Tuesday, August 19, 2008

திருநெல்வேலி...நவ கைலாசங்கள்... - 1

மதுரைக்கு தெற்கே உள்ள திருத்தலங்கள் என்றாலே நமக்கு நினைவில் வருவது ஸ்ரீ வில்லிப்புத்தூர், ஆழ்வார் திருநகரி, நெல்லையப்பர், தென்காசி, சித்ரசபை எனப்படும் குற்றாலம், கன்யாகுமாரி, ஸ்தானு-மாலையன் வீற்றிருக்கும் சுசீந்திரம், வர்க்கலை ஜகன்னாதன் போன்ற தலங்களே. இவை தவிர நவ திருப்பதி என்று 9 தலங்களைச் சிறப்பாகச் சொல்லுவர். அது போலவே நவ கைலாசம் என்று ஒன்பது சிவஸ்தலங்கங்கள் இருப்பது பலருக்கும் தெரியாது. அதனை பற்றி சுருக்கமாக ஒரு தொடர் எழுத எண்ணம். இவற்றுக்கான மூலமாக நான் கொள்ள இருப்பது அன்புச் சகோதரர்கள் அம்பி-தம்பி வழங்கிய தாமிரவருணி மஹாத்மீயமும் எனது இல்லத்துக்கு அருகில் இருக்கும் ஓர் மூதாட்டியின் வாயிலாக அறிந்ததும்.

திருவாரூரில் பிறந்தால் முக்தி, திருச்சிற்றம்பலத்தை தரிசித்தால் முக்தி, மதுரை வீதிகளில் நடந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பது ஆன்றோர் வாக்கு. இதுபோலவே தாம்ரபர்ணி நதியை தரிசித்தாலோ, நினைத்தாலோ, அதில் ஸ்நானம் செய்தாலோ, அதன் நீரைப் பருகினாலோ எல்லா பாபங்களும் அகலும் என்கிறது தாம்பரணி மஹாத்மீயம். சரி, நவகைலாயம் பற்றி எழுத என்று ஆரம்பித்து இந்த நதி மஹாத்மீயம் எதற்கு என்றால், நவகைலாய க்ஷேத்திரங்கள் பலவற்றிற்கும் தாம்ரவர்ணிக்கும் இருக்கும் தொடர்புதான். இந்நதியின் கரையில் இருக்கும் கோவில்களில் இந்த நவகைலாச தலங்களும் வந்துவிடுகிறது. அது மட்டுமன்றி, மற்ற தலங்களையும் பற்றி அங்காங்கே தொட்டுச் செல்ல எண்ணம். நமது திருநெல்வேலிச் சீமையின் மைந்தர்கள் பலர் இங்கே வருகிறார்கள், அவர்களும் பின்னூட்டத்தில் தமக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

சரி நவகைலாசங்கள் என்பது எந்தெந்த ஸ்தலங்கள் என பார்க்கலாம். பாபநாசம் / பாப விநாசம் சேரன்மாதேவி கோடகநல்லூர் குன்னத்தூர் முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சேந்த மங்கலம் - சேர்ந்த பூ மங்கலம்.


சரி, எப்படி இந்த ஊர்களை மட்டும் நவகைலாசங்கள் என்று கூறுகிறார்கள் இது ஏதும் ஏட்டிக்குப் போட்டியாக வந்த ஸ்தலங்களா? என்பதைமுதலில் பார்த்துவிடலாம்.



ரோமச முனிவர் அப்படின்னு ஒருத்தர். மஹா தபஸ்வி, அகஸ்தியரின் சிஷ்யர். அகஸ்தியரும்-லோபா முத்திரையும் ஹிமவான் மகள் திருமணத்தின் போது வடகோடு உயர்ந்த சமயத்தில் தெற்கே வந்து சமன் செய்த காலத்தில் ரோமச முனிவர் அகஸ்தியரை வணங்கி அவரிடம் உபதேசம் பெறுகிறார். ரோமசரும் தபஸ் பலகாலம் செய்கிறார். ஆனாலும் ஈசனது தரிசனம் கிட்டவில்லை. அப்போது தனது குரு அகஸ்தியரிடமே முறையிட்டு ஈசனின் தரிசனத்துக்கும், முக்திக்குமான வழியை கேட்கிறார். அகஸ்திய முனிவர் சற்றே சிந்தனை வயப்பட்டு பின்னர் ரோமசரிடம், தாமிரபரணி உற்பத்தியாகும் இடத்திற்கு சென்று ஈசனை வழிபட்டு நவகிரஹங்களையும் வழிபடச் சொல்கிறார். அவ்வாறு சொல்லி பின்னர் ஆற்றில் 9 மலர்களை இட்டு, அவை முறையே கரை ஒதுங்கும் இடங்களில் ஈசனது லிங்கங்களை நிறுவி நவகிரஹ வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.

இவ்வாறாக அகஸ்தியரால் நீரில் விடப்பட்ட ஒன்பது மலர்கள் கரை ஒதுங்கிய இடங்களே மேலே சொல்லப்பட்ட 9 சிவ-க்ஷேத்திரங்கள். இவ்விடங்களில் எல்லாம் உமாபதியை வணங்கி தரிசனம் பெற்று முக்தியடைந்தாராம் ரோமசர். மேலே கூறப்பட்டஇந்த க்ஷேத்திரங்கள் முறையே,சூரியன், சந்திரன், செவ்வாய், ராகு, குரு, சனி, புதன், கேது மற்றும் சுக்கிரன் ஆகியவை. இவற்றை பார்க்கையில் தஞ்சையை ஒட்டிய நவக்கிரஹ க்ஷேத்திரங்கள் நம் மனதில் நிழலாடுகிறது. மேலே குறிப்பிடப்பட்ட சிவ ஸ்தலங்களை மேலக்கைலாயங்கள் (முதல் மூன்று), நடுக்கைலாயங்கள் (4,5,6) மற்றும் கீழக்கைலாயங்கள் என்று கூறுகிறார்கள்.


அடுத்து, தாம்ரபரணி நதியின் கதையை பார்க்கலாமா?, இல்லை பாபநாசத்தில் ஆரம்பித்து நவக்கிரஹ க்ஷேத்திரங்களை ஒவ்வொன்றாக பார்க்கலாமா என்பதை பின்னூட்டிச் சொல்லுங்கள், அதன்படி செய்யலாம்.

Thursday, August 14, 2008

ஸ்ரீ ராகவேந்திரர் ஆராதனை..

கலியுகத்தில் 400 வருடங்களுக்கும் மேலாக ஜீவசமாதியில் இருந்து தன்னை அண்டியவர்களுக்கு சகலமும் தந்தருளும் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் ஆராதனை இன்று. அவர் அருளுக்கு இறைஞ்சுவோம். இந்தப் பதிவில் நாம் அறிந்திராத ஒரு மிருத்திகை பிருந்தாவனத்தைப் பற்றி அறிவோம்.
---------------------------------------------------------------------------------------------
கரூர்-மதுரை சாலையில் நன்செய் புகளூர் என்று ஒரு ஊர். பழைமையான காவரிக் கரை கிராமம். நெல்-கரும்பு-வாழை என செழிக்கும் பூமி. 250-300 பேர் வசிக்கும் இந்த கிராமத்தில் ஸ்மார்த்தர்களும், மாத்வர்கள் வசிக்கும் ஆற்றை ஒட்டிய அழகிய அக்ரஹாரத்தில் இருக்கிறது ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் மிருத்திகா பிருந்தாவனம் சுமார் 100 வருடங்களுக்கும் முன்னால் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டது. இங்குள்ள மாத்வ குடுமத்தைச் சார்ந்த பெரியவர்கள் 100 வருடங்களுக்கு முன்னால் நடந்தே மந்திராலயம் அடைந்து, மிருத்திகை கொண்டுவந்து பிரதிஷ்ட்டை செய்யப்பட்ட இடம். அக்ரஹாரத்தில் ஸ்மார்த்த இல்லங்களின் முடிவாக குரு ராகவேந்திரர் கோவில், வெளியே இருந்து பார்க்கும் போது பழையகால ஓடு வேயப்பட்ட ஒரு இல்லம் போன்ற தோற்றம். உள்ளே நுழைந்து இடதுபுறமாக பிரதக்ஷிணமாகச் சென்றால் முதலில் வருவது அனுமன் ஸன்னதி. அனுமனுக்கு வலது புரத்தில், காவிரியை நோக்கியவாறு சுமார் 3 அடி உயரத்தில் காவிரியை நோக்கிய ஒரு அர்த்த மண்டபம் போன்ற ஒரு நீண்ட அமைப்பின் முடிவில் லக்ஷ்மி-நாராயணர் சன்னிதி. அருகில் சிறிய, பிருந்தாவனத்தில் மூல பிருந்தாவனத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மிருத்திகையில் குருராயர் பிரதிஷ்ட்டை, எதிரில் அனுமார் உற்சவ மூர்த்தியாகவும் அருள் பாலிக்கிறார். கோவிலின் உள்ளேயே அழகிய பழங்காலத்து கிணறு. இந்த வளாகம் தாண்டியவுடன், காவிரி நோக்கிச் செல்ல ஒரு சிறு சந்து. அதில் சென்று ஆற்றில் குளித்துவிட்டு நீர் கொண்டுவந்து பெருமாள், அனுமான் மற்றும் குருராயருக்கு பூஜை.

சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்னால் அலுவலகத்தில் பலவித குழப்பங்களில் தத்தளித்த நேரம், மதுரை சென்று உபாகர்மா பண்ணியாச்சு. மறுநாள் காயத்ரி ஜபம் பண்ணிட்டு பெங்களூர் செல்லவேண்டும். மதுரை-பெங்களூர் மார்க்கத்தில் தனியார் பேருந்துகளில் டிக்கெட் இல்லை, பல பேருந்துகள் மாறி-மாறி பெங்களூரை அடைய வேண்டும் என்பதே மனதில் ஒருவிதமான அயற்சியை கொடுத்தது. ஏதோ ஒரு நினைவில் கரூரில் இருக்கும் நண்பனுக்கு போன் செய்து, கரூர்-பெங்களூர் ஏதேனும் தனியார் பேருந்து கிடைக்குமா என்று கேட்கும் போது அவன் குரு ராயர் ஆராதனை பற்றிச் சொல்லி பெங்களூர் செல்லும் வழியில் கரூர் வந்து அங்கே அவனது இல்லத்து கோவிலான குருராயர் பிருந்தாவனத்தில் ஆராதனை பூஜையில் கலந்து கொண்டு பின்னர் இருவருமாக பெங்களூர் செல்லலாம் என்று கூறினான்.

எனக்கும் ஒரு மாறுதல் தேவையான நேரம். காயத்ரி ஜபத்தை காவிரிக் கரையில் பண்ணலாம் என்று அப்போதே கிளம்பினேன். ஊரினுள் நுழைந்த உடன், எனக்கு ஏதோ மிகப் பழகிய இடம் போன்ற உணர்வு. அன்பான வரவேற்பும் அவர்கள் இல்லத்து பிள்ளையை கண்ட பூரிப்புடனும் ஆண்-பெண் எல்லோரும் மகிழ்வுடன் வரவேற்றனர். அந்த இடத்துடன் ஒர் பூர்வஜன்ம உறவு போன்ற உணர்வு. இரவு அங்கு சென்ற சமயத்தில் ஒரு வீட்டின் முன்னே சிறுவர்கள் பாடிக் கொண்டும், விளையாடிக்கொண்டும் இருக்க, பெரியவர்கள் சிறுவர்களது கலை நிகழ்ச்சிகளை ரசித்துச் சிரித்துப் பேசியவாறு இருந்தனர். காலை நிகழ்ச்சிகள் பற்றிப் பேசி பின்னர் பயணக்களைப்புத் தீர நல்ல ஓய்வுக்கு வழி செய்து தந்தனர். காலையில் முதலில் குளித்து அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு பின்னர் 9 மணியளவில் அந்த குடும்பத்தைச் சார்ந்தவர்களுடன் கோவில் சென்று அங்கிருந்து காவிரியில் (நீர் வரத்து இருந்த நேரம்) மீண்டும் நீராடி ராயர் பூஜைக்கு நீர் எடுத்துக் கொண்டு வந்து கோவிலுள் நுழைந்தோம். அந்தோ என்ன ஒரு உணர்வு. இன்றும் எனக்கு உடம்பில் ஒரு சிலிர்ப்பு ஏற்படும் விதமான ஒர் உணர்வு. மனதில் இருந்த குழப்பங்கள், கவலைகள் எல்லாம் ஞாயிறைக் கண்ட பனிபோல் விலகிய ஒர் உணர்வு. நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து வணங்கி சூக்தாதிகள் சொல்லி அபிஷேக ஆராதனைகளைக் கண்ணாரக் கண்டேன். நண்பனது தந்தை அந்த வருட கட்டளை. அவர் என்னை வைத்து என் குடும்பத்தார் பெயரில் அர்ச்சனைகள் செய்வித்து மந்திராக்ஷதை வழங்கினர்.

திரு-வளாகத்தின் ஒரு பகுதியில் சமையல் நடந்து வந்தது. இன்றைய திருமணங்கள் போன்ற பெரிய விழாக்களில் கூட செய்யப்படாத அபூர்வமான பதார்த்தங்கள் எல்லாம் செய்யப்பட்டு, 11 பண்டிதர்கள், வேத விற்ப்பனர்களை சன்னதி முன் அமர்த்தி ராயர் குரு பரம்பரையினராக வரித்து அவர்களுக்கு உணவிட்டு ஜல பாத்திரம், அர்க்கியம் போன்றவை அளிக்கப்பட்டன. அவர்கள் உண்டு எழுந்தபின் அந்த இலைகளில் அங்கிருக்கும் மாத்வ குடும்பத்தவர்கள் மட்டுமல்லாது மற்றவர்களுமாக 100க்கும் மேற்பட்டவர்கள் அங்கப்பிரதக்ஷணம். பின்னர் குளித்து வந்த எல்லோருக்கும் (60-70 உள்ளூர் குடும்பங்கள்) உள்ளீட்ட 300-400 பேருக்கு அறுசுவை உணவு. மீண்டும் பெங்களூர் செல்ல வேண்டும் என்ற போது மனதில் எந்த கவலைகளும், வேலை பளூவும் தோன்றவில்லை. தெளிந்த நீரோடை போன்ற மனது என்பதை அப்போது உணர்ந்தேன். வந்து ஒரு வாரத்தில் அமெரிக்க பயணம். அதுவரை மற்ற தேசங்களில் எல்லாம் கோபால் பல்பொடி விற்ற நான் அமெரிக்காவிலும் விற்க்கத் துவங்கினேன்.

மதுரை, பெங்களூர் என்று பல இடங்களில் ஆராதனையில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தாலும் குரு ராயரின் சான்னித்தியத்தை மந்திராலயத்திற்கு அடுத்தபடியாக இந்த பூகளூரில் தவிர வேறு எங்கும் உணரவில்லை என்பது உண்மை. இவ்வாறாக 3 நாட்கள் ஆராதனை நடைபெறுகிறது. அந்த மஹான் நித்ய வாசம் செய்யும் மந்திராலயத்தில், மட்டுமல்லாது எல்லா மிருத்திகா பிருந்தாவனங்களிலும் சிறப்பான ஆராதனைகள் நடைபெறும். குரு-ராயர் எல்லோருக்கும் அருளட்டும்.

Sunday, August 10, 2008

அபிராமியும், லலிதையும்

எழுதுவதை நிறுத்தலாம் என்று தோன்றி இருவாரங்கள்தான் ஆகிறது. அதற்கு ஏகப்பட்ட பில்டப் வேறு செய்து, பின்னர் இன்று அதையெல்லாம் விட்டு மீண்டும் எழுத உட்கார்ந்துவிட்டேன். என் எண்ணத்தை குறிப்பாக சில நண்பர்களுக்கு மட்டும் தனிமடலில் சொன்னாலும், அவர்கள் எல்லோரும் போனிலும், தனிமடலிலும் எனக்கு பலவித அறிவுரைகள் அளித்து எழுத தூண்டியதென்னமோ உண்மை. ஆனாலும் இந்த விஷயத்தை தலையாய பணியாக கொண்டு என்னை 'இம்சித்து' எழுதச் செய்தது என்று ஒருவரை கை-காண்பிக்க வேண்டுமென்றால் அது கே.ஆர்.எஸ் தான். இன்று பிறந்த நாள் காணும் அவருக்கு வாழ்த்துக்களைக் கூறி, அவருக்கு பிறந்தநாள் பரிசாக இந்த பதிவினை இட முடிவு செய்தேன்.

இந்த இடுகை பலவிதங்களில் முக்கியமாக தோன்றியது. முதலில் இது கே.ஆர்.எஸுக்கு பரிசான இடுகை, இரண்டாவதாக, இது இந்த வலைப்பூவின் 50ஆம் பதிவு. [பலர் 500-600 பதிவுகளுக்கும் மேல் சென்றிருக்க இதென்ன சிறுபிள்ளைதனமோ தெரியல்ல :-)]. கூடலார் எழுதும் அபிராமி அந்தாதி நிறைவு விழாவிற்கு மதுரையம்பதியில் முன்னோட்டம் விடாவிட்டால் எப்படி?. ஆகவே அந்த விதத்திலும் இந்த இடுகை முக்கியம்.

-----------------------------------------------------------------------------------------------
அபிராமி அந்தாதி பாடல்கள் பலவற்றை படிக்கையில் எனக்கு லலிதையின் சஹஸ்ர நாமங்கள் ஆங்காங்கே நினைவில் வந்தது. இன்னும் பலமுறை தொடர்ந்து படிக்க வேண்டும் என்றாலும், ஆங்காங்கே சில பாடல்களுக்கான நாமங்களை மட்டும் இங்கே காணலாம்.

முதலில் "உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கமே" என்கிறார் பட்டர்பிரான். அதாவது ஞானவடிவான அம்பிகை பக்தர்களுக்கு சாரம்/ஞானம் அளித்தவள். ஞானிகளை விசாரதர்கள் என்பது வழக்கம். விஷாரதர் என்றால் உணர்ந்தவர் என்ற பொருளும் உண்டு. லலிதையின் சஹஸ்ர நாமத்தை அளித்த வசினி தேவதைகளை விஷாரதா என்பர். சிருங்கேரியில் அன்னை சாஷாரதையாக இருக்கிறாள். ஆக, சஹஸ்ரநாமத்தில் இருக்கும் சாரதா பட்டர் வாக்கில் உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கமாக வருகிறாள்.

அடுத்ததாக சிந்தூர மேனியள்/வணத்தினள்' என்று அம்பிகையை பாடியிருக்கிறார் பட்டர். இதே 'நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் பிரும்மாண்ட மண்டலா' என்று வருகிறது சஹஸ்ர நாமத்தில். அதாவது, அன்னை தனது அருண வர்ணத்தில் உலகை மூழ்கடிக்கச் செய்பவள் என்று அர்த்தம். அருண வர்ணம் என்பது உதிக்கும் சூரியனின் சிந்தூர நிறம்.

பராசக்தியின் பக்தர்களில் முக்கியமானவர் மன்மதன். அன்னையை வணங்கும் பக்தர்களை குறிப்பிடும்படியாக 'மஹேச-மாதவ-விதாத்ரு-மன்மத-ஸ்கந்த-நந்தி-இந்திர-மனு-சந்திர-குபேர-அகஸ்திய-க்ரோத-பட்டாரக வித்யாத்மிகாயை' என்பதாக ஒரு நாமம் உண்டு. இதில் த்ரிமூர்த்திகளுக்கு அடுத்தபடியாக மன்மதனுக்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மன்மதனுக்கு பிறகுதான் ஸ்கந்தன் இந்திரன், குபேரன் எல்லாம். இதையே பட்டர் ''காமன் முதல் சாதித்த புண்ணியர்' என்று கூறுகிறார்.

"சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்பட்டு" என்பது அந்தாதி கூறும் அன்னையின் உடை. அதாவது சிறிய இடையினில் கட்டப்பட்ட பட்டு என்கிறார். இதை சஹஸ்ரநாமத்தில், 'அருணாருண கெளஸும்ப வஸ்த்ர பாஸ்வத் கடீதடீ' என்ற நாமம் கூறுகிறது. அருணகிரணம் போன்ற சிவப்புப் பட்டு வஸ்தரத்தை இடையில் அணிந்தவள் என்பது பொருள்.

'பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளி' என்கிறார் பட்டர் இங்கே. அதாவது அம்பிகையின் குரலினிமையில் தோன்றியதுதான் பண் என்பது பொருள். வாக்தேவதைகள் அன்னையின் குரலினிமையை 'நிஜஸல்லாப மாதுர்ய விநிர்பர்த்ஸித கச்சபி' என்று கூறுகிறார்கள். கலைமகள் கையில் இருக்கும் வீணையின் பெயர் கச்சபி. அந்த வீணையின் நாதத்தை பழிக்கும் மதுரமான குரலுடையவள் அம்பிகை என்கின்றனர்.

'பவாரண்ய குடாரிகா' என்பது அம்பிகையின் நாமம். பவம் என்னும் சம்சார காட்டில் இருந்து நம்மை வெட்டி தன்னகத்தே சேர்ப்பவள் என்று பொருள். சம்சாரத்தில் எப்படி நாம் உழல்கிறோம்?. ஒவ்வொரு ஜன்மத்திலும் தாயின் வயிற்றில் பிறப்பதால் தானே சம்சார பந்தம்?. இதையே பட்டர் 'தாயர் இன்றி மங்குவர் வழுவாப் பிறவியை' என்கிறார் இங்கே.

'சர்வமங்களா' என்பது அன்னையின் இன்னொரு நாமம், மங்கலப் பொருள்கள் எல்லாமாக இருப்பவள் அம்பிகை என்பதே இதன் பொருள். இதையே பட்டர் 'மங்கலை, பூரணாசல மங்கலை' என்று இங்கே கூறியிருக்கிறார்.
------------------------------------------------------------------------------------------------
இப்படியாக இன்னும் எழுதலாம், மணி அதிகாலை 3.00 ஆகிறது, காலை எழுந்து 'அனுஷ்டானங்கள்' இருப்பதால் இந்த இடுகையினை இத்துடன் முடிக்கிறேன். மேலே உள்ள எட்டு நாமங்களுக்கான பாடல்களை குமரன் பதிவில் உள்ள இடுகைகளுக்கான லிங்க் தர வேண்டும். அதனை பின்னர் செய்கிறேன்.

பிறந்தநாள் கொண்டாடும் கே.ஆர்.எஸுக்கும், அம்பிகையின் அலங்கார மாலையாகிய அந்தாதியை சிறப்பாக அளித்த குமரனுக்கும் அன்னை பராசக்தி, அபிராமி சகல செளபாக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் அருள வேண்டுகிறேன்.