Wednesday, January 13, 2010

மார்கழி மஹோத்ஸவம் - 7 (கோதாஸ்துதி கடைசிப் பகுதி)



ரங்கே தடித்குணவதோ ரமயைவ கோதே
க்ருஷ்ணாம்புதஸ்ய கடிதாம் க்ருபையா ஸுவ்ருஷ்ட்யா
தெளர்கத்ய துர்விஷ விநாச ஸுதாநதீம் த்வாம்
ஸந்த: ப்ரபத்ய சமயந்த்யசிரேண தாபாந்

கோதே!, ஸ்ரீரங்கத்திலிருக்கும் பெருமாளே கார்முகிலோன், தாயார் ரங்கநாயகியோ மின்னல்கொடி போன்றவள். இவ்விருவரின் கருணை மழையில் தோன்றும் நதியாக நீ இருந்து, ஸம்ஸாரமென்னும் கொடிய விஷத்தை அழிக்கிறாய். இதனால்தான் ஸாதுக்கள் உன்னைச் சரணடைந்து தங்களது ஸம்ஸார தாபங்களைப் போக்கிக் கொள்கிறார்கள்.

ஜாதாபராதமபி மாமநுகம்ப்ய கோதே
கோப்த்ரீ யதி த்வமஸி யுக்தமிதம் பவத்யா:
வாத்ஸல்ய நிர்ப்பரதயா ஜநநீ குமாரம்
ஸ்தந்யேந வர்த்தயதி தஷ்ட பயோதராபி

குழந்தைக்கு பாலுட்டும் போது குழந்தை தாயின் கொங்கையைக் கடித்தாலும், சினம் கொள்ளாது பால் கொடுப்பது இயற்கை. அதுபோல, நான் பலவிதமான அபராதங்களைச் செய்திருந்தாலும், நீ அருள் சுரந்து எனது அபராதங்களைப் பொருட்படுத்தாது காத்தருள்கிறாய் ஆகவே நீ எனக்குத் தாயே!.


சதமக மணிநீலா சாரு கல்ஹர ஹஸ்தா
ஸ்தநபர நமிதாங்கீ ஸாந்த்ர வாத்ஸல்ய ஸிந்து:
அளகவிநிஹிதாபி: ஸ்ரக்பி ராக்ருஷ்ட நாதா
விலஸது ஹ்ருதி கோதா விஷ்ணுசித்தாத்மஜா ந:


இந்திர நீலமணிபோல நீல நிறமுடையவளாக, அழகிய செங்கழுநீர்ப்பூவை கையில் தரித்தவளாய், கொங்கைகளின் சுமையால் வளைந்த திருமேனியுடன், மிகுந்த அன்பினைக் கடலாகக் கொண்டு, தனது கூந்தலில் சூடிய திருமாலைகளால் நாயகனை வசப்படுத்திய விஷ்ணுசித்தரின் புதல்வியான கோதை நமது உள்ளத்தில் விளங்க வேண்டும்.



இதி விகஸித பக்தேருத்திதாம் வேங்கடாசாத்
பஹுகுண ரமணீயாம் வக்தி கோதாஸ்துதிம் ய:
ஸ பவதி பஹுமாந்ய: ஸ்ரீமதோ ரங்கபர்த்து:
சரண கமல ஸேவாம் சாச்வதீ மப்யுபைஷ்யந்

மலர்ந்த பக்தியையுடைய வேங்கடேச கவியிடமிருந்து தோன்றிய பலவிதங்களிலும் அழகியதான இந்த கோதா ஸ்துதியை யார் சொல்லுகிறார்களோ அவர்களுக்கு மஹாலக்ஷ்மியைப் பிரியாத ஸ்ரீரங்க ராஜனுடைய நித்யமான திருவடித் தாமரைகளின் கைங்கர்யத்தை பெறும் மதிப்புக்கு உரியவனாகிறான்.

இத்துடன் கோதா ஸ்துதி முடிவுக்கு வருகிறது. மார்கழியும் தான். எல்லோருக்கும் மகர சங்கராந்தி நல்வாழ்த்துக்கள்.

Monday, January 11, 2010

மார்கழி மஹோத்ஸவம் - 6 (கோதாஸ்துதி)


ரங்கேச்வரஸ்ய தவ ச் ப்ரணயாநுபந்தாத்
அந்யோந்ய மால்ய பரிவ்ருத்தி மபிஷ்டுவந்த:
வாசாலயந்தி வஸுதே ரஸிகாஸ் த்ரிலோகீம்
ந்யூநாதிகத்வ ஸமதா விஷயைர் விவாதை:

பூமிதேவியின் அம்சமான கோதே!, ரங்கேஸ்வரனுக்கும் உனக்கும் இருந்த காதலின் தொடர்ச்சியாக உங்களது திருமணத்தின் போது மாலை மாற்றிக் கொண்டிருப்பீர்கள். இன்றும் அந்த வைபவத்தை பேசும் போது சிலர் உன்னை உயர்த்தியும், சிலர் உன் மணாளனை உயர்த்தியும், சிலர் நடுநிலையாகவும் பேசுகின்றனர். இவ்வாறு அவர்கள் ஆர்வத்துடன் பேசுவது மூவுலகிலும் ஒலிக்கச் செய்கிறது.

தூர்வாதள ப்ரதிமயா தவ தேஹ காந்த்யா
கோரோசநா ருசிரயா ச ருசேந்திராயா:
ஆஸீதநுஜ்ஜித சிகாவள கண்ட்ட சோபம்
மாங்கள்யதம் ப்ரணமதாம் மதுவைரிகாத்ரம்

அருகம்புல் போன்ற உனது திருமேனியின் காந்தி/ஒளியும், கோரோசனை போன்ற அழகிய திருமேனியொளி கொண்ட மஹாலக்ஷ்மியின் ஒளியும், அடிபணிபவர்களுக்கு என்றும் நன்மை தரவல்ல பெருமாளுடைய திருமேனியை மயில் கழுத்தின் காந்தியை உடையாதாக ஆகியிருக்கிறது. பெருமாளது கருமுகில் போன்ற ஒளிமிகுந்த திருமேனியைக் கண்ணால் கண்டு அவனடி பணிபவர்களுக்கு அத்திருமேனி எல்லா நலன்களையும் தரும். கோதையின் நிறத்தை அருகம்புல் நிறமாகவும், பெருமாளது வக்ஷஸ்தலத்தில் உறையும் அன்னையின் திருமேனியின் நிறத்தை கோரோசனைக்கு ஒப்பாகவும் கூறி, இவ்வாறாக திருமகளும், கோதையும் பெருமாளைச் சூழ்ந்திருக்கையில் அவரது கருமுகில் வண்ணம் மயில் கழுத்தின் நிறத்தை அடைவதாகச் சொல்லியிருக்கிறார் ஸ்ரீதேசிகர்.

அர்ச்ச்யம் ஸமர்ச்ச்ய நியமைர் நிகம ப்ரஸுநை:
நாதம் த்வயா கமலாய ச ஸமேயிவாம்ஸம்
மாதச் சிரம் நிரவிசந் நிஜ மாதிராஜ்யம்
மாந்யா மநு ப்ரப்ருதய: மஹீக்ஷிதஸ் தே

தாயே!, மதிப்புக்கு உரிய மநு போன்ற அரசர்கள், உன்னோடும் மஹாலக்ஷ்மியுடனும் கூடி நின்றவாறு இருக்கும் உனது நாயகனை நியமங்களான ஆகமங்களில் கூறப்பட்டிருக்கும் புஷ்பங்களால் நன்கு ஆராதித்து
தங்களுடைய அரசாக்ஷியை நீண்டகாலம் அனுபவித்தனர்.

ஆர்த்ராபராதிநி ஜநேப்யபிரக்ஷணார்த்தம்
ரங்கேச்வரஸ்ய ரமயா விநிவேத்யமாநே
பார்ச்வே பரத்ர பவதீ யதி தத்ர நாஸீத்
ப்ராயெண தேவி வதநம் பரிவர்த்திதம் ஸ்யாத்

தேவி, ஜனங்கள் தொடர்ந்து பாபங்களைச் செய்துவந்தாலும், அவர்களைக் காக்கும் பொருட்டு மஹாலக்ஷ்மியானவள் திருவரங்கனிடத்து எப்போதும் விண்ணப்பம் செய்தவாறு இருக்கிறார். அப்போது அவ்விண்ணப்பத்தை தவிர்க்க பெருமாள் இன்னொருபக்கம் திரும்புவானாகில் அப்பக்கத்தில் மஹாலக்ஷ்மியைவிட கருணை நிறம்பிய நீ இருப்பதால், பாபம் செய்த ஜனங்களையும் காப்பதைத் தவிர பெருமாளுக்கு வேறு வழியேது?.

கோதே குணைரபநயந் ப்ரணதாபராதாந்
ப்ருக்ஷேப ஏவ தவ போக ரஸாநுகூல:
கர்மாநுபந்தி பல தாந ரதஸ்ய பர்த்து:
ஸ்வாதந்தர்ய துர்வ்யஸந மர்மபிதா நிதாநம்

ஜனங்கள் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ற பலனை அளிப்பவன் உனது நாயகன். நீயோ, பாபங்கள் பல செய்தவரையும் காப்பதில் உறுதியாக இருக்கிறாய். பாபங்கள் செய்தவர்களஒ தண்டனையிலிருந்து காக்கும் பொருட்டு உனது நாயகனை நோக்கி உனது புருவங்களை போகச் சுவையுடன் நெறிப்பதன் மூலமாக பெருமாள் தனது சுதந்திரமான உயிர்நிலைச் செயலையும் மறந்து எல்லோரையும் (பாப கர்மங்கள் செய்தவரையும்) ரக்ஷித்துவிடுகிறார்.

Friday, January 8, 2010

மார்கழி மஹோத்ஸவம் - 5 (கோதாஸ்துதி)



விச்வாயமாந ரஜஸா கமலேந நாபெள
வக்ஷ:ஸ்த்தலே ச கமலா ஸ்தந சந்தநேந!
ஆமோதித:-அபி நிகமைர் விபுரங்க்ரி யுக்மே
தத்தெ நதேந சிரஸா தவ மெளளிமாலாம் !!

உலகங்களை ஆளுகின்ற பிரபுவின் நாபியிலிருக்கும் கமலத்தின் மணமும், அவனுடைய திருமார்பில் வசிக்கும் மஹாலக்ஷ்மியின் திருமுலையில் சாற்றப்பட்டிருக்கும் சந்தன மணமும் அவனை மணக்கச் செய்கின்றன. வேதங்கள் அவனுடைய திருவடியைப் பற்றியே பேசி அவனது திருவடிகளை மணக்கச் செய்கின்றன. இவ்வாறாக இறைவனது திருமேனி முழுவதும் மணமிகுந்து இருந்தாலும், அதனால் திருப்தியில்லாது அவற்றை எல்லாம் விஞ்சச் செய்யும்படியான உயர்ந்த பரிமளத்தைப் பெறுவதற்காகவே நீ சூடிக் கொடுத்த திருமாலைகளை தலையில் தரித்து பரிமளம் நிறைந்து காக்ஷியளிக்கிறான்.


சூடா பதேந பரிக்ருஹ்ய தவோத்தரீயம்
மாலாமபி த்வதளகை ரதிவாஸ்ய தத்தாம்!
ப்ராயேண ரங்கபதிரேஷ பிபர்த்தி கோதே
செளபாக்ய ஸம்பதபிஷேக மஹாதிகாரம் !!


கோதே!, உன்னுடைய மேலாடையையும், உன் தந்தையால் செய்யப்பட்டு, உன் குழற்கற்றையில் நீ அணிந்த மலர்மாலையையும் ஆர்வத்துடன் சூடிக் கொள்கிறான் ஸ்ரீரங்க ராஜன். மங்கள ஸ்வரூபனாக இருக்கும் அவன், உனது மேலாடை மற்றும் மலர் மாலையை அணிவதாலேயே மங்களத்தை அருளும்
பெருமையைப் பெறுகிறான். இதன் காரணமாகவே அவன் ரங்க ராஜனாக முடிசூடுவதற்கு வேண்டிய தகுதியைப் பெறுகிறான்.


துங்கை ரக்ருத்ரிமகிர: ஸ்வயமுத்தமாங்கை:
யம் ஸர்வகந்த இதி ஸாதர முத்வஹந்தி!
ஆமோத மந்யமதிகச்சதி மாலிகாபி:
ஸ:அபி த்வதீய குடிலாளக வாஸிதாபி:!!


வேதங்கள் யாராலும் இயற்றப்படாத நித்யமானது. அவ்வேதங்களின் உயந்த முடிகளான உபநிஷதங்கள் பெருமாளை எல்லா நறுமணங்களும் நிறம்பியவன் என்று ஆதாரத்துடன் கூறுகின்றன. அப்படிப் புகழப்பட்ட பெருமாள், உன்னுடைய சுருண்ட கூந்தலில் சூடப்பட்ட மலர் மாலையை அணிந்து ஒப்புயர்வற்ற அற்புத மணத்தை அடைகிறான். இவ்வாறான அளவிட முடியாத ஆனந்த மணமானது கோதை சூடிக் கொடுத்த மாலையால் அல்லவோ பெருமாளுக்கு கிடைக்கிறது?.


தந்யே ஸமஸ்த ஜகதாம் பிதுருத்தமாங்கே
த்வந்மெளளி மால்யபர ஸம்பரணேந பூய:!
இந்தீவர ஸ்ரஜமிவாதததி த்வதீயாநி
ஆகேகராணி பஹுமாந விலோகிதாநி!!


கோதே!, எல்லா உலகிற்கும் தந்தையானவன் பெருமாள். உனது மாலையை அவன் தனது திருமுடியில் சூடிக் கொள்வதால் அவனது அன்பினை கண்டு ஆனந்தித்து பெருமதிப்புடன் அவனை அரைக்கண்ணால் காண்கிறாய் நீ.அவ்வாறு நீ உனது கண்களால் அவனைப் பார்ப்பது பெருமாளுக்கு கருநெய்தல் மலர்களால் இன்னுமொரு மாலையை அவனுக்கு அணிவித்தது போல காக்ஷி தருகிறது.

***ஸ்துதி தொடரும்***