Tuesday, December 25, 2007

பரசுராம ஜெயந்தி....



மஹாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் (தசாவதாரம் அப்படின்னு சொன்னா நம்ம மக்கள் கமலஹாசனை தேடக் கூடும்) ஆறாவது அவதாரம் பரசு ராமர் அவதாரம். இன்று அந்த பரசுராமரின் ஜெயந்தி. ஏனோ தெரியவில்லை, கிருஷ்ண ஜெயந்தி போல, ராம நவமி போல இது பிரசித்தமாக கொண்டாடப் படுவதில்லை. நரசிம்ம ஜெயந்தி கூட பல இடங்களில், குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் சில இடங்களில் கொண்டாடுவதை அறிவேன்.


ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகா தேவிக்கும் ஐந்தாவது மகனாக பிறந்தவர் பரசுராமன். மிகுந்த பெருமைக்கு உரிய ஸ்ரீவத்ஸ கோத்திர வழக்கப்படி அவருக்கு உபநயனம் மற்றும் வேத அத்யயனம் போன்ற்வை செய்விக்கப்பட்டது. பிருகு முனிவரின் முந்தைய சாபத்தினால் இவரிடம் ஷாத்ர குணம் மேலோங்கி இருந்தது.(இந்த சாபம் இறைவனுக்கு ஏற்பட்டதல்ல, ஆனால் ஜமதக்னியின் தாயால், ஜமதக்னிக்கு அடுத்த தலைமுறைக்கு ஏற்பட்ட சாபம். அந்த தலைமுறையாக ஸ்ரீவிஷ்ணு அவதரிக்கிறார்) அரசர்களுக்கு உரிய எல்லா கலைகளையும் கற்றார். சிவ பெருமானை தினமும் உபாசித்து, தவம் மேற்கொண்டதால், ஈசன் இவரது பக்தியினை மெச்சி தன்கையில் உள்ள மழு என்னும் ஆயுதத்தின் அம்சமாக இன்னொரு மழுவினை தோற்றுவித்து பரசுராமருக்கு தந்தார்.


பதிவிரதைகளில் பரசுராமரின் தாய் ரேணுகாதேவிக்கு தனியிடம் உண்டு. ஆற்றில் குளித்துவிட்டு, அந்த ஆற்று மணலில் குடம் செய்து அதில் நீர் எடுத்து வருவாராம். இவ்வாறான தாய் மீது தந்தைக்கு கோபம் ஏற்பட்டு, தந்தையின் கட்டளையால் தாயைக் கொன்று 'தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' என்ற தர்மத்தை நிலைநாட்டினார். பின்னர் தந்தையின் வரத்தால் தாயை உயிர்பித்தார். தன் தாய் கொல்லப்பட காரணமான சித்ரரதன் என்னும் அரசனையும், அவனது குலத்தை தனது பரசு என்னும் மழூவால் கொன்றார்.


கர்த்தவீர்யார்ஜுனன் என்னும் அரசன் காட்டில் வேட்டையாட வருகையில் ஜமதக்னி முனிவரது ஆஸ்ரமத்திற்கு வருகிறான். அங்கு ஜமதக்னியும், ரேணுகாதேவியும் அவனை உபசரிக்கின்றனர். அவர்களிடத்து இருக்கும் காமதேனுவை அபகரிக்கிறான் அரசன். இதனை அறிந்த பரசுராமர், நேராக அரசனிடம் சென்று போரிட்டு கர்த்தவீர்யார்ஜுனனைக் கொன்று காமதேனுவை மீட்டுவருகிறார். கர்தவீர்யார்ஜினனின் மகன்கள் தந்தையை இழந்ததால் பழிக்குப் பழியாக ஜமதக்னியை கொன்றுவிடுகின்றனர். இதன் தொடர்பழியாகத்தான் பரசுராமர் 21 தலைமுறைக்கு க்ஷத்திரிய வம்சம் தலையெடுக்க விடாது அழித்து வந்தது புராணம்.


ஸ்ரீவிஷ்ணுவின் இந்த அவதாரம் 2 யுகங்கள் நிலைத்திருக்கிறது. இராமாவதாரத்தில் ராமச்சந்திர மூர்த்தியால் கர்வபங்கப் படுத்தப்பட்டபின், கிருஷ்ணாவதாரத்தில் கர்ணனுக்கு (அவன் க்ஷத்திரியன் என்று அறியாத வரையில்) வில்வித்தை கற்றுத் தருகிறார். இவர் தனது இறுதிக் காலத்தில் தனது பரசினை தூக்கி எறிந்த இடம்தான் இன்றைய கேரளா. இதனாலேயே கேரளப் பகுதிக்கு பரசுராம க்ஷேத்திரம் என்ற பெயர் உண்டு. பரசுராமர் பல இடங்களில் கோவில்களைக் கட்டி பூஜித்து தான் செய்த கொலைகளால் தன்னை பிரம்மஹத்தி அண்டாமல் பார்த்துக் கொண்டாராம். அரசர்களை கொன்ற பாவம் தீர மகேந்திர மலையில் தவமிருந்து சிவனிடம் சீரஞ்சீவி வரம் பெற்றாராம்.

எனக்குத் தெரிந்து பரசுராம அவதாரத்திற்கு உண்டான கோவில் என்று ஏதும் தெரியவில்லை. படிப்பவர்கள் யாருக்கேனும் தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்க வேண்டுகிறேன்.

Friday, December 21, 2007

மார்கழி நீராட்டு....



பொழுது விடிவதற்கு முந்திய அதிகாலை நேரத்தை பிரும்ம முகூர்த்தம் என்றும் உஷத் காலம் என்றும் சொல்கிறோம். இந்த நேரத்தில் ஸ்நானம்/குளித்தல் என்பது ஆரோக்கியம் என்கிறது ஆயுர்வேதம். ஆயுர்வேதத்திற்கு பெயர் போன கேரளாவில் இன்றும் மக்கள் அதிகாலை நீராடுதலை கடைபிடிக்க காணலாம். விடியலில் நீராட்டுவது சித்தத்தை குளிர வைக்கும், சூடேறிய மூளைப் பகுதி குளிர்ச்சியடைந்தால், சிந்தனை மிக சுறுசுறுப்பாக நடைபெறும். நமது உடலில் ஒன்பது துவாரங்கள் இருக்கிறது. இவை இரவும், பகலும் மலத்தை ஏற்படுத்துகிறது. இரவு உறக்கத்திற்கு பின் உடலை, அதிலிருக்கும் இந்த துவாரங்களைச் சுத்தம் செய்து கொள்ளுதலே இந்த ப்ராத ஸ்நானம். இதனை செய்கையில் அகமர்ஷண சூக்தம் என்னும் பிரார்த்தனை செய்து கொள்ள கூறுகிறார்கள். அகமர்ஷண - என்றால் பாவத்தை ஒழிக்கும் என்று பொருள். இவ்வாறாக உடல் தூய்மை மட்டுமின்றி உள்ளத் தூய்மைக்கும் வழிகாட்டியுள்ளனர் நம் பெரியோர்.



நீராடுதலில் தமிழ் மக்களுக்கு ஒரு விசேஷ விருப்பம் இருந்திருக்கிறது. நெடுங்காலமாக் நீராட்டத்தை தங்கள் இன்ப விளையாட்டுகளில் ஒன்றாக கருதி வந்திருக்கிறார்கள். புது நீராடல், காவிரி ஆடல், கடல் ஆடல் போன்றவை சங்க இலக்கியங்களில் இருப்பதன் மூலமாக அக்கால மக்கள் நீராட்டினை சிறப்பாக கொண்டாடியது தெரியவருகிறது. இக்காலத்தில் நமக்கு ஷெவர் தவிர ஏதும் தெரியாத நிலைக்கு வந்துவிட்டோம். நம்மில் பலருக்கு ஆறு/குளம் போன்றவற்றில் நீராட தெரிவதில்லை. நமக்கு அடுத்த தலைமுறைக்கு, கிணறு என்றாலே என்ன என்று தெரியாது என தொன்றுகிறது. பாவை நோன்பின் பகுதியாக நீராடலும் இருந்திருக்கிறது. இதனை திருவேம்பாவை எப்படிச் சொல்கிறது என்று பார்க்கலாம்.

குளத்தைக் கண்டதும் ஓசை எழும்படியாக தண்ணிரைக் கையால் அடித்துக் குடைந்து நீராட வேண்டும் என்ற ஆசை அப்பெண்களூக்கு ஏற்படுகிறது. மேலும் நீரில் குடைந்து நீராடும்போது இறைவனைக் குறித்து பாடுகிறார்கள். எந்த காரியம்/வேலை செய்தாலும் ஈசனை மனதில் கொண்டிருக்க வேண்டும் என்பதை இவ்வாறாக சொல்கிறார் மாணிக்க வாசகர். இவர்கள் புனல் பொங்க நீராடுகிறார்களாம்.


பொங்கும் மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்து
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்ப கொங்கைகள்
பொங்க குடையும் புனல் பொங்க பங்கயப் பூம்புனல்
பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.

இவர்கள் குதித்தபோது தண்ணீர் பொங்குகிறது. மேலும் ஒருத்தி " ஐயோ குளிருமே" என்கிறாள். இன்னொருத்தி 'எப்பெருமான் ஆடும் சிதம்பரத்தை நினைத்துக் கொண்டு நீரில் இறங்கிவிடு, குளிர் தெரியாது" என்கிறாள். "சீதப்புனல் ஆடி, சிற்றம்பலம் பாடி" சிற்றம்பலத்தில் ஆடும் பெருமானை வாயாரப் பாடி நீராடினால் குளிருமில்லை நடுக்கமும் இல்லை என்பது குறிப்பு.

தண்ணீரிலே ஒருவிதமாக அடிப்பதன் மூலமாக மிருதங்க சப்தம் போன்ற ஒலி எற்படச் செய்வார்களாம். இந்த அபூர்வகலை பற்றி மேலும் அறிய முய்ற்சிக்கிறேன். பாகவதத்தில் ராசலீலையில் இருப்பதாக தெரிகிறது. பார்க்க வேண்டும்.

இதே போல கோதையும் மார்கழி நீராட்டினை தனது பாவை நோன்பின் ஒரு பகுதியாக கொண்டு, "மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்" என்று மார்கழி நீராட்டுக்கு வேண்டுவனவாக சில பொருட்களை குறிப்பிடுகிறார்.

இந்த மார்கழி நீராட்டினை நினைவுபடுத்தும் விதமாக ஸ்ரீவில்லிப் புத்தூரில் கோதை நாச்சியாருக்கு தைலக் காப்பு உற்சவம் நடக்கிறது. இந்த விழாவினை " தண்டியல் சேவை" என்று கூறுகிறார்கள். திருமுக்குளத்தின் ஒருபகுதியில் நீராட்ட மண்டபம் என்றே ஒரு மண்டபம் இருக்கிறது. இந்த மண்டபத்தில் எழுந்தருளும் ஆண்டாள் ஒரு காலை ஊன்றிக் கொண்டும், மற்றொரு காலை தொங்கவிட்டுக் கொண்டும் நிறைந்த தலை முடியினை விரித்துக் கொண்டு இருப்பதும், அந்த முடிக்கு அர்ச்சகர்கள் நறுமணம் கமழும் தலத்தை தேய்த்துவிடும் அழகே அழகு. இது முடிந்தபின் குளக்கரையில் திருமஞ்சனம் நடக்கும். இவ்வாறாக மார்கழியில் இருதினங்களில் இது நடக்குமென தெரிகிறது.

Wednesday, December 12, 2007

பாவை நோன்பு....




மனதில் ஒர் உறுதி கொண்டு அதை வாக்காலும், உடலாலும் எள் அளவும் தவறாது நிறைவேற்றுவதே நோன்பு. கன்னிப் பெண்கள் அதிகாலையில் எழுந்து ஒவ்வொரு வீடாக சென்று தூங்குபவர்களை எழுப்பி அழைத்துக் கொண்டு நதிக்கரைக்கோ அல்லது குளத்திற்கோ சென்று நீராடிய பின் மண்ணில் பாவை பொம்மை பிடித்து வைத்து பூஜை செய்வார்கள். இதன் தாத்பர்யம் என்ன?. இறைவனை நாயகனாகவும், உயிர்கள் நாயகியாகவும் உருவகம் கொண்டு ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களிலிருந்து விடுவித்தலே இந்த் நோன்பு. அதாவது பக்குவப்பட்ட உயிர்கள் முன்பே துயில் நீக்கி, மற்ற உயிர்களின் துயிலுணர்த்தி, இறையருளில் சேர்ப்பித்தலே இந்த பாவை நோன்பு. இந்த நோன்பு/பூஜையில் இப்பெண்கள் பாடும் பாட்டுக்கள் விளையாட்டும், வேடிக்கையுமாக இருப்பினும் ஆழ்ந்த உண்மைகளை வெளிப்படுத்தக் கூடியது.

இந்த நோன்பின் பயனாக இப்பெண்கள் வேண்டுவது யாது?. இவர்கள் இரு பயன்களை முன்னிட்டு பாவை நோன்பிருக்கிறார்கள். ஒன்று நாட்டில் நல்ல மழை பொழிந்து செழிக்க வேண்டும் என்றும் இன்னொன்று நல்ல கணவனை அடைய வேண்டும் என்பது. (இப்போது தெரிகிறதா ஏன் தற்காலத்தில் பாவை நோன்பு இல்லை என்று?) இவ்விரண்டினையும் பெறுவதற்கு இறையருள் அவசியம் என்று உணர்ந்ததால் அவர்கள் இந்த நோன்பிருந்து வழிபட்டனர்.

பாவை நோன்பை பற்றி சங்க இலக்கியத்திலும் (பரிபாடலில்) அம்பா ஆடல் என்று கூறப்பட்டிருக்கிறதாம். வயது முதிர்ந்த பெண்கள் நோன்பு நோற்கும் சடங்கு முறையினை சொல்லிக் கொடுக்க அதன்படி சிறியவர்கள் ஒரு தவமாக இதனை செய்தார்களாம். மார்கழி மாதத்தில் நிறைமதி நாளாகிய திருவாதரையில் இத்திருவிழா தொடங்குகிறதாகவும், வைகை ஆற்றங்கரையில் நோன்பிருந்ததாகவும் பரிபாடலில் சொல்லப்பட்டுள்ளதாக அறிகிறோம். பரிபாடலின் காலம் ஆண்டாள், மாணிக்கவாசகருக்கும் முந்தையது என்பதால் இந்த நோன்பு அவர்களுக்கும் முன்பிருந்தே இருப்பது புலனாகிறது. (நன்றி: நடராஜன் எழுதிய "பாவை நோன்பு", பிரதிபா பிரசுரம்)
காத்யாயினி நோன்பு என்பது பற்றி ஸ்ரீமத் பாகவத்தில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. கோகுலத்து குமரிகள் ஹேமந்த ருதுவின் முதல் மாதத்தில் அதாவது மார்கழியில், சூரிய உதயத்திற்கு முன் எழுந்து யமுனையில் நீராடி, அங்குள்ள ஈரமணலில் அம்பிகையின் பாவை உருவமைத்து காத்யாயினி விரதத்தை நடத்தினார்களாம்.

[அன்னை பராசக்தி, காத்யாயன மகரிஷியின் மகளாக பிறந்தாளாம், அப்போது அவளது பெயர் காத்யாயினி. (இதுவே பின்னர் திரிந்து காத்தாயி என்றானதோ?) திருவிழிமிழலை கோவில் அம்பிகை பெயர் காத்யாயினி. அன்னையின் 51 பீடங்களில் இவள் ஒட்டியாண பீடத்திற்கு உரியவளாக சொல்லப்படுவள்]

பாவை நோன்பை பற்றி திருப்பாவையில் நிறைய குறிப்புக்கள் காணக் கிடைக்கிறது. நோன்பிற்கு உரிய செயல்களை "கிரிசைகள்" (கிரியைகள்) என்கிறார் கோதை. நோன்பிற்கான உறுதியாக சில கிரியைகள் ஏற்றுக் கொண்டும், சில கிரியைகளை விடுத்தும் செயல்படுவதாக சங்கல்பம் செய்கிறார். பாவை நோன்பிருக்கையில் கோதை விலக்கியவையாக குறிப்பிடுவது இரண்டாம் பாடலில் வருகிறது.பால், நெய் உண்ணுதல், கண்களுக்கு அஞ்சனமிடுதல், மலரலங்காரம் செய்துகொள்ளல், மற்றும் பிறருக்கு தீமை செய்யாதிருத்தல், சூரிய உதயத்திற்கு முன் நீராடுதல், தான-தருமம் செய்தல் என்று எப்போதும் கடைபிடிக்க வேண்டிய சில நன்நெறிகளையும் சேர்த்து சங்கல்பித்துக் கொள்கிறாள்.

ஆயிற்று நோன்பிற்கான சங்கல்பம், இனி சிரத்தையுடன் தொடர வேண்டுமே?. உடனேயே நோன்பின் பயனை கூறி எல்லோருக்கும் சிரத்தையினை வரவழைக்கிறார் மூன்றாம் பாடலில். என்ன பலனாம்?, நாடெங்கும் தீங்கு இன்றி இருக்கும், மாதம் மும்மாரி பொழியும், செந்நெல் சிறப்பாக விளையும், பசுக்கள் நிரம்பப் பால் கறக்கும், எங்கும் செல்வம் நிறையும் என்று மக்களின் ஜீவாதாரத்திற்கு வேண்டியவற்றை பலனாக கூறி உற்சாகப்படுத்துகிறாள். பின்னர் இருபதாம் பாடலில் நோன்பு முடிக்க வேண்டி பொருட்களான விசிறி, கண்ணாடி போன்றவற்றை பெரிய பிராட்டியிடம் கேட்கிறார். மேலும் இருபத்தாறாவது பாடலில் நோன்பு முடிப்பதை கொண்டாட வெண்சங்கம், பறைகள், மங்கள விளக்கு, கொடி, விதானம் எனப்படும் மேல் கூறை விரிப்பு ஆகியவற்றை கேட்கிறார். பின்னர் 27ஆம் பாடலில் நோன்பின் சன்மானமாக சூடகம், தோள்வளை, தோடு, செவிப்பூ, பாடகம் போன்ற பலவிதமான நகையலங்காரங்களும் புத்தாடைகளும் அணிந்து அக்காரவடிசல் எனப்படும் பால்சோறு உண்பார்களாம். அதுவும் எப்படி?, அந்த அக்காரவடிசல் தெரியாதவாறு நெய் மூ(டி)ழ்கியிருக்க, அதனை உண்கையில் அந்த நெய் முழங்கை வரை வழிய உண்பார்களாம். ஆக பாவை நோன்பினை எப்படி கொண்ட வேண்டுமென பாடி, கொண்டாடி காட்டியிருக்கிறாள் கோதை.

இவை தவிர பழங்காலத்தில் பெண்கள் கணவனின் ஆயுள் விருத்திக்காக பல நோன்புகள் நடத்தியிருக்கிறார்கள். அவற்றில் குறிப்பாக மார்கழி, தை, மாசி மாதங்களில் நடந்த நோன்புகளாவன; நித்திய சிருங்கார நோன்பு, பொம்மை நோன்பு, அட்லத்தி நோன்பு (தெலுங்கு பேசும் மக்கள் இன்றும் சிறப்பாக கொண்டாடுகிறார்கள்), சிட்டிப் பொட்டு நோன்பு போன்றவை.

Tuesday, December 11, 2007

மார்கழியின் மகிமை...








மாரி வேந்தனை வென்று பனியரசன் ஆட்சி ஆரம்பிப்பதை கட்டியங் கூறிக் கொண்டு வருகிறது மார்கழி. அவ்வரசனது வெற்றியினை கொண்டாடும் விதமாக கரும்பு செழிக்கிறது, அவரை முகை அவிழ்க்கிறது. மலர்கள் மட்டுமின்றி மக்கள் மனதிலும் ஒரு புத்துணர்ச்சி தோன்றுகிறது. எலும்பை உருக்கும் பனியிருந்தாலும், அதனை பொருட்படுத்தாது, இம்மாதத்தின் ஒவ்வொரு நாளையும் திருவிழாவாக கொண்டாடுகின்றனர்.


முன்பெல்லாம் மார்கழி மாதமென்றால் விடியற்காலை மூன்று மணியிலிருந்தே சிறுமிகள் தெருவினை அடைத்து கோலம் போடவும், அதற்கு வண்ணந்தீட்டுவதும், மலரலங்காரம் செய்வதும். வாசலில் விளக்கு ஏற்றுவதுமாக இருப்பர். நாலு, நாலரை மணிக்கு இல்லத்திலிருக்கும் ஆண்கள், சிறுவர்கள் குளியல் முடித்து ஜப-தபங்களை செய்து பின் ஓரிடத்தில் கூடி ஹரி நாம சங்கீர்த்தனம் செய்தபடி வீதி வலம் வருவதும் தினம் நடக்கும்.



சந்திரனின் சுழற்சியினை கொண்டு சொல்லப்படும் சாந்திரமான பஞ்சாங்கத்தில் மார்க்க சீர்ஷம் என்றும், செளரமானத்தில் தனுர்மாதம் என்றும் இம்மாதம் வழங்கப்படுகிறது. சாந்திரமானத்தின்படி பார்த்தால் அமாவாசைக்கு அடுத்த நாளே மாதம் பிறந்துவிடுகிறது. (அப்பாடி தப்பித் தவறி யாராவது படித்து ஏன் இவ்வளவு சீக்கிரமா மார்கழி பதிவுன்னு கேட்டால் சொல்ல பதில் ரெடி). ஆன்மிக வழியில் செல்ல தலைமையான மாதம் (மார்க்க - வழி; சீர்ஷம் - தலைமையானது) இது. நமக்கு உத்தராயணம் என்று சொல்லப்படும் 6 மாதங்களும் தேவர்களுக்கு ஒரு பகல் என்றால் தக்ஷிணாயினத்தின் (இரவு) கடைசி மாதமான மார்கழி அவர்களுக்கு உஷத்/அருணோதய காலம் அல்லவா?. இந்த மாதத்தில் செய்யப்படும் பூஜை, ஜபம், பஜனை போன்றவற்றிற்கு இருமடங்கு பலன் என்று கூறப்படுகிறது.



இம்மாத திருவாதிரையன்று தான் வியாக்ர பாதருக்கும், பதஞ்சலிக்கும் சிவபெருமான் நடராஜ கோலத்தை அருளி இருக்கிறார். திருமால் கண் விழிக்கும் வைகுண்ட ஏகாதசி இந்த மாதம் தான். இராப்பத்து-பகற்பத்து உற்சவங்களும் இந்த மாதமே நடை பெறுகிறது. கீதையில் கிருஷ்ணன், தான் மாதங்களில் மார்கழியாக இருப்பதாக என சொல்லியிருக்கிறான். இராமாயணத்திலும் மார்கழி மாதச் சிறப்பு சொல்லப்படுகிறது. ராமன் காட்டிற்கு வந்து, பஞ்சவடியில் இருக்கும் காலத்தில் சரத் ருது முடிந்து ஹேமந்த ருது ஆரம்பிக்கிறது. ராமன், சீதை, லக்ஷ்மணனுடன் கோதாவரிக்கு நீராட செல்கிறான். அந்த சமயத்தில் லக்ஷ்மணன் ஹேமந்த ருதுவினையும், மார்கழி மாதத்தையும் புகழ்கிறான். இந்த வர்ணனையை ஆரம்பிக்கும் வால்மிகி 'பகவானான ஸ்ரீ ராமசந்திரனுக்கு மிக பிடித்த ஹேமந்த ருது வந்தது' என்கிறார்.



தொண்டரடிப்பொடி ஆழ்வாரும், இயற்பகை நாயனாரும், நந்தனாரும் அவதரித்த மாதம் இந்த மாதமே.


சாந்திரமான பஞ்சாங்கத்தின்படி பார்த்தால் இன்று மார்கழி 3ஆம் நாள். செளரமானத்தின்படி பார்த்தால் வரும் திங்கள் (17-12-2007) கிழமை மாதம் பிறக்கிறது.

Monday, December 10, 2007

மார்கழி திங்களல்லவா.....

எல்லா மாதங்களும் வருகின்றது, நாமும் அந்தந்த மாதத்தில் வரும் பண்டிகைகளை கொண்டாடுகிறோம். மார்கழி பிறக்கப் போகிறது. நம் மனத்திலும் பல கேள்விகள்.


அதென்ன எல்லா மாதங்களை விட மார்கழி உசத்தி?. பரந்தாமன் மாதங்களில் நான் மார்கழி என்றதால் மட்டுமா?.


ஏன் திருப்பாவை-திருவெம்பாவையினை இந்த மாதத்தில் பாராயணம் செய்கிறோம்?.


குறிப்பாக அருணோதய வேளையில் இந்த பாசுரங்களை பாட/பஜீக்க வேண்டிய அவசியம் யாது?


பாவை நோன்பிருந்தாளாமே கோதை?...அதென்ன பாவை நோன்பு?

வல்லியம்மா கூட ஏதோ G-சாட் மெசெஜ் குடுத்திருக்காங்களே 'மார்கழி ஆராட்டு'ன்னு அதென்ன?


ஆமாம், இரண்டு பாவைகளிலும் இணையான கருத்துகள் என்று ஏதேனும் இருக்கா?

கே.ஆர்.எஸ் ஏற்கனவே கேட்டிருக்கிறார் என்ன பதிவுகள் வருமென. எவ்வளவு எழுத முடியுமோ தெரியவில்லை. பராம்பிகை அருளிருந்தால், மேலே சொன்ன சில கோர்வையான எண்ணங்களை எழுதலாம் மார்கழித் தொடராக.

25 முக்தி நிலை / ஜோதியில் கலத்தல்.



பிறந்த ஒவ்வொருவரும் ஒரு நாள் மரணத்தை தழுவியே ஆக வேண்டும். இதனை தடுக்க முடியாது. ஆனால் மறுபடி பிறவி ஏற்படாமல் தடுப்பது நம் கையில்தான் இருக்கிறது. முக்தி, பிரம்மத்துடன் இணைவது, ஜோதியில் கலப்பது என்றெல்லாம் சொல்வது நடக்க வேண்டுமானால் இறந்தால்தான் முடியுமா?. உயிருடன் இருக்கும் போதே பிரும்ம ஞானியாக முடியும், அதனையே வள்ளலார் பெருமான் மரணமில்லா பெருவாழ்வு என்கிறார். இதனைத்தான் "பிறவாமை" என்று காரைக்கால் அம்மையாரும், பட்டினத்தாரும் சொல்லியிருக்கிறார்கள். சங்கரர், ரமணர் போன்ற பல முனி ஸ்ரேஷ்டர்களும் இதனைக் விளக்க முற்பட்டுள்ளனர்.


மானிட பிறப்பு முக்திநிலை அடைய ஆத்மா-அனாத்மா விவேகம் வேண்டும். இந்த விவேகம் கிட்டுவதற்கோ குருவின் அருளும் அருகாமையும் அவசியம். "ஈசனருள் நமக்கே" என்றிருப்பவர்களுக்கு இறைவன் அருள் செய்கிறான். குருவுக்காக காத்திருத்தலும், கிடைத்தபின் அவரை சரணடைதலும் மிக முக்கியம். ஒரு ஜீவனுக்கு நல்ல குரு கிடத்தல் என்பதே பூர்வ ஜென்ம பலத்தால்தான். அண்டத்தில் நடக்கும் அருணோதயம் எவ்வாறு இருள் நீக்குகிறதோ, அதுபோல பிண்டத்திற்குள்ளிருக்கும் அறியாமை என்னும் இருள் நீக்க வரும் அருணோதயமே குரு.

எனக்கு நல்லதோரு தந்தையாக மட்டுமல்லாது, பிரம்மோபதேசம் செய்வித்து குருவாகவும், குப்தமாக ஸ்ரீவித்யா பற்றிச் சொல்லிக் கொடுத்து ஆசானாகவும் என்னை வழிந்டத்தி வ்ந்த என் தந்தை ஸ்ரீ வி.ஆர். கணபதி, இன்று மதியம் 2 மணி அள்வில் ஸ்ரீபுரம் அடைந்தார். அன்னை மீனாக்ஷி அவரது ஆத்மா சாந்தி அடைய அனுகிரக்கட்டும்.

Monday, December 3, 2007

ஹரிவராசனம்




ஹரிவராசனம் விஸ்வமோகனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்
அரிவிமர்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே


மிகச் சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவரும், பிரபஞ்சத்தையே தன் முறுவலால் மோகிக்கச் செய்பவரும், ஹரிதம் என்னும் குதிரையில் (ஹரித: என்றால் சூரியன், அவனது தேரில் உள்ள ஏழு குதிரைகளின் பெயர் ஹரிதம்)
பவனி வரும் சூரியனால் ஆராதிக்கப்படும் பாதங்களை உடையவரும், சத்ருக்களை அழிப்பவரும், நித்ய நர்த்தனம் புரிபவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சரணகீர்த்தனம் சக்தமானசம்
பரணலோலுபம் நர்த்தனாலஸம்
அருணபாஸுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணகோஷத்தால் மகிழ்பவரும், பிரபஞ்சத்தின் இயக்கத்திற்காக நடனமாடுபவரும், உதிக்கும் சூரியனொத்த ஒளிமயமானவரும், பூத நாயகனுமாகிய ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ப்ரணயஸத்யகம் ப்ராணநாயகம்
ப்ரணதகல்பகம் ஸுப்ரபாஞ்சிதம்
ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

உலகின் உண்மைப் பொருளாகவும், உலக உயிர்களுக்கு நாயகனாகவும்
தன்னை சரணடைந்தவர்க்கு எல்லாவளமும் அளிப்பவரும், ஓங்கார மந்த்ரமாய் இருப்பவரும், இசையில் ப்ரியம்/நாட்டம் உடையவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
துரகவாகனம் ஸுந்தரானனம்
வரகதாயுதம் வேதவ-வர்ணிதம்
குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

குதிரை வானரும், அழகிய முகமுடையவரும், கதாயுதம் ஏந்தியவரும்,
தேவர்களால் வர்ணிக்கப்படுபவரும், குருவைப் போல ப்ரியம் உள்ளவரும், கீர்த்தனங்களில் ப்ரியமுடையவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
த்ரிபுவனார்சிதம் தேவதாத்மகம்
த்ரனயனப்ரபும் திவ்யதேசிகம்
த்ரிதசபூஜிதம் சிந்திதப்ப்ரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

மூன்றுலகிலும் அர்ச்சிக்கப்படுபவரும், எல்லா தெய்வங்களின் அம்சமாக விளங்குபவரும், மூன்று கண்களை உடையவரும், சிறந்த குருவாக விளங்குபவரும், வேண்டுவதை அளிப்பவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பவபயாவஹம் பாவகாவுகம்
புவனமோகனம் பூதிபூஷணம்
தவளவாஹனம் திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சம்சார பயத்தை போக்குபவரும், பக்தருக்கருள்வதில் தந்தை போலும், உலகத்தை தன் மாயையால் மயக்குபவரும், விபூதி தரித்தவரும், வெள்ளை யானையை வாகனமாக கொண்டவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
களம்ருதஸ்மிதம் ஸுந்தரனானம்
களபகோமளம் காத்ரமோஹனம்
களபகேசரி வாஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

மதுரமான, மிருதுவான புன்முறுவல் உடையவரும், சுந்தர முகமுடையவரும், இளமையும், மென்மையும் உடையவரும், மயங்க வைக்கும் உடலமைப்புக் கொண்டவரும், யானை, சிங்கம், குதிரை போன்ற்வற்றை வாகனமாக கொண்ட
ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ச்ரிதஜனப்ரியம் சிந்திதப்ரதம்
ச்ருதிவிபூஷணம் ஸாதுஜீவனம்
ச்ருதிமனோகரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணடைந்தவர்களிடத்து அன்புடையவரும், நினைத்ததை உடனே அளிப்பவரும், வேதங்களை ஆபரணமாக அணிந்தவரும், ஸாதுக்களிடத்து
வசிப்பவரும், வேதகோஷங்களில் மகிழ்பவரும், கீதங்களில் லயிப்பவருமான
ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பாடலைக் கேட்க இங்கே சுட்டவும் (பதிவர் திரு. சதங்காவிற்கு நன்றி.)

Monday, November 19, 2007

அந்திரி சூட்டக் கனாக் கண்டேன்....



இந்திரன் உள்ளிட்ட தேவர்குழாம் எல்லாம்
வந்திருந்தென்னை மகள்பேசி மந்திரித்து
மந்திரக்கோடி உடுத்தி மணமாலை
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன்.



கோதை நாச்சியார் தனது கனவில் திருமணக் காட்சியினை சொல்கையில் மேற்கண்டவாறு சொல்கிறார். அதாவது கண்ணனுடன் தனது திருமணம் நடக்கையில் இந்திரன் முதலிட்ட எல்லா தேவர்களும் வந்திருந்தனர் என்று சொல்லி, பின்னர் அந்தரி ஆண்டாளுக்கு கூறைப் புடவை அணிவித்து, மலர் மாலையைச் சூட்டினாள் என்கிறார். கண்ணனின் சகோதரி முறையில் இருக்கும் துர்காம்பிகை/பராசக்திதான் அந்த அந்தரி. இன்றைய திருமணங்களிலும் மாப்பிள்ளையின் சகோதரி தானே ஓதியிட்டு தரும் கூறைப்புடவையினை உடுத்த உதவி மணமேடைக்கு கூட்டிவரும் முறையிருக்கிறதே.


அந்தரி என்பது அம்பிகையின் பெயர். துர்காதேவிக்கு அந்தரி என்ற பெயருண்டு. அபிராமி பட்டரும் இந்த பெயரைச் சொல்கிறார். நமது மனதுக்குள் வாசம் செய்பவள், அந்தராத்மாவாக இருக்கும் சக்தி அந்தரி. சத்-சித்-ஆனந்தம் என்கிறோம். அதில் உள்ள 'சித்' என்பதுதான் இந்த அந்தரி.


"சத்" என்பது சகலத்துக்கும் சத்தியமாக உள்ள பரமாத்மா. இந்த பரமாத்மாவுடன் 'சித்' இணைந்து கிடைக்கும் ஆனந்தமே சச்சிதானந்தம். சித் என்பதே சைதன்யம். அதாவது ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் பரமாத்ம ஸ்வருபமாக இருப்பது. இந்த சத்-சித்-ஆனந்த நிலையினை கூறும் அன்னையின் நாமா, "சிதக்னி குண்ட சம்பூதா". அதாவது நமது 'சித்'திலே நாம் அவளை நினைத்துச் செய்கின்ற பிரார்த்தனை எனப்படும் யாகத்தில் தோன்றுபவள் சிதக்னி குண்ட சம்பூதா. இவ்வாறாக தோன்றியவள் நமக்கு தேவ உணர்வினை, அதாவது சத்-சித் ஆனந்தத்தை அளிப்பதால் தேவ-கார்ய-சமுத்யதா.


பண்டாசுர வதம் நடப்பதற்காக தேவர்கள் அன்னையை வழிபட்டனர். அப்போது தேவர்களை பண்டாசுரனிடமிருந்து காக்கும் பொருட்டு (தேவகார்ய சமுத்யதா), அன்னை அந்த தேவர்கள் செய்த யாக குண்டத்திலிருந்து வந்தாளாம். அதுவும் வரும் போதே 16 வயது இளமங்கையாக வந்தாளாம்.
இதனாலும் அவள் "சிதக்னிகுண்ட சம்பூதா - தேவகார்ய சமுத்யதா"


இதில் சிதக்னிகுண்ட சம்பூதா என்பது ஒரு நாமா, தேவ-கார்ய சமுத்யதா என்பது அடுத்த நாமம்.

Monday, October 29, 2007

சதுர்பாஹு சமன்விதா


அனனை லலிதாவின் நாமங்களில் "சதுர்பாஹு சமன்விதா" என்பது ஒரு நாமம். இங்கிருந்துதான் அன்னையின் ரூப லாவண்யத்தை சொல்ல ஆரம்பிக்கிறது சஹஸ்ரநாமம். அதாவது நான்கு கரங்களை கொண்டவள் என்பதுதான் சதுர்பாஹு சமன்விதா.
சரி அந்த 4 கரங்களில் இருப்பவை என்ன?. அது எதைக்குறிக்கிறது? அன்னையின் கையில் இருக்கும் நான்கு ஆயுதங்களை சொல்லும்போது பின்வருமாறு கூறுகிறது சஹஸ்ர நாமம்.

ராக-ஸ்வருப பாஷாட்யா
குரோதாகாராங்குச உஜ்வலா
மனோரூபேக்ஷு கோதண்டா
பஞ்சதன்மாத்ர ஸாயகா.

அதாவது பாசம், அங்குசம், கரும்புவில் மற்றும் 5 மலர்களால் ஆன பாணங்கள் இவை அன்னையின் நான்கு கைகளில் இருக்கும் ஆயுதங்கள்.

இக்ஷு கோதண்டா என்பது கரும்புவில் அது வெறும் கரும்பினால் ஆன வில் அல்ல. அது நமது மனத்தை குறிக்கிறது. அதனால்தான் மனோரூபேக்ஷு கோதண்டா. மனம் தான் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள வளைந்து கொடுக்கிறது. மனம் தான் நினைப்பதை நிறைவேற்றிக் கொள்வதால்தான் மாயையில் வீழ்ந்துவிடும் சாத்தியங்கள் உருவாகின்றது. அறிவியல் மூளை சிந்திக்கிறது என்று சொல்கிறதே தவிர அதனை சிந்திக்கத் தூண்டும் மனம் எங்கு இருக்கிறது என்று சொல்முடியவில்லை. எனவேதான் வளந்து கொடுக்கும் மனத்தை கரும்புவில்லாக கொண்டிருக்கிறாள் அன்னை. ஏன் கரும்பு?, ஏன் மூங்கில் இல்லை?, மனம் என்றும் இனியதை நினைக்கிறது, தனக்கு பிடித்ததையே செயல்படுத்தவிழைகிறது, அதனாலேயே கரும்பு வில் / இக்ஷு கோதண்டம். நமது மனத்தை வளைத்து அதனை தன் போக்கில் விடாமல் சரியாக பயன்படுத்தவேண்டும் என்பதால் தனது கையில் ஒர் ஆயுதமாக கொண்டு இருக்கிறாள்.

எப்படி வெறும் இக்ஷு கோதண்டா இல்லையோ அதேபோல "பஞ்சபாணா" இல்லை. "பஞ்சதன்மாத்ர" நமது ஐந்து தன்மாத்திரைகளைத்தான் மலர் பாணங்களாக கொண்டிருக்கிறாள் அன்னை. அதென்ன "பஞ்ச தன்மாத்திரைகள்"?. கண், காது, மூக்கு, நாக்கு, மேனி ஆகிய ஐம்புலன்கள்தான் பஞ்சதன்மாத்திரைகள். இந்த ஐந்தின் உணர்வுகள்தான் மூளைக்கு கொண்டு செல்லப்பட்டு ஞானேந்திரியம் தூண்டப்படுகிறது. இதில் மூளை இடும் கட்டளைகள் முலமே கர்மேந்திரங்கள் நடை பெறுகிறது. மேனி என்று சொல்வதில் கை, கால், மற்றும் விசர்ஜன உறுப்புகள் உள்ளடக்கம். அன்னை வெறுமனே நமது கண், காது போன்றவற்றை கொண்டுள்ளாள் என்ற அர்த்தமல்ல இது. இந்த உறுப்புகள் தரும் தகவல்கள் எல்லாம் அன்னையிடமிருந்து உருவாகிறது. அவை மனதால் செயல்படுத்தப்படுகிறது. அதனால்தான் மனம் வில்லாகவும் இந்த புலன்கள் அம்புகளாகவும் உள்ளது. இவற்றையெல்லாம் இயக்குபவளாக அன்னை இருக்கிறாள்.

சரி, மற்ற இரு-கைகளில் என்ன வைத்திருக்கிறாள்?, பாசம், அங்குசம். அருள் நிறைந்த அன்னை ஏன் இந்த ஆயுதங்களை வைத்திருக்கிறாள்?. யாரைக் கட்டிவைத்து அங்குசத்தால் அடிக்கப் போகிறாள்?.

பாசம் என்றால் கயறு. எமன் கையில் பாசம் இருக்கிறது என்று சொல்லாது பாசக் கயறு இருக்கிறது என்று கயற்றினை அழுத்தமாக இருதரம் உறைக்கிறோம். பாசம் என்றால் கட்டுவது, உலகியல் பந்தாத்தால் ந்ம்மை கட்டுகிறாள் அன்னை. அந்த பந்ததை எப்படி விலக்குவது?, அதற்குத்தான் அங்குசம் அந்த அங்குசம் எப்படிப்பட்டதாம்?, ஜ்வலிஜ்வலிக்கும் அங்குசமாம். எப்போதும் பளபளப்பான ஆயுதம் என்பது நன்கு தீட்டப்பட்டதாகத்தான் இருக்கும். எனவே உஜ்வலமான அங்குசம். சரி, குரோதம் எப்படி வந்தது?, எந்த பந்தமும் குரோதம் உருவாவதால் அழிந்துவிடும். எனவே நம் அன்னை மாயயையால் வரும் பந்தத்தை குரோதத்தால் அழித்து நம்மை வழிப்படுத்த அங்குசத்தை கொண்டிருக்கிறாளாம்.

ஆக இந்தப் பதிவில் அன்னையின் 5 நாமங்களைப் பார்த்துவிட்டோம். அன்னை ஏன் அபய-வர முத்திரைகளை காட்டவில்லை என்பதை ஆதிசங்கரர் செளந்தர்யலஹரி 4ஆவது ஸ்லோகத்திலேயே சொல்லிவிட்டார்.

Sunday, October 28, 2007

ஸ்ரீ மஹாராக்ஞி




முந்தைய பதிவில் ஸ்ரீ மாதா என்கிற நாமம் அன்னையின் ஸ்ருஷ்டிச் செயலையும், கருணையையும் எப்படி எடுத்துக் காண்பிக்கிறதென்று பார்த்தோம். அடுத்த நாமமான ஸ்ரீ மஹாராக்ஞி என்பது சகல பிரபஞ்சத்திற்கும் ராணியாக இருந்து பரிபாலனம் செய்பவள் என்பதைக் குறிக்கிறது.

ராஜராஜன் என்ற பதம் ஈஸ்வரனைக் குறிக்கும். அந்த பரமேஸ்வரனுக்கே ஈஸ்வரி என்பது ராஜராஜேஸ்வரி என்ற நாமம். ஈஸ்வரன் பஞ்சகிருத்யங்களை சக்தியின் உதவியாலேயே செய்கிறான். அன்னைக்கே இன்னுமோரு பெயர் "பஞ்சகிருத்திய பராயணா" என்றும் உள்ளது. அது என்ன பஞ்சகிருத்தியம்?, அப்படியென்றால் என்றால் என்ன?.


பஞ்சகிருத்தியம் என்பது ஐந்து தொழில்கள். பஞ்சகிருத்திய பராயணா என்றால் ஐந்தொழிலைச் செய்பவள் என்றே அர்த்தம். இந்த ஐந்து தொழில்களையே சற்று எளிமைப்படுத்தி, படைத்தல், காத்தல், அழித்தல் (ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம்) ஆகிய முத்தொழில்கள் என்று சொல்கிறோம்.


உலகில் எல்லாவற்றையும் ஸ்ருஷ்டிக்க வேண்டும், ஸ்ருஷ்டித்தவற்றை காக்க (ஸ்திதி) வேண்டும். தகுந்த காலத்தில் அவற்றை நீக்கவும் வேண்டும். சம்ஹாரம் என்பதை அழித்தல் என்பதாக சொல்வது தவறு என்றே தோன்றுகிறது. இன்றைய அறிவியலும் எந்த சக்தியும் அழிவதில்லை, இன்னோன்றாக மாறுகிறதென்றே சொல்கிறதல்லவா? இதனையே கம்பர் தனது பாயிரத்தில் "தாமுளவாக்கலும், நிலைபெறுத்தலும், நீக்கலும்" என்று கூறுகிறார்.


ஆக, இந்த மூன்று செயல்களும் நடைபெற வேண்டுமானால் இன்னும் இரு செயல்கள் வேண்டியிருக்கிறது, அதுவே திரோபாவம் (அ) திரோதானம் என்று கூறப்படும் மாயை (அ) மறைத்தல். ஐந்தாவது செயல் அனுக்ரஹம். ஆக இந்த ஐந்து தொழிகளையும் அன்னையின் சக்தியாலேயே செய்கிறானாம் ஈஸ்வரன். லலிதையின் ஆயிரம் நாமங்களில் முதல் மூன்று மட்டுமே முத்தொழிலை குறிப்பிடுவது, மற்ற எல்லா நாமங்களும் திரோதானத்தையும், அனுக்ரஹத்தையுமே சொல்லக் கூடியதாக இருக்கிறது.


இதைத்தான் " ஈசாதி தேவதாயை" என்றும் "ஈச சக்தி" என்றும் லலிதா த்ரிசதி சொல்கிறது. இதைத்தான் "நசே தேவம் தேவோ ந கலு குசல: " என்று ஆதிசங்கரர் தனது செளந்தர்ய லஹரி முதல் ஸ்லோகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Friday, October 26, 2007

ஸ்ரீ மாதா



லலிதா சஹஸ்ரநாமத்தின் தியான ஸ்லோகம் ஆரம்பிப்பதே "சிந்துராருண விக்ரஹாம் த்ரிநயனாம்" என்று ஆரம்பிக்கிறது. அதாவது அன்னையை சிந்துர வர்ணத்தினள் என்று குறிப்பிடுகிறது. சிந்துர விக்ரஹாம் என்று இல்லாது சிந்தூராருண அதாவது சிந்தூர அருண விக்ரஹாம். அதாவது "உதிக்கின்ற செங்கதிர்" என்பதைத்தான் சிந்தூராருண விக்ரஹாம் என்று குறிப்பிடுகிறார்கள் இங்கே.

அன்னையைப் பலவிதங்களில் நமக்கு தெரியும், இவற்றையெல்லலம் மூர்த்தங்கள் என்போம். காமாக்ஷி, மீனாக்ஷி, தாக்ஷாயினி, அன்னபூர்ணேஸ்வரி என்பதாக பல மூர்த்தங்கள்/ரூபங்கள். இந்த ரூபங்கள் எல்லாமே பராசக்தி என்றாலும் இந்த மூர்த்தங்களுக்கென்று ஆயுதங்கள், நிறம் எல்லாம் தனியாக இருக்கிறது. மீனாக்ஷி என்றால் அவள் மரகத நிறத்தவள் என்றும் அன்ன பூரணி ஸ்வர்ண நிறத்தவள் என்றும், காமாக்ஷி சிவந்த நிறமென்றும் கூறப்படுகிறது.

அன்னை, தக்ஷனின் மகளாக தாக்ஷாயினி என்று சொல்லப்படும் போது அவள் உமாதேவி என்ற விதத்தில் கரிய நிறத்தவளாக அறியப்படுகிறாள். லலிதா, காமாக்ஷி, ராஜராஜேஸ்வரி போன்ற ரூபங்கள் சிவந்த ரூபமாக அறியப்படுகிறது. இதற்கான காரணத்தை பகவத்பாதர் "ஜகத் த்ராதும் கருணா: கசித் அருணா:" என்கிறார். அதாவது உலகைக் காக்க வந்தவள், அந்த செயலைச் செய்ய கருணையுடன் அருண ஸ்வருபமாக தன்னை காணச் செய்தாள் என்கிறார்.

கலர் ஆப் ஜெனிஸிஸ் என்பதன்படி பார்த்தோமானாலும் பல இடங்களில் தோற்றம் என்பதன் நிறமாக கொள்வது சிவப்பு நிறத்தைத்தான். சூரியன் உதிக்கும் நேரத்தில் சிவப்பாக இருப்பான். அந்த நேரத்தில் அந்த கிரணங்கள் பட்டு பூமியும் ஒருவிதமான இளஞ்சிவப்பினை தரும். இதையே பாலா திருபுர சுந்தரியின் தியான ஸ்லோகத்தில் "அருண கிரண ஜாலை:" என்பதாகச் சொல்கிறார்கள். அதாவது அருணனின் கிரணங்கள் போன்ற நிறத்தவள் என்பதாக. மஹா விஷ்ணுவின் நாபிக்கமலத்தில் தோன்றிய பிரம்மா, இருக்கும் அந்த கமலத்தின் நிறமும் இளஞ்சிவப்பே. (வெள்ளைத்தாமரை சரஸ்வதிக்காக, ஞானத்தின் நிறமாக)பிரம்மனின் வேலை படைப்புத்தொழில் என நாமறிவோம்.

ஆக, படைப்பு என்ற தொழிலுக்கான நிறம் சிவப்பு, அதிலும் இளஞ்சிவப்பு என்பதாகக் கொண்ட காரணத்தால்தான் இவ்வாறாக சிந்தூராருண விக்ரஹாம் என்று கூறினார்கள். எனவேதான் அன்னை சிருஷ்டிக்கான வடிவில் வரும் சமயத்தில் கருமை நிறத்தில் வராமல் (கருமை என்பது அறியாமை மற்றும் தாமசத்திற்கான நிறம்) பூலோகத்தில் ஒவ்வொரு ஜிவனுக்கும் தாய் என்பவள் போல உலகிற்கெலாம் தாயாக இருந்து படைத்துக் காப்பதால் இளஞ்சிவப்பு நிறத்தில் படைத்துக் காக்க வருகிறாள். இவ்வாறாக சர்வ உலகங்களுக்கும் தாயாக இருப்பதை குறிப்பதாகவே சஹஸ்ரநாமத்தில் முதல் நாமமாக 'ஸ்ரீ மாதா' என்று ஆரம்பிக்கிறது.

இவ்வளவு தீர்க்கமாக சிந்தித்து இந்த சஹஸ்ர நாமத்தை எழுதியவர் யார் என தெரியுமா?....வசினி எனப்படும் வாக் தேவதைகள் தான் அன்னை லலிதாவின் ஆணைப்படி சஹஸ்ரநாமத்தை எழுதியவர்கள். இந்த வசினி தேவதைகள் அன்னையுடன் நித்ய வாசம் செய்பவர்கள். இதனை அகத்தியர் மூலமாக நமக்கு அளித்தவர் ஹயக்ரீவர்.

Thursday, October 25, 2007

கடை விரித்தேன் கொள்வாரில்லை....

ஏதோ சொல்வார்களே "கடைவிரித்தேன் கொள்வாரில்லை" என்று, அந்த கதைதான் நினனவுக்கு வருகிறது. அதிலும் என்னுடைய கடை ரொம்ப ஸ்பெஷலாக, யார் கண்ணிலும் படாமல் வைத்துக் கொண்டிருக்கிறேன். ஆமாம், தமிழ்மணம், தேன்கூடு போன்றவற்றில் இணைக்கவில்லை.


ஏனெனில் நான் எழுத நினைப்பது ஆன்மிகம் மட்டுமே, அதிலும் சாக்தம் அதிகமாக. எனவே என் பதிவுகள் ஆன்மிக நண்பர்களுக்கு மத்தியில் மட்டும் புழங்கினால் போதும் என்றே தோன்றுகிறது. திரட்டிகளில் இணைப்பதால் கிடைக்கும் அர்ச்சனைகள் வேண்டாம் என்று தோன்றுவதாலும் இணைக்கவில்லை. எனது இந்த நிலை சரிதானா என்பதிலும் எனக்கு சிறிது சந்தேகம் இருக்கிறது, இன்னும் சிறிது காலம் செல்லட்டும் தெளிவு பிறக்கிறதா பார்க்கலாம்.


பிளாகர்ஸ்-யூனியன் போன்ற குழுக்களில் இணையலாம் என்று தோன்றுகிறது. அதன் அட்மினிஸ்ட்ரேட்ட்ர்கள் சொன்னபடி மெயில் அனுப்பினேன், ஆனால் அப்போது நான் பதிவுகள் எழுதவில்லை. இப்போது ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன். அம்பியும், டிஸைப்பிளும் அருள் புரியவேண்டும். மேலும் வேறு ஏதேனும் குழுக்கள் இருக்கின்றனவா?. இருப்பின் அறிவிக்கவும்.



பிளாக் டெம்லேடையும் மாற்ற உத்தேசம் இருக்கிறது, ஆனால் நேரமில்லை. எது பெஸ்ட் டெம்லேட் என்பது பற்றி பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. இதுபற்றி யாரேனும் ஏதேனும் சஜெஸ்ட் பண்ணினால் தன்யனாவேன்.

செளந்தர்ய லஹரி எழுத ஆரம்பித்துள்ளேன், 5 பதிவுகள் ஆயிற்று. எழுதும் போதுதான் புரிந்தது, அன்னையின் ஆயிரம் நாமங்களை இல்லாவிடினும் சில பல முக்கிய நாமங்களையும் எழுதுவது தேவையென்று. எதற்காக இது என்றால், அன்னையின் அழகை வர்ணிக்கும் ஸ்லோகங்கள் எடுத்தாளும் நாமங்கள் பலவற்றை சஹஸ்ர நாமத்தில் காணக் கிடைக்கிறது.

எனவே இந்தப் பதிவில் அன்னையின் ஆயிரம் நாமங்கள் என்ற தொடராக சில நாமங்களை எனது புரிதலின்படி எழுத உள்ளேன். ஆஸ்திக மஹா ஜனங்கள் படித்து எனது புரிதலில் உள்ள சரி-தவற்றினை திருத்த வேண்டுகிறேன்.

Wednesday, October 17, 2007

ஸ்ரீ மூகபஞ்ச சதீ அருளிய மூக சங்கரர்....

காளிதாஸர், தண்டி, பவபூதி, வரருசி, மற்றும் 5 புலவர்கள் சேர்ந்து "நவரத்தினங்கள்" என்னும் புகழுடன் போஜராஜன் அரண்மனையில் போற்றப்பட்டனர். ஒரு சமயம் இருப்பவர்களில் யார் மிகச் சிறந்த கவி என்ற கேள்வி வருகையில், அன்னை பராசக்தியானவள் தண்டியையும், பவபூதியும் சிறந்த புலவர்கள் என்று கூறுகிறாள். இதனைக் கேட்ட காளிதாஸர் கோபத்துடன் அவசரமாக 'அப்படியென்றால் நான் யாரடி?' என்று அம்பாளிடமே ஏகவசனத்தில் கேட்கிறார். அன்னையும் நிதானமாக 'நீயே நான் தான்' என்றவாறு தத்வமஸி என்கிற மஹா வாக்கியத்தை உணர்த்துகிறாள். ஆனாலும் காளிதாஸர் அவசரப்பட்டு அன்னையை அவதூறாக பேசியதற்கு தண்டனையாக மறுபிறவியில் ஊமையாக பிறக்கும்படி சபிக்கிறாள். காளிதாஸர் மனம் வருந்தி மன்னிக்கும்படி வேண்ட, தேவியும் மனமிரங்கி காளிதாஸர் ஊமையாக பிறந்தாலும் மீண்டும் பேசும்திறனும், கவிபாடும் திறனும் அருளுவதாக வாக்களிக்கிறாள் அந்த வாகிஸ்வரி.


சக்திபீடங்களில் முதன்மையான ஸ்ரீகாஞ்சீ க்ஷேத்திரத்தில் ஓர் அந்தண குடும்பத்தில் ஊமையாக பிறந்தார் காளிதாஸர். மூகர் என்ற பெயருடன் பால்யத்திலிருந்தே ஸ்ரீகாமாக்ஷி சன்னதியில் எப்போதும் அமர்ந்திருப்பார். பக்கத்திலேயே ஒருஸ்ரீவித்யா உபாஸகரும் வாக்ஸித்தியை வேண்டி வழிபட்டு வந்தார். ஓரு நாள் அந்த உபாஸகரைக் கடாஷிக்கும் பொருட்டுஅன்னை அவர் முன் பாலையாக தோன்றுகிறாள். அம்பிகையின் ஸெளந்தர்யத்தைக் கண்ட மூகர், தான் முன் ஜென்மாவில்செய்த சியாமளா தண்டகம் போன்ற கவிதைகளின் நினைவால் உந்தப்பட்டு, தேவியைப் பாட வாய் திறந்து 'பே,பே' என்றுசப்தமிடுகிறார். ஊமைச் சிறுவனின் உளறல் சப்தம் கேட்டு கண்விழித்த உபாஸகர், ஊமையின் அலறலுக்கு இந்த சிறுமியே காரணமென்று அவளை அந்த இடத்தைவிட்டு அகலுமாறு கத்துகிறார்.

"சுத்த வித்யாங்குராகார த்விஜபங்க்த்தி த்வயோஜ்வலா" என்பதான சுத்த வித்தையே போன்ற பல்வரிசைகளில் ஊறி வந்ததாம்பூல ரஸத்தை தேவி மூகரின் வாயில் சேர்த்துவிடுகிறாள். உடனடியாக மூகருக்கும் வந்தது யார் என்பது முதலாக தனதுபூர்வ ஜென்ம தொடர்புகளெல்லாம் புரிகிறது. மேலும் அவர் பேசும் சக்தி மட்டுமல்லாது பாடல்களும் புனையக் கூடிய கவிதாவிலாஸம் சித்தியாகிறது. இவர் ஸ்ரீகாமாக்ஷி மீது பாடிய 500 ஸ்லோகங்களே மூக பஞ்சசதி என்று போற்றப்படுகிறது. இந்த ஸ்லோகங்களானது ஸ்ரீவித்யா மந்திரமே மாற்று உருக்கொண்டதாக சொல்லும்படியான விசேஷ அமைப்புடன் விளங்குகிறது. இந்த மூகரே பிற்காலத்தில் (கி.பி 398) காஞ்சி காமகோடி பீடத்தின் 20ஆவது ஆச்சாரியராக பட்டமேற்று 39 ஆண்டுகள் கழித்து கி.பி 437 ஆம் வருடம் ஸித்தி அடைந்தார்.

அன்னை காஞ்சி ஸ்ரீகாமாக்ஷியை கிருத யுகத்தில் 2000 ஸ்லோகங்களால் துர்வாச முனிவரும், திரேதாயுகத்தில் 1500 ஸ்லோகங்களால் பரசுராமரும், த்வாபர யுகத்தில் 1000 ஸ்லோகங்களால் தெளம்ய மகரிஷியும், கலியுகத்தில் மூக சங்கரர்500 ஸ்லோகங்களாலும் போற்றியுள்ளனர்.

Saturday, September 29, 2007

திருகருகாவூர் தல தேவார பாடல்கள் -3
















பாடல் - 7

வெந்த நீறு மெய்பூசிய வேதியன்

சிந்தைநின்ற வருள் நல்கிய செல்வத்தன்

கந்தமெளவல் கமழும் கருகாவூர் எம்

எந்தை வண்ணம் எரியும் எரிவண்ணமே.

நிலையாமைத் தத்துவத்தை உணர்த்தும் திருநீற்றினை தன் திருமேனியில் பூசியுள்ள வேதங்களின் இருப்பிடமானவனும், பக்தர்களின் மனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் திருவருட்செல்வனும், முல்லை மணம் கமழும் கருகாவூரில் விளங்குபவனுமாகிய எம் தந்தையாகிய இறைவனின் திருமேனி நிறம் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பின் நிறம் போன்ற செம்பவழ நிறமாகும்.
நிலையாமையை உணர்த்தும் திருநீற்றை பல்வேறு சமயத்தாரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். திருமாலடியார்களும் திருநீற்றின் சிறப்பினைப் போற்றியுள்ளனர். "கரியமேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும் பெரியகோலத்தடங்கண்ணன்" என்று திருவாழ்மொழியிலும் இருப்பதாக அறிகிறேன்.

கந்தம் - சந்தனம்/வாசனை ; மெளவல் - முல்லை ;

பாடல் - 8

பண்ணினேர் மொழியாளையொர் பாகனார்
மண்ணு கோலம்முடையம் மலரானொடும்
கண்ணனேட வரியார் கருகாவூர் எம்
அண்ணல்வண்ணம் அழலும் அழல்வண்ணமே.

இன்னிசை பாடுதல் போல இனிய மொழி பேசும் உமையவளை தனது திருமேனியில், வாம பாகத்தில் கொண்டு விளங்குபவரும், தாமரையில் அமர்ந்து படைப்புத் தொழிலியற்றும் ப்ரம்மாவும், திருமாலும் தேடிக் காண்பதற்கரிய மூர்த்தியாய் நின்றவரும், கருகாவூரில் கோயில் கொண்டுள்ளதலைமையுடைய எம் அண்ணலாகிய சிவபிரானின் நிறம் சுடர்விட்டுக் கனன்று எரியும் தழலின் நிறம் போன்ற செந்நிறமாகும்.

மலரான் - பிரம்மன்; மண்ணுக்கோலம் - படைப்புத்தொழில்; வாம பாகத்தில் அன்னை உமையாளைக் கொண்ட திருக்கோலந்தான் அர்த்தநாரிசுவரர். அடி-முடி காண சென்ற பிரும்மா, திருமால் முயன்றதையும் இங்கு குறிப்பிடுகிறார்.
பாடல் - 9

போர்த்தமெய்யினர் போதுழல் வார்கள் சொல்
தீர்த்தமென்று தெளிவீர் தெளியேன்மின்
கார்த்தண்முல்லை கமழும் கருகாவூர் எம்
ஆர்த்தர் வண்ணம் அழலும் அழல்வண்ணமே.


தெளிவு பெற்றவர்களே, பாயினை உடம்பில் போர்த்தியும், இருளில் விளக்கின்றித் திரிபவர்களும் சொல்வதை உண்மையென்று நம்பாதீர்கள். கார் காலத்தில் பூக்கும் குளிர்ச்சியும், மணமும் உடையதான முல்லை வனமாம் கருகாவூரில் எழுந்தருளியிருக்கும் எனக்கு ஆப்தமானவராகிய கடவுளின்திருமேனி நிறம் கனன்று எரியும் செந்தீயின் நிறமாகும்.
தீர்த்தம் - உண்மை; கார் - கார் காலம்; தண் - குளிர்ச்சி ;

பெளத்த, சமண சமயத்தவர்களைத்தாம் பாயினை போர்த்தியவர்கள் என்றும் இருளில் விளக்கின்றி இருப்பவர் என்றும் கூறுவதாக சொல்கிறார்கள். சம்பந்தர் காலத்தில் இந்த இரு சமயங்கள் தமிழகத்தில் வேரூன்றியதால் இப்படி சொல்லியிருக்கலாமென தோன்றுகிறது.

பாடல் - 10

கலவமஞ்ஞை யுலவும் கருகாவூர்
நிலவுபாடல் உடல்யான்றன் நீள்கழல்
குலவுஞான சம்பந்த்தன் செந்தமிழ்
சொலவலாரவர் தொல்வினை தீருமே.

கலவம் - கலாபம் - மஞ்ஞை - மயில்; நிலவு பாடல் - நான்மறை; குலவு - வணங்கி போற்றும்; தொல்வினை - முற்பிறப்பின் பாவம்

தோகை விரித்தாடும் மயில் உலவுகின்ற கருகாவூரில் எழுந்தருளியிருப்பவனும், என்றைக்கும் விளங்குகின்ற அருள்மிக்க பாடல்களார் அர்ச்சிக்கப்படுபவனுமான இறைவனின் திருவடிகளை போற்றி துதிக்கும் ஞானசம்பந்தன் செந்தமிழை சொல்லும் வல்லமை பெற்றவர்களுடைய பாவங்கள் முற்றிலும் தீர்ந்துவிடும்.
மொத்தமாக 11 பாடல்களைக் கொண்ட இந்த திருகருகாவூர் பதிகத்தில், ஒரு பாடல் (8ஆம் எண்ணில் இருக்க வேண்டியது) கிடைக்காததால் இது 10 பாடல்களாக முடிவுருகிறது. இதில் கடைசிப் பாடலில் தனது பெயரையும், பாடலால் உண்டாகும் பலனையும் கூறி முடிக்கிறார் ஞானசம்பந்தர்.

Tuesday, September 25, 2007

திருகருகாவூர் தல தேவார பாடல்கள் -2

பாடல் - 4

பொடிமெய்பூசி மலர்கொய்து புணர்ந்துடன்
செடியரல்லா உள்ளம் நல்கிய செல்வத்தர்
கடிகொள்முல்லை கமழும் கருகாவூரெம்
அடிகள் வண்ணம் அழலும் அழல் வண்ணமே.

மெய்யில்/உடம்பில் திருநீறு பூசிக்கொண்டு, நன் மலர்களைக் கொண்டு தன்னை வழிபாடு செய்வாருடைய உள்ளத்திலுள்ள துன்பங்களை நீக்கிஅருள் நெஞ்சமுடையவராகச் செய்யும் பெருங்குணமுடையவரும், மணம் பரப்பும் முல்லை மலர்கள் எங்கும் திகழும் கருகாவூரில் எழுந்தருளி இருக்கும் எங்கள் அடிகளாகிய இறைவனின் நிறம், கனன்று எரியும் அனலின் செக்கர் நிறமாகும்.

செடியர் - துன்பமுடையவர்; கடி - மணம்; இறைவன் யோக நிலையில் இங்கு குடிகொண்டுள்ளதால் அடிகள் என்று அழைக்கப்படுகிறார்.

பாடல் - 5

மையலின்றி மலர்கொய்து வணங்கிடச்
செய்ய உள்ளம் நல்கிய செல்வத்தர்
கைதண் முல்லை கமழும் கருகாவூரெம்
ஐயர் வண்ணம் அழலும் அழல்வண்ணமே.

அறியாமை அகன்று அழகிய மலர்களைக் கொய்து தன்னை வணங்குபவர்கட்கு ஞானம் பொருந்திய நீதிசேர்ந்த உள்ளைத்தை அளித்த அருட்செல்வராகியவரும், தாழையின் மீதும் படர்ந்த முல்லை மலர்கள் மணம் பரப்பும் கருகாவூரின் கண் விளங்குபவருமாகிய எம் தலைவரான இறைவனின் திருமேனியின் நிறம் கனன்று விளங்கும் அனலின் நிறம் போன்ற சிவந்த நிறமாகும்.

மையல் - அறியாமை; செய்ய உள்ளம் - நீதிநிறைந்த உள்ளம்; கைதை - தாழை; இறைவன் உண்டு என்ற ஞானநிலையே மையல் இல்லாத நிலையாகும். பந்த-பாச உணர்விலிருந்து விலகிய நிலையினையும் குறிக்கும்.

பாடல் - 6

மாசிறொண்டர் மலர்கொண்டு வணங்கிட
ஆசையார வருணல்கிய செல்வத்தர்
காய்சினந்த விடையார் கருகாவூரெம்
ஈசர்வண்ணம் எரியும் எரிவண்ணமே.

ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று குற்றங்களையும் நீக்கிய தொண்டர்கள், அழகிய மலர்கள் கொண்டு அர்ச்சித்து வணங்க, அவர்களுடையவிருப்பங்கள் எல்லாம் நிறைவேற்றி திருவருள் பாலிப்பவரும், மிகுந்த சினத்துடன் விளங்கும் ரிஷபத்தை வாகனமுமாக கொண்ட எம் கருவூர் பெருமானாகிய ஈசரின் திருமேனியின் நிறம் எரிகின்ற தழலைப் போன்ற செம்பவள நிறமாகும்.

மாசு - முக்குற்றம் ; ஆசையார அருள் நல்கிய - நெஞ்சத்து ஆசையெல்லாம் பூர்த்தி செய்கின்ற; விடை - ரிடபம்/தரும தேவதை ; ஈசன் - எல்லோருக்கும் ஆதாரமான தன்மையைக் குறிக்கும்.

Saturday, September 22, 2007

திருகருகாவூர் தல தேவார பாடல்கள் -1






சில தினங்கள் முன் திருஞான சம்பந்தர் திருகருகாவூரில் பாடிய தேவாரப்பாடல்களை (10) படிக்க கிடைத்தது. அவற்றைசில பதிவுகளாக இங்கே தருகிறேன். நான் எனக்குப் புரிந்த வரையில் பொருளையும், தொடர்புடைய புராணத்தையும் எழுதியிருக்கிறேன்.
ஏதேனும் தவறிருப்பின் தமிழறிஞர்கள் திருத்த வேண்டுகிறேன்.






பாடல் - 1


முத்திலங்கு முறுவல் லுமையுஞ்சவே
மத்தயானை மறுகவ் வுரிவாங்கியக்
கத்தை போர்த்த கடவுள் கருகாவூரெம்
அத்தர் வண்ணம் மழலும் அழல் வண்ணமே


தன்னுடைய முத்துப்போன்ற பற்கள் ஒளி வீசுமாறு புன்முறுவல் பூத்து அருகில் வீற்றிருக்கும் உமாதேவியார், அச்சம் அடையும்படி மதங்கொண்டு வந்த யானையை நிலைகுலையும்படி வீழ்த்தி, அதன் தோலை உரித்து அந்த கனத்த தோலைப் போர்வையாக போர்த்திக் கொண்ட கருகாவூர் கடவுளாம் எந்தையின் திருமேனி நிறம்சுடர் விட்டுப் பிரகாசிக்கும் நெருப்பு போன்ற சிவந்த நிறமாகும்.


கயாசூரன் என்பவன் நான்முகனிடம் வரம் பெற்று, எல்லாத் தேவர்களையும் வென்றபின் காசியை அடைந்தான். முனிவர்களும், பக்தர்களும் அவன் வரவுகண்டு அஞ்சி மணிகர்ணிகை கட்டத்தில் எழுந்தருளியிருக்கும் விச்வேச்வரரை வணங்கி நின்றனர். அவர்களைக் கொல்வதற்கு முற்பட்ட கயாசூரனை தனது கோடி சூரியப்பிரகாசத்துடன் பேருருத்தாங்கி நின்று தம் திருவடியால் உதைத்து வீழ்த்தினார். யானையுருக் கொண்ட கயாசூரனைத் தன் திருக்கரங்களின் நகங்களால் கீறி அவன் தோலை உரித்தார். அப்போது ஈசனின் திருமேனிப் பிரகாசத்தைக் கண்ட உயிரினங்கள் கண்பார்வையிழந்தன. எனவே பெருமான் அவர்களது கண்ணொளி மங்கியதைப் போக்க உரித்த தோலை தன்மேல் போர்வையாக அணிந்தார் என்கிறது புராணம்.




இவ்வாறாக முதல் வரி ஈசன் அடியவர்க்கு அருளும் கருணையையும், இரண்டாம், மூன்றாம் வரிகளில் அவன் பகைவர்களை அழிப்பதையும் சுட்டுகிறது.
கத்தை- தடித்த தோல்அத்தர் - அத்து + அவர்; அத்து என்றால் வழி; அத்தர் = வழிக்கோலுபவர். உயிர்கள் தோன்ற வழிக்கோலுபவர் என்பது பொருள்.

பாடல் - 2


விமு தவல்ல சடையான், வினையுள் குவார்க
கமுத நீழல் அகலாதோர் செல்வமாம்
கமுத முல்லை கமழ்கின்ற கருகாவூர்
அமுதர் வண்ணம் அழலும் அழல்வண்ணமே.


மனதால் நினைத்தவரும், கண்ணால் காண்பவரும் விம்மும்படியான திருச்சடையுடைய பெருமானுக்கு திருத்தொண்டு இயற்ற எண்ணினாலே அவனுடைய திருவடி நிழலில் அமர்ந்திருக்கும் பெரும் புண்ணியம் உண்டாகும். அப்பெருமையுடைய திருவடிகளையுடைய, மணம் கமழுகின்ற அழகியமுல்லை மலர் நிறைந்த கருகாவூர் அமுதரின் திருமேனியின் நிறம், சுடர்விட்டுப் பிரகாசிக்கும் நெருப்பினது சிவந்த நிறமாகும்.



அனைத்து உயிர்களையும் தனதருளால் காப்பதால் அமுதர் என்கிறார். மேலும், விரிசடை என்பது ஞானத்தைக் குறிப்பது. கங்கையை தலையில் கொண்டு பிரவாகத்தை ஒரே சீராக நமக்கருளுவதால் விம்மும்படியான சடையான் என்கிறார்.வினை உள்குவார் - திருத்தொண்டையே மனதில் இருத்தி இருப்பவர், ஈசன் திருவடியெனும் பெருஞ்செல்வத்தை அடைவார்.

பாடல் - 3


பழகவல்ல சிறுத்தொண்டர் பாவின்னிசைக்
குழகரென்று குழையா வழையாவரும்
கழல்கொள்பாட லுடையார் கருவூரெம்
அழகர்வண்ணம் அழலும் அழல்வண்ணமே.


இடைவிடாது வழிபட்ட சிறுதொண்டர் இன்னிசைப்பாட்டின் தன்மையாக இருப்பவன் என்று உள்ளம் உருகப் பாடி அழைக்க, அவர் முன் தோன்றி காட்சியளித்தவரும், பாமலர் சூடிய திருவடிகளையுடையவருமான கருகாவூரில் விளங்கும் எனது அழகிய பெருமானின் திருமேனியின்நிறம், கனன்று எரியும் நெருப்பினது சிவந்த நிறம் போன்றது.


முதலடியில், நல்ல இசைப்பாணர் ஒருவர் இன்னிசையால் மனமுருகிப்பாடி, திருக்கருக்காவூர்ப் பெருமானை அழைத்தபோது பெருமான் அவருக்குக் காட்சியளித்ததை குறிக்கின்றது. அழகென்பது அகம்-புறம் எல்லாம் இனிமையாக இருத்தல், இறைவடிவே அழகின் வடிவம். கழல்கொள் இடல் பாடல் உடையார் - பக்தர்கள் மலர் கொண்டும், பாமாலை கொண்டும் செய்யும் அர்ச்சனையாவையும் ஈசன் திருவடிக்கே.

Friday, September 14, 2007

வினாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

















எல்லோருக்கும் வினாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

கீழே உள்ளது கணேச ருணஹர ஸ்துதி. யார் இயற்றியது என்பது தெரியவில்லை. சிறிய வயதில் எனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது.

ஸிந்தூர வர்ணம் த்விபுஜம் கணேசம் லம்போதரம் பத்மதளே நிவிஷ்டம் ப்ரஹ்மாதிதேவை: பரிஸேவ்யமானம் ஸித்தைர்யுதம் தம் ப்ரணமாமி தேவம்.

ஸிந்தூர நிறத்தில் இரண்டு கைகளுடனும், சரிந்த வயிற்றுடனும், ப்ரம்மா, முதலிய தேவர்களாலும் ஸித்தர்களாலும் சூழப்பட்டு தாமரை இதழ்களில் அமர்ந்துள்ள கணேச தேவரை நமஸ்கரிக்கின்றேன்.


ஸ்ருஷ்ட்யாதெள ப்ரஹ்மணா ஸம்யக் பூஜித: பல ஸித்தயே
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (1)


பிரும்மாவால் உலக ஸ்ருஷ்டிக்கு முன்னால் கார்யசித்திக்காக நன்கு பூஜிக்கப்பட்டபார்வதீ குமாரன் கணேசன் எப்பொழுதும் எனது அனைத்துக் கடன்களையும் போக்கஅனுக்ரஹிக்கட்டும்.


த்ரிபுரஸ்ய வதாத் பூர்வம் சம்புனா ஸம்யகர்சித:
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (2)


திரிபுர சம்ஹாரத்திற்குப் போகும் முன்பு பரமேஸ்வரனால் நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதீகுமாரன் கணேசன் எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.


ஹிரண்ய கசிப்வாதீநாம் வதார்த்தே விஷ்ணுநா அர்ச்சித:
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (3)


ஹிரண்யகசிபு போன்ற அரக்கர்களை வதிக்கும் முன்பு மஹாவிஷ்ணுவால் பூஜிக்கப்பட்ட பார்வதீகுமாரன் கணேசன் எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.


மஹிஷஸ்ய வதே தேவ்யா கணநாத: ப்ரபூஜித:
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (4)


மகிஷாசுரனை ஸம்ஹரிக்கும் முன் பார்வதீ தேவியால் நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதிகுமரன் கணேசன்எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.

தாரகஸ்ய வதாத் பூர்வம் குமாரேண ப்ரபூஜித:
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (5)

தாரகாஸீரனை வதைக்கும் முன், ஸ்ரீ சுப்ரமண்யரால் நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதிகுமரன் கணேசன்எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.

பாஸ்கரேண கணேசோ ஹி பூஜிதஸ்ய ஸ்வஸித்தயே
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (6)

சூரிய தேவனால் தனது கார்ய ஸித்திகாக நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதிகுமரன் கணேசன்எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.


சசிநா காந்தி விருத்யர்த்தம் பூஜிதோ கணநாயக:
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (7)


தனது அழகு நன்கு வளர்வதற்காக சந்திரனால் நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதிகுமரன் கணேசன்எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.


பாலநாய ச தபஸாம் விஸ்வாமித்ரேண பூஜித:
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (8)


தனது தபஸ்ஸைக் காப்பாற்றிக்கொள்ள விஸ்வாமித்த்ர மஹர்ஷியால் நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதிகுமரன்கணேசன் எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.


இதம் த்வ்ருணஹரம் ஸ்தோத்ரம் தீவ்ர தாரித்ர்ய நாசனம்ஏகவாரம் படேந் நித்யம் வர்ஷ மேகம் ஸமாஹித:தாரித்ர்யம் தாருணம் த்யக்த்வா குபேர ஸமதாம் வ்ரஜேத்.

இந்த ஸ்தோத்திரம் கடுமையான ஏழ்மையைப் போக்க வல்லது.

Thursday, September 6, 2007

கனவுகளே,கனவுகளே காலமெல்லாம் வாரீரோ?...

மதிப்பிற்குறிய பதிவர் திருமதி வல்லி அவர்கள் கேட்டுக் கொண்டதற்காக இந்த பதிவு.



கல்லூரி காலங்களில் நண்பர்கள் பலரும் கதை போல தங்களது கனவுகளை பகிர்ந்து கொள்வோம். ஆனால் இன்று ஏதும் நினைவில் இல்லை. ஒரு சிலவற்றைத் தவிர.

எனக்கு ஏதேனும் உடல் உபாதை உள்ள காலங்களில் எப்போதும் ஒரே கனவு ரிப்பீட்டாகிறது. அதாவது நான் ஒரு மலை உச்சியில் தனியாக இருப்பது போலவும், எப்படி இறங்குவது என்பதற்கு வழிகாட்ட யாரும் வருவார்களா என்று நான் எதிர்பார்ப்பதாகவும் இருப்பதுதான் அந்த கனவு. இதனை கண்ட உடன் முழிப்புத் தட்டி, உறக்கத்திலிருந்து எழுந்து விடுவேன். சமிப காலங்களில் சில பல வியாதிகள் வந்தாலும் இந்தக் கனவு ஏனோ மிஸ்ஸிங். :-)


2000-ல் நவராத்திர்யில் கண்ட கனவு ஒன்றில் எனது தந்தை நவராத்திரியில் மாலை பூஜை முடித்து வருகிறார், அவர் என்னை அழைத்து ஒரு அர்த்த மேருவினை என் கையில் கொடுத்து அதனை விளக்குவதாக. கனவைப் பற்றி தந்தையிடம் கூறினேன். அப்போது அவர் சிரித்துக் கொண்டே விஜயதசமியன்று விளக்குவதாக கூறினார். அதுவரை எனக்கு ஸ்ரீ சக்ர வழிபாட்டினை பற்றிய விஷயங்கள் அவ்வளவாக தெரியாது. இல்லத்திலும் ஸ்ரீசக்ரம் உண்டே தவிர மேரு கிடையாது. அந்த ஸ்ரீசக்ரத்திற்கான பூஜை தந்தை மட்டுமே செய்வார், மற்ற சிலா ரூபங்களுக்கு தாம் எனது சகோதரர்களோ இல்லை நானோ பூஜை செய்வோம். இந்தக் கனவே எனக்கு ஸ்ரீவித்யை என்கிற மகா பொக்கிஷத்தை பற்றி அறிய தந்தது.


இன்னொரு கனவு 2002-ல் கண்டது.....இதில் நான் ஏதோ ஒரு ரயில்வே ஸ்டேஷன் படிகளில் ஏறும் சமயத்தில் வழுக்கி விழுகிறேன். கால் முட்டியில் சிறு பிராக்சர் ஆகிறது. பெற்றோருக்குத் தெரிவிக்காது பெங்களுரிலேயே வயித்தியம் பார்த்துக் கொள்வதாக கனவு. சரியாக 3 மாதங்களில் இந்த கனவு நினைவாகியது. ஆம்!, நண்பன் ஒருவனது நிச்சயதாம்பூலத்திற்காக கருர் சென்று திரும்புகையில் சேலத்தில் டிரெயினைப் பிடிக்கச் செல்கையில் கீழே விழுந்தேன். கனவில் கண்ட அதே நிகழ்ச்சி.


மற்றபடி எனக்கு பெரிய எதிர்பார்ப்புக்கள்/கனவுகள் ஏதும் இதுவரை இருக்கவில்லை. எனது கர்மாவினை தர்மத்திற்கு விரோதமின்றிச் செய்தலே சிறப்பென்று வளர்க்கப்பட்டேன். இந்த வளர்ப்பினால் இன்றுவரை எந்த ஏமாற்றத்தையும் நான் காணவில்லை. கடந்த சில வருடங்களாக கனவுகளே வருவதில்லை. என்னமோ தெரியவில்லை, ஆழ்ந்த உறக்கமே இருப்பதில்லை என்று அர்த்தமா, இல்லை ரொம்பவே திக் ஸ்கின்னா மாறிவிட்டேனா?. ஒன்றும் புரியவில்லை.

Wednesday, August 15, 2007

கோதைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

பூர்வம் வாரிநிதொள வராஹ லபுஷா மக்னாம் ஸமுத்ருத்ய
மாம் அங்கே நாத நிதாய ஸர்வ ஸீகர :
முக்தே ரூபாயஸ்த்வயா, மாலா கேய சமர்ப்பணம்
மம முநேத் துக்தம் தமே வாதுனா ஜாதாஹம்
புவி தர்சயாமி க்ருபயா த்வம் தேஹ்யனுக்ஞாமிதி.


பூமாதேவி ஆண்டாளாக அவதரித்ததை சொல்லுகிறது மேற்கண்ட சுலோகம். பூமாதேவி பொறுமையுடன் அளவில்லா கருணையும் கொண்டவள். அவள் ஒரு சமயம் தன் பதியான ஸ்ரீமன் நாராணனிடம் "உலகில் ஏன் சிலரைக் கஷ்டப்படச் செய்கிறீர்கள்?,சிலரை ஏன் சுகப்படச் செய்கிறீர்கள்" என்று கேட்டாள்.


"எனக்கு எல்லோரும் ஒன்றுதான், அவரவர் பாவ-புண்ணியத்தின்படி கஷ்டமோ-சுகமோஅனுபவிக்கிறார்கள்" என்றார் நாராயணன்.


"அது எப்படி?"


"நேர்வழியில் போனால் சுகமாக, சுலபமாக போய்ச் சேரலாம். குறுக்கு வழியில் போய் கல்லும்,முள்ளும் குத்தி அவஸ்தையய் வரவேற்றால் அதற்கு யார் பொறுப்பு?" "அவர்கள் நேர்வழி செல்லும்படி எப்படிச் செய்வது?"


"என்னை நினைத்தாலே போதும். என்னை நினைத்து ஒரு பூவைப் போட்டாலும் போதும். என் மீதுஒரு பாமாலை பாடினாலும் போதும். அதைக்கூட பலர் செய்யாமல் இருக்கிறார்களே !" என்றவாறு பூமாதேவிக்கும், ஸ்ரீமந்நாராயணுக்குமான சம்பாஷணை தொடர்கிறது.


இப்போது தாயார்,"நீங்கள் உங்களுக்குப் பிடித்தமான ஒரு பக்தனை சொல்லுங்களேன், கலியில் ஹரி பக்தியின் சிறப்பைபார்க்கலாம்" என்றாள்.


இதற்கு பதிலாக பெருமாள் பின்வரும் லின்க்கினை பூமாதேவிக்குக் கொடுத்து படிக்கச் சொன்னார். http://madhavipanthal.blogspot.com/2006/11/blog-post_30.html


அந்தப் பதிவினைப் படித்த பூமாதேவி, "புரிந்தது ஸ்வாமி, பாசுரத்தைப் பாடியவனும், அதனை ஒருதடவைகேட்ட பிரம்மராக்ஷஸும் நற்கதி அடைந்ததுதானே இதன் சாரம்" என்றாள்.


"ஆமாம்; நான் ஜீவராசிகளுக்கு இதைவிட சுலபமான வழி என்ன காட்ட முடியும். இதைப் போலவே ஒருபுஷ்பத்தை எடுத்து எனக்கு அர்ப்பணம் செய்தாலும் நான் திருப்தி அடைந்து நற்கதி அளிப்பேன். அதைக்கூட செய்யாமலிருந்தால் நான் என்ன செய்ய?"


பூமாதேவி ஏதோ யோசிக்கத் தொடங்கினாள்


பகவான் அவளைப் பார்த்து, "என்ன தீவிர யோசனை?", என்க,
"ஒன்றுமில்லை ஸ்வாமி, எனக்கொரு ஆசை. அதை நிறைவேற்ற அருள் புரிய வேண்டும்"


"என்னம்மா அந்த ஆசை"


"ஸ்வாமி, நான் ஒரு தடவை பூமியில் பிறந்து பாமாலையினாலும், பூமாலையினாலும் தங்களை அர்ச்சித்து, உலகிற்கு வழிகாட்டியாகத் திகழ வேண்டுமென்பதே எனது ஆசை" என்று கூறினாள் பூமாதேவி.


பகவானும் "அப்படியே ஆகட்டும், நான் ஸ்ரீவில்லிப்புத்தூரில் வடபத்ர சாயியாக அர்ச்சையிலிருப்பேன்.அப்போது கருடாழ்வார் விஷ்ணுசித்தராக அவதரித்து திருத்துழாய் கைங்கர்யம் செய்வார். அவரது திருக்குமாரியாக அவரது திருத்துழாய் தோட்டத்தில் நீ தோன்றி பாமாலையும், பூமாலையும் சூட்டலாம்" என்று கூறினார்.


அதன்படி ஆடிமாதம், சுக்லபக்ஷ சதுர்த்தியும், பூர நக்ஷத்திரமும் கூடிய செவ்வாய்க் கிழமையன்று, பெரியாழ்வார்திருத்துழாய் பறிக்கும் நந்தவனத்தில் ஸ்ரீ ஆண்டாள் அவதரித்தாள்.


இன்று ஆடிப்பூரம். அன்னை பூமாதேவி, சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாக அவதரித்த தினம்.

Saturday, August 11, 2007

மதுரையிலேயே பெரிய வீடு - 1

மதுரை என்ற உடன் மனதில் நினைவிலாடுவது 2 விஷயங்கள்.ஒன்று மீனாட்சி, இன்னொன்று மதுரை மல்லிகை பூ. இன்றும் மதுரையிலிருந்துதான் உலகுக்கெலாம் மல்லிகை ஏற்றுமதியாகிறது. இதுபோலவே சக்தி பீடங்களில் மதுரை முக்கிய இடம்வகிக்கிறது, சக்தி வழிபாட்டில் மதுரைக்கு ராஜமாதங்கி சியாமளா பீடம் என்று பெயர்.


இங்குள்ள மீனாட்சி அம்மன் விக்கிரகம் மரகதக் கல்லால் ஆனது, அம்மனுக்கு மரகதவல்லி என்றே ஒரு பெயர்.மேலும் தடாதகை, கோமளவல்லி, பாண்டியராஜகுமாரி, மாணிக்க வல்லி, சுந்தர வல்லி என்றெல்லாம் அழைக்கப்படுவதுஇந்த அன்னை மீனாட்சியே. மீன் போன்ற கண்கள் உடையவள் என்பதால் மீனாட்சி. மீன் முட்டையிட்டு தனது பார்வையாலேயே அடை/அதை காத்துகுஞ்சை பொரிக்க வைத்துவிடுமாம், அதுபோல அன்னை மீனாட்சி தன் அருட்கண்களாலேயே பக்தர்களை காக்கிறாள்.


சுந்தரேஸ்வரர் என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள பல நூறு கோவில்களில் இதுவே முதன்மையானது. சுடலையாண்டி, ருத்திரன் என்றெல்லாம் அழைக்கப்படும் சிவன், பாண்டிய ராஜ குமாரியை (மீனாட்சி) மணக்க வருகையில் அழகிய வடிவெடுத்து வந்தாராம். அந்த சுந்தர வடிவால் அவருக்கு சுந்தரன் என்றும், சொக்க வைக்கும் அழகால் சொக்கன் என்றும் பெயர். இங்கு கருவரையில் உள்ள சிவலிங்கம், தானாய்த் தோன்றியவர். மாலிகபூர் படையெடுப்பின் போது கருவறையை மூடி, முன்னே வேறு ஒரு லிங்கத்தை வைத்து ஏமாற்றி, உண்மையான லிங்கத்தை பாதுகாத்துள்ளனர். இன்றும் சுவாமி சன்னதி பிரகாரத்தில் துர்கைக்குஎதிரே மாலிகபூரால் உடைக்கப்பட்ட டுப்ளிகேட் லிங்கம் இன்றும் காட்சிக்கு உள்ளது.


குலசேகர பாண்டியன் காலத்தில் முதன் முதலில் கடம்பவனக் காட்டில் ஸ்வயம்யு லிங்கத்தை கண்டறிந்து முதலில் இந்த கோவிலையும், பின் நகரத்தையும் நிர்மாணித்ததாக வரலாறு. நவக்கிரங்களில் புதனுக்குரியதாக கூறப்படுகிறார் சொக்கநாதர். புதனுக்கான பரிகாரங்களை இக்கோவிலில் உள்ள சிவனுக்கு செய்வது வழக்கம்.


விருத்தாசுரன் என்ற அசுரனை வென்ற தேவேந்திரன், தனது பிரம்மகத்தி தோஷம் நீங்க கடம்பவனத்தில் இருந்த இந்த சிவலிங்கத்தைபூசித்து தனது தோஷத்தை போக்கிக் கொண்டதாக வரலாறு. அவன் பெயரிலேயே இங்குள்ள கருவரை விமானங்கள், இந்திர விமானம்என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகிறது.



ஈசனின் 64 திருவிளையாடல்களும் மதுரையிலேயே நடந்தவை. சுவாமி சன்னதி பிராகாரங்களில் 64 திருவிளையாடல் காட்சிகள் சிற்பங்களாக இருக்கிறது. இக்கோவிலின் தல விருட்சம் கடம்ப மரம், தீர்த்தம் பொற்றாமரை குளம், மற்றும் வைகை, கிருதமால் நதிகள். இன்று கிருதமால் நதி என்பது பல ஆக்ரமிப்புக்களுக்கிடையே, வெறும் கழிவுநீர்க்கால்வாயாக உள்ளது. பலநூறு வருடங்களுக்கு முன் இங்குள்ள பொற்றாமரைக்குளத்தில் கிடைக்கப்பெற்ற ஸ்படிக லிங்கம், இன்றும் மதுரையாதினத்தில் வழிபாட்டில் உள்ளது.
மற்ற எல்லா இடங்களிலும் இடதுகாலைத் தூக்கி நனடமாடும் நடராஜர், இங்கு வலதுகாலைத் தூக்கிவைத்து நடனமாடுகிறார். இந்தசன்னதியே வெள்ளியம்பலம் எனப்படுகிறது.

Friday, August 10, 2007

காமாக்ஷி - கடாக்ஷி - 4ஆவது ஆடிவெள்ளி சிறப்புப் பதிவு

சில மாதங்க்ளுக்கு முன் "காமாக்ஷி" பெயர்க்காரணம் கேட்டிருந்தார் கே.ஆர்.எஸ். எனக்கு தெரிந்ததை தந்துள்ளேன் கீழே.

காமாக்ஷி பற்றி சொல்லப்பட்ட புராணங்கள் பின்வருமாறு.
1. மார்க்கண்டேய புராணத்தில் 'தேவீ மகாத்மீயத்தை அடுத்ததாக வரும் "ஸ்ரீ காமாக்ஷி விலாஸம்".
2.பிரம்மாண்ட புராணத்தில் விரிவாக உள்ள லலிதோபாக்யானம்.
3, ஸ்காந்த புராணத்தில் ஸநத்குமார ஸம்ஹிதையிலுள்ள 'காஞ்சீ மஹாத்மீயம்' மற்றும் அதில் வரும் 'தக்ஷ காண்டத்தில்'.
4. மற்றும் பல வடமொழி, தென்மொழி புராணங்கள், செவிவழிக் கதைகள்.

தேவியின் பல வடிவங்களுள், நாற்கரம் கொண்டு, அவற்றில் கரும்புவில், மலரம்பு, பாச-அங்குசம் தாங்கி அமர்ந்த கோலத்தில் இருப்பவளே காமாக்ஷி மற்றும் ஸ்ரீலலிதா பரமேஸ்வரி, ராஜராஜெஸ்வரி. மந்த்ரங்களில் தலையானதாக உள்ள ஸ்ரீவித்யா மந்த்ரங்களில் விவரிக்கப்பட்ட லக்ஷணப்படி அமைந்த விக்ரஹமே காஞ்சீ காமாக்ஷி விக்ரஹம். ஆக மொத்தமாக மந்த்ரங்களில் சிறந்த ஸ்ரீவித்யாவால் காட்டப்பட்ட ஸ்ரீ மாதாவின் ரூபம் காமாக்ஷீ.

இந்த தேவி எங்கு வாசம் செய்கிறாள்?. பிரளய காலத்தில் எல்லாம் அழிந்தாலும், அழிவில்லாத 'அக்ஷரம்' எனப்படும் ஓங்காரத்தின் ஒலியின் அலைகளான இருபத்துநான்கு சப்த சலனங்களிடையே அவள் வாசம் செய்கிறாள். ஆம்! அந்த இருபத்துநான்கு சப்தங்களை, இருபத்துநான்கு ஸ்தம்பங்களாகக் கொண்ட மண்டபத்தில் அவள் வாசம் செய்கிறாள். அதென்ன 24?, 16 கால், 1000 கால் மண்டபங்கள் எல்லாம் இருக்கும் போது ஏன் 24?. காயத்ரீ மஹாமந்திரம் இருபத்திநாலு அக்ஷரம் கொண்டது, அதன் மஹிமையைத்தான் நமக்கு அவ்வாறு விளக்குகிறாள் ஸ்ரீமாதா.தற்போதும் காஞ்சீயில் காமாக்ஷி கொலுவிருக்கும் மண்டபம் காயத்ரீ மண்டபம் என்றே அழைக்கப்படுகிறது.

சரி, அதென்ன காமாக்ஷி என்ற பெயர்?. இதன் விளக்கம் என்ன?.'க' என்ற பதம் பிரம்மனைக் குறிக்கும்; 'கஸ்மை தேவாய' என்று வேதத்தில் பல இடங்களில் பிரம்மனை குறிப்பிடப்பட்டுள்ளது. 'அ' என்பது சிவனின் பெயர். 'அ'காரத்திலேயே ஆண்பால் நாமங்கள் பெரும்பாலும் முடிகிறது உ.ம்: சிவ, ராம, க்ருஷ்ண என்பதாக.பிரகிருதிக்கு அப்பாற்பட்ட புருஷ ரூபம் சிவம் (லிங்கோத்ப்வ தத்வம்). 'ம' என்பது நாராயணனைக் குறிப்பது. எப்படி? 'மா' என்றால் லக்ஷ்மி, இதெப்படியெனில் அவளின் கணவன் 'ம' என்பதாலேயே, இவள் 'மா' ஆகிறாள். ஆக, 'க' என்ற ப்ரம்மன், 'அ' என்ற சிவன், 'ம' என்ற விஷ்ணு ஆகிய மூவரும் எவளது 'அக்ஷி'யிலிருந்து தோன்றினார்களோ, அவள் காமாக்ஷி. ('அக்ஷி' என்றால் கண்).

"ஸசாமர ரமா வாணீ ஸவ்ய தக்ஷிண ஸேவிதா" என்கிற லலிதையின் நாமா என்ன சொல்கிறதென்றால், வாணியும், ரமாவும் (லக்ஷ்மி), அன்னைக்கு இருபுறங்களிலும் சாமர சேவை செய்வதாக வருகிறது. ஸ்ரீமுத்துஸ்வாமி தீக்ஷிதர் தமது பாடலில் "சாரதா ரமா நயநே' என்று போற்றுவதிலிருந்து காமாக்ஷியின் கண்களாக கலைமகளும், அலைமகளும் இருப்பதாகவும் கொள்ளலாம். இதையே, சிவப்பிரகாச ஸ்வாமிகள், "நின் திருமுக பங்கயத்தில்கண்ணாயினர் உனக்கு அவ்வலைமாதும், கலைமகளும் பெண்ணார் அமுதனையாய்" என்கிறார்.

அடுத்ததாக பரஞ்சோதி முனிவர் தமது திருவிளையாடற்பாடலில், "திருமகள் வலக்கண், வாக்கின் சேயிழை இடக்கண், ஞானப்பெருமகள் நுதற்க்கண்ணாகப்பெற்று வான் செல்வம் கல்வி அருமைவீடளிப்பாள்" என்பதாக கூறுகிறார். பரஞ்சோதி முனிவர் மீனாக்ஷியை அப்படிக் கூறினாலும், அது காமாக்ஷியை மனதிலிருத்தியே என்பது தெரிகிறது.

Thursday, August 9, 2007

ஸ்ரீ சரபேஸ்வரர்

திருமதி கீதா அவர்கள் சரபர் பற்றி தனது சிதம்பர மகாத்மீயம் தொடர் பதிவில் எழுதியுள்ளார். அதன் தொடர்ச்சியாக சரபர் பற்றி மேலும் சில தகவல்கள் இங்கே.


அவரது பதிவின் லின்க் கீழே.


http://aanmiga-payanam.blogspot.com/2007/08/blog-post_05.html


ஸ்ரீ லலிதா சகஸ்ர நாம உத்ர பாகத்தில் சரபர் பற்றி பின்வருமாறு சொல்லப்பட்டிருக்கிறது.


எவர் ஒருவர் ஸ்ரீ லலிதாசகஸ்ர நாமத்தை பக்தியோடு பாராயணம் செய்கிறார்களோ அவர்களது சத்ருக்களை சரப மூர்த்தி நாசம் செய்து காப்பார்.

இன்றும் நடக்கும் பில்லி-சூன்யம் போன்றவற்றை நீக்குவதற்கும், நாரசிம்ஹ மந்திரத்தால் கட்டப்பட்ட பிரயோகங்களை நீக்குவதற்கும் சரப சாளுவங்கள் என்ற் பிரயோகம் தந்திர சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. மகா உக்கிரமான நாரசிம்ஹத்தை அடக்கியதிலிருந்து சரப மூர்த்தியே மாரக பிரயோகங்களுக்கு மிக உத்தமமானவர் என்று சொல்லப்படுகிறது. (அப்போ வல்லியம்மா நீங்க சரப உபாசகராகத்தான் இருக்க முடியும், ஏன்னா நீங்களும் ஒரு சிம்ஹத்தை பல வருடங்களாக அடக்கியாள்கிறீர்கள் அல்லவா)



ஹிரண்யகசிபுவைக் கொன்ற நரஸிம்மத்தின் உக்கிரம் அதிகமாக இருந்ததால் அந்த உக்கிரம் உலகத்தை பாதிக்காது தவிற்க்க தேவர்கள், முனிவர்கள் சிவனை பிரார்த்திக்க, சிவபிரானும் வீரபத்ரரை அனுப்புகிறார். ஆனால் வீரபத்ரரையும் கட்டி வைத்து ஆட்டுகிறார் நரஸிம்மர். அப்போது வீரபத்திரர் பிரார்த்தனையால் சிவன் விரபத்திர வடிவிலிருந்து உருமாறி சரப உருக்கொண்டு நரஸிம்மத்துடன் 16 நாட்கள் போர் நடக்கிறது. 17ஆம் நாள் சரபர் நரஸிம்மத்தை தன் கரங்களால் தொட, அந்த ஹஸ்த தீக்ஷையானது நரஸிம்மத்தை தெளியவைக்கிறது. தனது செயலுக்காக வருந்திய நரஸிம்மர் 16 ஸ்லோகங்களால் சிவபெருமானை வழிபட்டார். (இந்த 16 ஸ்லோகங்களிலேயே சரபரின் 108 அஷ்ட்டோத்திர நாமாவாக உள்ளது) சரபர் நரஸிம்மத்துடன் இணைந்து இரண்டறக்கலந்தபின் தேவர்களையும், முனிவர்களையும் பார்த்து 'நீரும், நீரும், பாலும், பாலும் கலந்தால் எப்படி வேறுபடுத்த முடியாதோ, அது போல விஷ்ணுவும் சிவனும் ஒருவரே. எங்களை வேறுபடுத்திப்பார்க்கத்தேவையில்லை. என்று சொல்கிறார்.



சரபதத்துவம் என்னவென்றால், உபாசகன் இந்திரியங்களை அடக்கி அதன் வழியாக கார்யசித்தி அடையத்துவங்கும் காலத்தில் உபாசகனுக்கு கர்வமும் "தான்" என்ற மமதையும் இருக்கும். (இந்திரிய ஒடுக்கமே ஹிரண்ய வதம்) என்னதான் இந்திரியக் கட்டுப்பாடு இருந்தாலும் மனது அடங்காததால் அளவிற்கு மீறிய கோபம். இந்த அகங்காரத்தை ஒடுக்கிய சக்தியே சரபர்.



மான், மழு, சர்பம், தீ போன்றவற்றை ஆயுதமாக கொண்டிருக்கிறார் சரபர். இதில் அகந்தையை ஒழிக்கக் கூடியது மழு. மான் எப்போதும் சஞ்சலப் பார்வையுடையது, அதனை அடக்கி மனதை ஒருமுகப் படுத்தல் வேண்டும். குண்டலினிக்கு சாட்சியாக பாம்பும், தீயானது ஞானாக்னிக்கு சாட்சியாகவும் சொல்லப்படுகிறது. சரப மூர்த்திக்கு ஆதாரம் பல இடங்களில், குறிப்பாக ரிக் வேதம், தைத்ரீகம், ஸ்கந்த புராணம், காளிகா புராணம், பிரும்மாண்ட புராணம், சிவ பராக்ரமம் போன்றவை.



நல்லது செய்வதாகட்டும், அசுர சக்திகளை நாசம் செய்வதாகட்டும் இறைவனுக்கு உதவியாக பல சக்திகள் வந்துள்ளன. இங்கு சரபருக்கு இரு விதமான சக்திகள் உதவியுள்ளனர். ஒன்று மிக உக்ரமான பத்ரகாளி எனப்படும் பிரத்யங்கரா, இன்னொன்று சூலினி எனப்படும் துர்கா. புற சம்பந்தமான பாவங்களையெல்லாம் அழிப்பவள் துர்க்கா. அக சம்பந்தமான பந்தத்திலிருந்து நீக்கி முக்தியளிப்பவள் பிரத்தியங்கரா. சுருக்கமாகச் சொன்னால் இம்மைக்கு சூலினியும், மறுமைக்கு பிரத்யங்கராவும் அவசியம். இந்த இரு சக்திகளும் சரபருக்கு இரு இறக்கைகளாக விளங்குகின்றனர். பிரத்யங்கரா தேவியின் மந்திரங்களை கண்டறிந்து சொன்னவர்கள் அங்கிரஸ், பிரத்யங்கிரஸ் என்பவர்கள். இவளது மந்திரத்தை சாதகம் செய்பவர்களை துவேஷிக்கக் கூடாது. இவள் இறைவனது கோபத்திலிருந்து உதித்ததால்தான் "குரோத சம்பவாய" என்கிற நாமம் அன்னைக்கு ஏற்பட்டது.



சரபர் ஸிம்ஹ ரூபமுள்ளவரை அடக்கியதால் "ஸிம்ஹக்னர்" என்றும் சாலுக்கியர் வழிபட்டதால் "சாலுவேசர்" என்றும் அழைக்கப்படுகிறார். சாலுக்கியரில் இரு பிரிவுகளுண்டு. மேலை சாளுக்கியர், கீழை சாளுக்கியர் என்பதே அவை. இதில் கீழை சாளுக்கியர் சரபேஸ்வரரை குலதெய்வமாகவும் மேலை சாளூக்கியர்கள் நரஸிம்மத்தையும் வழிபட்டு வந்தனர். இவர்களுக்கும் சோழர்களுக்கும் இருந்த உறவின் முறையால் தமிழகத்தில் சரபர் வழிபாடு நிலைபெற்றிருக்கலாம்.



திரிபுவனத்தில் மூன்றாம் குலோத்துங்கனால் கட்டப்பட்ட ஆலயம் தவிர மதுரை, சிதம்பரம், காரைக்குடி போன்ற சில இடங்களிலும் சரப வழிபாடு உண்டு. சரப வழிபாட்டிற்காக பல ஸ்லோகங்கள், நாமாவளிகள் உண்டு, அவை சரப அஷ்டகம், கவசம், சஹஸ்ர நாமம், அஷ்ட்டோத்திரம் போன்றவை. யாருக்கேனும் தேவையிருப்பின் பின்னூட்டமாக தெரிவியுங்கள், தருகிறேன்.

Sunday, August 5, 2007

சில விசேஷ கணபதி க்ஷேத்ரங்கள்....

கணபதியை ப்ராதான்யமாக வழிபடுபவர்கள் காணாபத்யர் எனப்படுவர். இவர்களுக்கு கைலாசம் போன்றது மயூரேசம் என்ற தலம். இது பூனா-பெங்களூர் ரயில் பாதையில் ஜெஜீரி ரயில் நிலையத்தருகில் இருக்கிறது. இங்குள்ள விக்னேஸ்வரருக்கு "ஸ்வானந்தேசர்" என்று பெயர். இவர் சுயம்பு மூர்த்தியானாலும் அருகில் பஞ்சலோகத்தில் சித்தி-புத்தி தேவிகள் இருக்கிறார்கள். இந்த ஆலையத்தில் திசைக்கு ஒருவராக எட்டு கணநாயகர்கள் (வக்ரதுண்டர், ஏகநாதர், மகோதரர்,கஜானனர், லம்போதரர், விகடர், விக்னராஜர், தூம்ரவர்ணர்) இருக்கிறார்கள். இதனால் இது விநாயகருக்கான அஷ்டகாய ஷேத்திரமாக கருதப்படுகிறது. ஆதிசங்கரர் தனது குரு கோவிந்த பாதரை சந்திக்கும் முன்பும், பாரத தேச பாதயாத்திரையின் முன்பும் இந்த மயூரேச கணபதியை ஆராதித்ததாக கூறப்படுகிறது. அஷ்ட கணபதி ஷேத்ரங்களாவன,
1.மயூரேசம் (மேலே கூறப்பட்ட இடம்) - ஸ்வானந்தேசர்
2.ஹளபேடு (கர்னாடகா) - நர்த்தன கணபதி
3.காசி - டுண்டி விநாயகர்
4.பாலி - கல்லாள கணபதி
5.விஜயபுரி - விக்னராஜர்
6.தேவூர் - பிரும்ம வரதர்
7.மட் - வரத வினாயகர்
8.சிக்தடேக் - மதுகைடப வரதர்
இவைதவிர, திருநாரையூர் தலத்தில் உள்ள வினாயகர்தான் நமக்கு நம்பியாண்டார் நம்பி மூலமாக தேவாரப்பதிகங்களை மீட்டுத்தந்தவர்.
சுந்தரமூர்த்தி நாயனாருக்கும், சேரமான் பெருமாளுக்கும் முன்னதாக ஓளவையாரை கைலாசத்தில் சேர்ப்பித்த வினாயகர் சேலத்தில் காந்திபாலம் அடியில் இருக்கும் பஞ்சாஷர கணபதி.
ராவணன் காலத்து வினாயகர் கோவில் இலங்கையில் திருக்கோணேஸ்வ்ரத்திற்கு அருகில் இருப்பதாக தெரிகிறது, இவரும் பஞ்சாஷர கணபதிதான். இக்கோவில் ராவணனால் கட்டப்பட்டதாக வரலாறு.
தஞ்சைக்கருகில் நன்னிலம் அருகில் திருச்செங்காட்டங்குடியில் உள்ள வாதாபி கணபதியைத்தான் சிறுதொண்டர் வாதாபி யுத்தத்தில் வெற்றி பெற்று, அங்கிருந்து கொண்டுவந்து இங்கு பிரதிஷ்ட்டை செய்துள்ளதாக வரலாறு. இந்த வாதாபி வினாயகரை பரஞ்சோதி முனிவர் பிரதிஷ்ட்டை செய்த சமயத்தில் அங்கிருந்த பல்லவ அரசன், வினாயகர் அழகில் வியந்து அமைத்ததுதான் ந்மது பிள்ளையார்பட்டி கற்பகவினாயகர். காவிரிக்கரையோரமாக கும்பகோணம்-திருவையாறு வழியில் உள்ள கணபதி அக்ரகாரத்தில் இருக்கும் வினாயகர் அகத்தியரால் பூஜிக்கப்பட்டதாக கூறுகிறார்கள்.
உருவத்தில் பெரிய வினாயகர் பல தமிழகத்தில் கோவில்களிலும் காண முடிகிறது. அவை, மதுரையில் முக்குறுணி விநாயகர், மதுரை ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ஊர்த்வ விநாயகர் (இரண்டுமே நாயக்கர் காலத்தில் வந்தவை), திருவண்ணாமலை செங்காவி விநாயகர், லால்குடி-அன்பில் உள்ள செவிசாய்த்த வினாயகர், திருவாருர் மாற்றுரைத்த வினாயகர், திருவானைக்கா அன்னைக்கெதிர்லிருக்கும் வினாயகர் (இது ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்டது), திருச்செந்தூரிலுள்ள விநாயகர் போன்றவை.
மலைமேல் பிள்ளையார் கோவில்கள் இரண்டு இடங்களில் உள்ளது, அவை திருச்சி மலைக்கோட்டையும், உறையூருக்கருகில் சோழன் பாறையில் உள்ள முக்தி கணபதியுமே. இன்னும் பல வரலாற்றுச் சிறப்புள்ள கோவில்களில் தலபுராணத்தில் பங்கு கொண்ட வினாயகர் சன்னதிகள் இருக்கிறது.

கடல் கடந்த கணபதி வழிபாடு.....

விநாயகர் வழிபாடு நம் நாட்டில் மட்டுமன்றி கடல் கடந்தும் பரவியிருக்கிறது. இந்திய நாகரிகம் பரவிய இடங்களிலெல்லாம் இவரது வழிபாட்டினை உணரமுடிகிறது. இந்திய வியாபாரிகள் (முக்கியமாக தமிழர்) கடல் கடந்து சென்று வியாபாரம் செய்யும் காலத்தே அவர்கள் தமது வழித்துணையயக விநாயகர் உருவத்தை எடுத்துச் சென்றுள்ளனர். இவ்வாறு சென்ற கணபதி அந்தந்த நாடுகளில் குடியேறியுள்ளார்.


திரு சமன்லால் எழுதியுள்ள 'இது அமெரிக்கா' நூலில் மெக்ஸிக்கோ, பெரு போன்ற நாடுகளில் பழங்காலத்திலிருந்தே விநாயகர் வழிபாடு இருந்ததாகவும், இந்நாடுகளில் இவர் அறுவடைத் தெய்வமாக போற்றுவதாக பல ஆதாரங்களைத் தந்துள்ளார். சர் மோனிர் வில்லியம்ஸ் என்பவர் ரோம் நாட்டுக் கடவுளுக்கும் நமது விநாயகருக்கும் பல ஒற்றுமை இருப்பதாக கூறியுள்ளார். பெளத்த மதத்தில் விநாயகரை அருசுக் கடவுள் என்று கூறியுள்ளனர். மகாயான புத்த மதத்தில் விநாயகர் ஒரு முக்கிய தெய்வமாக விளங்குகிறார் எனத்தெரிகிறது. இவ்வாறாக பெளத்த மதத்துடன் விநாயகர் வழிபாடு பல இடங்களுக்கு பரவியிருக்கலாம்.


கி.மு 3ஆம் நூற்றாண்டில் அசோகரது மகன் விநாயகர் வழிபாட்டை நேப்பாளத்தில் பரவச்செய்ததாக தெரிகிறது, மேலும் இலங்கையில் உள்ள அசோக ஸ்தூபியில் விநாயக உருவம் செதுக்கப்பட்டுள்ளது. திபெத்திலும் நேப்பாளத்திலும் பல நர்த்தன விநாயகர் உருவங்கள் உள்ளன. நேப்பாளில் இவரை "டஸாகஸ் ப்டாக்' என்றழைக்கின்றனர். பர்மாவில் கணபதிக்கு 'மகாபைனி' என்று பெயர். கம்போடியாவில் இவருக்கு "பிரஹ் கணேஷ்" என்றே பெயர்.


கி.பி 414-ஆம் ஆண்டிலேயே ஜாவா, பாலி தீவுகளில் விநாயக வழிபாடு இருந்ததாக சீன யாத்திரிகர் பாகியான் தனது பிரயாண குறிப்பில் கூறியுள்ளார். ஜப்பானியர் கணபதியை மங்கள மூர்த்தியாக வழிபட்டு வருகிறார்கள். அவர்கள் தமது மொழியில் 'ஷோ-டென்' என்ற பெயரில் வழிபடுகிறதாக அறிகிறோம். ஜப்பானில் இரட்டை விநாயகர் சிலைகள், ஒன்றையொன்று தழுவிய நிலையில் உள்ளது. இதற்கு 'குவான்ஷி தியென்' என்றும் 'கங்கி-தென்' என்றும் பெயராம்.


சீனாவில் குங்-ஷிங் என்ற இடத்தில் உள்ள விநாயகர் சிலை கி.பி 531-ல் செதுக்கப்பட்டதாக கண்டறிந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் காபூலுக்கு அருகில் ஸகர்தார் என்ற இடத்தில் பல இந்து தெய்வ சிலைகள் கிடைத்துள்ளன அதில் விநாயகர் சிலையும் கிடைத்துள்ளது. மேலும் குப்தர் கால விநாயகர் சிலைகள் கிடைத்துள்ளதாக தெரிகிற்து. இச்சிலைகள் தற்போதைய அரசியல் மாற்றங்களில் என்ன ஆயிற்றோ தெரியவில்லை.


அடுத்த பதிவில் சில சிறப்பான விநாயக க்ஷேத்திரங்களைக் காணலாம்.

Saturday, August 4, 2007

இவருக்கு மேல இன்னுமொரு நாயகன் இல்லை.....


விநாயகனே வெவ்வினையை வேர் அறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் வேந்தனுமாம் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து....


- நம்பியாண்டார் நம்பி.



வி-நாயகன் அதாவது தனக்கு மேல் தன்னை நடத்துவிக்கும் நாயகர் இல்லாதவர் என்று அர்த்தம். 'அநீஸ்வராய' என்பதும் இந்த அர்த்தத்தில் வருவதே. இதை ஆதி சங்கரர் தனது கணேச பஞ்சரத்னத்தில், அநாயக ஏக நாயகம் (முதாகரார்த்த மோதகம் என்று ஆரம்பிக்கும்) என்கிறார். ஆதிசங்கரர் கணேச புஜங்கமும் எழுதியவர். பஞ்சரத்தினம் கைலாயத்தில் கணபதியை தரிசித்து அங்கு நடந்தவற்றை எழுதியது பஞ்சரத்தினம் என்பதால் இதை முக்தி கணேச ஸ்தோத்திரம் என்கிறார்கள்.

நாலு வேதங்களிலும் விக்னேஸ்வரரைப் பற்றி பலவாறு சொல்லப்பட்டிருக்கிறது. பஞ்ச உபநிஷதங்கள் இவரை பூஜிக்கும் முறையை விளக்குகிறது, கணேச, முத்கல புராணங்கள் இவரை பற்றி விரிவாக சொல்லியிருக்கிறது.

கணபதியை உபாஸிக்கும் பக்தர்களுடைய மனதில் 'நீர்-நிலம்-விசும்பு-தீ-காற்று என்ற் பஞ்ச ரூபங்களின் அதிபதியாகவும், நிர்க்குண பிரும்மத்தின் வடிவமாக 'ஓம்;கார ஸ்வருபமாக இருப்பதாக காணாபத்தியம் சொல்கிறது.

கணபதியை வணங்குபவர் மற்ற தெய்வங்களை துதித்துப் பின் இவரை துதிப்பதில்லை, ஆனால் மற்ற தெய்வங்களை துதிக்கையில் கணபதியைப் முதலில் பூஜிக்க வேண்டும். இது இவருக்கான தனிச்சிறப்பை உணர்த்துகிறது.


ஓம் என்ற பிரணவ ரூபமான விநாயகரை அவர் பரபிரம்மமாக இருப்பதால் தான் எந்த கர்மாவிற்க்கான சங்கல்பத்திலும், முதலில் ' ஓம் சுக்லாம் பரதரம்'
என்று ஆரம்பிக்கும்படியாக வைத்துள்ளார்கள்.


இவவாறாக பலவிதங்களிலும் இறைவழிபாட்டில் முதலிடம் பெற்ற கணநாதனை வணங்கி இந்த பதிவினை ஆரம்பிக்கிறேன். இங்கு எனக்கு தெரிந்தவற்றை/படித்தவற்றை பகிர்தல் மட்டுமே இலக்கு. நானாக எந்த திரட்டியிலும் சேர்க்கும் எண்ணமும் இல்லை. ஏதேனும் தவறு இருப்பின் சுட்டிக்காட்டி வழிப்படுத்த் அன்பு நண்பர்களை வேண்டிக்கொள்கிறேன்.