Saturday, April 26, 2008

அன்னையின் ரதங்கள்........


'சக்ரராஜ ரதோ யத்ர தத்ர கேய ரதோத்தம
யத்ர கேய ரதஸ் தத்ர கிரிசக்ர ரதோத்தம'

என்பதாக அன்னை சக்ரராஜ ரதம் எனப்படும் தேரிலும், அன்னையின் வலப் பக்கத்தில் கேய ரதத்தில் அன்னையின் மந்த்ரிணியும், கிரி சக்ர ரதத்தில் தந்த்ரிணி எனப்படும் தண்டநாதா இடப் பக்கத்திலுமாக....அன்னை பராசக்தி பண்டாசுர வதத்திற்கு சொல்லுவதாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்த மூன்று ரதங்களை ரத த்ரயம் என்பர். அன்னையின் சில சக்திகளே மந்த்ரிணி, தந்த்ரிணி என்பதால் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

ஈரேழு புவனங்களையும் ஆளும் அன்னை, தனக்கு மந்திரியாக கொண்ட சக்திக்கு மந்த்ரிணி என்று பெயர். 'மந்த்ரிணியஸ்த ராஜ்யதா' என்று ஒரு நாமம் இருக்கிறது.அதாவது தனது மந்திரியான மந்திரிணியிடம் ராஜ்யத்தை நிர்வாகம் செய்ய கொடுத்து விடுகிறாளாம். இந்த மந்த்ரிணியின் ரூபந்தான் மதுரை மீனாக்ஷி. இந்த மந்த்ரிணியின் ரதத்தின் பெயர் 'கேயசக்ர ரதம். இவள் தனது பரிவாரங்களுடன் அன்னையை பணிகிறாள் என்பது தான் 'கேயசக்ர ரதாரூட மந்த்ரிணி பரிசேவிதா'.

தண்டம் என்றாலே சைன்யம் என்று பெயர். சைன்யங்களின் தலைவர் தண்ட நாதா, அதாவது சேனாபதி. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியை தண்டநாதா என்று கூறுவர். அன்னையின் இந்த வடிவமே வாராஹி என்றும் கூறுவது உண்டு. இவள் கிரிசக்ரம் என்ற ரதத்தை உடையவள். இங்கு கிரி என்பதற்கு மலை என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. கிரி என்பதற்கு குதிரை என்றும் ஒரு பொருளுண்டு. புலன்களையும் கிரி என்பதுண்டு. தண்டநாதா அன்னை கையில் இருக்கும் பஞ்சபாணங்களிலிருந்து உதித்தவள் என்பர். 'கிரிசக்ர ரதாரூட தண்டநாத புரஸ்க்ருதா' என்பது நாமம். அதாவது கிரிசக்ர ரதத்தில் வந்து அன்னையை சேவிப்பதாக சொல்லப்படுகிறது.

சக்ர ராஜம் என்பது என்ன?, அது அன்னை த்ரிபுர சுந்தரி வரும் சக்ரம்?, அது எப்படி இருக்குமாம்?. ஸ்ரீசக்ர ரூபமான ரதமாம். அன்னை இருக்கும் நகரமே ஸ்ரீ நகரம். அந்த நகரத்தின் மத்தியில் சிந்தாமணி க்ருஹத்தில் இருப்பதாக பார்த்திருக்கிறோம். அந்த நகரத்தின் வடிவே ஸ்ரீசக்ரம். இப்போது அவளது ரதமும் ஸ்ரீசக்ர வடிவானது என்று தெரிகிறது. சுதர்சன சக்ரம், கணபதி யந்த்ரம் என்றெல்லாம் சொல்ல கேட்டிருக்கிறோம். இவை எல்லாவற்றிற்கும் தலையானது ஸ்ரீசக்ரம். அதனால்தான் அதற்கு பெயரே சக்ர ராஜம். சக்ரம் என்றாலே அது ஸ்ரீசக்ரத்தையே குறிக்கும் என்பர்.

சரி அன்னையின் சக்தியே மந்த்ரிணி, தண்டநாதா என்று எப்படி சொல்கிறோம்?. அன்னை கையில் இருக்கும் இக்ஷு கோதண்டத்தில் இருந்து தோன்றியவள் மந்த்ரிணி. அன்னையின் இன்னொரு கையில் இருக்கும் பஞ்ச பாணங்களிலிருந்து வந்தவள் தண்டநாதா. மேற்கொண்டு இதுபற்றி அறிய இதை படியுங்கள்.

Wednesday, April 23, 2008

ஆதிசங்கரரும் அடியார்க்கு அடியார்தான்...



நம்மில் பலரும் ஆதிசங்கரர் என்றாலே அவர் சைவ/வைதிக மதத்திற்கு மட்டுமே ஆச்சார்யார் என்று நினைக்கிறோம். ஆனால் ஆதிசங்கரருக்கு 'ஷண்மத ஸ்தாபனாச்சார்யர்' என்று ஒரு பட்டம் உண்டு. அதென்ன ஷண்மத ஸ்தாபனம்?. ஏன் அவருக்கு முன் மதங்கள் இல்லையா?. இருந்தது. அவர் காலத்தில் ஹிந்து மதப் பிரிவுகளில் ஏகப்பட்ட வேற்றுமைகள் மற்றும் வேதத்தின் அடிப்படை ப்ரமாணத்தை ஏற்காத பெளத்த/சமண சமயங்களால் மேலும் வேற்றுமைகள் பெருகியது. இந்த நிலையில் ஹிந்து மதம் நீர்த்துப் போகாது இருக்க வேண்டுமானால் இந்த வேற்றுமைகளினிடயே இருக்கும் பல ஒற்றுமைகளை நிலைநாட்டி அதன் மூலம் இந்துமத பிரிவுகளிடையே சண்டை-சச்சரவுகளை குறைக்க முயன்றார். அவர் காலத்தில், இந்து மதத்தில் மட்டும் 72 பிரிவுகள் இருந்தனவாம். இந்த 72 பிரிவுகளையும் ஆராய்ந்து, பலவற்றை இணைத்தும், சிலவற்றை தள்ளியும் முடிவாக "சைவம், வைஷ்ணவம், காணாபத்யம், கெளமாரம், செளரம், சாக்தம்' என்று வகைப்படுத்தினாராம். இவ்வாறு வகைப்படுத்தப்பட்டபின் இந்த 6 பிரிவுகளும் சொல்லும் பல பெயர்களும் பரப்பிரம்மத்தையே சாரும் என்கிறார். சரி, இதுக்கும் தொண்டரடிக்கும் என்ன தொடர்பு?, பார்க்கலாம்.



ஆதி சங்கரர் ஷண்மதங்களை ஸ்தாபித்தாலும், அவர் வைஷ்ணவத்தை உணர்ந்து, மஹா விஷ்ணுவை பல இடங்களில் பலவாறு கொண்டாடுகிறார். விஷ்ணு சஹஸ்ர நாமத்திற்கு பாஷ்யம் செய்திருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் அவரது பாஷ்ய க்ரந்தங்களில் எல்லாம் நாராயணனையே பரம்பொருளாக கொண்டாடுகிறார். நாரயணீயத்தில் ஆதி சங்கரர் பற்றிக் குறிப்பிடும் போது பட்டத்ரி இது பற்றி வியக்கிறார். ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட மடங்களில் இன்றும் 'நாராயண ஸ்மிருதி' என்றே கையொப்பமிடப்படுகிறது. ஆதி சங்கரர் சமாஸ்சரணம்/ உடம்பில் சூடு போட்டு முத்திரை (சங்கு-சக்கரம்) குத்திக் கொள்வதை எதிர்த்தார், ஆகையால் அவர் வைஷ்ணவ எதிரி என்பதாக கூறப்படுகிறது. அவர் காலத்தில் வைணவத்தில் மட்டுமல்ல, சைவத்திலும் போன்றவற்றிலும் உடலில் முத்திரை குத்தி கொள்ளும் முறை இருந்துள்ளது. சைவர்கள் ரிஷப, சூல முத்திரைகளை கொண்டு இருந்திருக்கிறார்கள். சங்கரர் இவை இரண்டையுமே கண்டித்திருக்கிறார். அவர் அதனை கண்டிக்க காரணமும் சொல்லியிருக்கிறார். அதாவது மனித உடலின் பல பாகங்களிலும் தேவர்களும், பித்ருக்களும் வாசம் செய்கின்றனர். இவ்வாறு சூடு வைத்துக் கொள்வது அவர்களுக்கு ப்ரிதியாகாது என்பதாகச் சொல்கிறார். அவரது இந்த கண்டிப்பு சைவ/வைஷ்ணவ மரபுகள் இரண்டிற்குமே தான்.



சங்கரரின் தாயார் ஆர்யாம்பாளின் இறுதிக்காலம் நெருங்கும் சமயத்தில், ஆதிசங்கரர் தான் முன்னர் வாக்கு கொடுத்ததுபடி தாயருகில் இருக்கிறார். தனது தாயின் வேண்டுகோளுக்கிணங்க, சிவனைத் துதித்து தனது தாயின் அந்திம காலம் சிரமமின்றி இருக்க வேண்டுகிறார். இவரது துதியினை கேட்டு ஈசன் சிவகணங்களை அனுப்பினாராம். அந்த சிவகணங்களின் உருவம் கண்டு அஞ்சிய ஆர்யாம்பாள், சங்கரரிடம், தனக்கு பயமாக இருக்கிறதென்றும் இந்த கணங்களுடன் தான் கைலாசம் போக மாட்டேன் என்றும் சொல்கிறார். உடனே ஆச்சார்யார் விஷ்ணுவைத் துதிக்கிறார். அந்த துதியில் நாராயணனை பாதாதி-கேசம் வர்ணிப்பதாக அமைத்து 15 பாடல்கள் பாடுகிறார். அந்த சமயத்தில் வைகுந்த வாசனின் தூதர்கள் வந்து ஆர்யாம்பாளின் ஜீவனை கூட்டிச் சென்றதாக சொல்லப்படுகிறது. இந்த 15 பாடல்கள் விஷ்ணு பாதாதி-கேச ஸ்துதி என்று கூறப்படுகிறது. இதன் முடிவில் "என்னாலே சொல்லப்பட்ட இந்த ஸ்துதியால் யார்-யார் மஹா விஷ்ணுவின் அழகை அனுபவிக்கிறார்களோ அப்படிப்பட்ட விஷ்ணு பக்தர்களின் நிர்மலமான திருவடிகளை எப்போதும் நான் நமஸ்காரம் செய்கிறேன்" என்ற் சொல்லி முடிக்கிறார். இப்போது சொல்லுங்க ஆதிசங்கரரும் அடியார்க்கு அடியார் தானே?

Thursday, April 17, 2008

திக்விஜயம், திருக்கல்யாணம், திருத்தேர், சப்தாவரணம், தேவேந்திர பூஜை....

நேற்று ராஜ்யபாரம் ஏற்ற அன்னை, இன்று திக்விஜயம் செய்கிறாள். ஈசனை எதிர்க்கையில் தனதுடலில் ஏற்படும் மாற்றத்தை அறிந்து மாலையிட தயாராகும் தினம் இதுவே...சப்பரத்தில் அன்னை-ஈசன் இருவரும் கையில் வில்-அம்புகளுடன் இருப்பர்.

மீனாக்ஷி கல்யாண வைபோகமே, சுந்தரேஸ்வர கல்யாண வைபோகமே.... பத்தாம் நாள் காலை கல்யாணம். மதுரை மாநகர ஆத்திக அன்பர்கள் எல்லோரும் தமது இல்லத்துப் பெண்ணுக்கே திருமணம் நடந்தது போல மகிழ்வுடன் இருக்கும் நாள். கோவிலுக்கு வரும் எல்லா பக்தர்களுக்கும் தாலிச்சரடு, மஞ்சள் கிழங்கு, குங்குமம் பிரசாதமாக அளிக்கப்படும். மாலை 5 மணிவரை கல்யாணக் கோலத்தில் காட்சி அளிப்பர். கோவில் இன்று மட்டும் மதியம் மூடப்பட மாட்டாது. மாலையில் அன்னைக்கு புஷ்பப் பல்லாக்கு, ஈசன் பிரியாவிடையுடன் யானை வாகனத்தில் பவனி.
பதினோராம் நாள் காலையில் அம்மையும், அப்பனும் திருத்தேரில் எழுந்தருளி பவனி. காலை 10-11 மணிக்குள் தேர் நிலை திரும்பிய உடனேயே தேர் சென்ற பாதையில் பல்லக்கில் 'தேர் தடம்' பார்க்க பவனி கிளம்பிவிடுகிறார்கள்.
திருவிழாவின் எல்லா நாட்களும் ஈசன் தனியாக் ஒரு வாகனத்தில் ப்ரியாவிடையுடன் வருவார், அன்னை தனி வாகனத்தில் வருவார். ஆனால் பதினோராம் நாள் இரவு மிக விசேஷமான சப்தாவரணம். இதில் அன்னையும் ஈசனும் ஏக ஆசனத்தில் சப்பரத்தில் வருவர். இதனை வருடத்தில் இந்த ஒருநாள் மட்டுமே காண முடியும். மற்ற எல்லா திருவிழாவிலும் அன்னையின் வழி தனி வழிதான். இந்த சப்தாவரண ஸ்வாமி தரிசனம் எல்லா பாபங்களையும் தீர்க்கக் கூடியதாம்.

சித்திரை திருவிழாவின் கடைசி நாள், பன்னிரண்டாம் நாள். காலையில் அம்மை-அப்பர் வைகையாற்றில் எழுந்தருளி தீர்த்தவாரி. மாலையில் தேவேந்திரனுக்கு (முதன் முதலில் தேவேந்திரனால் ஏற்படுத்தப்பட்டதே பிரம்மோற்சவம்) ரிஷப வாகனத்தில் காட்சி அளிப்பதுடன் மீனாக்ஷி கோவில் சித்திரை உற்சவம் முடிவுக்கு வருகிறது.



சப்தாவரணத்தன்று (11ஆம் நாள் மாலை) அழகருக்கு எதிர்சேவை ஆரம்பித்துவிடும். அது பற்றி தனியாக பிறகு பதிவிடலாம்.

Wednesday, April 16, 2008

பத்ம பாதரும் நரசிம்மரும்....





ஆதிசங்கரரின் பரம சிஷ்யர்களில் ஒருவர் பத்மபாதர். இவரைப்பற்றி சிறிது ஏற்கனவே இந்த வலைப்பூவில் பார்த்திருக்கிறோம். இவர் ஆதிசங்கரரிடம் வருவதற்கு முன்னர் தீவிரமான நரசிம்ஹ பக்தர். இவரது சீக்ஷா நாமம் சனந்தனர், இவர் தனது நரசிம்ஹ பக்தியினால் பகவத்பாதரை இருமுறை காப்பாற்றி இருக்கிறார். இன்று பத்மபாதரது நரசிம்ம பக்தியினை பார்க்கலாம்.





பத்ம பாதர் மிக திவிரமான தவத்தின் மூலம் நரசிம்மத்தை நேரில் தரிசிக்க வனத்தில் ஆழ்ந்த தவத்தில் இருந்தார். அவர் அவ்வாறு இருக்கையில் ஒரு வேடன் அவரிடம் வந்து "சாமி.....கண்ணை மூடிக்கிட்டு அப்படி என்ன வேண்டிக்கிறீங்க" அப்படின்னு கேட்டான். பத்மபாதர் பதிலாக, 'உனக்கு சொன்னால் புரியாதே' என்கிறார். அதெல்லாம் புரியும் நீங்க சொல்லுங்கன்னு வேடன் வற்புறுத்துகிறான். பத்மபாதரும் அவனுக்கு புரியும்படியாக 'சிங்க முகமும் மனிதவுடலும்' கொண்ட ஒருத்தரைக் காண்பதற்காக தவமிருப்பதாக சொல்கிறார். நீங்க சொன்ன மாதிரி எந்த மிருகத்தையோ அல்லது மனிதனையோ நான் பார்த்ததே இல்லை என்று கூறிய வேடன், அதனால் என்ன இந்த வனத்தினுள் இருப்பானாயில் அவனை இன்று மாலை சூரியன் மறைவதற்குள் கட்டி இழுத்து வருகிறேன் என்று சூளுரைத்துச் செல்கிறான்.





பத்ம பாதரும், பலகாலமாக கடுந்தவம் செய்யும் எனக்கே காணக் கிடைக்கவில்லை, இவன் கட்டி இழுத்து வருகிறானாமே என்று மனதுள் சிரித்துக் கொண்டு தனது தவத்தை தொடர்கிறார். வேடன் சோறு தண்ணியின்றி அலைந்து தேடுகிறான். மாலையும் நேரம் வருகிறது, ஆனால் அந்த மிருகம் கண்ணில் தென்படவில்லை. வேடனுக்கு சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியவில்லையே என்ற வருத்தம். கொடிகளைக் கொண்டு தூக்கு மேடை அமைத்து, 'சாமி என்னை மன்னிச்சுக்கோங்க, சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியாத நான் உயிர் வாழ விரும்பவில்லை' அப்படின்னு சொல்லிக் கொண்டே கழுத்தில் தூக்கு மாட்டிக் கொள்கிறான். சுருக்கு இறுகும் நேரத்தில் நார்/கொடி அறுபட்டு கிழே விழுகிறான். அவனெதிரில் அந்த மனித மிருகம் கண்ணில் படுகிறது. ஆகா அகப்பட்டாயா என்று அதைப் பிடித்து கொடியாலேயே கட்டி இழுத்துக் கொண்டு பத்ம பாதரிடம் வருகிறான். பத்ம பாதர் முன்பு வந்து, 'சாமி, கண்ணைத் திறந்து பாருங்க, நீங்க சொன்ன மனித மிருகத்தை கொண்டு வந்திருக்கேன்' என்கிறான். கண் திறந்த பத்மபாதருக்கு எதிரே ஏதும் தெரியவில்லை. ஆனால் அவன் கட்டிய கொடி/நார் மட்டும் கண்ணுக்குப் புலப்படுகிறது. 'எங்கேயப்பா? எதையும் காணவில்லையே' என்கிறார். வேடனும், 'நல்லாப் பாருங்க சாமி'ன்னு சொல்லிட்டு 'ஏ மிருகமே உனக்கென்ன மாய-மந்திரம் தெரியுமான்னு அதட்டுகிறான்.





நரசிம்மம் கர்ஜிப்பதை காதில் கேட்டார் பத்மபாதர். 'பத்மபாதா, ஞானக் கண்ணால் தவமிருந்த உனக்கு குரலால் தரிசனம் தருகிறேன். வேடனின் நம்பிக்கையும், தீவிரமும் என்னை தோன்றச் செய்தது. நீ என்னை நினைக்கும் போது நான் உன்னில் ஆவிர்பவிக்கிறேன்' என்று சொல்லி மறைந்தார். இந்த வரத்தினாலேயே பின்னாளில் ஆதிசங்கரரை கபாலிகர்கள் பலியிட முயன்றபோது பத்மபாதர் காப்பாற்றுகிறார். இவரே இன்னொரு சமயத்தில் சரசவாணியின் கேள்விக்கு பதிலறிய ஆதிசங்கரர் கூடு விட்டு கூடு பாய்ந்த நேரத்தில் ஆதிசங்கரர் தனது உடல் எரியும் முன்பாக திரும்பி வருவதற்கு உதவுகிறார். இவ்வாறாக தனது தபோ பலத்தையும் குருவுக்கு அர்பணிக்க தயங்காதவர் பத்ம பாதர்.

Tuesday, April 15, 2008

ஐந்து, ஆறு, ஏழு, மற்றும் எட்டாம் நாள் உற்சவங்கள்...

நரியை பரியாக்கி, பரியை நரியாக்கி விளையாடின ஈசனல்லவா, அதனால் தான் 5 ஆம் நாள் அம்மை-அப்பன் இருவரும் குதிரை வாகனம்

சைவத்தை ஸ்தாபித்த வரலாறு என்று ஒரு திருவிளையாடல் உண்டு. அந்த விளையாடலின் அங்கமாக 6ஆம் நாள் உற்சவத்தில் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் ஆகிய இருவரும் ரிஷப வாகனத்தில்.


ஏழாம் நாளில் அன்னை யாழி வாகனத்திலும் அப்பன் நந்திகேஸ்வர வாகனத்திலும்.

மதுரையின் ஆட்சி ஆறு மாதங்கள் அன்னையாலும், ஆறு மாதங்கள் அப்பனாலும் செய்யப்படுவதாக ஐதிகம். அன்னைக்கு முடி சூடுதல் எட்டாம் நாள் திருநாள். இன்று அன்னை பாண்டியனுக்கு உரிய வேப்பம் பூ மாலை அணிந்து மலையத்வஜ பாண்டிய ராஜ கன்னியாக பட்டாபிஷேகம். (இது போன்றே ஈசன் பாண்டிய ராஜனாக பட்டம் சூட்டிக்கொள்வது ஆவணி மூல உற்சவத்தில் நடக்கும்.)

Monday, April 14, 2008

ராமோ விக்ரஹவான் தர்ம:

ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி தர்மத்தின் ப்ரத்யக்ஷ ஸ்வருபீ என்கிறார் வால்மிகி. மனிதன் எப்படி தார்மீக முறையில் வாழவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தது ராமாவதாரம். பகவான் ஸ்ரீ விஷ்ணு தனது உயர்ந்த தெய்விக நிலையிலிருந்து கீழ் இறங்கி வந்து ஸ்ரீ ராமராகவும், ஸ்ரீகிருஷ்ணராகவும் அவதாரம் செய்ததே மனிதர்களான நம் அனைவரையும் ரக்ஷிப்பதற்கே என்று பாகவதத்தில் சுகமுனியும் கூறியிருப்பதாக தெரிகிறது.

இந்த பூமியில் வாழும் மனிதன் அதர்மச் செயல்களை விலக்கி, தர்மச் செயல்கள் மட்டுமே செய்து நல்லவனாக, வல்லவனாக வாழ முடியும் என்பதை தானே வாழ்ந்து காட்டிய அவதாரமே ராமாவதாரம்.தார்மீக வாழ்வில் மனிதனுக்கு ஆசை கூடாது, எதை செய்ய வேண்டுமோ, அல்லது எதை செய்ய தனக்கு ஆணையிடப்பட்டிருக்கிறதோ அதனை தயங்காது செய்ய வேண்டும். பிறருக்கு தானம் செய்வதை தலையாயதாகக் கொள்ள வேண்டும். இந்த குணங்கள் எல்லாம் ராமனிடத்தில் தலைதாழ்ந்து வெட்க்கப்படும் அளவிற்கு சிறந்தவன். இதுமட்டுமா, பித்ருதேவோ பவ: என்பதற்கேற்ப, தந்தையின் விருப்பத்தை தயக்கமின்றி நிறைவேற்ற வேண்டும் என்று 14 வருடங்கள் வனவாசம் புரிந்து கடமையுணர்ச்சியுடைய புத்ரனாக, (பித்ரு வாக்ய பரிபாலனனாக) வாழ்ந்து காட்டியுள்ளார். இதனால்தான் பெரியவர்கள், இராமர் செய்ததை செய்யவேணும், கிருஷ்ணர் கூறியதை செய்யவேணும் என்று சொல்கிறார்கள்.


ஒரு சமயம், அஷ்டமி-நவமி திதிகள் பகவானிடம் சென்று, 'விவாஹம், க்ருஹப்ரவேசம், பிரயாணம் போன்றவைகளுக்கு அஷ்டமி-நவமி கூடாது என்று எல்லா மங்கள காரியங்களிலும் தங்களை அனைவரும் பஹிஷ்கரிப்பதாக முறையிட்டனர். திக்கற்றவர்க்கு தெய்வமே துணை என்பதாக பகவானும், ' நீங்கள் கவலைப்பட வேண்டாம், உங்களையும் உலகமே கொண்டாடும்படியான நிலை வரும் என்று அனுக்ரஹித்து அனுப்புகிறார். இதன் காரணமாகவே அஷ்டமியில் க்ருஷ்ணராகவும், நவமியில் ராமனாகவும் அவதரித்து அந்த திதிகளுக்கு சிறப்பினை ஈந்தார். ஆகவேதான் புனர்வசு நக்ஷத்திரத்தில் பிறந்தாலும் நாம் சைத்ர மாத, சுக்லபஷ நவமியினை ராம நவமியாக கொண்டாடுகிறோம். இந்த நாளில், நடுப்பகலில், கடகலக்னத்தில் 5 கிரகங்கள் உச்சமாக இருக்கும் நேரத்தில், அயோத்தியில் இராமர் அவதரித்ததார். இந்த திருநாளை உலகம் முழுதும் உள்ள இந்துக்கள் கொண்டாடுகின்றனர். ராம நவமிக்கு முன்பான ஒன்பது நாட்களை கர்ம்போத்ஸவம் என்றும், ராம நவமிக்கு பின்வரும் ஒன்பது நாட்களை ஜனனோத்ஸவம் என்றும் கொண்டாடுகின்றோம். ந்த 18 நாட்களில் ராமாயண பாராயணம், உபன்யாசம் போன்றவை மிகச் சிறப்பாக செய்வர். இன்றைய தினம் ராம ஜனனம் படித்தல் மிகவும் சிலாக்கியம்.

இணையத்திலும் திருமதி வல்லியம்மா அருளச் செய்த சித்ர ராமாயணம் இருக்கிறது, திருமதி கீதாம்மா நடத்தும் ப்ரவசனமொத்த இராமாயண காதைகள் இருக்கிறது. இவற்றை மீண்டும் ஒருமுறை படித்து இராமனருள் வேண்டுவோம்.

சீதா லக்ஷ்மண, பரத சத்ருக்ன ஹனுமத் சமேத ஸ்ரீராமச்சந்த்ர பரபிரும்மணே நம:

Friday, April 11, 2008

இரண்டாம், மூன்றாம், நான்காம் நாள் திருவிழா நிகழ்ச்சிகள்...




ஒவ்வொரு நாளும் வேற வேற அலங்காரம், வாஹனம் மட்டுமல்ல, அன்னையும், அப்பனும் வேறு-வேறு இடங்களில் மண்டகப்படியும் கூட. ஆனால் ஊர்வலம் என்பது மாசி வீதிகளில்தான். படங்கள், நிகழ்ச்சிகள் கீழே.
இரண்டாம் நாள் - ஸ்வாமி பூத வாஹனம், அம்மன் அன்ன வாஹனம்
மூன்றாம் நாள் - ஸ்வாமி கைலாச பர்வதம் , அம்மன் காமதேனு வாஹனம்
நான்காம் நாள் - ஸ்வாமி, அம்மன் இருவரும் தங்கப் பல்லக்கு.
படத்தின் மிது டபிள் க்ளிக் பண்ணி பெரிதாக்கிக் காணலாம்.
சிறப்பான தனிப்படங்களை நண்பர் சிவமுருகன் பதிவில் காணலாம்.



Thursday, April 10, 2008

இந்தாங்க அழைப்பிதழ், மதுரைக்கு போகலாம் வாங்க

மக்களே!

அன்னை மீனாக்ஷி-சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் வருடத்தின் 12 மாதங்களிலும் (10 நாள்) உற்சவங்கள் உண்டு. இந்த உற்சவங்களில் முதன்மையானதும் , தமிழகம் முழுவதும் அறிந்ததுமான சித்திரைத் திருவிழாவிற்கான இந்த வருட அழைப்பிதழ் இங்கே!!!






தினமும் இந்திய நேரப்படி மாலை 7 மணியளவில் மறுநாள் நிகழ்ச்சிகள் படத்துடன் தெரிவிக்கப்படும். :-)