்காலத்தில் வந்த ஒருவர் மூலமாக அன்னை செய்து வைத்தாள் என்றால் அது பிற்காலத்தில் வந்தவரது பக்தியை, அனுஷ்ட்டான சாதகத்தை, பாண்டித்யத்தை அன்னையே விரும்பிச் செயல்படுத்தினாள் என்றுதானே பொருள்?. இவ்வாறு லலிதா சஹஸ்ரநாம பாஷ்யம் பண்ணியவர்தான் பாஸ்கர ராயர். தஞ்சாவூர் மயிலாடுதுறை மார்கத்தில் பாஸ்கர ராயபுரம் என்று ஒரு ஊர் இவர் பெயராலேயே இருக்கிறது.

இவர் பிறந்தது மாகாராஷ்டிரத்தில், பாகா என்னும் நகரத்தில். இவரது பிறப்பு கி.பி 1690 என்று தெரிகிறது. தந்தை பெயர் கம்பீர ராயர், தாயார் கோனாம்பா. கம்பீர ராயர் விஜயநகர அரசவையில் பெளராணிகராக இருந்தவர், மகாபாரதப் பிரவசனம் செய்து அதன் மூலமாக பாரதீ என்னும் பட்டப் பெயரை பரம்பரை உரிமையுடன் பெற்றதாகச் சொல்கிறார்கள்.

கம்பீர ராயர் தமது மகனான பாஸ்கர ராயருக்கு காசியில் உபநயனமும், அத்யயனமும் செய்து வைத்திருக்கிறார். அக்காலத்திலேயே வாக்தேவி மந்திர தீக்ஷையும் நடந்து அம்மந்திரத்தை ஜபித்து வந்திருக்கிறார். சிறிது காலத்திலேயே வேத அத்யயனம் முடித்து ஊர் திரும்புகையில் குஜராத்தில் ப்ரகாசாநந்த நாதர் என்பவரை கண்டு அவரிடம் ஸ்ரீ வித்யை உபதேசமும், பூர்ணாபிஷேகமும் செய்து கொள்கிறார். பூர்ணாபிஷேக நாமம் ஸ்ரீ சிதானந்த பாதரேணு என்பதாகும். பின்னர் ஸ்ரீ கங்காதர வாஜபேயி என்பவரிடம் தர்க்க சாஸ்த்திரத்தையும் படிக்கிறார். அதர்வண வேதம் அழிந்து வருவதை தடுக்கும் விதமாக தானே அதனை அத்யயனம் செய்து அதனை பலருக்கும் கற்பித்து அவ்வேதத்தை உத்தாரணம் செய்கிறார்

இவரது மனைவி பெயர் ஆனந்தி என்பதாகும். அவருக்கும் மந்திர உபதேசம் செய்வித்து பத்மாவதம்மாள் என்று தீக்ஷா நாமம் வழங்கியிருக்கிறார். பிறகு ஒரு சமயம் வல்லப ஸம்ப்ரதாயத்தைச் சார்ந்த ஒரு வித்வானை வாதில் வென்று அவரது மகளையும் திருமணம் செய்து கொள்கிறார். அந்த மனைவி பெயர் பார்வதி என்பதாம். இரு மனைவிகளுடன் காசியாத்திரை கிளம்பிச் செல்லும் வழியில் ஒர் மாத்வ மஹானையும் வாதில் வென்றதாகச் சொல்லப்படுகிறது. காசியில் ஸோம யாகம் செய்திருக்கிறார். அக்காலத்தில் காசியில் இருக்கும் வைதீகர்கள் உபாசனா மார்க்கத்தை ஏளனம் செய்வதும், குறை கூறுவதும் வழக்கமாக இருந்திருக்கிறது. பாஸ்கர ராயர் சமயாசாரத்தின் படியாக உபாசனை செய்து வந்தாலும், அவரை வாமாசாரத்தைச் சார்ந்தவர் என்று திரித்துக் கூறி இகழ்ந்து வந்திருக்கின்றனர். இதனை அறிந்த பாஸ்கர ராயர், தாம் வாதம் செய்ய தயார் என்று பிரகடனம் செய்கிறார்.

பாஸ்கர ராயருடன் வாதம் செய்ய அப்போது அங்கிருந்த குங்குமாநந்த நாதர் என்னும் யோகியைத் தயார் செய்து, அவரை முதன்மையாகக் கொண்டு வாதத்தை தொடங்குகின்றனர் வைதீகர்கள். பல கேள்விகளுக்கும் சிறப்பாக, சுலபமாக பதிலளிக்கிறார் பாஸ்கரர். அவரது வாதத் திறமையையும், மந்திர சாஸ்திரத்தில் இருக்கும் திறமையும் எல்லோரும் வியக்கின்றனர். ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமத்தில் இருக்கும் "சதுஷ்ஷஷ்டி கோடி யோகினீ பரிசேவிதா" (237ஆம் நாமம்) என்பதில் வரும் 64 கோடி யோகினீகள் யார் என்று கேட்கின்றனர். பாஸ்கரரும் அம்பிகையை தியானித்துப் பின்னர், வரிசையாகச் சொல்ல ஆரம்பித்து, அந்தந்த யோகினிகளுக்கான பெயர், மந்திரங்கள், சரித்திரங்களை வரிசையாகச் சொல்லச் சொல்ல பிரமித்துப் போய்விடுகின்றனர். அப்போது தமது தலைவரான குங்குமாநந்த நாதரிடம் எப்படி இது சாத்தியம் என்று வினவ, அவரும் பாஸ்கர ராயர் சாதாரணமானவர் அல்லர். நமது கேள்விகளுக்கு அன்னை பராசக்தியே கிளி உருவில் அவர் தோளில் அமர்ந்து, அவர் சார்பில் பதிலளிக்கிறாள் என்று கூறுகிறார். தமது சிஷ்யர்கள் அந்தக் காக்ஷியைக் காணத்தக்க விசேஷ பார்வையையும் அளிக்கிறார். வைதீகர்களும் அன்னையைக் கிளி ரூபமாக தரிசித்து, பாஸ்கர ராயரிடம் மன்னிப்புக் கேட்டதுடன் நில்லாது பாஸ்கர ராயரை குருவாக ஏற்று அவரிடம் மந்திரோபதேசமும் பெற்றதாகச் சொல்லப்பட்டுகிறது.

Sunday, March 1, 2009

ஸ்ரீமுஷ்ணம் - யக்ஞ வராஹத் திருத்தலம்....

கடந்த ஜனவரி 25, தை அமாவாசை தினத்தன்று திருமுதுகுன்றம் என்ற பெயருடைய விருத்தாசலத்தில் இருக்கும் எனது சகோதரியின் இல்லத்திற்குச் சென்றிருந்தேன். மாலையில் ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீ பூவராஹர் சன்னதிக்குச் செல்லும் பாக்கியம் கிட்டியது. முன்பே இந்த க்ஷேத்திரத்திற்குச் சென்றிருந்தாலும், அது மிக சிறிய வயதில், அவ்வளவாக நினைவில் இல்லை. இந்த இடுகை இப்போது நான் அங்கு சென்ற சமயத்தில் அந்த திவ்ய க்ஷேத்திரத்தை பற்றி அறிந்தது.



ஸ்ரீ வராஹ க்ஷேத்திரம் என்று அழைக்கப்படும் இந்த புண்ய க்ஷேத்திரம் ஸ்வயம்வயக்த க்ஷேத்திரம் என்று கூறுகின்றனர். அதாவது பூமியில் யாராலும் தோற்றுவிக்கப்படாது, அனாதி காலம் முதல் இருந்து வரும் க்ஷேத்திரம். இவ்வாறான மற்ற க்ஷேத்திரங்களாவன; வேங்கடாத்ரி, ஸ்ரீரங்கம், கும்பகோணம், அகோபிலம், நரநாராயணம், துவாரகை, மதுரா, ஜனார்த்தனம் போன்றவை. நதிகளில் எப்படி கங்கை முக்கியமானதோ அது போல ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு க்ஷேத்திரங்களில் முக்கியமானது இந்த வராஹ க்ஷேத்திரம் என்று கூறுகின்றனர் இங்குள்ள பட்டர்கள். ஸ்ரீமுஷ்ணத்தில் எல்லா தீர்த்தங்களும் சேர்கின்றனவாம். எல்லா தேவதைகளும் இங்கிருக்கும் ஸ்வேதவராஹனுக்கு சேவை சாதிக்கும் பொருட்டு வசிப்பதாகச் சொல்கின்றனர். இப்பெருமாளை ஆராதித்து வந்தால் வைகுந்த பதவி நிச்சயம் என்று வராஹ புராணம் கூறுகிறதாம்.



பெருமாள், கடலில் இருந்து பூமியை மேலே கொணர்ந்ததன் மூலம் தேவர்களுடைய துயரைத் துடைத்து அவர்களுடைய வேண்டுகோளை நிறைவேற்றியவுடன் வைகுண்டம் திரும்ப எண்ணினாராம். அப்போது பூதேவி பெருமாளை வேண்டி அவர் தன்னுடனேயே வாசம் செய்ய விரும்புகிறாள். அவளது வேண்டுகோளை ஏற்று வாசம் செய்யும் இடமே ஸ்ரீமுஷ்ணம் என்று நாரத புராணம் கூறுவதாகச் சொல்கிறார்கள். பூதேவியுடன் வாசம் செய்வதால் பூவராஹர் என்று பெருமாளுக்கு பெயர். தான் ஸ்ரீமுஷ்ணத்தில் தங்கிய சமயத்தில் தனது பரிவாரங்களையும் அங்கேயே தன்னைச் சுற்றித் தங்கச் செய்ததாகவும், அதன்படி சங்கு தீர்த்தத்தில் சங்கும், சக்ர தீர்த்தத்தில் சக்ரமும், பிரம்ம தீர்த்தத்தில் ப்ரம்மாவும், பார்க்கவ தீர்த்தத்தில் கருடனும், கோபுரத்தில் வாயுவும், பலிபீடத்தில் ஆதிசேஷனும், வாயிற்படியில் விஷ்வக்சேனருமாக அவர்கட்கு உரிய இடத்தை நிர்ணயம் செய்து கடமைகளையும் விதித்தார் என்று கூறுகின்றனர். இவர்களது கடமையாக, பகவானை சேவிப்பவர்களை எமதூதர்கள் அண்டாதிருப்பது ஆதிசேஷனுக்கும், இங்கு இறைவனை வழிபடுபவர்களை வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்வது இந்திரனுக்கும் கடமையாம். இந்த க்ஷேத்திரமானது பிரம்மாதி யோகிகளுக்கு வேதாத்யயன பூமியாகவும், தேவர்களுக்கு யாக பூமியாகவும், மனிதர்களுக்கு மோக்ஷ பூமியாகவும் திகழுமென பெருமாளே அருளியிருக்கிறாராம்.

உபநிஷத் என்றால் குருவின் அருகில் இருந்து அவர் மூலமாக அறியப்படும் மெய்ஞான உபதேசம் என்று பொருள். ரிபு என்ற முனிவர் 12 ஆண்டுகள் ஸ்ரீவராஹரை நோக்கித் தவமிருந்து தரிசனம் பெருகிறார். அந்த தரிசனத்தின் போது வராஹர் ரிபு முனிவருக்கு அளித்த உபதேசம் 'வராஹோபநிஷத்' என்று கூறப்படுகிறது. இந்த க்ஷேத்திரத்தில் இருக்கும் தீர்த்தங்கள் சிறப்புற்றுத் திகழ்கிறது, அவை, நித்ய புஷ்கரிணி, லக்ஷ்மி நாராயண தீர்த்தம், பூமி தீர்த்தம், சக்ர தீர்த்தம், சங்கு தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், அக்னி தீர்த்தம், வேணு தீர்த்தம் போன்றவையாம்.


கோவில் மேற்கு நோக்கிய அழகிய ராஜ போபுரத்துடன் கூடியது. துவஜஸ்தம்பத்திற்கு மேற்கிலும்,கோபுர வாசலுக்கு கிழக்கிலும் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. துவஜஸ்தம்பம் தாண்டி உள்ளே நுழைந்ததும் புருஷ சூக்த மண்டபம், மிக அழகிய வேலைப்பாடுகளுடன் இருக்கிறது. நுழைந்தவுடன் வலதுபுரத்தில் (வடக்குத் திசையில்) உடையார் மண்டபம் என்ற பெயரில் உடையார் பாளைத்து ஜமீன் செய்த மண்டபமும் அதன் நடுவில் கண்ணாடி அறையும் உள்ளது. விசேஷ காலங்களில் பெருமாளும் தாயாரும் இங்கு சேவை சார்த்தி அருள்வராம்.

கர்பகிரஹத்தில் சுவாமி மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காக்ஷி தருகிறார். முகம் தெற்கு நோக்கியதாக, பூமியை மேலே கொண்டு வந்த வெற்றிப் பெருமிதத்தில் கைகளை இடுப்பில் வைத்து, முகத்தை நிமிர்த்தி கம்பீரப் பார்வை பார்க்கிறார். மூர்த்தி சாளக்ராமத்தால் ஆனதாகச் சொல்லப்படுகிறது. கர்பகிரஹ விமானம் பிராகிருத விமானம் என்று அழைக்கப்படுகிறது. கர்பகிரஹத்தின் முன்பாக உள்ள அர்த்த மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீ யக்ஞவராஹ மூர்த்தி, ஸ்ரீதேவி-பூதேவியுடன் மேற்கு நோக்கிக் காக்ஷி அளிக்கிறார். அருகிலேயே ஆதிவராஹரும், ஸ்ரீகிருஷ்ணரும் உள்ளனர். இதற்கும் முன்பாக உள்ள மஹா மண்டபத்தில் போகநாராயணர் தமது தேவியருடன் காக்ஷி தருகிறார்.

பிராகாரத்தில், தென்மேற்கு திசை மூலையில் பெருமாளை நோக்கியவாறு அம்புஜவல்லித் தாயார் சன்னதி. சன்னதியின் முன்மண்டபம் ஊஞ்சல் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. வடமேற்கு மூலையில் கோதை நாச்சியார் மற்றும் உடையவர் சன்னதிகள். வடப்புறத்தில் வேணுகோபாலன், மற்றும் விஷ்வக்சேனர் சன்னதிகள் இருக்கிறது. நான் போன நேரத்தில் இந்த மூர்த்திகளை தரிசிக்க இயலவில்லை, அர்ச்சகர் கூறி அறிந்ததே. வடக்குப் பகுதியில் குழந்தையம்மன் சன்னதி என்று ஒரு சன்னதி இருக்கிறது. இது சப்தமாதர்களது சன்னதி. இங்கே சப்த மாதர்கள் அம்புஜவல்லித் தாயாரின் தோழிகள் என்று கூறுகின்றனர். இவர்களைத் தரிசித்தபின் பிரதக்ஷணமாகச் செல்கையில் வடகிழக்குப் பகுதியில் ஸ்ரீ வேதாந்த தேசிகர் சன்னதி. நான் சென்ற நேரத்தில் இச்சன்னதியில் சில வித்யார்த்திகள் ஸ்வரம் பிசகாது வேதம் பயின்று கொண்டிருந்தது கண்ணுக்கும், காதுக்கும் இனிமையாக இருந்தது. இப்பிரஹாரத்தில் அடுத்ததாக வருவது திருமங்கை மன்னன், திருக்கச்சிநம்பி மற்றும் மணவாள மாமுனிகளது சன்னதிகள். கோவிலின் வடக்குத் திசையில் இருக்கும் வாசல் வைகுண்ட வாசலாக கருதப்பட்டு தாழிடப்பட்டிருக்கிறது.

இங்கே பெருமாளுக்கு 2 பிரம்மோத்சவங்கள் (மாசி மற்றும் சித்திரை மாதங்களில்), மற்றும் மார்கழிச் சிறப்பு பகல்-ராப்பத்து உற்சவங்களும் நடக்கிறது. இவை தவிர ப்ரதி-வெள்ளி அம்புஜவல்லித் தாயாருக்கு டோலோர்சவமும், வைகாசி விசாகம், ஆவணியில் ஸ்ரீஜெயந்தி, புரட்டாசி கொலு, மற்றும் வைகுண்ட ஏகாதசி போன்றவை சிறப்பாகக் கொண்டாடப்படுவதாகச் சொல்கிறார்கள். பங்குனி உத்திரத்தன்று இங்கும் திருக்கல்யாண வைபவம் மற்றும் அக்ஷய திருதியை அன்று கருட சேவையும் நடைபெறுமாம்.

கல்லால மரத்தின் கீழ் இருந்து வேதத்தை அருளிய ஈசனைப் போல இங்கே, நித்ய புஷ்கரிணி தீர்த்தத்தின் அருகில் இருக்கும் அஸ்வத்த மரமானது மிக பழமையானதாக, யுக-யுகாந்தரங்களாக இருப்பதாகவும், அதன் அடியில் இருந்து ஸ்வேத வராஹப் பெருமாள் தேவர்களுக்கு வேதாத்யயனம் செய்து வைப்பதாகவும் சொல்லப்படுகிறது. இங்கே பெருமாளே யக்ஞரூபமாகவும், யக்ஞாங்கமாகவும், யக்ஞத்துக்கு உரியவனாகவும், யக்ஞத்தை புசிப்பவனாகவும், யக்ஞேஸ்வரனாகவும், யக்ஞபலத்தை தருபவனாகவும் இருக்கிறானாம். இம்மரத்தடியில் உட்கார்ந்து வேத பாராயணம், மந்திர ஜபம் போன்றவை செய்தால் அளவற்ற பலன் என்று கூறுகிறார்கள்.

ஸ்ரீ வராஹ மூர்த்தியின் நான்கு பாதங்கள் நான்கு வேதங்களாகவும், வராஹம் எழுப்பும் சப்தம் சாம கோஷமாகவும், அதன் தந்தம் யூபஸ்தம்பமாகவும், நாவே வேள்வித்தீயாகவும், உடலில் இருக்கும் உரோமங்கள் தர்பைப் புல்லாகவும் அதன் உமிழ்நீரானது நெய்யாகவும், மூக்கு சுருவம் என்று சொல்லப்படும் ஹோமக் கரண்டியாகவும், எலும்புகள் மந்திரமாகவும், ரத்தம் சோமரசமாகவும், அதன் பிராணன் அந்தராத்மாவாகவும், இதயம் தக்ஷிணையாகவும், தலை பிரம்மனாகவும், குடல் உத்காதாவாகவும், குறி ஹோதாவாகவும், சரீரம் யக்ஞசாலையாகவும் நடை ஹவ்பகவ்யம் என்றும் வாயு புராணத்தில் கூறப்பட்டிருக்கிறதாம். [இந்த குறிப்பு அங்கிருந்த அர்ச்சகர் சொல்லச் சொல்ல சிறு தாளில் எழுதிக் கொண்டேன், தவறுகள் இருக்கலாம், தெரிந்தவர்கள் பிழைதிருத்தம் செய்தால் நலம்]

கோபாயேத் அநிசம் ஜகந்தி குஹநா போத்ரீ பவித்ரீ க்ருத
ப்ரஹ்மாண்ட: ப்ரள்யோர்மிகோஷ குருபிர் கோணாரவை: குர்குரை
மத் தம்ஷட்ராகுர கோடி-காட-கடநா-நிஷ்கம்ப-நித்யஸ்திதி:
ப்ரஹ்ம ஸ்தம்ப மஸெளத் அஸெள் பகவிதீமுஸ்தேவ் விச்வம் பரா:

என்று ஸ்ரீவேதாந்த தேசிகர் தமது தசாவதார ஸ்தோத்ரத்தில் இந்த அவதாரத்தைப் போற்றுகிறாராம். இதன் பொருள், மஹாப் பிரளய காலத்தில் கரைபுரண்டு பொங்கியெழும் சமுத்திரத்தின் அலைகளின் ஓசைபோல் குர்-குர் என்று மூக்கிலிருந்து வரும் சப்தத்தால் இவ்வுலகினைப் பரிசுத்தமாக்கிய பன்றியாக அவதரித்த பெருமான், எல்லா உலகங்களையும் காப்பாற்றக் கூடியவர். மகிமை பொருந்திய இந்த பூமிதேவி அந்த வராஹப் பெருமானின் கோரைப் பல்லின் நடுவில் ஒரு கோரைக் கிழங்கு போல கெட்டியாக அசைவற்று இருத்தப் பெற்றாள். இவ்வாறாக பூமிதேவியே உறைந்திருப்பது இப்பெருமானின் பல் நுனியில் என்றால் அந்த உருவத்தில் பெருமை சொல்லவும் தகுமோ? என்பதாம்.

கலியில் வேங்கடவனே பலப்பிரதாயகன் என்பர். அவனது அஷ்டோத்திரத்திலும் முத்தாய்ப்பாக "ஸ்ரீயக்ஞ வராஹாய நம:" என்ற நாமம் வரும். இவ்வாறான பெருமைசேர் ஸ்வேத வராஹனைத் தொழுது நாமும் நமக்கு விதிக்கப்பட்ட யக்ஞாதிகளில் நாட்டம் ஏற்படப் பிரார்த்தனை செய்வோம்.