Tuesday, May 26, 2009

மஹா ரூபா, மஹா மாயா, மஹா சக்தி..


கடந்த சில மாதங்களில் அன்னையின் ஆயிரம் நாமங்கள் என்னும் லேபிளில் எழுதிவந்த தொடரை எழத வாய்ப்பு ஏற்படவில்லை. இதனைத் மீண்டும் இன்று தொடர கவிநயாக்காவின் தூண்டுகோலே காரணம், அவருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நாம் அன்னையின் எட்டு நாமங்களைப் பார்க்கலாம்.

"உந்மேஷ நிமிஷோத்பந்த விபந்த புவனாவளி" என்று ஒரு நாமம். உந்மேஷம் என்றால் கண்களை திறத்தல், நிமேஷம் என்றால் கண்களை மூடுதல், புவனாவளி என்பது வரிசையான பல உலகங்கள். அதாவது, அன்னை தனது கண்களைத் திறந்து-மூடுவதன் மூலம் உலகங்களைப் படைத்தும் அழித்தும் வருகிறாள் என்பது பொருள்.

மனிதர்களாகிய நமக்கு கண்களைக் கொட்டுதல், அதாவது கண்களால் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு முறை கண்களை மூடித் திறப்பது இயல்பு. ஆனால் தேவர்களுக்கு இது போன்ற இயல்பு கிடையாதாம். இந்த மாதிரி இயற்கையான கட்டுப்பாடுகள் இல்லாதவள் அம்பிகை. அவள் எப்போதோ ஒரு முறை கண்களை மூடித் திறக்கும் நேரத்திலேயே ப்ரளயமும், மீண்டும் உலகங்களின் ஆக்கமும் நடத்தி அருள்கிறாள் என்பதாகப் பொருள். இந்த நாமாவளியைத்தான் "பூத்தவளே புவனம் பதினான்கையும்" என்று அபிராமி அந்தாதியில் பட்டர் கூறுகிறார் போல. இதை ஆதி சங்கரரும் செளந்தர்ய லஹரியில் சொல்லியிருக்கிறார்.

இதே போன்ற இன்னொரு நாமம் "ஆ ப்ரம்ஹ கீட ஜநநீ" - பிரம்மன் முதலாக பல நுண்ணுயிர்களை பெற்றவள் என்பது பொருள். ஜநநீ என்றால் பெற்றவள் என்று சொல்லலாம். உலகத்தில் இருக்கும் உயிர்களைப் படைப்பவன் பிரம்மா. அந்த பிரம்மாவையும்,கீடம் என்று சொல்லப்படும் நுண்ணுயிர்களையும் படைப்பவள். உலகனைத்தையும் படைக்கும் பிரம்மாவிலிருந்து நுண்ணுயிர்கள் வரையில் எல்லாவற்றையும் படைப்பவள் அன்னை என்று கூறலாம்.

அன்னையின் கண்களைக் குறிப்பிடும் இன்னொரு நாமம் 'மஹாகாமேச நயன குமுத ஆஹ்லாத கெளமுதீ'. மஹா காமேசன் என்றழைக்கப்படும் ஈசனின் அல்லி போன்ற கண்களை மலரச் செய்யும் கார்காலத்து நிலவாம் அன்னை. கார்த்திகை மாதத்து முழுநிலவுக்குப் பெயர் கெளமுதீ. நிலவு எப்போதுமே குளிர்ச்சி தருவதுதான், இதில் கார்காலமான கார்த்திகையில் அதன் குளிர்ச்சி, முழுமை இன்னும் சிறப்பாக இருக்கும் என்று அதை அன்னையின் கண்களுக்கு உவமையாகச் சொல்லியிருக்கிறார்கள் வசினி தேவதைகள்.

'தாப த்ரய அக்நி ஸந்தப்த ஸமாஹ்லாதந சந்த்ரிகா' - தாப த்ரயம் என்பது மூன்று விதமான இடர்களைக் குறிக்கும். முன்வினையால் விளையும் துன்பமாகிய 'ஆதியாத்மிகம்', இப்பிறப்பில் பிற உயிர்களால் விளையும் துன்பமாகிய 'ஆதிபெளதிகம்'மற்றும் 'ஆதிதெய்விகம்' எனப்படும் இயற்கைச் சீற்றங்கள் போன்றவை நம்மை வருந்தச் செய்பவை. இந்த மூன்றிலிருந்தும் காக்கும் குளிர் நிலவாம் அம்பிகை. இதத்தான் அபிராமி பட்டர், 'அல்லலெல்லாம் தீர்க்கும் திரிபுரையாள்' என்பார். இதே போல 'பிணிக்கு மருந்தே' என்றும் 'அபிராமி என்னும் அருமருந்தே' என்றும் அபிராமி பட்டர் கூறுவதற்கு ஏற்ற நாமம் 'ஸர்வ வியாதி ப்ரசமநீ' என்பது. எல்லா வியாதிகளையும் தீர்க்கும் அரு-மருந்தானவளாம் அம்பிகை.

"மஹா ரூபா", "மஹா மாயா", "மஹா சக்தி" என்று மூன்று நாமங்கள். மஹா ரூபா என்றால் பெரிய ரூபம், மஹத் ரூபம் என்பது பொருள். அணு பரிமாணம், மத்ய பரிமாணம், மற்றும் மஹத் பரிமாணம் என்பதில் இறை சக்திக்கு மட்டுமே அணு மற்றும் மஹத் பரிமாணங்கள் சாத்தியம். மற்றபடி உலகில் இருக்கும் எல்லாம் மத்ய பரிமாணம் என்ற சொல்லில் அடங்கக்கூடியது. விஸ்வரூப தரிசனத்தில் சகல லோகங்களையும் அன்னை தன்னகத்தே கொண்ட அந்த ரூபத்தை மஹா ரூபா என்று கூறுவது சரிதானே?

மாயை என்பது இல்லாததை இருப்பது போல தோன்றச் செய்வது. இவ்வாறான மாயைகளுக்கு எல்லாம் மாயையாக இருப்பவள் பராம்பிகை, ஆகவே மஹா மாயா. இந்த மஹா மாயாவே, மகமாயி என்றும் சொல்லப்படுகிறவள். க்ருஷ்ணாவதாரத்தில் ஜனனத்தின் போது வசுதேவரால் சிறைச்சாலையில் மாற்றி வைக்கப்பட்ட பெண் குழந்தை இந்த மாயாவே. அதனால்தான் கம்சன் அக்குழந்தையைக் கொல்ல எத்தனிக்கும் போது மறைந்து அவனுக்கு எச்சரிக்கை செய்கிறாள். சங்கீத மூம்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷதர் தமது பாடல்கள் பலவற்றில் அன்னையை 'மாயே!' என்று விளித்துள்ளதைப் பார்க்கலாம்.

ஈரேழு உலங்களையும் படைத்து, காத்து ரக்ஷ்க்கும் அவளை மஹாசக்தி என்று வசினி தேவதைகள் கூறுவதில் வியப்பொன்றும் இல்லை. ஈசனுக்கே சக்தியாக இருப்பவள் மஹா சக்தி தானே?. இதைத்தான் தேவி பாகவதத்தில் "சிவோபிசவதாம் யாதி குண்டலின்யா' என்பதாக, அதாவது சக்தியிழந்த சிவனும் சவமாகிறான் என்பதான அர்த்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

அவளருளால் அவளை வணங்குவோம், அருள இரைஞ்சுவோம்.

Thursday, May 7, 2009

நரஸிம்ஹ ஜெயந்தி - சிறப்புப் பதிவு-2

இந்தப் பதிவின் தொடர்ச்சி இது. ஸ்வாதி நக்ஷத்திரத்தினை ஜெயந்தி தினமாகக் கொண்டால் நாளையும், சதுர்தசியைக் கொண்டால் ப்ரதோஷ காலத்தில் இன்றுமாகக் கொண்டாடப்படும் ஸ்ரீ நரஸிம்ஹரது அருளை வேண்டுவோம்.

இங்குள்ள படங்கள் பலவும் திரு. கைலாஷி ஐயா அவர்கள் தமது பதிவில் இட்டவை. அவருக்கு எனது நன்றிகளை இங்கே கூறிக் கொள்ளுகிறேன்.




ஸம்ஸார-ஸாகர விஸால கரால கால
நக்ரக்ரஹ-க்-ரஸந நிக்ரஹ விக்ரஹஸ்ய
வ்யக்ரஸ்ய ராக நிசயோர்மி-நிபீடிதஸ்ய
லக்ஷ்மி நரஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

வாழ்க்கை என்னும் கடலில் பரந்த அச்சுறுத்திம் காலமென்னும் முதலைகளால் பிடிக்கப்பட்டு விழுங்கப்படும் உடலை உடையவனும், பலவிதமான கவலை உள்ளவனும், ஆசைகள் என்னும் அலைகளால் அலைக்கழிக்கப்படுபவனுமான எனக்கு லக்ஷ்மியுடன் கூடிய நரஸிம்ஹனே!, நீயே கை கொடுத்து அருள வேண்டும்.


ஸம்ஸார ஸாகர நிமஜ்ஜந முஹ்யமானம்
தீநம் விலோகய விபோ! கருணாநிதே! மாம்
ப்ரஹ்லாத கேத பரிஹார க்ருதாவதார!
லக்ஷ்மி நரஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

மிக்க வலிமை உள்ளவரே!, கருணையுள்ளவரே!, பிரஹலாதனின் கஷ்டத்தைப் போக்க அவதரித்தவரே!, வாழ்க்கை என்னும் கடலில் மூழ்கி மயக்கமுறும் என்னை தங்கள் கடைக்கண் பார்வையால் அருள வேண்டும். லக்ஷ்மி நரஸிம்ஹரே!, எனக்குக் கை கொடுத்தருள வேண்டும்.


ஸம்ஸார-கோர கஹநே சரதோ முராரே!
மரோக்ர-பீகர-ம்ருக ப்ரவரார்தி தஸ்ய
ஆர்த்தஸ்ய மத்ஸர நிதாக-நிபீடிதஸ்ய
லக்ஷ்மி நரஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

வாழ்க்கையெனும் அச்சுறுத்தும் காட்டில் திரிகின்றவனும், விலங்குகளில் சிறந்த சிங்கம் போன்ற பயம் தரும் காமனால் பீடிக்கப்பட்டு துன்பம் கொண்டிருப்பவனும், பொறாமை என்ற கோடையால்வருந்துபவனுமான எனக்கு, முரனை வென்ற லக்ஷ்மியுடன் கூடிய நரஸிம்ஹா, நீயே கை கொடுத்து அருளவேண்டும்.

பத்வாக லே யமபடா பஹு தர்ஜயந்த:
கர்ஷ்ந்தி யத்ர பவ பாச சதையுதம் மாம்
ஏகாகிநம் பர வஸம் சகிதம் தயாளோ!
லக்ஷ்மி நரஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

இரக்கமுடையவனே!, வாழ்க்கையில் நூற்றுக்கணக்கான பாசங்களால் சூழப்பட்ட என்னை யமனின் சேவகர்கள் கழுத்தில் பாசக்கயிற்றைக் கட்டி மிகவும் அதட்டி எங்கோ இழுத்துச் செல்கிறார்கள். நான் தனியாக, அவர்களது வயப்பட்டவனாக இருக்கிறேன். ல்க்ஷ்மி நரஸிம்ஹா, நீயே எனக்கு கை தந்தருள வேண்டும்.


லக்ஷ்மிபதே! கமலநாப! ஸுரேச! விஷ்ணோ!
வைகுண்ட! க்ருஷ்ண! மதுஸுதன!புஷ்கராக்ஷ!
ப்ரஹ்மண்ய! கேசவ! ஜனார்தந! வாஸுதேவ!
தேவேச! தேஹி க்ருபணஸ்ய கராவலம்பம்.

லக்ஷ்மியின் நாயகனே!, தொப்புளில் தாமரையைக் கொண்டவனே!, தேவர்களின் தலைவனே!, எங்கும் வியாபித்திருப்பவனே!, வைகுண்ட வாசா!, க்ருஷ்ணா!, மது என்ற அரக்கனைக் கொன்றவனே!,தாமரைக் க்ண்ணனே!, பிரம்மனே!, கேசி என்ற அரக்கனைக் கொன்றவனே!, துஷ்டர்களைக் களைந்து ஜனங்களைக் காப்பவரே!, வஸுதேவர் மைந்தனே!, தேவர்களின் தலைவா!, கருணையுடன் எனக்கு கைகளைத் தந்தருளுவாயாக.

ஏகேந சக்ரமபரேண கரேண ஸங்கம்
அன்யென ஸிந்து-தனயா மவலம்ப்ய திஷ்ட்டன்
வாமேதரேண வாதாபய பத்ம-சிஹ்ணம்
லக்ஷ்மி நரஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

ஒரு கையில் சக்ரத்தையும், மறுகையில் சங்கத்தையும், இன்னொரு கையில் மஹாலக்ஷ்மியை அணைத்துக் கொண்டும், வலது கையால் வரமளித்துக் கொண்டும் இருக்கும் லக்ஷ்மியுடன் கூடிய நரஸிம்ஹப் பெருமாளேஎனக்குக் கை கொடுத்தருள வேண்டும்.


அந்தஸ்ய மே ஹ்ருத விவேகமஹாத நஸ்ய
சோரை:ப்ரபோ பலிபிரிந்தரிய நாமதேயை:
மோஹாந்த கூப குஹரே விநிபாதிதஸ்ய
லக்ஷ்மி நரஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

புலன்கள் என்னும் பெயரிலிருக்கும் வலிமையான திருடர்களால், குருடாகியிருக்கும் எனது அறிவு என்னும் செல்வம் கவரப்பட்டு, மோஹம் என்னும் பாழும் கிணற்றில் தள்ளப்பட்ட எனக்கு கருணையுடன் கை கொடுத்தருள்வாய் லக்ஷ்மி நரஸிம்ஹா.


ப்ரஹ்லாத-நாரத-பராசர புண்டரீக
வ்யாஸாதி பாகவத புங்கவ ஹ்ருந்நிவாஸ
பக்தாநுரக்த பரிபாலந பாரிஜாத!
லக்ஷ்மி நரஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

பிரஹலாதர், நாரதர், பராசரர், புண்டரீகர், வியாஸர் போன்ற சிறந்த பக்தர்களது இதயத்தில் வாசம் செய்பவரே!, பாரிஜாத மரம் போன்று பக்தர்களைப் பரிவுடன் காப்பவரே!, லக்ஷ்மியுடன் கூடிய நரஸிம்மா!, எனக்குக் கை கொடுத்து அருளவேண்டும்.



லக்ஷ்மி-ந்ருஸிம்ஹ-சரணாப்ஜ மதுவ்ரதேந
ஸ்தோத்ரம் க்ருதம் ஸுபகரம் புவி ஸங்கரேண
யே தத் படந்தி மநுஜா: ஹரிபக்தியுக்தா:
தே யாந்தி தத்பத ஸரோஜமகண்ட ரூபம்.

லக்ஷ்மியுடன் கூடிய நரஸிம்ஹப் பெருமானின் திருவடித்தாமரையில் அமர்ந்த தேனீ போன்ற சங்கரரால், இப்புவியில் நன்மை தரும் இந்த ஸ்தோத்ரம் அருளப்பட்டது. யாரெல்லாம் மஹாவிஷ்ணுவிடத்து பக்தி உடையவர்களாக, இந்த ஸ்தோத்ரத்தைப் படிக்கின்றனரோ, அவர்கள் இன்பமயமான அந்தத் திருவடித் தாமரையை அடைவார்கள்.

பூமி, நீளா சமேத ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹ பரப்ரம்மணே நம:

------------லக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்பம் ஸம்பூர்ணம்--------------


Tuesday, May 5, 2009

நரஸிம்ஹ ஜெயந்தி - சிறப்புப் பதிவு-1

நாளை, 07/05/09 அன்று ஸ்ரீ நரஸிம்ஹ ஜெயந்தி. ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் நரஸிம்ஹ அவதாரம் நாம் அறிந்ததே!. ஹிரண்ய கசிபு தனது மரணம் பற்றி பிரம்மாவிடம் கேட்ட வரத்தில், மனிதர்களாலும், தேவர்களாலும், மிருகங்களாலும்,பகலிலும், இரவிலும், விதானம் அமைந்த இல்லம் போன்ற அமைப்பின் உள்ளேயோ அல்லது வானம் பார்த்த பூமியிலோ,போர்ப் படைக்கலன்களாலோ மரணம் சம்பவிக்கக் கூடாது என்று கேட்கிறான். பிரம்மாவும் அவ்வாறான வரத்தை அளிக்கிறார்.


இதன் காரணமாகவே நரஸிம்ஹ அவதாரத்தில் மஹாவிஷ்ணு மனித ரூபமோ, தேவ ரூபமோ இன்றி கழுத்துக்கு மேலே சிங்க முகமும், கழுத்துக்கு கீழே நர (மனித) உருவமும் கொண்டு, வைகாச மாத சுக்ல பக்ஷ சதுர்தசியன்று,ஸ்வாதி நக்ஷத்திரத்தில்,காலையும் அல்லாது, இரவும் அல்லாத மாலை நேரத்தில் தோன்றி, தமது கரத்தில் இருக்கும் நகங்களையே ஆயுதமாகக் கொண்டு மாளிகையின் உள்ளும் இல்லாது வெளியிலும் இல்லாது நிலைவாசலில் ஹிரண்ய கசிபுவை ஸம்ஹரித்தார். தசாவதாரங்களில் இது மிகவும் குறுகிய காலத்தில் நிகழ்ந்த அவதாரம் என்பர். இந்த அவதாரமே பரமசிவனின் சரபேஸ்வர அவதாரத்திற்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

நாரத புராணத்தில் நரஸிம்ஹ அவதாரம் பற்றிச் சொல்கையில், நரஸிம்ஹ ஜெயந்தியன்று மாலை புண்யமான இந்த அவதாரம் பற்றி ச்ரவணம் செய்து பூஜை செய்து நமஸ்கரிப்பவர்களுக்கு அனைத்துப் பாபங்களும் விலகி நன்மை உண்டாகும் என்றும் மனோ தைரியமும்,தெளிவான ஞானமும், விரோதிகளிடத்து வெற்றியும் கிட்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நாமும் ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை இந்த புண்ய தினத்தில் பூஜித்து நல்லன எல்லாம் வேண்டிடலாம். போன வருஷ நரஸிம்ம ஜெயந்திக்கு ருண விமோசன ஸ்தோத்ரத்தினை இங்கே பதிந்தேன். இன்று ஆதிசங்கரர் இயற்றிய ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹ கராவலம்ப ஸ்தோத்திரத்தைப் பொருளுடன் பார்க்கலாமா?. [எனக்குத் தெரிந்த அளவில் பொருள் சொல்லியிருக்கிறேன். சில-பல இடங்களில் கொஞ்சம் நெருடலாக இருந்தது, படிப்பவர்கள் ஏதேனும் தவறு கண்டு திருத்தினால் மகிழ்வேன்]

ஸ்லோகத்தைப் பார்க்கும் முன்பு பத்ம பாதர் பற்றிய ஒரு சிறு குறிப்பு. பத்ம பாதர் என்பவர் ஆதிசங்கரரது ப்ரதம சிஷ்யர்களில் ஒருவர், நரஸிம்ஹ வழிபாட்டில் சிறப்புற்று இருந்தவர். பத்ம பாதரது வேண்டுகோளின்படி இந்த ஸ்லோகம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த ஸ்லோகங்களை வாசிக்கையில் இது நமக்காக, என்னைப் போன்ற ஸம்ஸார ஸாகரத்தில் ஆட்பட்ட சாதாரணர்கள் ப்ரார்த்திக்க என்றே செய்யப்பட்டதாகத் தோன்றுகிறது. சரி ஸ்லோகங்களைப் பார்க்கலாமா?


ஸ்ரீமத் பயோநிதி நிகேதந சக்ரபாணே!
போகீந்த்ர போக-மணி ரஞ்சித புண்ய மூர்த்தே!
யோகீச! சாச்வத! சரண்யே!பவாப்தி போத!
லக்ஷ்மி நரஸிம்ஹ! மம தேஹி கராவலம்பம்

திருப்பாற்கடலை உறைவிடமாகக் கொண்டவனே!, சக்ராயுதத்தை கையில் தாங்கியவனே!, ஆதிசேஷணின் தலையில் உள்ள ரத்னங்களினால் ஒளிரும் புண்யமான வடிவை உடையவனே!, யோகிகளுக்கெல்லாம் தலைவனே! நிலையானவனே!, தஞ்சமடையத்தக்கவனே!, ஸம்ஸாரமெனும் கடலைக் கடக்க ஓடம் போன்றவனே!, லக்ஷ்மியுடன் கூடிய நரஸிம்ஹப் பெருமானே! எனக்குக் கை கொடுத்து உதவ வேண்டும்.


ப்ரஹ்மேந்த்ர-ருத்ர-மருதார்க்க கிரீடகோடி
ஸங்கட்டிதாங்க்ரி கமலாமல காந்தி காந்த!
லக்ஷ்மி-லஸத் குச-ஸரோருஹ ராஜஹம்ஸ
லக்ஷ்மி நரஸிம்ஹ! மம தேஹி கராவலம்பம்.

பிரம்மா, ருத்ரன், இந்திரன், மருந்துகள் ஸுர்யன் முதலானவரின் கிரீடங்களின் முனைகளால் உறையப் பெற்று, மாசற்று ஒளிரும் தாமரை போன்ற சரணங்களை உடையவனே!, லக்ஷ்மி தேவியின்தனங்களாகிய தாமரை மலருக்கு ராஜஹம்ஸம் போன்றவனே! லக்ஷ்மி நரஸிம்ஹனே!, எனக்கு கை கொடுத்தருள வேண்டும்.


ஸம்ஸார-தாவ-தஹனா (ஆ)தூர-பீகரோரு
ஜ்வாலாவலீபி-ரதிதக்த தநூருஹஸ்ய
த்வத் பாத பத்ம ஸரஸீ சரணாகதஸ்ய
லக்ஷ்மி நரஸிம்ஹ! மம தேஹி கராவலம்பம்

ஸம்ஸாரமென்னும் காட்டுத்தீயால் எரிக்கப்பட்டு அல்லல் படுபவனும், பயம் ஏற்படுத்தும் பரந்த தீயினால் கருகிய ரோமங்களை உடையவனும், உம்முடைய பாதத் தாமரை என்னும் நீர்த்தேக்கத்தை வேண்டியிருப்பவனான எனக்கு, லக்ஷ்மி நரஸிம்ஹனே!, நீ கை கொடுத்தருள வேண்டும்.

ஸம்ஸார-ஜால பதிதஸ்ய ஜகந்நிவாஸ
ஸர்வேந்த்ரியார்த்த படிசார்த்த ஜ்ஜஷோபமஸ்ய
பரோத்கண்டித ப்ரசுர தாலுக மஸ்தகஸ்ய
லக்ஷ்மி நரஸிம்ஹ! மம தேஹி கராவலம்பம்

ஸம்ஸாரம் என்னும் வலையில் வீழ்ந்தவனும், தூண்டிலால் இழுக்கப்பட்ட மீன்போல பொருளாசையால் ஈர்க்கப்பட்ட புலன்களை உடையவனும், துண்டிக்கப்பட்ட தாடைகளையுடைய தலையைக் கொண்டவனுமாகிய எனக்கு, லக்ஷ்மி நரஸிம்ஹனே!, நீயே எனக்கு கை தந்தருள வேண்டும்.


ஸம்ஸார கூப மதிகோர மகாதா மூலம்
ஸம்ப்ராப்ய துக்க சத ஸர்ப்ப ஸமாகுலஸ்ய
தீநஸ்ய தேவ க்ருபணா பதமாக தஸ்ய
லக்ஷ்மி நரஸிம்ஹ! மம தேஹி கராவலம்பம்

தேவனே!, ஆழமான அடித்தளத்தை உடையதும், மிக பயங்கரமானதுமான ஸம்ஸாரமென்னும் கிணற்றை அடைந்து, நூற்றுக்கணக்கான இன்னல்களாலான சர்பங்களால் துன்புற்று, கதியற்றவனாக, இரக்கத்திற்குரியவனான எனக்கு, லக்ஷ்மி நரஸிம்ஹனே!, நீயே கை தந்தருள வேண்டும்.


ஸம்ஸார பீகர-கரீந்த்ர-காபிகாத-
நிஷ்பிஷ்ட மர்ம வபுஷ்: ஸகலார்த்தி நாச!
ப்ராண-ப்ரயாண-பவபீதி ஸ்மாகுலஸ்ய
லக்ஷ்மி நரஸிம்ஹ! மம தேஹி கராவலம்பம்

லக்ஷ்மியுடனிருக்கும் நரஸிம்ஹ பெருமாளே!, இன்னல்கள் அனைத்தையும் போக்குபவனே!, ஸம்ஸாரமெனும் பயங்கர யானையின் துதிக்கையால் அடிபட்டு, நசுக்கப்பட்ட உறுப்புக்களை உடையவனும், பிறப்பு-இறப்பு என்னும் வாழ்க்கையின் அச்சத்தினால் அல்லல்படுபவனுமான எனக்கு கை கொடுத்தருள வேண்டும்.


ஸம்ஸார ஸர்ப்ப கந-வக்த்ர-ப யோக்ர-தீவ்ர
தம்ஷட்ரா-கரால-விஷதக்த விநஷ்ட-மூர்த்தே!
நாகாரி வாஹன! ஸுதாப்தி நிவாஸ! செளரே!
லக்ஷ்மி நரஸிம்ஹ! மம தேஹி கராவலம்பம்

லக்ஷ்மியுடனிருக்கும் நரஸிம்ஹ பெருமாளே!,கருடனை வாஹனமாகக் கொண்டவனே, அமுதத்தைக் கொண்ட பார்க்கடலில் வசிப்பவனே!, வஸுதேவரின் புதல்வனே!, வாழ்க்கை என்னும் பாம்பின்வாயிலிருக்கும் கொடும் பற்களின் நஞ்சால் பொசுக்கப்பட்டு உருவிழந்த எனக்கு கை கொடுத்தருள வேண்டும்.


ஸம்ஸார வ்ருக்ஷ மகபீஜ மநந்த கர்ம
சாகா சதம் கரண பத்ர மநங்க புஷ்பம்
ஆருஹ்ய து:க்க பலிநம் பததோ தயாளோ!
லக்ஷ்மி நரஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

பாவங்களை விதையாகவும், அளவற்ற செய்கைகளை எண்ணற்ற கிளைகளாகவும், புலன்களை இலைகளாகவும், ஆசையை மலர்களாகவும், துயரங்களை பழங்களாகவும் கொண்ட வாழ்க்கை என்னும் மரத்தின் மீது ஏறி, கீழே விழும் நிலையில் இருக்கிறேன். இரக்கமுடையவனே!, லக்ஷ்மி நரஸிம்ஹனே!, நீ எனக்கு கை தந்தருள வேண்டும்.

------------------ அடுத்த பதிவில் (நாளை) முடிவுறும்-------------------------

Sunday, May 3, 2009

ஸ்ரீ பிரம்மேந்திரர் ஜெயந்தி : ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திர ஸ்தவம்....

சுமார் 220 வருடங்கள் முன்பு பரபிரம்மத்துடன் கலந்தவர் சதாசிவ பிரம்மேந்திரர். அவர் பற்றிய அரிய கருத்துக்களை திவாண்ணா என்று நான் அழைக்கும் டாக்டர். வாசுதேவன் அவர்கள் மிக அருமையாக ஒரு தொடர் கட்டுரையை சில காலம் முன்பு தமது ப்ளாக்கிலும், பின்னர் எனது வேண்டுகோளுக்கு இணங்க இங்கும் இட்டார்கள். அவர் சொன்னவற்றில் லேசாகத் தொட்டுச் சென்ற ஒரு விஷயத்தைப் பார்க்கலாமா?.

ஸ்ரீ சதாசிவர் அப்போதைய காஞ்சி ஆசார்யாரான (57ஆம் ஆசார்யார்) பரமசிவர்-II என்பவரிடம் தீக்ஷை பெற்றவர். ஸதாசிவ பிரம்மேந்திரர் கைவல்யம் அடைந்து சுமார் 120 வருடங்கள் கழித்து நடந்த நிகழ்ச்சி இது. அப்போது சிருங்கேரியில் ஆசார்யராக இருந்தவர் ஸ்ரீ சச்சிதானந்த சிவாபினவ நரசிம்ம பாரதி ஸ்வாமிகள். அவருக்கு ப்ரம்ம ஞானத்தில் ஏதோ சந்தேகம் எழுந்ததாம். அப்போது அதைப் பற்றி கலந்து உரையாடித் தெளிய யாரும் இல்லாத நிலையிருந்ததாம். அதாவது ப்ரம்ஹ ஞானத்தை அடைந்தவர், உணர்ந்தவர் மட்டுமே தெளிவிக்க முடியும் என்பதால் அவ்வாறான ஒருவரைத் தேடியபோது, ஸ்ரீசதாசிவர் பற்றித் தெரிந்து கொண்டிருக்கிறார். தமது விஜய யாத்திரையில் தென் பகுதிக்கு வரும் போது சதாசிவ பிரம்மேந்திரரது அதிஷ்டானத்தை அடைந்து பிரார்த்தனை செய்ய முடிவு செய்கிறார்.



சிருங்கேரி மடத்தின் கிளை ஒன்று கரூர் அருகில் இருக்கும் மஹாதானபுரம் என்னும் கிராமத்தில் இருக்கிறது. அங்கு வந்த ஸ்ரீ ஆசார்யர், நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் அதிஷ்டானத்திற்கு பல்லக்கில் போகிறார். போகும் பல்லக்கு மிகவும் நிதானமாகச் செல்வதாக உணர்ந்து போகிகளிடம் காரணம் கேட்கிறார். போகிகள் தாம் பல்லக்குடன் முன்னே செல்கையில் தம்மை யாரோ பின்புரம் தள்ளுவதாக உணர்வதால் எதிர்த்துச் செல்வது சிரமாக, அதிக நேரம் பிடிப்பதாகச் சொல்கின்றனர். தமது திருஷ்டியில் இது பிரம்மேந்திரரைப் பார்க்கச் செல்லும் முறையல்லஎன்று உணர்ந்து, பல்லக்கிலிருந்து இறங்கி தமது கை நீட்டி அது நீளூம் வரையில் நடந்து, பிறகு ஒரு நமஸ்காரம் செய்து பின்னர் இன்னொரு கை தூரம் நடந்து மீண்டும் நமஸ்காரம் செய்வதுமாகச் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து நெரூரை அடைந்தாராம்.


நெரூரை அடைந்த ஆசார்யார் தமது அனுஷ்டானங்களைக் காவிரிக் கரையில் முடித்துக் கொண்டு பிரம்மிந்திராளது அதிஷ்டான வளாகத்தினுள் சென்று கொண்டு, வேறு யாரையும் உள்ளே விட வேண்டாம் என்றும் தாமே திரும்பி வந்து பேசும் வரையில் எந்த விதத்திலும் தன்னுடன் தொடர்பு கூடாது, எல்லோரும் திருமதிலுக்கு வெளியிலேயே இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுவிட்டு உள்ளே சென்றுவிடுகிறார். அன்ன ஆகாரமின்றி, யாரிடமும் ஏதும் பேசாது அதிஷ்டானத்தின் முன்பு தியானத்தில் அமர்ந்து விட்டாராம். மூன்று நாட்கள் இவ்வாறாக இருந்திருக்கிறார். காலை-மாலையில் காவேரிக் கரைக்கு வந்து ஸ்னாநாதிகளை முடித்துக் கொண்டு செல்வாராம். ஏதும் பேசுவதோ, அல்லது பிக்ஷை எடுத்துக் கொள்ளவோ இல்லையாம். பக்தர்கள் எல்லோரும் திருமதிலுக்கு வெளியே அன்ன ஆகாரமின்றி ஆசார்யாரது பிக்ஷைக்குப் பின்னரே உணவு எடுத்துக் கொள்வதாக உறுதியெடுத்து காத்திருந்தார்களாம். மூன்றாம் நாள் இரவு மதிலுக்குள்ளிருந்து இருவர் பேசிக்கொள்வது காதில் கேட்டதாம். ஒரு குரல் ஆசார்யாரது குரலாக இருப்பதை உணர்ந்தனர், இன்னொன்று சதாசிவ பிரம்மத்தினுடைதாக இருக்கலாம் என்று நினைத்து, மறுநாள் ஆசார்யார் சொல்வார் என்றும் ஆசார்யார் சதாசிவ பிரம்மத்திற்கு பூஜை செய்தால் அதன் மூலம் அவரது குருவாக சதாசிவத்தை ஏற்றது தெரியும் என்றும் முடிவு செய்து காத்திருந்தனராம்.

எதிர் பார்த்தது போலவே ஸ்ரீ ஸ்வாமிகள் மறுநாள் வெளியில் வருகையில் ஸ்ரீ சதாசிவ பிரம்மத்தை போற்றி 45 ஸ்லோகங்களை [ஸ்ரீ சதாசிவேந்த்ர ஸ்தவம்] எழுதி எடுத்து வந்து சதாசிவ பிரம்மத்திற்குதாம் பூஜை செய்ய ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னாராம். அங்கிருந்து கிளம்பும் போது ஸ்ரீ சதாசிவ பிரம்மத்தின் படத்தை பல்லக்கில் வைத்து சிருங்கேரிக்கு எடுத்துச் சென்றதாகச் சொல்கிறார்கள். இப்போதும் சிருங்கேரி ஆசார்யர்கள் தமது தமிழக விஜயத்தில், குறிப்பாக பட்டமேற்ற பிறகு வரும் முதல் பயணத்தில் நெரூர் வந்து பூஜைகள் செய்து காணிக்கைகள் அளிப்பதைக் காணலாம்.

இவ்வாறாக பிரம்மத்தில் கலந்து 130 வருடங்கள் கழித்தும் தன்னை நோக்கி சிரத்தையுடன் வந்தவருக்கு அனுக்ரஹித்துள்ளார் சதாசிவர். மேற் சொன்ன நிகழ்ச்சியின் போது சிருங்கேரி ஆசார்யார் எழுதிய 45 ஸ்லோகங்களில் சிலவற்றை சொல்லி நாமும் அந்த பரபிரம்மத்தை வணங்குவோம்.

பரமசிவேந்த்ர கராம்புஜ ஸம்பூதாய ப்ரணம்ர வரதாய

பததூத பங்கஜாய ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய.

பரமசிவேந்திரர் என்னும் மஹானின் கரகமலத்தால் உண்டானவரும், [இங்கு சொல்லப்பட்டிருக்கும் பரமசிவேந்திரர் காமகோடி பீடத்து யதி, சதாசிவருக்கு ஸன்யாசம் அளித்தவர்]நமஸ்கரித்தவர்களுக்குப் பரதத்துவத்தை அருளுபவரும், கால்களில் தாமரையை ஜெய்த்தவருமான ஸ்ரீ சதாசிவேந்த்ரரை நமஸ்காரம் செய்கிறோம்.

கரமாஹி த்விஜ பதயே சமதம முக திவ்ய ரத்னவாரிதயே

சமனாய மோஹ விததே ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய


காமம் என்னும் பாம்புகளுக்கு கருடனாக இருப்பவரும், சமம், தமம் போன்ற உத்தம ரத்னங்களிருக்கும் சமுத்ரமுமான ஸ்ரீ சதாசிவேந்த்ரரை மோக சமூகம் அடங்குவதற்காக நமஸ்காரம் செய்கிறோம்.

ப்ரணதாய யதி வரேண்யைர் கண நதாப்ய ஹார்ய விக்ன ஹ்ருதே

குணதா ஸீக்ருத ஜகதே ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய

யதிச்ரேஷ்டர்களால் நமஸ்கரிக்கப்படுபவரும், விக்னேஸ்வரராலும் போக்க முடியாத விக்னங்களைப் போக்குபவரும், குணங்களால் உலகத்தையே தாஸபாவமடையச் செய்தவருமான ஸ்ரீ சதாசிவேந்த்ரரை நமஸ்காரம் செய்கிறோம்.

ந சாஹமதி சாதுரீ ரசித சப்த ஸங்கைள் ஸ்துதிம்

விதாது மபிச க்ஷமோ நச ஜபாதி கேப்யஸ்திமே

பலம் பலவதாம் வர ப்ரகுரு ஹேது சூன்யாம் விபோ

ஸதாசிவ க்ருபாம் மயி ப்ரவர யோகினாம் ஸத்வரம்


மிகச் சாதுர்யம் நிரம்பிய சப்தங்களால் ஸ்துதி செய்யும் சாமர்த்யம் எனக்கில்லை. ஜபம் முதலியவை செய்வதற்கும் பலமில்லை. பலம் உள்ளவர்களில் சிரேஷ்டரான ஸ்ரீ சதாசிவரே!சமர்த்தரே!, யோகிகளில் ஸ்ரேஷ்டரே!, உமது அவ்யாஜ கருணையை சீக்கிரத்தில் என்பால் செலுத்த வேண்டும்.

ஸ்தீகார்ச்சன ப்ரீத ஹ்ருதம்புஜாய பாகாப்ஜ சூடா பரரூப தர்த்தே

சோகாப ஹர்த்ரே தரஸாநதானாம்பாகாய புண்யஸ்ய நமோயதீசே

கொஞ்சம் பூஜித்தாலேயே சந்தோஷமடையும் மனமுடையவரும், சந்திரனை தலையில் பூஷணமாக அணிந்தவரான பரமசிவனின் மற்றொரு ரூபமானவரும், நமஸ்கரித்தவர்களுக்குவிரைவில் துக்கத்தைப் போக்குகின்றவரும், புண்யத்தின் பயனாக இருப்பவருமான ஸ்ரீ சதாசிவேந்த்ர யதீஸ்வரருக்கு நமஸ்காரம் செய்கிறோம்.


நாளை சதாசிவ பிரம்மேந்திரர் ஜெயந்தி. இந்த புண்ய தினத்தில் நாமும் ஸ்ரீ சதாசிவேந்த்ரரை வணங்கி அத்வைதானுபவம் வேண்டுவோம்.

Friday, May 1, 2009

அனானியின் சிந்தனைக்கு/பின்னூட்டத்திற்கு எனது கண்டனங்கள்..


KRS அவர்களது பதிவுகளை நான் படிப்பதை விட்டு பல மாதங்களாகிவிட்டது. இன்று நண்பர் ஒருவர் கே.ஆர்.எஸ் பதிவில் இருக்கும் ஒரு பின்னூட்டத்தைப் பற்றி சாட்-ல் வந்து கூறினார். அதைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகு அந்த இடுக்கைக்குச் சென்று படித்தேன். அதிர்ந்தேன், வருந்தினேன். அதன் விளைவே இந்த இடுகை. எனக்கும் கே.ஆர்.எஸ் அவர்களுக்கும் மிகுந்த கருத்து வேறுபாடுகள், அதன் விளைவான மனக் கசப்புகள் உண்டு. இருப்பினும் இந்த குறிப்பிட்ட இடுகையில் இருக்கும் பின்னூட்டம் என்னை மிகவும் பாதித்தது என்றால் மிகையல்ல.

ராமானுஜரை பழிக்க நாம் யார்?, அவர் இருந்த, இருக்கிற இடமென்ன நாம் இருக்கும் இடம், காலம், வாழ்க்கை முறை எங்கே?. ஏனிப்படி எழுதிட வேண்டும்? ஒன்றும் புரிபடவில்லை.ஏதோ சைவத்தை, ஸ்மார்த்த்தை, அத்வைதத்தை தூக்கி நிறுத்துவதாக நினைத்து அப்பின்னூட்டத்தின் மூலம் ஒர் மிகப் பெரிய அசிங்கத்தை அறங்கேற்ரறியிருக்கிறார் அந்த அனானி.


சொப்பு விளையாட்டிலும் எத்துணையோ முறைகள், அதன் மூலம் இறையியலை, குழந்தைகளுக்கு அந்த வயதிலேயே அறிமுகப்படுத்தப்பட்டதையே கட்டுரையாசிரியர் குறிப்பிட்டு, அந்த விளையாட்டின் மூலமாகவும் ஸ்ரீ ராமானுஜர் தமது சிஷ்யர்களுக்கு உபதேசித்ததைச் சொல்லியிருக்கிறார். அங்கே ராகவ் சொல்லியிருப்பது போல சொப்பு விளையாட்டாகத்தான் எனக்கும் ஆன்மீகம் அறிமுகம் செய்யப்பட்டது. அதிலிருந்து தான் அத்வைதமும், துவைதமும், வசிஷ்டாத்வைதமும் புரியாவைக்கப்பட்டது. அதிலிருந்து தான் இறையனுபூதிக்கான அஸ்திவாரம் என்னுள் விதைக்கப்பட்டது. சொப்பு விளையாட்டில் ஆரம்பித்துப் படிப்படியாக சாஸ்திரமும், ஆசாரமும், சிறிதே அளவு வேதமும் சொல்லிவைக்கப்பட்டது.


ராமானுஜரது அடிப்படைக் கருத்தை இப்படிச் சாடுவது என்பது என்று ஆரம்பித்தால் அனானி ராமானுஜரைச் சுட்டும் ஒரு விரலைத் தவிர மற்ற மூன்று விரல்கள் அனானியாகிய இவரையே சுட்டுகின்றதே?.தன்னை நோக்கியே மடங்கியிருக்கும் அந்த மூன்று விரல்கள் கேட்கும் கேள்விகளை உணர்ந்தாரா இந்த அனானி?. அந்த மூன்று விரல்கள் சார்பாக நாமும் சில கேள்விகளை முன் வைத்தால்இந்த அனானியால் பதிலளிக்க, (நமக்காக வேண்டாம், தமது ஆத்மாவிற்கு நேர்மையாக) இவரால் பதிலளிக்க முடியுமா?. அந்த பதில்கள், இவர் சொல்லும் தர்ம சாஸ்திரத்திற்கு முழு விரோதமானபதிலாகவே இருக்கும். பக்தியில்லாமல் அத்வைதத்தை நேரில் நம்மால் உணர முடியும் என்று எங்கு சொல்லப்பட்டிருக்கிறது?. அவ்வாறாக இருப்பினும் அதனை உணர்ந்தவராக இந்த அனானி இருப்பாரேயாகில் அவரால் இப்படி ஒரு பின்னூட்டத்தை எப்படி எழுத முடிந்தது?.


நமது வழிபாட்டு முறைகளும், சமயமும், சாஸ்திரமும் இப்படி எசலிக் கொள்ளவா சொல்லியிருக்கிறது?. அவரவருக்கு அவரவர் குரு, தெய்வம் உயர்ந்தது, அவற்றைப் பற்றி அவரவர்தமது கருத்தை,அதன் உயர்வைச் சொல்லுவதில் என்ன தவறு?. எந்த யதியானாலும் வணங்கு என்று சொல்லியிருக்கும் சாஸ்திரத்தை, அதை செயல்படுத்திக் காட்டிய பரமாசாரியாரைவேறு இதில் நுழைத்து, கடவுளே! ஏன் இந்த வெறி?. எதைச் சாதிக்க இப்படி ஒரு பின்னூட்டம்?


பூணூல் போடாதவர்களுக்கு ராமானுஜர் பூணூல் போட்டு வைத்தார் என்றால் அப்போது அவரைச் சுற்றியிருந்த அந்த மக்களது பக்தியை அவர் உணர்ந்தார், அந்த பக்தியால் இறையனுபூதிபெறச் செய்ய முடியும் என்று உணர்ந்ததால் அவ்வாறு செய்தார். ராமானுஜர் இறைவனை உணர்ந்த்வர், அவர்காலத்தில் வாழ்ந்தவர்கள் இறைவனுடன் பேசியும், இறையுத்தரவு பெற்றும் காரியங்களைச் செய்திருக்கிறார்கள். அவருடன் இருந்த ப்ரதம சிஷ்யர்கள் பலர் குருபக்தியிலும், தெய்வபக்தியிலும் சிறந்தவர்களாயிற்றே?. அவர்களைப் போலா நாம் இன்று இருக்கிறோம்?.அதனைச் சாட,குறை சொல்ல நமக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?. அன்றாட அலுவல்கள் எல்லாவற்றையும் இறைவழியாக, பக்திவழியாகச் செயத அவர்களெங்கே நாமெங்கே?. ஏனிந்த அசிங்கம்?

ஸ்ரீமத் வேதாந்த தேசிகர் எழுதிய "சத தூஷணி" என்னும் அத்வைத மறுப்புக்குக் எதிராக "சத பூஷணி" என்று மறுப்பு எழுதிய ஆசார்யார்கள் அதனை பிரஸ்தாபிக்காது விடுவது கூட ஒரு சகிப்புத்தன்மை ஏற்படுத்தும் முயற்சியும், இன்னொரு யதியின் செயலைக் குறைகூறுதலும் கூடாது என்பதற்காகத்தானே?. அப்படியிருக்கையில் சனாதனியாக, வைதீகத்தின் பால் தமக்கு இருக்கும் மரியாதையை காண்பித்துக் கொள்ளும் இந்த அனானி ஏன் இப்படி ஒரு பழிக்கும் பின்னூட்டத்தை இட்டார்? இவற்றை அறியாதவரா இந்த அனானி, அல்லது வசதியாக மறந்துவிட்டாரா? யாமறியேன் பராபரமே.


அனானி சொல்லியிருக்கும் சாஸ்திரங்களை ராமானுஜர் மதிக்காதோ அல்லது அவற்றை அவர் பின்பற்றாதோ இருக்கவில்லையே?. அவரது வாழ்க்கையில் பல்வேறு காலங்களில் அவர் சாஸ்திரத்திற்கும் சம்பிரதாயத்திற்கும் குடுத்த உயர்வு அழுத்தமாக அவரது வரலாற்றில் பதிவாகியிருக்கிறதே?. அனானி தம்மை வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் முறை அத்வைதத்தையோ, வைதீகத்தையோ தூக்கி நிறுத்தும் முயற்சி என்றால் இவ்வாறான பிற ஆசார்யர்களை பகவத்பாதரோ அல்லது பரமாசாரியரோ எங்காவது பழிக்கச் சொல்லியிருக்கிறார்களா என்பதையும் அந்த அனானி நினைத்துப் பார்க்கட்டும். அத்வைத ஸ்தாபகராகட்டும், அதன் வழிவந்த ஆசார்யார்களாகட்டும் குலாசாரத்தைக் கடைபிடியுங்கள் என்று சொல்லியிருக்கிறார்களே, அதையெல்லாம் செய்யத் துவங்கினால் இந்த த்வேஷமே வரக்கூடாதே?, இடுகையில் இருக்கும் நல்லவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு அந்த ஆசார்யரை வணங்கிவிட்டு அல்லவா சென்றிருப்போம்?

சங்கரரர் ஆகட்டும், ராமானுஜர் ஆகட்டும் அவர்கள் காலத்திற்குத் தேவையான சில விஷயங்களைச் செய்தார்கள். இன்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டியது அவர்களது சித்தாந்தம், அவர்களது இறை பக்தி, அனுபவம் போன்றவை மட்டுமே. அவர்களது செயலில் குறை கண்டுபிடிப்பது அல்ல. எந்த யதியையும், அதிலும் குறிப்பாக சங்கரர், ராமானுஜர், மாத்வர் போன்ற ஆசார்யர்களைக் குறைகூறுவது நமது வேத-மாதாவையே பழிப்பது போன்றது என்று உணர்வோம். இவற்றை இனியாவது தவிர்க்க உறுதி எடுப்போம்.

இது எனது கருத்து மட்டுமே. கே.ஆர்.எஸ் அவர்களது இடுகையில் பின்னூட்டமிடுவதில்லை என்பதால் இங்கு இட்டிருக்கிறேன். இது பற்றி இதற்கு மேலும் தொடர்வது வேண்டாத வேலை என்பதால் இந்த இடுகைக்கு பின்னூட்டப் பெட்டி மூடப்படுகிறது. இதனால் கே.ஆர்.எஸ் அவர்களது இடுகைகளுக்கு/சிந்தனைகளுக்கு எல்லாம் நான் வக்காலத்து வாங்குவதாக அர்த்தம் எடுத்துக் கொண்டாலும் அதுபற்றிக் கவலையில்லை. அதே சமயத்தில் கே.ஆர்.எஸ் அவர்களுடைய எல்லாக் கருத்துக்களுக்கும் நான் ஏற்பது இல்லை என்பதையும் சொல்லி இதை முடிக்கிறேன்.
ஸர்வ-வேதாந்த-ஸித்தாந்த-கோசரம் தம்-அகோசரம்
கோவிந்தம் பரமாநந்தம் ஸத்குரும் ப்ரணதோஸ்ம்யஹம்