Monday, December 22, 2008

கூடலழகரை தரிசிப்போம்....

ஒரு வாரம் நிம்மதியாக மதுரையில் கழிந்தது. கோவிலுக்குச் செல்ல ஆரம்பிக்கலாம் என்றதும் செல்ல தோன்றிய கோவில்கள் மீநாக்ஷி கோவிலும் கூடலழகர் கோவிலும் தான். பலவருடங்கள் முன் தினமும் அஷ்டாங்க விமானப் பிரதக்ஷணம் செய்திருந்தாலும், கடந்த 1.5 ஆண்டுகளாகச் இரு கோவில்களுக்கும் செல்ல இயலவில்லை. ஆகவே முதலில் இம்முறை பெருமாள் தரிசனம். மார்கழியில், பிரம்ம முஹுர்த்த நேரத்தில், பெருமாள் பார்க்கப்-பார்க்கத் தெவிட்டாத பரிபூரணனாக இருந்தார். கூடலழகர் கோவில் சிறப்புக்களை யாரும் எழுதியதாக நினைவில்லை, ஆகவே இந்த பதிவு.

பிரம்மாவின் புத்திரரான சனத் குமாரருக்கு பெருமாளை அர்ச்சாவதார மூர்த்தியாக தரிசிக்க வேண்டும் என்ற ஆசை வந்ததாம். இந்த விருப்பம் நிறைவேற கிருதமால் நதி தீரத்தில் தவமிருக்கிறார். அப்போது தவத்தின் பயனாக பெருமாள் ஸ்ரீதேவி-பூதேவியுடன் அவருக்கு காக்ஷி அளித்தார். அவ்விடத்தில் பெருமாளுக்கு கோவிலமைக்க முடிவு செய்த சனத் குமாரர் விஸ்வகர்மாவை அழைத்து இறைவன் தமக்கு அளித்த தரிசனத்தை விவரித்து, அத்தோற்றத்தில் பெருமாளுக்கு விக்ரஹம் அமைக்கச் செய்கிறார். அந்த விக்ரஹத்தை மிக அழகிய அஷ்டாங்க விமானத்தின் கீழ் பிரதிஷ்ட்டை செய்து வழிபாட்டினை தொடங்குகிறார். இவ்வாறாக கூடல் மாநகரில், அமர்ந்த கோலத்தில் கூடலழகர் என்ற திருநாமத்துடன் வீற்றிருக்கிறார். இக்கோவில் கிருத யுகத்திலேயே அமைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. நான்கு யுகங்களிலும் சிறப்புற்றுத் திகழும் எம்பெருமானாரை சதுர்யுகப் பெருமாள் என்றும் அழைக்கின்றனர்.

பெருமாள் கோவில்கள் பலவகையான விமானங்களுடன் அமைக்கப்படுகிறது. இதில் அஷ்டாங்க விமானம் என்பது மிகச் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில், இங்கும், திருக்கோஷ்டியூரிலும் மட்டுமே இந்த அஷ்டாங்க விமானத்தின் கீழ் பெருமாள் சேவை சாதிக்கிறார். இந்த விமானம் 125 அடி உயரமும், கலசம் 10 உயரமும் கொண்டது. எட்டு பகுதிகளாக இருக்கும் இந்த விமானமே ஓம் நமோ நாராயணாய என்னும் எட்டெழுத்து மந்திரத்தின் வடிவம் என்று கூறப்படுகிறது. இந்த விமானத்தின் கீழ் இருக்கும் பெருமாளை 48 நாட்கள், தினத்திற்கு 11 முறை சுற்றி வந்தால் நினைத்த கார்யம் சித்திக்கும் என்பது மதுரை-வாழ் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. எந்த பிரார்த்தனையும் இன்றி தினமும் இந்த பிரதக்ஷணத்தைச் செய்யும் பலர் இருக்கிறார்கள்.

மூன்று நிலைகளில், பெருமாளின் நின்ற, இருந்த, கிடந்த கோலங்கள் அழகிய சுதைச் சிற்பங்களாக இருப்பினும், கீழ்த் தளத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் இருக்கும் கூடலழகருக்கே நித்ய பூஜைக்கும், மற்ற விழாக்களும். இங்கு தாயார் பெயர் மதுரவல்லி, உற்சவர் சுந்தர-ராஜப் பெருமாள் என்ற திருநாமம். மூலவருக்கு ஆகூய திருக்கரத்தான் என்ற திருநாமமும் இருக்கிறது. இடது கையால் பக்தனை அழைத்து, வலது கையால் அருள் பாலிப்பவன் என்பது இதன் பொருள் என்று கூறுகின்றனர். மதுரையை ஆண்ட மன்னர்கள் போருக்குச் செல்லும் முன்னர் போரில் வெற்றி பெற இவரை வணங்கியதாகச் சொல்லப்படுகிறது. இரண்டாவது நிலையில் பெருமாள் சூரிய நாராயணராக தேவியுடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். இந்த சன்னதியை ஓவிய மண்டபம் என்று அழைக்கின்றனர். இச்சன்னதியில் பிரம்மா, சிவன் விஷ்ணு, அஷ்ட திக்பாலகர்கள் ஓவிய வடிவில் காக்ஷி அளிக்கின்றனர். மூன்றாவது நிலையில் பாற்கடல் நாதர் என்ற திருநாமத்துடன் சயனித்திருக்கிறார். இவர்களைத் தவிர, விமானத்தில் லக்ஷ்மி நரசிம்ஹர், பூவராஹர், லக்ஷ்மி நாராயணன், ஆழ்வார்கள், மற்றும் வைஷ்ணவ ஆச்சார்யார்களது திருவுருவங்களைத் தரிசிக்கலாம். எட்டெழுத்து மந்திரத்தை உணர்த்தும் விதமாக எட்டு பிராகாரங்களுடன் அமையப் பெற்ற கோவில் இது.

பிரகாரங்களில், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், விஸ்வக்ஷேனர், ராமர், கிருஷ்ணர், லக்ஷ்மி நாராயணன், ஆழ்வார்கள், மணவாள மாமுனிகள் போன்றோரது சன்னதிகள் அமையப் பெற்றுள்ளன. இக்கோவிலில் உள்ள இன்னொரு சிறப்பு நவக்கிரஹ சன்னதி. சாதாரணமாக பெருமாள் கோவில்களில் நவக்கிரஹங்களுக்கு என்று சன்னதி கிடையாது, ஆனால் இக்கோவிலில் தனியாக நிறுவப்-பெற்று பூஜைகள் செய்யப்படுகிறது.


நரசிம்ஹ விக்ரஹங்கள் யோக நிலையிலோ அல்லது லக்ஷ்மியை மடியில் இருத்திக் கொண்டு லக்ஷ்மி நரசிம்ஹராகவோ பார்த்திருக்கிறோம். அபூர்வமாக, இக்கோவிலில் நரசிம்ஹர் ஸ்ரீதேவி-பூதேவியுடன் பிரகாரத்தில் காக்ஷி தருகிறார். இங்கு பெருமாள் சன்னதியின் வலப்புறத்தில் மதுரவல்லித் தாயார் சன்னதி. இங்கு தாயார் "படிதாண்டாப் பத்தினி" என்றும் அழைக்கப்படுகிறார். இப்பெயருக்கு ஏற்றார்ப்போல அன்னை உற்சவ காலங்களில் சன்னதிக்குள் மட்டுமே புறப்பாடு ஆகிறாள். நவராத்திரி முடிந்து வரும் பெளர்ணமியன்று அன்னைக்கு பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்வது சிறப்பு. இங்கு தாயாருக்கு லக்ஷ்மி அஷ்டோத்திரமும், பெருமாளுக்கு ராமாஷ்ட்டோத்திரமும் செய்யப்படுகிறது. இக்கோவிலுக்கான தீர்த்தம் "ஹேம புஷ்கரிணி" என்று அழைக்கப்படுகிறது. இப்பெருமாளின் தெப்பக்குளம்தான் தெப்பக்குளத்தெரு என்று அழைக்கப்படுகிறது, டவுன்ஹால் ரோட்டின் ஒருபுறம் அமைந்துள்ளது.

பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், மற்றும் திருமழிசையாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது இத்தலம் என்று அர்ச்சகர் கூறினார். இப்பகுதியை வல்லபதேவன் என்னும் மன்னன் ஆண்ட காலத்தில், பரம்பொருள் யார் என்ற கேள்விக்குச் சரியான விளக்கம் சொல்லப் படவேண்டும் என்று போட்டி வைக்கிறான். கேள்விக்குச் சொல்லப்படும் விளக்கம் சரியானால் பொற்கிழி கட்டப்பட்ட கம்பம் வளைந்து கொடுத்து பொற்கிழியை எடுக்க ஏதுவாக வேண்டுமென்று கூறி அதற்கேற்ப ஓர் உயர்ந்த கம்பத்தில் பொற்கிழியை இணைத்து வைக்கிறான். வில்லிப்புத்தூரில் இருந்த விஷ்ணு சித்தரின் கனவில் தோன்றிய பெருமாள், அரசனின் சந்தேகத்தைத் தீர்க்கப் பணிக்கிறார். விஷ்ணு சித்தரும் ஆதிமூலமாகிய பரம்பொருள் விஷ்ணுவே என்று கூறிட அப்போது கம்பம் வளைந்து கொடுத்ததாம். இக்காக்ஷியைக் கண்ட மன்னன், விஷ்ணு சித்தரை வணங்கி தனது பட்டத்து யானையில் வைத்து வலம் வரச் செய்ததாகவும், அப்போது பக்தனின் பெருமையைக் காண பெருமாளும் கருடாரூடராக வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த பெருமாளின் அழகில் மயங்கிய விஷ்ணு சித்தர், ஒரு தாய் தன் மகவுக்கு எப்படி திருஷ்டி கழிப்பாளோ அது போல பெருமாளுக்கு கண் திருஷ்டி பட்டுவிடுமே என்று கலங்கிப் பாடியதுதான் "பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு" என்னும் பாசுரம் என்று கூறுகிறார்கள். இந்தப் பெருமாள் சதுர் யுகங்களும் கண்டவர் என்பதாலும் அவ்வாறு பாடியிருக்கிறார் என்றால் மிகையில்லை. பெருமாளுக்கே தாயாக, திருஷ்டி கழித்து அவரை வாழ்த்தியதால் அன்று முதல் அவர் 'பெரியாழ்வார்' என்று அழைக்கப் பெற்றாராம்.
மதுரை செல்பவர்கள் மீனாக்ஷி கோவிலைக் காணச் செல்லுகையில் மறக்காது இக்கோவிலையும் தரிசித்து இறையருள் பெறுவோமாக.

Wednesday, December 17, 2008

சமர்த்த ராமதாஸர் - 2





சமர்த்த ராமதாஸர் காசி, அயோத்தி, பிரயாகை, பிருந்தாவனம் என்று பல புண்ணிய க்ஷேத்திரங்களுக்கும் செல்கையில் காசியில் ஹனுமான்-காட் என்னும் இடத்தில் ஹனுமானுக்கு ஒரு கோவில் அமைத்திருக்கிறார். இன்றும் அந்த கோவில் மிகப் பிரசித்தியுடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. நாஸிக் திரும்பிய ராமதாஸர் தனது அன்னையின் வயோதிக நிலை அறிந்து ஜம்ப் கிராமத்திற்கு வந்து தமது ராம நாம ஜபத்தின் மூலமாக அன்னைக்கு கண் பார்வை கிடைக்கச் செய்ததாகச் சொல்லப்படுகிறது. தமது அன்னையின் அந்திம காலத்திற்குப் பின் மீண்டும் பிரயாணம் செய்திருக்கிறார். தஞ்சைக்கு வருகையில் கண்களை இழந்த ஸ்தபதிக்கு கண்ணொளி தந்திருக்கிறார். அந்த ஸ்தபதி மூலம் கல்லில் அழகிய இராமர் பட்டாபிஷேகச் சிலைனைச் செய்ய வைத்து தமது பூஜையில் அவற்றை வைத்திருந்திருக்கிறார். இந்த சிலா விக்கிரஹங்கள் ஸஜ்ஜன் -காட் என்னும் இடத்தில் ராமதாஸர் சமாதிக்கருகில் கோவிலில் வைத்து ஆராதனை செய்யப்படுகிறது

ஸ்ரீராமதாஸர் காலத்தில்தான் சத்ரபதி சிவாஜி முன்னேற்றம் அடைந்தது. சிவாஜி மன்னன் ராம தாசஸரைச் சந்தித்து அவர் ஆசி பெற்றிருக்கிறார். அவரை தன்னுடன் இருந்து நல்வழிப்படுத்த வேண்ட, ராமதாஸர் அரசர் அருகில் இருப்பதைத் தவிர்த்து பக்கத்தில் இருக்கும் ஒரு குன்றில் (ஸஜ்ஜன்-காட்) வசித்து வந்திருக்கிறார். இந்த இடத்தில் தான் ராமதாஸரின் சமாதித் திருக்கோவில் அமைந்திருக்கிறது. இவரது அந்திம காலத்தில் ஸ்ரீராமபிரானே பிரத்யக்ஷ தரிசனம் தந்து ஸன்யாச தீக்ஷையும், காஷாய வஸ்திரமும் அளித்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த வஸ்திரம் இன்றும் இவரது சமாதிக் கோவிலில் வைக்கப்பட்டிருக்கிறது.
இவர் மஹாராஷ்டிர பாஷையிலும், ஸம்ஸ்கிருதத்திலும் பல நூல்கள் எழுதியிருக்கிறார், அவை, தாஸபோதம், பஞ்சீகரணம், பீமரூபிசுலோகம், கருணாஷ்டகம், அமிருதகம், அமிருத பிந்து ராமாயணம் ஆகியவை. இந்த நூல்களைத் தவிர ஏராளமான கீர்த்தனங்கள், அபங்கங்களும் எழுதியிருக்கிறார். ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியும், கண்ணனும் உபதேசித்த கர்ம-பக்தி யோகங்களை தேச பக்தியுடன் சேர்த்து உபதேசித்தவர் ஸ்ரீ சமர்த்தர் என்று கூறுகின்றனர்.



இனி திரு. திரச அவர்கள் பதிவினைத் தொடருகிறார்...



ஸ்ரீ ஆஞ்சநேயரின் அவதாரமாக மஹாராஷ்டிரத்தில் தோன்றிய மஹான் 'ஸ்ரீ சமர்த்த ராமதாஸ் சுவாமிகள்' மாருதியைப் ப்ரத்யட்சமாகக் கண்டு, அவர் மூலமாக சாட்சாத் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் தரிசனத்தைப் பெற்று 'த்ரயோதசாக்ஷரி'யான 'ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்' என்ற மஹா மந்த்ரத்தை உபதேசித்து பூமியெல்லாம் தழைக்கச் செய்தார்.இவர் வாழ்ந்த காலம் சந்த் துக்காராம் வாழ்ந்த காலம்.



மாவீரன் சிவாஜியின் குரு. சிவாஜி தன் ராஜ்ஜியத்தையே தன் குருவான ராமதாசருக்கு அர்பணிக்க தயாராயிருந்தான் ஆனால் குரு ஏற்கவில்லை. ஒரு சமயம் குரு ராமதாசர் வீதியில்பிக்ஷை எடுத்துக்கொண்டு வருவதை சிவாஜி அரண்மனையிலிருந்து பார்த்தார். உடனே தன் நண்பன்பாலஜியிடம் ஒரு பேப்பரில் ஏதோ எழுதி அதை குருவின் கமண்டலத்தில் போடச் சொன்னார்.அவரும் அதை ராமதாஸரின் கமண்டலத்தில் இட்டார். அதில் என்ன எழுதியிருந்தது தெரியுமா? சிவாஜி மகாராஜ் தன்னுடைய அகண்ட ரஜ்ஜியத்தை குருவிற்கு தானமாக கொடுத்துவிட்டதாக இருந்தது. குரு ராமதாஸரும் சரி என்று சொல்லிவிட்டு சிவாஜி இப்போது மன்னன் இல்லை என்னுடன் பிக்ஷை எடுக்க வரச்சொல் என்றார். சிவாஜியும் ராஜ உடையை களைந்து விட்டு குருவுடன் கமண்டலத்தை ஏந்திக்கொண்டு பிக்ஷை எடுத்தார்.மக்கள் அனைவரும் பிக்ஷை இட்டார்கள். அதை எடுத்துவந்து உணவாக்கி குருவுக்கு அளித்துவிட்டு அவர் உண்ட மிச்சத்தை உண்டார் சிவாஜி. மறுநாள் காலை சிவாஜி குருவிடம் கேட்டார் என்னை பிச்சைக்காரனாக்கிவிட்டீர்கள் மேலும் என்ன செய்வதாக உத்தேசம் என்றார்.குரு சிரித்துக்கொண்டே சொன்னார் ""இனி நான் சொல்லும் வேலையைத்தான் செய்ய வேண்டும்"" என்றார். சிவாஜியும் அப்படியே ஆகட்டும் குருவே என்றார். ராமதாஸர் உடனே சிவாஜியிடம்"" இந்த அகண்ட ராஜ்ஜ்யத்தை மக்களின் பிரநிதியாக இருந்த ஆட்சிபுரிவாயாக"" என்றார். இப்படி கூறிவிட்டு தன்னுடைய காவி வஸ்த்திரத்திலிருந்து ஒரு பகுதியை கிழித்து கொடுத்து இதையே உனது கொடியாகக் கொண்டு பரிபாலனம் செய்.என்று ஆசி வழங்கினார்.சிவாஜியும் குரு கூறியபடியே அதைக் கொடியாக்கொண்டு மிகப் பெரிய ராஜியத்தை உருவாக்கினான்.







பின்னர் ராமதாஸர் தேசம் முழுவதும் தீர்த்த யாத்திரை மேற்கொண்டு பல இடங்களுக்குச் சென்றார். தஞ்சைக்கும் வந்து ஒரு மடத்தை நிறுவினார். கடைசியாக 1642 இல் சதராவுக்கு அருகில் உள்ள சஜ்ஜ்வட் என்ற ஊரில் ஜீவ சமாதி ஆனார். அவர் இந்த உலக வாழ்வை நீத்தபோது ஒரு பிரகாசமான ஒளி அவர் உடம்பிலிருந்து கிளம்பி மேலே சென்றது.. பணி நிமித்தமாக சதராவிற்கு சென்று 20 நாட்க்கள் தங்கும் வாய்ப்பு கிடைத்த போது அவருடைய சமாதிக்குச் செல்லும் வாய்ப்பும் கிடைத்தது. நம்ப ஊர் மாதிரி இல்லை மிக பக்தியுடன் மிகவும் நேர்த்தியாக வைத்துள்ளார்கள். எபொழுதும் ராமஜபம் நடந்து கொண்டு இருக்கிறது



இவர் ராமனின் மீதும் ஆஞ்சநேயரின் மீதும் பல பாடல்களை இயற்றியுள்ளார். அப்படி அவர் ராமனின் மீது பாடிய ஒரு பாடலை திரு. பீம்ஷிங் ஜோஷி குரலில்









































ஸ்ரீ ராம், ஜெய்-ராம் ஜெய்-ஜெய்-ராம்....




ஸ்ரீ சமர்த்த ராமதாசர் திருவடிகளே சரணம்.

Saturday, December 6, 2008

திருநெல்வேலி - சேரன்மாதேவி [நவ-கைலாசங்கள் -3]



நவகைலாசங்களில் பாபநாசத்திற்கு அடுத்ததாக வருவது வானாளாவிய அதிகாரம் கொண்ட சேரன்மா தேவி. நவ-கைலாசங்களில் இரண்டாவது ஊர் இது. நவக்கிரஹங்களில் சந்திரனுக்கான ஊர். இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான ஊர், தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் இருக்கிறது. இந்த கோவிலுக்கு நான் 20 வருடங்கள் முன்பு சென்றிருக்கிறேன்.


கிழக்கு நோக்கிய வாசலுடன், அழகிய சிறு ராஜ கோபுரம் கொண்ட அழகான கோவிலில் குடிகொண்டிருக்கும் இறைவன் திருநாமம் அம்மநாத ஸ்வாமி, அன்னையின் பெயர் ஆவுடைநாயகி. இறைவன் ஸ்வயம்பு மூர்த்தி என்று கூறினார்கள். கோவில் நந்தி, கொடிமரம் என்று ஆகமத்தில் சொல்லியிருக்கும் எல்லா சிறப்புக்களும் உடையதாக இருக்கிறது. கோவிலின் தல விருக்ஷம் ஆல மரம். தெற்கு நோக்கிய பகுதியில் நடராஜ மூர்த்தி, சிவகாமி அம்மன், காரைக்கால் அம்மையாருடன் இருக்கிறார். சூரிய-சந்திரர்கள் இறைவனை நோக்கியவாறு காட்சி தருகின்றனர். மதுரைக் கோவிலிலும் இந்தச் சிறப்பினைக் காணலாம். அதாவது சூரிய-சந்திரர்கள் இறைவனைப் பூஜிப்பதாக அமைந்த சன்னதிகள்.


கோவிலின் மேற்கே காசி விஸ்வநாதர், விசாலாட்சி, வடமேற்கில் வள்ளி-தெய்வயானையுடன் சுப்ரமண்யர், சண்டீசர், கஜலக்ஷ்மி என்று தென்-பாண்டி நாட்டின் சிவ ஆலயத் தோற்றம் மிக நேர்த்தியாக இருக்கிறது. நித்தியத்துவம் வேண்டிய ரோமச முனிவருக்கு இந்த இடத்தில் தரிசனம் தந்ததாக கோவில் குருக்கள் கூறினார். கோவில் பற்றி தல புராணம் ஒன்று சொல்லப்பட்டது. அதைப் பார்க்கலாமா?.

வானம் பார்த்தபடி இருந்த சிவனுக்கு கோவில் கட்ட முடிவு செய்தனர் இரண்டு சகோதரிகள். கோவில் கட்டுவதற்கான பொருளை தமது தொழிலான நெற்குத்தும் தொழிலில் பணம் சேர்த்து செய்வதாக சங்கல்பம் செய்து கொண்டனர். காலம் கடக்கிறது, மூலஸ்தானம் கட்ட வேண்டி அளவு கூட அவர்களிடத்தில் பொருள் சேரவில்லை. மிகுந்த கவலை அடைந்த சகோதரிகள் ஈசனை வழிபட்டு தமது மனக்குறையை கூறுகின்றனர். ஈஸ்வரன் உடனடியாக மானிட வடிவில் சகோதரிகளது இல்லத்துக்கு வந்து உணவளிக்க வேண்டுகிறார். பெண்கள் பெருமானை அமரவைத்து உணவிட்டனர். நன்றாக உண்டு, பெண்களை வாழ்த்தி, அவர்களது மனதில் நினைத்திருப்பது நிறைவேறும் என்றும் கூறிச் செல்கிறார். அன்றிலிருந்து அவர்களது செல்வ செழிப்பு அடைந்து கோவிலைக் கட்டினர் என்று தல புராணம் கூறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு சான்றாக அங்குள்ள் தூண் ஒன்றில் இரு சகோதரிகள் நெல் குத்துவது போல அமைந்த சிற்பம் இருக்கிறது.


ராஜராஜன், ராஜேந்திரன் ஆகிய சோழ அரசர்கள், மற்றும் கோச்சடையவர்மன் சுந்தர சோழ பாண்டியன் ஆகியோர் இக்கோவிலுக்கு நிவந்தங்கள் அளித்ததாக கல்வெட்டுக்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த ஊரே சேரன்மாதேவி மங்கலம் என்று முற்காலத்தில் வழங்கப்பட்டதாகவும் கல்வெட்டுக்கள் மூலம் அறிகிறோம். இங்கே ஐப்பசியில் திருக்கல்யாணமும், மஹா-சிவராத்திரி, திருவாதிரை, பிரதோஷம் போன்ற நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறதாம். தாமிரபரணி ஆற்றின் இந்த ஊர் படித்துறையினை வியாச தீர்த்தம் என்றும் கூறுகின்றனர். மார்கழி மாதம் மூன்று நாட்கள் இங்கே எல்லாம் நதிகளும் சங்கமிக்கும் என்று தாமிரபரணி மஹாத்மீயத்தில் கூறப்பட்டுள்ளது. அப்போது அம்ம்நாதர் தீர்த்தவாரிக்கு வருவார் என்று கூறுகின்றனர்.

தென்னாடுடைய சிவனே போற்றி !!!
என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!!

Saturday, November 22, 2008

திருநெல்வேலி - பாபநாசம் [நவ-கைலாசங்கள் -2]

நவ கைலாசங்கள் பற்றி ஆகஸ்ட் மாதத்தில் எழுத ஆரம்பித்தேன். ஒரு தொய்வுக்குப் பிறகு மீண்டும் இதனை எழுத தொடங்குகிறேன். இந்த தொடரினை முடிக்க, நவகிரஹங்களும் அருளட்டும். நவகைலாசங்களில் முதலாவதாக வரும் பாபநாசம் பற்றி இன்றைய பதிவில் பார்க்கலாம்.

நவக்கிரஹங்களில் முதலாவதான சூரியனின் சக்தி அளப்பரியது. சூரியனது இயக்கத்தாலன்றோ பயிர், உயிர் செழிக்கிறது?. சூரியன் இல்லாத ஒரு உலகம் கற்பனை கூடச் செய்ய முடியாதே?. இதே போல ஜோதிஷ சாஸ்திரத்தின்படி, மனித ஆயுளில் ஒவ்வொரு ராசியும் ஒரு குறிப்பிட்ட காலம் ஆதிக்கம் பெற்று இருக்கும். அந்தந்த திசையில் என்ன பலன்கள், அவற்றின் தாக்கம் மனித வாழ்வில் எப்படி இருக்கும் என்பது பற்றி எல்லாம் சுப்பையா வாத்தியார் விரிவாக அவரது வகுப்பறையில் பாடம் நடத்தி வருகிறார். சாதாரணமாக நல்ல உடல் ஆரோக்கியம், சுறுசுறுப்பு போன்றவற்றிற்கு சூரியனை வழிபடச் சொல்லியிருக்கிறார்கள் ஆன்றோர். சூரியனின் அருள் வேண்டுபவர்கள் இன்றும் ஆதித்திய ஹ்ருதயம் போன்றவற்றை பாராயணம் செய்யக் காண்கிறோம். மேலும் ஆவணி ஞாயிற்றுக் கிழமைகளில் சூரிய நமஸ்காரம் செய்வதும், விரதமிருப்பதும் இன்றும் பல இல்லங்களில் நடக்கிறது. இவை எல்லாம் சூரிய வழிபாட்டின் ஒர் அங்கம் தான். சூரியனை வழிபடுவதன் மூலம் நவக்கிரஹங்களின் பாதிப்பு குறையும் என்றும் ஒரு கருத்து இருக்கிறது.

இந்த பதிவில் பார்த்தது போல அகஸ்தியர் தாமிரபரணியில் இட்ட முதல் பூ கரை ஒதுங்கிய இடம் பாபநாசம். பாப-விநாசம் என்றும் பாப-நாசம் என்றும் கூறுவதிலேயே இந்த இடத்தின் பெருமை நமக்கு புலனாகிறது. நாம் செய்த பாபங்களை எல்லாம் நாசம்/நசியச் செய்து, நம்மை நல்வழிப்படுத்துகிறார் இங்கிருக்கும் இறைவன். பொதிகை மலையில் தோன்றும் தாமிரபரணி சமவெளியை அடைவது இந்த பாப-விநாசத்தில்தான் என்றும் கூறக் கேட்டிருக்கிறேன்.

இந்த இடத்தில்தான் அகஸ்தியரும் தவமிருந்து அம்மை-அப்பனின் திருமணக் கோலத்தைக் கண்டதாகச் சொல்லப்படுகிறது, அவருக்கு சிறு கோவிலும் இருக்கிறது. சிவ தம்பதியினர் தமது தெய்வீகத் திருமணத்தை அகஸ்தியருக்கு காண்பித்த இடம் பாபநாசம் என்று கூறுகின்றனர். இங்கு சிவலிங்க பிரதிஷ்ட்டை செய்து சூரியனை வழிபட்டிருக்கிறார் ரோமசர். இந்த இடத்தில் விராட புருஷன் தவம் செய்து ஈசன் அருள் பெற்றான் என்றும் சொல்கிறார்கள். பொதிகையின் புகழைக் கேள்விப்பட்ட நாரதரும் இங்கு வந்து, முக்களா விருக்ஷத்தின் கீழ் இருந்த சிவபெருமானை நோக்கி தவமிருந்ததாக கூறப்படுகிறது. நாரதர் ஒரு சமயம் இந்திர லோகத்தில் இந்திரனிடம் மலைகளின் மகத்துவம் பற்றி பேசுகையில் மேரு போன்ற மலைகள் எவ்வாறு மகத்துவம் பெற்றன என்று இந்திரன் கேட்க அப்போது மலைகள் தவம் புரிந்து ஈசனிடம் அருள் பெற்றன என்றும் அவ்வாறு அருள் பெற்ற மலைகள் மேரு, பொதிகை, கைலாயம் என்று கூறினாராம். மேலும் தேவேந்திரனே தனது பிரம்மஹத்தி தோஷம் தீர பாபநாசத்தில் வழிபட்டதாகக் கூறுகிறார்கள்.

இங்கு இருக்கும் ஈசனுக்கு முக்காளா-லிங்கர், பரஞ்சோதி-லிங்கர், பழமறை நாயகர், வைராச லிங்கர் பாபவிநாசேஸ்வரர் போன்ற பெயர்கள் வழங்கப்படுகிறது. இந்த கோவில் பாண்டியர்களால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கு மீன் இலச்சினை பொறிக்கப்பட்ட கல் மண்டபங்களும், பாண்டியன் விக்கிரம சிங்கன் கல்வெட்டுக்களும் இருப்பதாக தெரிகிறது. சுமார் 80 அடி உயரமுடைய ராஜ கோபுரம், கர்பகிரஹத்தைச் சுற்றி மூன்று பிரகாரங்களும், வசந்த மண்டபம், அர்த்த மண்டபம், திருமண மண்டபம் போன்றவற்றுடன் கூடிய ஆகம விதி வழுவாது கட்டப்பட்டிருக்கும் கோவில் என்று கூறுகின்றனர். இந்தக் கோவிலைக் கட்டிய பாண்டியன், விக்ரமசிங்கனது பெயரில் இந்த ஊர் விக்ரமசிங்க புரம் என்றும் அழைக்கப்பட்டதாம்.


பிற்கால பாண்டிய அரசர்களில் ஒருவர் சமணமதத்தை சார்ந்தவராக இருந்து சைவ பக்தர்களை மிகுந்த அல்லலுக்கு உள்ளாக்கினாராம். அப்போது சமணத்தை ஏற்காத, மிகுந்த சிவபக்தி உடைய குடும்பம் ஒன்று ஊரை விட்டு வெளியேறுகிறது. குடும்பத்தவர் பல இடங்களுக்குச் செல்லுகையில் குழந்தைகளான அண்ணன், தங்கை பிரிந்து விடுகின்றனர். பலகாலம் கழித்து காசியில் அவர்கள் சந்திக்கையில் கவரப்பட்டு தமது உறவுமுறை அறியாமல் அறியாமல் திருமணமும் முடித்துவிடுகின்றனராம். மணமான பிறகு தமது உறவின் முறையினை அறிந்து வருந்தி ஈசனிடம் முறையிட, அசிரீரியாக அவர்களுக்கு பாபவிமோசனம் சொல்லப்படுகிறது. அந்த அசிரீரியின் கூற்றுப்படி இருவரும் கரிய நிறத்தாலான ஆடை அணிந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராட வேண்டும் என்றும், எந்த தீர்த்தத்தில் நீராடுகையில் அவர்களது கரிய நிற ஆடை வெண்மை அடைகிறதோ அப்போது அவர்களது பாவம் விலகும் என்றும் அறிகின்றனர். இதன்படி எல்லா தீர்த்தங்களிலும் நீராடி வருகையில் பாபநாசத்தில் அவர்கள் கோவிலுக்கு எதிரில் உள்ள படித்துறையில் நீராடி எழுகையில் தமது ஆடைகள் வெண்மை அடைந்ததைக் கண்டு தமது பாபங்கள் நீங்கப் பெற்றதாக தல புராணம் கூறுகிறது.

இங்கு சித்திரைத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது என்று தெரிகிறது. ஒன்பதாம் நாள் தேரோட்டமும், பின்னர் தெப்பத் திருவிழாவும் நடக்கிறது. கோவில் எதிரில் இருக்கும் படித்துறையில் நீராடினால் கங்கையில் நீராடிய பலன் என்று கூறுகின்றனர் பெரியோர். சிவராத்திரியும் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது.


தாமிர பரணி மஹாத்மியத்தில் இந்த கோவிலுக்கு எதிரில் இருக்கும் படித்துறைக்கு பெயர் "இந்திர கீல தீர்த்தம்" என்று சொல்லப்பட்டிருக்கிறது. சித்திரை மாதத்தில் இங்கு முறைப்படி நீராடுபவர்களுக்கு ராஜசூய யாகம் செய்த பலன் கிடைக்குமாம். தென் தமிழகத்தில் இருக்கும் மக்களுக்கான சூரியனார் கோவிலாகத் திகழ்கிறது இந்த க்ஷேத்திரம் என்றால் மிகையில்லை.

இந்த ஊரின் சிறப்பாக எனக்கு கூறப்பட்டதை எழுதியிருக்கிறேன். படங்கள் கூகிளாண்டவரிடமிருந்து பெறப்பட்டவை, இணையத்தில் இவற்றை அளித்தவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். திருநெல்வேலிச் சீமையைச் சார்ந்தவர்கள் இன்னும் அதிக செய்திகளை அளித்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்.

Friday, November 14, 2008

துலா மாத காவிரி நீராடல், கடைமுகம், முடவன் முழுக்கு

மேஷம் முதல் தொடங்கும் பன்னிரண்டு ராசிகளில் சூரியன் சஞ்சரிக்கும் நாட்களை 12 மாதங்களின் பெயராகச் சொல்வது வழக்கம். அதில் துலா மாதத்தில் சூரியன் சஞ்சரிப்பதை துலா மாதம் என்கிறோம். இந்த மாதத்தில் தான் கங்கை, யமுனை, நர்மதா, சிந்து போன்ற நதிகள் எல்லாம் நமது காவேரி நதிக்கு வந்து தமது பாபங்களைத் போக்கிக் கொள்வதாக ஐதீஹம். ஒரு முறை கங்கா நதி பிரம்மாவிடம், எல்லோரும் தன்னிடம் வந்து தமது பாபங்களைத் போக்கிக் கொள்வதுபோல தான் எங்கே போய் தனது பாபங்களைப் போக்குவது என்று கேட்க, பிரம்மாவும், கங்கை முதலான எல்லா நதிகளும் துலா மாதத்தில் காவிரிக்குச் சென்று தமது பாபங்களை களையலாம் என்று கூறினாராம்.

இந்த ஐப்பசி மாதத்தில் மஹா நதிகளுக்கெல்லாம் மட்டுமல்லாது மனிதர்களுக்கும் பாப-விமோசனம் அருளுகிறாள் காவிரி. இந்த மாதத்தில் காவிரி நதியில் குறைந்த பக்ஷமாக மூன்று நாட்களாவது ஸ்நானம் செய்வது மிகுந்த நற்பலனைத் தரும் என்று கூறியுள்ளனர் ஆன்றோர். காவேரி மஹாத்மியத்திலும் இது பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.


ஐப்பசி 30 நாட்களும் காவேரியில் நீராடுவது சிறப்பென்றாலும், அமாவாசை போன்ற நாட்களில் மிகச் சிறப்பு. தென் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் கூட, காவேரிக்கரை சார்ந்த க்ஷேத்திரங்களுக்குச் சென்று சில தினங்கள் தங்கி இந்த ஸ்நானத்தை சங்கல்பத்துடன் செய்வது வழக்கம். பிரயாணிக்க இயலாத பெரியோர்கள் தங்கள் தினமும் நீராடும் நீர்நிலைகளில் காவிரியை பிரார்த்தித்து எழுந்தருளச் செய்து நீராடுகின்றனர். ஐப்பசி கடைசி நாளில் (நாளை), ஸ்நானம் செய்வதை "கடைமுழுக்கு/கடைமுகம்" என்கிறார்கள். மாயவரம் என்று கூறப்படும் மயிலாடுதுறையில் இருக்கும் சைவ-வைஷ்ணவ ஆலயங்களில் உள்ள மூர்த்திகளும் கடைமுகத்தன்று தீர்த்தவாரி செய்தருளுகிறார்கள்.




ஒருசமயம் முடவன் ஒருவன் மயிலாடுதுறையில் காவேரி ஸ்நானம் செய்ய நினைத்து, மாயூரத்திலிருந்து வெகுதூரம் இருக்கும் ஒர் ஊரிலிருந்து கிளம்பி வருகின்றான். அவன் தனது உடல் குறைபாட்டின் காரணமாக நிதானமாக வந்து மாயூரத்தை அடையும் நாளானது ஐப்பசி 30 நாட்களும் முடிந்து கார்த்திகை ஆரம்பித்து விடுகிறது. தன்னால் துலா ஸ்நானம் செய்ய முடியவில்லையே என்று மயூரநாதரிடத்து வருந்தி பிரார்த்திக்கிறான்.


அப்போது சர்வேஸ்வரனான, மயூரநாதன் அவனுடைய பிரார்த்தனைக்கு மனமிரங்கி, "இன்று தினம் கார்த்திகை முதல் தேதி ஆனாலும் பரவாயில்லை, காவிரியில் நீராடு, உனக்கு முழுமையான துலா ஸ்நான பலன் கிட்டும்" என்று அசிரீரியாக அருளுகிறார். அத்துடன் இல்லாது, கார்த்திகை முதல் நாள் யார் காவிரி ஸ்நானம் செய்தாலும் அது துலா மாதம் முழுவதும் ஸ்நானம் செய்த பலனை அளிக்கும் என்றும் கூறி அனுக்ரஹிக்கிறார். இந்த நிகழ்ச்சியின் காரணமாகவே கார்த்திகை முதல் நாள் "முடவன் முழுக்கு" என்ற பெயர் பெற்றது.


மருத் வ்ருதே! மஹாதேவி மஹாபாகே மநோஹரே
ஸ்ரீகாவேரி நமஸ்துப்யம் மம பாபம் வ்யபோஹய


[பரமேஸ்வரனின் சிரஸில் இருர்ந்து பூமிக்கு வந்த மஹா பாக்யம் உடையவளே, பார்க்கப் பார்க்க தெவிட்டாத உருவம் கொண்டவளே, ஹே காவேரி! உன்னை நமஸ்கரிக்கிறேன், எனது பாபங்களைப் போக்கியருள்வாய்]

என்பதாக பிரார்த்தனை செய்து நாமும் முடிந்தால் ஒரு தினமாவது, அதுவும் இயலாத பக்ஷத்தில் மனதால் காவேரி நதியில் நீராடி இறையருளைப் வேண்டுவோமாக.

Wednesday, November 5, 2008

சமர்த்த ராமதாஸர் - 1

கலியுகத்தில் பக்தி மார்க்கத்தை கொண்டு இறைவனடி சேர்வதே எளிதென்று பல மஹான்களும் சொல்லியிருக்கிறார்கள். இப்படிச் சொல்லியதால் மற்றவை பயனற்றது என்று பொருளல்ல. இந்த யுகத்தில் கர்ம-ஞான மார்க்கங்கள் எளிதில் பின்பற்றக்கூடியவையாக இருக்காது என்பதால் மட்டுமே கலியில் பக்தியை அடிப்படையாக வைத்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார்கள். ஸ்வகர்மாவினை விடாது செய்து அத்துடன் பரம பவித்ரமான பக்தியை ஆஸ்ரயிக்க வேண்டும் என்பதுதான் பெரியவர்கள் சொல்லிச் சென்றது. இந்த கருத்தை அடிப்படையாகக் கொண்டே போதேந்திரர், திருவிசை ஐயாவாள் என்று சில நாம பக்தி சிரோன்மணிகளை இங்கு கண்டோம். இன்று நாம் காண இருப்பது சமர்த்த ராமதாசர். தியாகராஜர், திருவிசையார், போதேந்திரர், மற்றும் சதாசிவ பிரம்மேந்திரர் போன்றே இவரும் ராம பக்தியில் திளைத்தவர். ராமநாமத்தை பலகோடி முறை ஜபித்து அதன் மூலம் ராமசந்திர மூர்த்தியைப் பிரத்யக்ஷமாக கண்டவர். அவரது வரலாற்றினை அறியாலாமா? [ராமதாஸர் பற்றி திராச எழுத ஆரம்பித்து அப்படியே வைத்திருக்கிறார். அவர் ராமதாசர் பாடல்களை/பஜனைகளைப் பற்றி எழுத இருக்கிறார் என்றே நினைக்கிறேன், இது ராமதாசர் வரலாறு மட்டுமே]



பாரதத்தை அன்னியர்கள் ஆக்ரமித்த 17ஆம் நூற்றாண்டில் தோன்றியவர் ராமதாஸர். இவர் மஹாராஷ்ட்ராவில் உள்ள சதாரா என்னும் இடத்திற்கு அருகில் இருக்கும் ஜம்ப் என்னும் கிராமத்தில் பிறந்தவர். சூர்யாஜி பந்த்-ரேணுபாய் என்னும் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக 1605ஆம் ஆண்டு ராமநவமி தினத்தில் பிறந்தவர். தாய்-தந்தையர் இவருக்கு வைத்த பெயர் நாராயணன் என்பது. சிறுவயதில் இவரது உடலில், பின்பகுதி சற்று நீண்ட வால் போன்ற பாகம் இருந்ததாம்.ன் பின்னர் வயதான போது அது மறைந்துவிட்டதாக கூறுப்படுகிறது. பிற்காலத்தில் இவரை ஸ்ரீ ஹனுமானது அம்சம் என்று கூற இதுவும் ஒரு காரணம். சிறு வயதில் தந்தையை இழந்தாலும், அவரது தாயும் அண்ணனும் இவருக்கு காலத்தில் உபநயனம் போன்றவற்றைச் செய்து வைத்து வளர்த்து வந்தனர்.

சிறுவயதிலேயே தமக்கு காயத்ரி மந்திரம் தவிர வேறு ஏதேனும் ஒரு மந்திரம் உபதேசம் செய்து வைக்க வேண்டும் என்று தனது அண்ணாவிடம் கேட்க, அவரும் காலம் வருகையில் உபதேசம் செய்து வைப்பதாகக் கூறியிருக்கிறார். தனது மன உந்துதலால் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஹனுமன் கோவிலில் நாட்கணக்கில் அன்ன-பானம் ஏதும் இன்றி தியானத்தில் அமர்ந்து விடுகிறார். அப்போது ஹனுமனது தரிசனம் மட்டுமன்றி அவரிடமிருந்தே ஸ்ரீராம மந்திரம் உபதேசமாகிறது. இந்த நிகழ்ச்சிக்குப்பின் நாராயணனது செயல்களில் அதிக மாற்றம் தெரிய ஆரம்பிக்கிறது.

வேத பாராயணம், போன்ற நேரங்கள் போக மற்ற நேரங்களில் ஹனுமன் சன்னதியில் ஆழ்நிலை தியானத்தில் இருப்பதும், எப்போதும் ராமநாம ஜபமுமாக இருப்பதைக் கண்ட சகோதரர் நாராயணனுக்கு திருமணம் செய்விக்க முடிவு பண்ணுகிறார். அண்ணனின் மனத்தில் இருக்கும் எண்ணத்தை அறிந்த நாராயணன் வீட்டை விட்டு முழுதாக வெளியேறி நாஸிக் அருகில் ஒரு கிராமத்தில் குடில் அமைத்துக் கொண்டு, பிக்ஷை எடுத்து வாழத் தொடங்குகிறார்.





இவ்வாறு தீவிர பிரம்ஹசரிய வாழ்கை வாழும் காலத்தில் மஹாமந்திரமான காயத்ரியையும், ஸ்ரீராம த்ரயோதசாக்ஷரி (ஸ்ரீராம் ஜயராம் ஜயஜயராம்) மந்திரத்தையும் முன்று கோடி முறை ஜபித்து அதன் மூலம் ராமச்சந்திர மூர்த்தியின் தரிசனம் பெறுகிறார். ஸ்ரீ ராமரின் உத்தரவின் பேரிலேயே பாரதம் முழுவதும் பயணப்பட்டு த்ரயோதசாக்ஷரி மந்திரத்தை பரப்ப முடிவு செய்கிறார். இந்த தரிசனத்துக்குப் பின்னரே அவருக்கு சமர்த்த ராமதாஸ் என்ற பெயர் வழங்கலாயிற்று. தனது குருவான ஸ்ரீ ஹனுமனுக்கு கோவில் கட்டி அதனருகிலேயே தங்கி வந்தார்.


இவர் யாத்திரையில் இருந்த போது ஒரு கிராமத்தில் ஒரு வாலிபன் அகால மரணமடைகிறான். அவன் மனைவி ராமதாசரை கண்டு கண்ணீருடன் வணங்க, இவரும் அவளது நிலையறியாது அவளுக்கு பிள்ளைப் பேற்றினை ஆசிர்வாதிக்கிறார். திகைத்துப் போன பெண் தன் நிலையைக் கூறி தாம் தன் கணவனுடன் உடன்கட்டை ஏறவே சென்றுகொண்டு இருப்பதாகக் கூறுகிறாள். ஸ்வாமிகளோ, ஸ்ரீ ராமர் அருளால், இந்த ஜன்மத்திலேயே உனக்கு பிள்ளை பிறக்கும் என்று கூறுகிறார். பின்னர் அந்த பெண்ணுடன் தானும் சுடுகாட்டுக்குச் சென்று மந்திர உச்சாடனம் செய்து தீர்த்தத்தை சடலத்தின் மீது தெளிக்கிறார். அந்த ஆண்மகன் தூக்கத்தில் இருந்து முழிப்பது போல எழுகிறான். இருவரும் ராமதாசரை வணங்கிச் செல்கின்றனர். இவர்களுக்குப் பிறக்கும் மகனே பிற்காலத்தில் உத்தவர் என்ற பெயர் பெற்று ராமதாசரின் முதன்மைச் சீடராகிறார்.

Sunday, November 2, 2008

பாலசுப்ரமண்யம் பஜேஹம்.....



ஸ்ரீ முத்துஸ்வாமி திக்ஷிதர் பற்றி நாம் எல்லோரும் அறிவோம். அவருக்கு முருகப் பெருமானிடமான பக்தி சிறப்பானது. சுப்ரமண்ய-ஸ்வாமியே தீக்ஷதருக்கு ஷோடசி உபதேசம் செய்து வைத்ததாக கூறுவர். தீக்ஷதரது "ஸ்ரீ சுப்ரம்மண்யாய நமோஸ்துதே" என்னும் க்ருதி நாமறிந்ததே. இந்த வரிசையில் தீக்ஷதர் பண்ணிய இன்னொரு க்ருதி "பாலசுப்ரமண்யம் பஜேஹம்" என்னும் சுருட்டி ராகத்தில் அமைந்த க்ருதியை இன்று பார்க்கலாம். குஹனை தமது குருவாகக் கொண்ட தீக்ஷதர், கமலாம்பா நவாவரண க்ருதிகள் பண்ணும் போது விநாயகரை வணங்கி "மகாகணபதி வரதுமாம்" என்று யானை முகத்தானை வணங்கியபின் தமது குரு வணக்கமாக பாலசுப்ரமண்யம் பஜேஹம் என்று தொடங்கும் இந்த க்ருதியை பண்ணியதாக அறிகிறோம். இந்த வடமொழி க்ருதியையும் அதன் பொருளையும் பார்க்கலாமா?

பாலசுப்ரமண்யம் பஜேஹம் பக்தகல்பபூருஹம்
ஸ்ரீ பால சுப்ரமண்யம் பஜேஹம்

[பால சுப்ரமண்யனை பஜனை செய்கிறேன். பக்தர்களுக்கு கல்பவ்ருக்ஷத்தை போல வேண்டியதெல்லாம் தருபவரான ஸ்ரீ பாலசுப்ரமண்யனை பஜனை செய்கிறேன்]

நீலகண்டஹ்ருதாநந்தகரம் நித்யஸுத்தபுத்த முக்தாம்பரம்
ஸ்ரீபால சுப்ரமண்யம் பஜேஹம்

[நீலகண்டனான பரமசிவனது மனதில் ஆனந்தத்தை உருவாக்குபவரும், நித்யமானதும் (நித்ய), பரிசுத்தமானதும் (ஸுத்த), அறிவுமயமானதும் (புத்த), தளைகளற்றதும் (முக்தம்), ஆகாச வெளியாகவும் (அம்பரம்) விளிக்கப்படும் பரபிரம்மான பாலசுப்ரமண்யனை பஜனை செய்கிறேன்]


வேலாயுததரம் ஸுந்தரம் வேதாந்தார்த போதசதுரம்
பாலாக்ஷகுருகுஹாவதாரம் பராசக்தி ஸுகுமாரம்தீரம்

[வேல் என்னும் ஆயுதத்தை ஏந்தியவரும், வடிவழகரும், வேதங்களின் மூலப்பொருளான ப்ரணவ மஹா-மந்திரத்தை உபதேசிக்கக்கூடிய நிபுணத்துவம் உடையவரும், பரமேஸ்வரனது நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றி குரு குஹனாக அவதாரம் செய்தவரும், அன்னை பராசக்தியின் அழகிய திருக்குமரனும், வீர-தீர பராக்ரமம் கொண்டவரான பாலசுப்ரமண்யனை பஜிக்கிறேன்]

பாலிதகீர்வாணாதி ஸமூஹம் பஞ்சபூதமய மாயாமோஹம்
நீலகண்டவாஹம் ஸுதேஹம் நிரதிசயாநந்த ப்ரவாஹம்


[தேவர்கள் முதலான நல்லோர்களைக் காப்பாற்றுபவரும், பஞ்சபூதங்கள் என்ற மாயையால் ஜீவர்களை மயங்கச் செய்பவரும், மயிலை வாஹனமாகக் கொண்டவரும், அழகிய மேனியுடையவரும். நிகரில்லாத பரமானந்தப் பெருவெள்ளத்தை பெருக்கெடுக்கச் செய்பவருமான சுப்ரமண்யனை பஜிக்கிறேன்]

ராகம் : சுருட்டி : ஆதி தாளம் : பாடியவர் சீதா ராஜன் அவர்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA



சுப்ரம்மண்யோஹம்!
சுப்ரம்மண்யோஹம்!
சுப்ரம்மண்யோஹம்!.

Thursday, October 16, 2008

ஸ்ரீ வித்யாரண்யர்



14ஆம் நூற்றாண்டில் ஆந்திர தேசத்தில் உதித்தவர் ஸ்ரீ வித்யாரண்யர். ஹரிஹரர் என்னும் அரசன் விஜயநகர சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க பக்க பலமாக இருந்து, அந்த ஸாம்ராஜ்யத்தின் ஆஸ்தான வித்வானாகவும் விளங்கியவர் இவர். இவரது பூர்வாசிரமப் பெயர் மாதவர் என்பதாகும். வித்யாரண்யர் என்ற பெயரில் இன்னும் சில யதிஸ்ரேஷ்டர்கள் இருந்துள்ளதால், இவரை ஸாயனர் என்று நூல்கள் குறிப்பிடுகின்றன. இவர் சார்வாக மதத்தில் ஆரம்பித்து படிப்படியாக அடுத்த உயரத்தில் வைத்து கடைசியாக அத்வைத மதத்தை அமைத்து ஸர்வதர்சனம் ஓர் நூல் எழுதிச் சிறப்பித்துள்ளார். இவர், ஸ்ரீகண்டர் என்னும் மஹானிடம் மந்த்ர சாஸ்திர்ங்களையும், விஷ்ணு பட்டோபாத்யாயர் என்பவரிடம் வேதங்களையும் கற்றவர். ஸ்ரீர் பாரதீ தீர்த்தர் என்னும் சன்யாசிக்கு பணிவிடை செய்து அவர் அனுக்கிரஹம் பெற்றவர். ஹரிஹரனுக்கும், அவனது மகனான புக்கனுக்கும் மந்திரியாக, குருவாக இருந்து தமது ஆத்மானுபவத்தாலும், மந்த்ர சக்தியாலும் விஜயநகர சாம்ராஜ்யத்தில் தர்ம பரிபாலனம் தழைக்கச் செய்தது மட்டுமல்லாது தென் தேசம் முழுவதிலும் பக்தி, தர்மம் போன்றவை செழிக்கச் செய்தவர்.



இவர் பல நூல்கள் எழுதியிருக்கிறார். அவற்றில் ஒன்று பராசர-மாதவீயம் என்பது. அதில் இவர் தமது குரு என்று பலரையும் குறிப்பிட்டுள்ளார். இவர் ஜனகராஜனைப் போல பல ஆச்சார்ய புருஷர்களிடம் பயின்றவர். ஸ்ரீ வித்யா தீர்த்தர், ஸ்ரீ சங்கரானந்தர் போன்றவர்களையும் தமது க்ரந்தங்களில் குரு என்று போற்றி வணங்கியுள்ளார். இவர் தாம் எழுதிய க்ரந்தங்களில் தமது முத்திரையாக 'கஜாநாந' என்ற நமஸ்கார ஸ்லோகத்தை வைத்திருக்கிறார். இவரது நூல்கள் சாதாரணமாக, ஸ்ருதி, அதன் வியாக்கியானம், தொடர்புடைய ஸ்ம்ருதி வியாக்கியானம், பின்னர் தொடர்ந்து மீமாம்ஸையின்படியான வியாக்கியானம் என்று மூன்றுவழிகளிலும் சொல்லுகிறார். இந்த முறை ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதாள் காட்டிய வழி.






ஸ்ரீ வித்யா தீர்த்தரிடம் சன்யாசம் ஏற்று ஸ்ரீ வித்யாரண்யர் என்று பெயருடன் விளங்கினார். இந்த வித்யா தீர்த்தரே, வித்யா சங்கரர் என்றும் அழைக்கப்படுபவர். இவரது அதிஷ்டானம் என்று கூறப்படுவதே சிருங்கேரியில் சாரதை கோவிலுக்கு அருகில் இருக்கும் கோவில். இந்த கோவிலை வித்யாரண்யரே தமது குருவுக்காக அமைத்தார் என்று கூறுகின்றனர். (அந்த கோவில் பற்றியும், ஸ்ரீ வித்யாசங்கரர் பற்றிம் சொல்வதற்கு நிறைய இருக்கிறது. அதனை பிறகு பார்க்கலாம்.) இவர் எழுதிய நூல்கள் பல. ஸ்ருதியில் கர்மகாண்டத்துக்கும், ஞானகாண்டத்துக்கும் முறையே வேத பாஷ்யம், அநூபூதி ப்ரகாசனம் என்று வியாக்கியானம் எழுதியிருக்கிறார். இந்த புஸ்தகங்கள் முன்பு சிருங்கேரி மடத்தின் மூலமாக பதிப்புக்கு வந்துள்ளது. இதே போல ஸ்ம்ருதிகளில், பராசரஸ்ம்ருதிக்கும், பகவத்கீதை, யோகவாசிஷ்டம் போன்றவற்றுக்கும் வியாக்கியானம் எழுதியுள்ளார்.

இவற்றைத் தவிர, "ஜைமினீய ந்யாயமாலா, வைய்ஸிக ந்யாயமாலா" என்று மீமாம்ஸையிலும் க்ரந்தங்கள் செய்துள்ளார். மேலும் 15 ப்ரகரண நூல்கள் எழுதியுள்ளார். இவரது இந்த 15 ப்ரகரணங்களே "பஞ்சதசீ" என்று கூறப்படுகிறது (மூக பஞ்சதசீ வேறு, இது வேறு). உபநிஷதங்களில் ப்ருஹதாரண்ய உபநிஷதத்துக்கு பாஷ்யமும், "விவரண ப்ரமேய ஸங்க்ரஹம்" என்று ப்ரம்ம ஸூத்திர பாஷ்யமும் எழுதியுள்ளார். ஜ்யோதிஷ சாஸ்த்திரத்திற்கு "காலமாதவம்" என்றும், ஸங்கீத சாஸ்த்ரத்திற்கு "ஸங்கீத ஸாரம்" என்றும். நூல்கள் எழுதியிருக்கிறார். இவருக்குப் பின் வந்த பெரிய நூலாசிரியர்கள் பலரும் இவரது க்ரந்தங்களை மேற்கோள் காட்டி எழுதியுள்ளனர். இவர் எழுதிய காவியமே "மாதவீய சங்கர விஜயம்", இது பகவத்பாதாளுடைய திவ்ய சரித்திரத்தைச் சொல்கிறது.




அவித்யாரண்ய காந்தாரே ப்ரமதாம் ப்ராணிநாம் ஸதா

வித்யா மார்கோபதேஷ்டாரம் வித்யாரண்ய குரும் பஜே!


அவித்யை என்னும் காட்டில் வழிதெரியாமல் அலையும் எல்லோருக்கும் நல்ல மார்க்கத்தின் மூலம் எப்போதும் வழிகாட்டும் ஆச்சார்யார் ஸ்ரீ வித்யாரண்யரை சரணடைகிறேன்.

Thursday, October 9, 2008

விஜய தசமி - *நவராத்திரி சிறப்பு இடுகை - 12*



மாணிக்க வீணா முபலாலயந்தீம்
மதாலஸாம் மஞ்ஜுல வாக்விலாஸாம்
மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம்
மாதங்க கன்யாம் மனஸாஸ்மராமி

மாணிக்கத்தாலான வீணையை வாசிப்பவள் (இந்த வீணைக்கு மஹதி என்று பெயர்), அழகான வாக்கு உடையவள், மஹேந்திர நீலம் போன்ற காந்தி உடையவள் மதங்கரின் பெண்ணாகப் பிறந்தவள், அவளுக்கு நமஸ்காரம்.(சியாமளா தண்டகம்)

அன்னை சரஸ்வதீயின் இன்னொரு ரூபமே லகு-சியாமளா எனப்படும். இவளது அருள் இருந்தால் எல்லா கலைகளும் லகுவாக சாதகனுக்கு அப்யாசம் ஆகும். இவளே வாக்வாதினி என்றும், சாரதா என்றும் கூறப்படுபவள். குருவினிடத்து சந்தேகங்களை நேரில் கேட்டு தெரிந்து கொள்வதே வாக்வாதினி என்ற வார்த்தைக்குப் பொருள். குருநாதர்கள் சில அரிய விஷயங்களை பலதடவை கேட்டாலன்றி உபதேசிக்க மாட்டார்கள். மேலும் சில விஷயங்களை பலமுறை கேட்டு/படித்தால் தானே மனதில் வாங்கிக் கொள்ள முடிகிறது. ஆகையால் வாக்வாதினி என்பதற்கு குருவாக இருந்து பலமுறை சொல்லிப் புரியவைப்பவள் என்றும் அர்த்தம் கொள்ளலாம்.

இப்படி பலவாறு துதிக்கப்படும் சரஸ்வதி தேவியின் கருணாகடாக்ஷம் நமக்கு எல்லாவற்றையும் அருளக்கூடியது. இந்த விஜய தசமி நாளில் நாம் துவங்கும் எல்லா புதிய முயற்சிகளுக்கும், குறிப்பாக வித்யாரம்பம் போன்றவை பல மடங்கு அபிவிருத்தி ஆகி வெற்றியைத் தரும் என்பது ஆன்றோர் வாக்கு. குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது, (அ) வீட்டிலேயே வித்யாரம்பம் செய்வது, நடனம், சங்கீதம், வீணா, வேணு, வயலின் போன்றவற்றைக் கற்க ஆரம்பித்தல் நலம். முன்பே கற்க ஆரம்பித்தவர்களும் முதல் நாள் சரஸ்வதி பூஜையில் வைக்கப்பட்ட புத்தங்கள், வாத்தியக் கருவிகள், மற்றும் தமது தொழிலுக்கான கருவிகளை விஜய தசமி பூஜை முடிந்து உபயோகம் செய்தல் நலம் என்று கூறப்படுகிறது. இந்த நல்ல நாளில் தமது குருவுக்கு வந்தனங்கள் செய்து குரு-தக்ஷிணை அளித்து வணங்குதல் மரபு.

பஞ்ச பாண்டவர்கள் காட்டில் வசிக்கும் காலத்தின் கடைசி ஒரு வருடம் அக்ஞாத வாசத்தின் போது வன்னி மரப் பொந்தில் அர்ஜுனனது காண்டீபம் முதலான ஆயுதங்களை யாருக்கும் தெரியாது ஒளித்து வைக்கின்றனர். துரியோதனன் இவர்களை வெளிப்படுத்த முயலும் போது உத்தரனை முன்னிருத்திக் கொண்டு வன்னி மரப் பொந்தில் இருக்கும் ஆயுதங்களை எடுத்து போரிட்டு கெளரவர்களை வெல்கிறான் விஜயன். அவன்
இவ்வாறு அந்த போரில் வெற்றி பெற்ற நாளே விஜய தசமி என்றும் கூறப்படும். இந்நாளில் அவரவர் தமது தொழிலுக்கு மூலதனமான ஆயுதங்களை வைத்து பூஜை செய்வதும் இதனால் தான்.

இவ்வாறு சிறப்புற்ற இந்த நல்ல நாளில் அன்னை பராசக்தி மகிஷன் உள்பட்ட எல்லா அசுரர்களையும் வென்று ராஜ்யாபிஷேகம் செய்து கொண்டாள் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறாக ராஜ்ய லக்ஷ்மி, பராசக்தி, மற்றும் ஞானஸ்வரூபியான வாகீஸ்வரி போன்ற தேவதைகளை வணங்கி அவர்களை பலவிதங்களிலும் ஆராதித்து அவர்களது அருளை வேண்டுவோம். வித்யைகள் பலவற்றை நமக்கு கற்றுக் கொடுத்த ஆச்சார்யர்களுக்கும், குருவிற்கு இந்த நன்னாளில் அனந்த கோடி நமஸ்காரங்கள் செய்து அவர்களது அருளை, ஆசிகளை வேண்டுவோம்.

அன்னைக்கு பூ மாலைகளும், பாமாலைகளும் சூட்டி அவளருளை வேண்டுவது நமது வழக்கம். அதன்படி இந்த பதிவுடன் நவராத்திரி சிறப்புப் பதிவுகள் முடிவுக்கு வரும் இவ்வேளையில் அவளருள் வேண்டி பாமாலை சாற்றியுள்ளார் நமது கவிக்கா என்று அழைக்கப்படும் கவிநயா. அவரது கவிமாலையைக் கீழே தருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அவரிடம், அவர் எனது இந்த வலைப்பூவில் அன்னைக்கு கவிதாஞ்சலி செய்ய வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுத்தவுடன், தயங்காது எழுதிக் கொடுத்து, பல மாற்றங்களையும் செய்தார். கவிநயா அக்காவுக்கும், மஹாத்மியம் அருளிய தம்பி கணேசன் மற்றும் இந்த 12 நாளும் அன்னையின் சிறப்புக்கள் பலவற்றை எழுத காரணமான எல்லா நண்பர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நண்பர்கள் எல்லோருக்கும் பராம்பிகை சகல செளபாக்யங்களையும் அருள இந்த நன்னாளில் பிராத்திக்கிறேன்.


மகிஷனின் மமதையை அழித்திட உதித்திட்ட
மங்கையர்க் கரசி மாசக்தி!
விகசிக்கும் ஒளியென விண்ணிலே சுடரென
என்னுள்ளே ஒளிர்ந்திடும் ஸ்ரீசக்தி!
தேவர்கள் பணிந்திட மூவரும் போற்றிட
ஆயுதம் தரித்திட்ட ஆதிசக்தி!
நாவலர் பாவலர் நயமுடன் போற்றிடும்
நாரா யணியே நவசக்தி!

அலைகட லெனஅருள் பொழிந்திடு வாய்
அலைமகளே எழில்மிகு அலர்மகளே!
முழுநில வெனஒளிர் செழுமல ரழகே
முகில்வண்ணன் மார்பினில் உறைபவளே!
வாரிதி யினிலே வந்துதித் தவளே
வானவர் வணங்கிடும் வசுந்தரியே!
நீள்நிலம் காத்திடும் நாய கியேநில
மகளே பங்கயத் திருமகளே!

அறிவிருள் நீக்கி அருள்கலை மகளே
கலைகளின் ராணி கலைவாணி!
நெறியினில் நிறுத்தி பிணியினை போக்கும்
பிரம்மனின் சகியே எழில்வேணி!
வெண் டாமரையில் வீற்றிருக் கும்பெண்
தாமரையே எங்கள் பாமகளே!
ஒன்றாய் பலவாய் திருவாய் திகழ்ந்தென்றும்
நன்றே நல்கிடும் நாயகியே!

அன்னை சக்திஉந்தன் அடிபணிந் தோமே
அம்பிகை யுன்திரு வடிசரணம்!
பண்ணில் உனைவைத்து பாடிவந் தோமே
பர்வத புத்திரி பதம்சரணம்!
விண்ணில் உறைபவரும் போற்றிப் பணிகின்ற
விடைவா கனன்துணை யேசரணம்!
மண்ணில் உழல்கின்ற மாந்தருக் கருளிடும்
மங்கையுன் மலரடி கள்சரணம்!

--கவிநயா

Wednesday, October 8, 2008

சரஸ்வதியை வணங்குவோம் - *நவராத்திரி சிறப்பு இடுகை - 11*

வித்யைகளுக்கு அதிபதியாகிய சரஸ்வதி தேவியை பூஜை, ஜபம், பாராயணம் ஆகியவற்றால் ஆராதித்து நன்மையடைய வேண்டிய நாள் சரஸ்வதீ பூஜை. "மூலேநா ஆவாஹயேத் தேவீம் ச்ரவணேந விஸர்ஜயேத்" என்பதாக மூலா நக்ஷத்திரத்தன்று பூஜையில் புத்தகங்கள், வாத்தியங்கள், செய்யும் தொழிலுக்கான உபகரணங்கள் சரஸ்வதி பிரதிமை போன்றவற்றை பூஜை செய்யுமிடத்தில் ஓர் பீடம்/பலகையில் வைத்து பூஜிக்க வேண்டும். இவ்வாறு மூலா நக்ஷத்திரத்தில் சரஸ்வதி ஆவாஹனம் செய்ய இயலாதவர்கள், நவமியன்று விரிவாக பூஜை செய்து, மறுநாள் தசமியன்று புன:பூஜை செய்து முடிக்க வேண்டும். சரஸ்வதீக்கான இந்த விசேஷ நவமியை மஹா-நவமி என்று கூறப்படுகிறது.


நாத்யாபயேந்ந ச விஸேத் நா அதீயீத கதாசந
புஸ்தகே ஸ்தாபிதே தேவீம் வித்யாகாமோத் விஜோத்தம

என்பதாக புஸ்தகங்களில் ஆவாஹனம் செய்துவிட்ட பிறகு எந்த வித்யையும் புதிதாக கற்கவும், கற்பிக்கவும் கூடாது என்பது சம்பிரதாயம். இதனால்தான் சாதாரண நாட்களில் குழந்தைகள் பாடம் படிக்க/எழுதாத போது இன்று என்ன சரஸ்வதி பூஜையா? என்று கேள்வி கேட்பது வழக்கமாயிற்று. அக்ஷர வடிவமான ஸரஸ்வதி இந்த பூஜையால் சந்தோஷமடைந்து நமக்கு நல்லறிவு, நினைவாற்றல் போன்றவற்றை அளித்துக் காப்பார். நல்ல கல்வி, அறிவு, சொல்வன்மை, செல்வம், பதவிகள், விருதுகள் போன்றவற்றை பெற்றுத்தரும் சரஸ்வதியை போற்றும் விதமாக தேவகுரு பிரஹஸ்பதியால் இயற்றப்பட்ட ஒரு ஸ்தோத்ரம் பத்ம புராணத்தில் இருக்கிறது. அதனை இன்று பார்க்கலாம்.

சரஸ்வதீம் நமஸ்யாமி சேதனானாம் ஹ்ரிதிஸ்திதாம்
கண்டஸ்த்தாம் பத்மயோநேஸ்து ஹிமாகர ப்ரியாஸ்பதாம்

அனைத்து உயிர்களின் இதயத்திலும், தனது கணவரான பிரம்ம தேவனது கழுத்தில் இருப்பவளும், சந்திரனுக்கு எப்போதும் பிரியமுள்ளவளுமான ஸ்ரீ சரஸ்வதி தேவியை நமஸ்கரிக்கிறேன்.

மதிதாம் வரதாம் ஸுத்தாம் வீணாஹஸ்த வரப்ரதாம்
ஐம் ஐம் மந்த்ரப்ரியாம் ஹ்ரீம் ஹ்ராம் குமதி த்வம்ஸ காரிணீம்

நல்லறிவினையும், உயர்ந்தவையெல்லாம் தருபவளும், தூய்மையானவளும், கையில் வீணையுடன் விரும்பிய அனைத்தையும் தருபவளும், ஐம் என்னும் பீஜம் போன்ற மந்திரங்களில் ப்ரியமுள்ளவளும், தரம் தாழ்ந்த புத்தியுடையவர்களை நாசம் செய்பவளாகவும் விளங்கும் சரஸ்வதி தேவியை நமஸ்கரிக்கிறேன்.


ஸுப்ரகாசாம் நிராலம்பாம் அக்ஞான திமிராபஹாம்
ஸுக்லாம் மோக்ஷப்ரதாம் ரம்யாம் ஸுபாங்காம் ஸோபனப்ரதாம்

நல்ல ஒளியாக இருப்பவளும், அஞ்ஞானம் என்னும் இருளைப் போக்குபவளும், வெண்மையானவளும், வீடு பேறு அருளுபவளூம், மிக அழகான அங்கங்களை உடையவளும், எப்போதும் மங்களத்தை அருளுபவளுமான சரஸ்வதி தேவியை நமஸ்கரிக்கிறேன்.

பத்மோபவிஷ்டாம் குண்டலினீம் ஸுக்லவர்ணாம் மனோரமாம்
ஆதித்ய-மண்டலே லீனாம் ப்ரணமாமி ஹரிப்ரியாம்

தாமரையில் அமர்ந்திருப்பவளும், சிறந்த காதணிகளை அணிந்தவளும், வெண்மையான நிறத்தவளும், மனதிற்கு சந்தோஷத்தை அருளுபவளூம், ஸுர்ய மண்டலத்தில் வசிப்பவளும், மஹாவிஷ்ணுவுக்குப் பிரியமானவளுமான சரஸ்வதியை நமஸ்கரிக்கிறேன்

இதி மாஸம் ஸ்துதானேன வாகீஸேன மஹாத்மனா
ஆத்மானம் தர்ஸயாமாஸ ஸுரதிந்து ஸமப்ரபாம்
ஸரஸ்வத்யுவாச:, வரம் வ்ருணீஷ்வ பத்ரம் தே யத்தே மனஸிவர்த்ததே


இவ்வாறாக பிருஹஸ்பதியால் ஒரு மாதம் ஸ்தோத்திரம் செய்யப்பட்ட சரத்கால சந்திரன் போன்ற ஒளியுடன் கூடிய வாக்தேவி அங்கு பிரத்யக்ஷமாகிறாள். அப்போது அவள், "உனக்கு மங்களம் உண்டாகட்டும், உனது விருப்பத்தை கேள்" என்று கூற;

ப்ருஹஸ்பத்யுவாச:, யதி மே தேவி ஸ்ம்யக் ஞானம் ப்ரயச்சமே

பிருஹஸ்பதியும், "ஹே தேவி எனது விருப்பங்கள் எல்லாம் நல்ல அறிவு மட்டுமே, அதை அருளுங்கள்" என்கிறார்.

ஸரஸ்வத்யுவாச, இதம் தே நிர்மலம் க்ஞானம் அக்ஞான திமிராபஹம்
ஸ்தோத்ரேணானேன மாம் ஸ்தெளதி ஸம்யக் வேதவிதோ நர:
லபதே பரமம் க்ஞானம் மம துல்ய பராக்ரமம்
த்ரிஸந்த்யம் ய: படேந்நித்யம் யஸ்த்விதம் ஜபதே ஸதா
தேஷாம் கண்டே ஸதா வாசம் கரிஷ்யாம ந ஸம்ஸய:

சரஸ்வதியும், "அஞ்ஞானம் என்னும் இருளைப் போக்கும் தூய ஞானத்தை உனக்குத் தருகிறேன். மற்றும் இந்த ஸ்லோகத்தை படிப்பவர்கள் உயர்ந்த ஞானத்தை அடைவர். காலை-மதியம்-மாலை ஆகிய மூன்று வேளையும் யார் பாராயணம் செய்கிறார்களோ அவர்கள் வாக்கில் நானிருப்பேன்" என்கிறார்.

இவ்வாறு சகல வித்யைகளையும், ஞானத்தையும் அருளும் அன்னை மஹா-சரஸ்வதியின் சரணாரவிந்தங்களைப் பணிந்து, ஞானதேவி நம் சொல், செயல், சிந்தனைகளை சீர்படுத்த வேண்டுவோமாக.

சரஸ்வதீ நமஸ்துப்யம் வரதே காம-ரூபிணீம்
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர்பவதுமே சதா

Tuesday, October 7, 2008

திதி நித்யா - *நவராத்திரி சிறப்பு இடுகை - 10*


"பிரதிபன் முக்ய ராகாந்த திதி மண்டல பூஜிதா" என்பது லலிதா சஹஸ்ரநாமத்தில் ஒரு நாமம். பிரதிபன் என்பது பிரதமையை குறிக்கும் சொல். ராகா என்பது பூர்ணிமையை குறிப்பது. பிரதமை முதல் பூர்ணிமை வரையில் மேலும் பூர்ணிமை கழிந்த பிரதமை முதல் அமாவாசை வரையிலும் வரும் திதிகளாக பூஜிக்கப்படுபவள் அம்பிகை. இதுதான் மேலே இருக்கும் நாமாவளியின் சாரம். ஒவ்வொரு திதியிலும் அம்பாளை என்ன விதமாக பூஜிக்க வேண்டும் என்று தாந்திர சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது, இம்மாதிரி விசேஷங்களால் வழிபடப்படுபவள் அம்பிகை என்றும் இந்த நாமாவளிக்கு அர்த்தம் சொல்லலாம்.

அமாவாசையிலிருந்து பெளர்ணமிவரை அல்லது பெளர்ணமியிலிருந்து அமாவாசை வரையில் ஒவ்வொரு தினத்திற்கும் ஒரு திதி உண்டு என்பது நாம் அறிந்ததே. நமது பண்டைய காலத்திலிருந்தே பெரியோர்கள் பஞ்சாங்கம் என்ற பெயரில் ஒவ்வொரு தினத்தையும், மாதத்தையும், வருடத்தையும் கணக்கிட்டு அதிலிருந்து மன்வந்திரம், யுகம் என்று தொடருவதை நாம் அறிவோம். பஞ்சாங்கத்தில் வருபவையாவது; திதி, வாரம், நக்ஷத்திரம், யோகம், கரணம் என்பது. சங்கல்பத்தில் வருவது நினைவிருக்கலாம். இது போலவே ஸ்ரீவித்யை உபாசகர்களுக்கு என்று ஒரு பஞ்சாங்கம் இருக்கிறது. இதன் பெயர் அஷ்டாங்கம் என்பது. இதில் வருவதாவது: யுகம், பரிவ்ரித்தி, வருஷம், மாதம், வாரம், தத்வ தினம், தின நித்யா, கடிகை என்ற எட்டுவிதமாக பிரித்து வைத்திருக்கிறார்கள். இதில் 9 நாட்கள் சேர்ந்தது ஒரு வாரம், 16 மாதங்கள் சேர்ந்தது ஒரு வருடம் என்று மேலே செல்லும். இதில் ஒவ்வொரு திதிக்கும் உரியவளாக அம்பிகையின் அம்சமான ஒரு தேவி உண்டு. இந்த தேவிகள் மகாவித்தையுடன் சேர்ந்து பதினாறு பேர். இவர்கள் எல்லோருமே அம்பிகையின் அங்க தேவதைகள். சாக்ஷாத் அம்பிகையே 16ஆம் நித்ய தேவதை. அம்பிகையின் மஹா மந்திரமான ஷோடசியில் 16 அக்ஷரங்கள் அடங்கியிருக்கிறது. ஒவ்வொரு அக்ஷரங்களுக்கும் அதி-தேவதையாக ஒரு நித்யாதேவி இருக்கிறாள். பதினாறாம் அக்ஷரம் சந்திர கலா ரூபமாகையால் ஸாதா பரா என்று சொல்லப்படும் மஹாவித்யை. மற்ற 15 கலைகளும்/நித்யாக்களும் இந்த மஹாவித்யையில் அடக்கம் என்பர். இப்போது எந்த திதிக்கு யார் தேவதை என்று பார்க்கலாமா:


திதி-- நித்யைகள்
----------------------------------------------
பிரதமை-- காமேஸ்வரி
துவிதியை-- பகமாலினி
திருதியை-- நித்யக்லின்னா
சதுர்த்தி-- பேருண்டா
பஞ்சமி-- வஹ்நி வாசினி
சஷ்டி-- மஹா வஜ்ரேஸ்வரி
சப்தமி-- சிவதூதி
அஷ்டமி-- த்வரிதா
நவமி-- குலசுந்தரி
தசமி-- நித்யா
ஏகாதசி-- நிலபதாகா
துவாதசி-- விஜயா
திரயோதசி-- ஜ்வாலா மாலினி
சதுர்த்தசி-- ஸர்வ மங்களா
பெளர்ணமி-- சித்ரா

இந்த 15 நித்யைகளுக்கும் மேலாக மஹா நித்யை என்று கூறப்படும் பராம்பிகை 16ஆம் நித்யை. இதனால் சஹஸ்ர நாமத்தில் வரும் இன்னொரு நாமாவளி, "நித்யா ஷோடசிகா ரூபா" என்பது.

இந்த திதி நித்யா தேவிகள் அனாதியான ஆத்ம சக்திகள் என்பர். ஆத்ம ஞானத்தினால் பெருகுவது ஆத்ம சக்தி. இப்படி ஆத்மசக்தி ஏற்படுவதைக்கண்டு சந்தோஷிப்பவள் என்பதைத்தான் "நித்யா பராக்ர-மாடோப நிரீக்ஷண ஸமுத்ஸுகா" என்று சஹஸ்ரநாமத்தில் குறிப்பிடப்படுகிறாள். ஸ்ரீவித்யை உபாசனையில் தலைசிறந்தவர்களான வசிஷ்டர், ஸனகர், ஸனந்தனர், ஸனத்குமாரர், சுகபிரம்மம் ஆகிய ஐவர். இவர்களது அனுஷ்டான வழியைச் சொல்லும் சுபாகம தந்திர பஞ்சகம் என்னும் மார்க்கத்தை அனுசரித்ததே சமயாசாரம். இதில் சுபாகம பஞ்சகம் என்பதில் இந்த திதி நித்யா பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த தேவதைகள் இரண்டிரண்டாக சேர்த்து எட்டு வர்கங்களாக இருப்பதால் ஸ்ரீ சக்ரத்தின் எட்டு தளங்களில் இரண்டு இரண்டு தேவதைகளாக பூஜிக்கத்தக்கவர்கள்.

நவாவரண பூஜையிலும், சுவாஸினி பூஜையிலும் இந்த திதி நித்யா பூஜை முக்கியத்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு திதிக்கும் ஒரு நித்யையாக சுவாஸினிகள் வரிக்கப்பட்டு, 16ஆவது நித்யையாக ஒரு வயதில் மூத்த சுமங்கலியை பராபட்டாரிகாவாக ஆவாஹனம் செய்வர். ஒவ்வொரு நித்யைக்கும் அவரவர்கட்குரிய தியான ஸ்லோகம் சொல்லி ஆவாஹனம் செய்து, மூலமந்த்ரத்தால் பூஜிக்கப்பட்டு பஞ்சோபசாரம், தீபாராதனை போன்றவை செய்யப்படும். இதன் பிறகே திரிசதி அல்லது சஹஸ்ரநாமத்தின்படி சுவாஸினிகள் பூஜிக்கப்பட்டு பின்னர் போஜனம் செய்விக்கப்படும். சென்னை-நங்கநல்லூரில் இருக்கும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவிலில் அம்மனை தரிசிக்கும் முன் உள்ள 16 படிகளில் ஒவ்வொரு படிக்கும் இந்த வித்யைகளின் பெயரை வைத்து, அவர்களுக்கான சக்ரமும் அந்த படிகளின் அருகில் இருக்கும் கைப்பிடிச் சுவரில் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். இதனாலும் இந்த கோவில் மிகுந்த சிறப்பினை அடைந்துள்ளது என்றால் மிகையில்லை.

சக்ர ராஜம் என்றால் அது எப்படி ஸ்ரீசக்ரத்தைக் குறிக்கிறதோ அதுபோல தந்த்ர ராஜம் என்ற நூல் திதி நித்யா தேவிகளைக் குறிக்கும் தந்திர சாஸ்த்ர நூல். இந்த திதி நித்யா பற்றி இன்னொரு புத்தகம் இருக்கிறது, அதன் பெயர் நித்யா ஷோடசிகார்ணவம் என்பது. இவை தவிர அகஸ்தியர் தீந்தமிழில், வித்யைக்கு ஒன்றாக 16 விருத்த பாக்களை அருளியிருக்கிறார். அதன் பெயரே "ஷோடச விருத்தம்" என்பது தான். இவ்வாறான சிறப்புக்களை உடைய திதி நித்யா தேவிகளை இந்த நவராத்திரியில் துதித்து அவர்களது அருளைப் பெறுவோமாக.

Tuesday, September 30, 2008

ஸ்ரீ பாத ஸப்ததி - *நவராத்திரி சிறப்பு இடுகை - 3*


நாரயாண பட்டத்திரி நாம் எல்லாம் அறிந்த ஒருவர். ஆம்!, குருவாயுரப்பனை போற்றி ஸ்ரீ நாராயணீயம் எழுதியவர் தான். அவர் எழுதிய நாராயணீயத்தை குருவாயூர் கிருஷ்ணனே ஆமோதித்து அவரது ரோகத்தையும் தீர்த்த வரலாறு எல்லோரும் அறிந்ததே. பட்டத்திரி நாராயணீயம் எழுதிப் பலகாலம் கழிந்த பிறகும் மனச் சாந்தியில்லாது தத்தளித்த காலகட்டத்தில் ஸ்ரீ குருவாயுரப்பனே அவர் கனவில் தோன்றி முக்திஸ்தலம் என்னும் க்ஷேத்திரத்தில் இருக்கும் ஸ்ரீ துர்க்கையை தரிசித்து ஸ்தோத்திரம் செய்தால் மனசாந்தி கிடைக்கும் என்று கூறினாராம். அதன்படி, தற்போது குக்போளக்கா என்றழைக்கப்படும் இடம் சென்று துர்க்கையின் ஸ்ரீபாதார விந்தங்களை "ஸ்ரீபாத ஸப்ததி" என்கிற 70 ஸ்லோகங்களை பாடி பிரார்த்தித்து மனநிறைவினையும் அங்கேயே முக்தியையும் பெற்றதாக தெரிகிறது. இவ்வாறாக பத்யம் என்று கூறப்படும் இலக்கிய கட்டுப்பாடிற்கு உட்பட்ட வகையில் 70 ஸ்லோகங்கள் மிக அருமையாக எழுதி அன்னையின் அருளில் அவர் மூழ்கியிருக்கிறார். பத்யம் என்றால் நான்கு வரிகளைக் கொண்டது என்று பொருள். இந்த ஸ்லோகங்களில் வார்த்தைகள் யோகரூடம் என்னும் முறையில் உள்ளது. அதாவது வார்த்தைக்கு இரு முறையான அர்த்தங்களைத் தரும் சொற்களை யோகரூடம் என்று சொல்வது வழக்கம்.

இந்த 70 ஸ்லோகங்களில் அன்னை பராசக்தியின் பாத வர்ணனை, நகங்களது சோபை, இந்திராதி தேவர்கள், ஆதி-சேஷன் பூஜித்த மஹிமை, மகிஷாசுர, சும்ப-நிசும்ப வதங்கள், ஹிமாசலத்தில் பால-லீலைகள், அன்னையின் திருமணக்கோலம், பக்த வாத்ஸல்யம் போன்றவற்றை அனுபவித்துப் பாடியிருக்கிறார். ஸ்ரீ பாத பக்தியானது சரணமடைந்தவர்களிடத்து மிகுந்த கருணையுடன் ஆட்கொண்டு மோக்ஷ சாம்ராஜ்யத்தையே தரவல்லது. இந்த ஸ்லோகங்களைப் படிக்கையில் பல செளந்தர்ய லஹரி ஸ்லோகங்கள் மனதில் தோன்றக் கூடும். அப்படிப்பட்ட ஸ்ரீபாதத்தைப் போற்றிய ஸப்ததியிலிருந்து சில ஸ்லோகங்களை மட்டும் இன்று காணலாம்.

ஸேவந்தே குலஸம்பதே நகமயா: சீதாம்சவஸ்த்வத்பதம்
தத்பாகோ நநு வீஷ்யதேஹி நிதாமன்யேக்ஷு சீதாம்கஷு
ஏகோ பாலக ஏவ மெளலிமயி தே யாதோ லலாடாத்மதா
மன்யோ நிர்மல மண்டல தசாமன்யெள து தன்யெள கதெள

பகவதியே!, குளிர்ந்த கிரணங்களை வீசும் சந்திரன் உன் பாத நகங்களாக இருந்து கொண்டு உன் பாதங்களைப் பஜித்ததால் தன் குல விருத்தியை அடைந்தான். சந்திரன் பாதங்களை பஜித்ததால் அவன் உன் சிரசிலும் இருக்கிறான், மற்றும் உனது நெற்றியாகவும், கன்னங்களாகவும் தெரிகிறான். அவர்கள் பாக்கியசாலிகள். அதாவது பாதத்தை பூஜித்ததால் சந்திரனது சந்ததிகளுக்கு பிற்காலத்தில் அன்னையின் சிரசிலும், நெற்றியிலும், கன்னங்களிலும் வாசம் செய்யும் பேறு கிட்டியது என்கிறார்.

ராகத்வேஷமுகா ஹி விப்ரமபரா நச்யதி விச்வேச்வரி
த்வத்ஸங்கதிதி முக்திதேசநிலயே மித்யா ஜனை:கத்யதே
உத்யத்வேஷ முதாரவிப்ரமதரம் காத்ரம் ததத்யா த்வயா
ராகோபி த்ரியதேதிகம் சரணயோ: சோணாம்புஜச்சாயயோ.

முக்தி-க்ஷேத்திரத்தில் வசிக்கும் தேவியான ஈஸ்வரியே!, உன் பாதார-விந்தங்களை சேவிப்பதால் ராகத்-வேஷம் நீங்கிவிடும் என்று ஜனங்கள் கூறுகிறார்கள். ஆனால் உன்னுடைய சரீரமே பார்ப்பவர்களுக்கு மன மயக்கத்தை ஏற்படுத்துவதாகவும், அதைவிட சிறந்த சிவப்பு நிறமுடைய (ராகம் = சிவப்பு) உன்பாதங்களிடத்து உன் சரீரமே துவேஷத்தைக் கொண்டும் இருக்கிறது. சரீரத்திலேயே ராகம், துவேஷம் ஆகியவற்றை வைத்திருக்கும் உன்னை நமஸ்கரிப்பவர்களுக்கு இந்த இரண்டிலுமிருந்து எவ்வாறு விடுதலை கிடைக்கும் என்று நிந்தா ஸ்துதியாக சொல்கிறார். அன்னையின் பாதங்கள் இவ்விரண்டையும் போக்கவல்லது என்பதை இவ்வாறு கூறியிருக்கிறார். இதே கருத்துடைய ஸ்லோகம் மூக-பஞ்சசதீயிலும் காணலாம்.
த்ரைலோக்யம் வசயந்தி பாபபட லீமுச்சாடயந்த்யுச்சகைர்
வித்வேஷ ஜனயந்த்ய தர்மவிஷயே ப்ரஸ்தம்பயந்த்யாபதம்
ஆகர்ஷந்த்யபி வாஞ்சிதானி மஹிஷஸ்வர்வைரிணோ மாரணாஸ்
சித்ரம் த்வத்பதஸித்த சூர்ணநிவஹ: ஷட்கர்மணாம் ஸாதகா:

அம்பிகே!, உன் திருவடித்துளியை (அம்பாளின் பாத தூளி பற்றி செளந்தர்ய லஹரியிலும் பார்த்திருக்கிறோம்) சிரசில் தரிக்கும் பக்தர்கள் ஆறு கர்மங்களையும் சாதித்துவிடுகின்றனர். ஆறு கர்மங்களாவது, வச்யம், உச்சாடனம் (இது மந்திர உச்சாடனம் என்ற பொருளில் அல்ல, விரட்டுவது என்னும் பொருளில், அதாவது கெட்டவற்றை விலக்குவது/விரட்டுவது என்று கொள்ள வேண்டும்), வித்வேஷணம் (வெறுப்பினை உருவாக்குவது), ஸ்தம்பனம் (ஸ்தம்பிக்க வைப்பது), ஆகர்ஷணம், மாரணம் (மரணம்) என்பவை. இதே போல மூகரும் அன்னை காமாக்ஷியை நமஸ்கரித்தலால் கிடைக்கும் மந்திரார்த்தங்களைப் பாடியிருக்கிறார்.

நாமும் இந்த நன்னாளில் அன்னையின் பாதாரவிந்தங்களில் வணங்கி அவள் அருளைப் பெறுவோமாக.

Monday, September 29, 2008

நவராத்திரி விரதம் சில குறிப்புகள் - *நவராத்திரி சிறப்பு இடுகை - 2*


நவராத்திரி என்பது சாதாரணமாக ஆவணி கடைசி அல்லது புரட்டாசியில் வருவது மட்டுமே நமக்கு தெரியும். ஆனால் அம்பிகையை வழிபட நான்கு நவராத்திரிகள் உண்டென்பது தெரியுமா?. புரட்டாசியில் வரும் (இன்று ஆரம்பிப்பது) சரன் நவராத்ரி என்று பெயர். இது போலவே வசந்த காலத்தில் ராம நவமிக்கு முன் வருவது வசந்த நவராத்த்ரி என்பர். இது போலவே மற்ற இரு ருதுக்களிலும் நவராத்ரி உண்டு. அது பற்றி பின்னர் வேறு இடுகையில் காணலாம். இன்று நாம் காண இருப்பது புராணங்களில் பலரால் செய்யப்பட்ட நவராத்திரி விரதங்களும் அதன் பலனாக அவர்கள் அடைந்தவைகளும் மட்டுமே. கீழே கூறப்பட்டுள்ள சம்பவங்கள் தேவி பாகவதத்தில் வேத வியாசர் கூறியவை

இராமாயணத்தில் நவராத்ரி:
வனவாசத்தில் சீதா தேவியை இழந்த ராமர் சுக்ரீவனுடன் எற்பட்ட தொடர்பில் சுக்ரீவனது உதவியை நாடி, அவனுக்காக வாலியை வதம் செய்கிறார், பின்னர் சுக்ரீவனுக்கு அரசுப்பட்டத்தை அளிக்கிறார். அவ்வாறு அரசுரிமை பெற்ற சுக்ரீவன் ராமனுக்கு செய்ய வேண்டிய உதவியினை மறந்து சுக போகங்களில் மூழ்கிவிடுகிறான். அப்போது ராமர் வருந்தியிருக்கையில் அங்கு வந்த நாரதர் ராமனது கலக்கத்தை போக்கும் விதமாக அவனிடத்திலே தேவியின் நவராத்ரி விரதத்தை கடைபிடித்து வெற்றியை கைப்பற்ற கூறுகிறார். ராமனோ, தானிருப்பதோ கானகம், அங்கே எப்படி இம்மாதிரி விரதம்/விழா போன்றவற்றை கடைபிடிக்க இயலும் என்று கேட்க, நாரதர் 'வன்ய நவராத்ரி' பற்றி கூறி அதனை கடைபிடிக்க கூறுகிறார். வனத்தில் இருக்கும் மூலிகைகளைக் கொண்டு செய்வது வன்ய நவராத்திரி என்று பெயர். கூறியதுடன் நில்லாத நாரதர், தாமே முன்னிருந்து அவ்விரத பூஜைகளை ராமனுக்கு செய்து கொடுக்கிறார். இந்த நவராத்திரி விரத பலனே ராமனுக்கு ஊக்கம் அளித்ததாம். இதன் பிறகே லக்ஷ்மணனை அனுப்பி சுக்ரீவனுக்கு தனது நிலையினை எடுத்துரைக்க வைத்து அவனது முயற்சியை பெறுகிறார் என்று கூறப்பட்டிருக்கிறது.

மஹாபாரதத்தில் நவராத்ரி:
சியமந்தக மணியினை திருடியதாக ஸ்ரீ கிருஷ்ணர் மீது குற்றம் சாட்டப்பட்ட போது கிருஷ்ணர் அந்த மணியினை மீட்பதற்காக காட்டில் இருக்கும் ஜாம்பவானுடன் போருக்குச் செல்கிறார். அப்போது கிருஷ்ணனின் தந்தையான வசுதேவர் தமது மகனது முயற்சி வெற்றியடைய நவராத்திரி விரதத்தைக் கடைப்பிடிக்கிறார். ஒன்பது நாட்களிலும் அன்னைக்கு ஒன்பது விதமான ஆபரண-அலங்காரங்கள், நிவேதனங்கள் என்று செய்து அவளருளை வேண்டிப் பிரார்த்திக்கிறாராம். அவற்றின் பலனாக கிருஷ்ணன் ஜாம்பவானை வென்று சியமந்தக மணியினை திரும்ப பெற்றதுடன் இல்லாது ஜாம்பவானின் புத்ரியான ஜாம்பவதியை திருமணமும் செய்து கொள்கிறார். மீட்ட சமந்தக மணியின் உரிமையாளரான சத்ரஜித்திடம் அதை ஒப்படைக்கையில் அவனும் தமது தவறை உணர்ந்து தனது மகளான சத்ய பாமாவை கிருஷ்ணருக்கு மணம் செய்விக்கிறான். இதெல்லாம் நவராத்ரி விரத்த்தை ஆரம்பித்த வசுதேவர் அதை முடிக்கும் 9 தினங்களுக்குள்ளாக நடந்ததாகவும், கிருஷ்ணர் திரும்புகையில் விஜய தசமி கொண்டாடப்பட்டதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

சுசீலனது கதை:
முன்னொரு காலத்தில் கோசல தேசத்தில் சுசீலன் என்று ஒரு வியாபாரி இருந்தான். அவன் தனது வியாபாரத்தில் பெரும் நஷ்டத்தை அடைந்து வறுமையால் வருந்தினான். அவன் குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு உணவளிக்கவும் இயலாது இருக்கும் காலத்தில் கூட அவன் கர்மானுஷ்டானங்களை விடாது செய்து வந்தான். வறுமையால் வரும் அசுயை, சபலம் போன்றவை நெருங்காது தர்ம சிந்தனையுடன் இருந்தான். ஒருநாள் தமது குடும்பம் உண்ண எப்பொருளையும் சம்பாதிக்க இயலாத நிலையில் இருக்கையில் ஒரு அந்தணனை காண நேர்கிறது. அப்போது சுசீலன் அந்த அந்தணரிடம் தனது குறைகளைச் சொல்லி தமது குடும்பத்துக்கு உணவு பற்றாக்குறை தீரவும், திருமண வயதை நெருங்கும் தனது பெண் குழந்தைக்கு காலத்தே விவாஹம் நடக்கவும் ஏதேனும் விரதம், பூஜை, தவம் போன்றவை இருக்கிறதா என்று அறிய விரும்புவதாக கூறுகிறான். அப்போது அந்தணர் அவனுக்கு நவராத்திரி விரதத்தைப் பற்றிச் சொல்கிறார். இவ்விரதத்தை பக்தி-சிரத்தையுடன் கடைப்பிடிப்பவன் வாழ்வில் வறுமை நீங்கி சகல சம்பத்துக்களையும் பெற்று வாழலாம் என்று கூறுகிறார். சுசீலனும் அவ்வாறே பக்தி சிரத்தையுடன் நவராத்திரி விரதமிருந்து ஒன்பதாம் நாள் அன்னையின் தரிசனம் கிடக்கப் பெற்று அவனுக்கு தீர்க்க ஆயுளும், சகல-சம்பத்துக்களையும் அருளினாள்.

நவராத்திரியில் ஒன்பது தினங்களும் பூஜிக்க வேண்டிய அன்னையின் சக்திகள் பின்வருமாறு. குமாரி, திரிமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளிகா, சண்டிகா, சாம்பவி, துர்க்கா, சுபத்திரா. இவர்களைப் பூஜிக்கையில் இந்த சக்திகளுக்கு மூலகாரணியான பராம்பிகையை உரிய தியான ஸ்லோகங்களால் தியானித்து பின்னர் பூஜை, ஜபம், ஹோமம் போன்றவற்றை இந்த சக்திகளுக்குச் செய்யவேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த 9 சக்திகளின் தியான ஸ்லோகத்தையும் அதன் பொருளுடனும் இப்பதிவினை நிறைவு செய்வோம்.
குமாரரூய ச தத்வானி யாரூ ருஜத்யயி லீலாய
காதிநபிச தேவாம்ரூதான் குமாரிம் பூஜயாம்யஹம்

குழந்தையினுடைய விளையாட்டுக்களைப் போல் எவள் செய்கிறாளோ, பிரம்மன் முதலான தேவர்கள் எந்த சக்தியின்லீலையால் சிருஷ்டி-ஸ்திதி-சம்ஹாரங்களைச் செய்கிறார்களோ அந்த சக்தியான குமாரியை நான் பூஜிக்கிறேன்

சத்யரதிபிரூ த்ரிமூர்த்திர் யாத்தர்ஹி நாநாரூவரூபிணி
த்ரிகால வ்யாபிநி சக்திரூ த்ரிமூர்த்திம் பூஜயாம்யஹம்

சத்வம் முதலான குணங்களால் அநேக ரூபங்களாகவும், ஸ்ருஷ்டி, ஸ்திதி சம்ஹாரம் போன்ற செயல்களாகவும், காலை, உச்சி, மாலை போன்ற காலங்களாகவும் வியாபித்திருக்கும் சக்தியான த்ரிமூர்த்தியை பூஜிக்கிறேன்.
கல்யாண காரிணீ நித்யம் பக்தானாம் பூஜிதாநிசம்
பூஜயாமி சதாம் பக்த்யா கல்யாணீம் சர்வகாமதாம்

பக்தர்களால் எப்போதும் பூஜிக்கப்பட்டு, அவர்களுக்கு எந்த சக்தியால் மங்களங்களை அருளுகிறாளோ அந்த சக்தியைக் கல்யாணியை வணங்குகிறேன்.
ரோஹயந்தீச பீஜாநி பிராக்ஜன்ம சஞ்சிதாநிவை
யாதேவீ சர்வபூதானாம் ரோஹிணீம் பூஜயாம்யஹம்
பல பேதங்களுடைய சகல பிராணிகளின் பூர்வ ஜென்ம கர்மங்களாகிய பாபங்களை எந்த சக்தியால்நிவர்த்தி செய்கிறாளோ அந்த சக்தியான ரோஹிணியை நான் பூஜிக்கிறேன்.
காளிகாலயதே சர்வம் பிரஹ்மாண்டம்ஸ சராசரம்
கல்பாந்த சமயேயாதாம் காளிகாம் பூஜயாம்யஹம்

மஹா-பிரளய காலத்தில் அண்ட-சராசரங்களையும் எந்த சக்தியால் சம்ஹரிக்கின்றாளோ அந்தசக்தியான காளியை பூஜிக்கிறேன்.
சண்டிகாம் சண்ட ரூபாஞ்ச சண்ட முண்ட விநாசிநீம்
தாம்சண்ட பாபஹரிணீம் சண்டிகாம் பூஜயாம்யஹம்
சண்ட-முண்டர்களை வதைத்து அதன் மூலமாக பாதகங்களை தவிர்த்திட எந்த சக்தியானவள் காரணமாகிறாளோ அந்த சக்தியான சண்டிகாவைப் பூஜிக்கிறேன்.

அகாரணாத் சமுத்பத்திர் யந்மயை: பரிகீர்த்திதா
யஸ்யாஸ்தாம் சுகதாம் தேவீம் சாம்பவீம் பூஜயாம்யஹம்
பரபிரம்மத்தின் விருப்பப்படி எந்த சக்தியினால் திருவுருவங்களை உருவாக்குகிறாளோ அந்தசக்தியான சாம்பவியை நான் பூஜிக்கிறேன்.
துர்க்காத்ராயதி பக்தம்யா ஸதா துர்க்கதிநாசினீ
துர்ங்ஞேயா சர்வ தேவானாம் தாம் துர்க்காம் பூஜயாம்யஹம்
துர்க்கதியை நீக்குபவளாய், தேவர்களாலும் காணப்படாதவளாகவும், பக்தர்களின் துயர் துடைப்பவளாகவும்எந்த சக்தி இருக்கிறாளோ அந்த சக்தியை துர்க்காவாக பூஜிக்கிறேன்.

சுபத்ராணி ச பக்தானாம் குருதே பூஜிதாசதா
அபத்ரநாசிநீம் தேவீம் சுபத்ராம் பூஜயாம்யஹம்

தனது பக்தர்களுக்கு மங்களங்களைத் தருபவளும், அமங்கலத்தைப் போக்குபவளுமான சக்தியைசுபத்ரா என்ற பெயரில் பூஜிக்கிறேன்.
இவ்வாறு தேவியை ஒவ்வொரு நாளும் மேலே சொன்ன விதத்தில் தியானித்து, சகல உபசாரங்களும் செய்து பூஜிக்க வேண்டும். நவராத்ரி ஒன்பது நாட்களும் பூஜை செய்ய இயலாவிட்டால், சப்தமி, அஷ்டமி, நவமி ஆகிய மூன்று தினங்களிலாவது செய்யலாம். தினம் பூஜை செய்ய இயலாதவர்கள் இந்த மூன்று நாட்கள் செய்தாலே 9 நாட்கள் செய்த பலனை அடைவார்களாம்.

Sunday, September 28, 2008

நவராத்திரி-கொலு பார்க்கலாம் வாங்க -- *நவராத்திரிச் சிறப்பு இடுகை -1*


"சரத்காலே மஹாபூஜா க்ரிய தே யா ச வர்ஷி'கீ, தஸ்யாம் மமைதத் மஹாத்ம்யம் ச்ருத்வா பக்தி சமன்வித: ஸர்வ பாதா விநிர்முக்தோ தன-தான்ய ஸுதான்வித:" என்பது தேவி மஹாத்மியத்தில் அம்பாள் சொல்வது. அதாவது, சரத்க்காலத்தில் எனக்கு மஹா பூஜை செய்து, மஹாத்மியத்தைப் படிப்பது மிகுந்த பலனைத் தருவேன் என்பது பொருள். சரத்க்காலத்தில் வரும் நவராத்திரி தான் சரத் நவராத்திரி என்று பெயர்.

தேவி-மஹாத்மியம் என்பது பதினெட்டு புராணங்களில் ஒன்றான மார்கண்டேய புராணத்தில் வரும் 700 ஸ்லோகங்கள். இந்த 700 ஸ்லோகங்களே மந்திரங்களாக, தேவி சப்தசதீ என்று சொல்லப்படுகிறது. இந்த நவராத்திரியில் இதனை பாராயணம் செய்வதாலும், பாராயணம் செய்வதை கேட்பதாலும் அன்னையின் அருளுக்கு பாத்திரமாவது உறுதி. இந்த மஹாத்மியம் எல்லோரும் பாராயணம் செய்ய அனுமதியில்லை. நவாக்ஷரி போன்ற மந்திர உபதேசங்களைப் பெற்றவர்களே செய்ய தக்கவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. நமக்கு அதிகாரம் இல்லையெனில், அதனை பாராயணம் செய்யத்தக்கவர்களைக் கொண்டு பாராயணம் செய்ய வைத்து கேட்கலாம். இது நவராத்திரியில் ஒன்பது நாட்கள், தினம் ஒருமுறை பாராயணம் செய்தால் நவ-சண்டீ பாராயணம் என்றும் நூறு முறை பாராயணம் செய்தால் சத-சண்டீ என்றும் கூறுவர். நவராத்திரி சமயத்தில், இல்லத்தில் கட-ஸ்தாபனம் செய்து காலை-மாலை இருவேளைகளும் சஹஸ்ரநாமா, த்ரிசதீ போன்றவற்றை பாராயணமாகவோ இல்லை அர்ச்சனையாகவோ செய்து வழிபடுவது, கொலு வைத்து பூஜிப்பது, ஸுவாஸிநி, கன்யா பூஜை போன்றவை மிகுந்த விசேஷம்.


வியாசரால் எழுதப்பட்ட புராணங்கள் 18. இவற்றுக்கு உப-புராணங்களாக 18 எழுதியுள்ளார். இந்த உப புராணங்களில் ஒன்று தேவி பாகவதம். வியாசர் தனது புத்திரரான சுகரைத் திருமணம் செய்து கொள்ள அறிவுறுத்திய போது, திருமணத்தை மறுத்த சுகருக்கு இந்த புராணத்தைக் கூறி தேவியை வழிபடப் பணிக்கும் சமயத்தில் அங்கிருந்து கேட்ட சூத முனிவர் இந்த புராணத்தை சனகாதியருக்கு உபதேசித்தார். அதி-விசேஷமான இந்த புராணத்தை நவராத்ரி ஒன்பது தினங்களில் பாராயணம் செய்வதுண்டு.


இந்த நவராத்திரிக்கு எழுதும் பதிவுகள் பெரும்பாலும் இதனை அடிப்படையாக கொள்ள இருக்கிறேன். நவராத்ரியில் கருணாமூர்த்தியான அம்பாளை முதல் மூன்று நாட்கள் துர்காவாகவும், அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மியாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் ஆவாஹனம் செய்து வழிபடுவது வழக்கம். இந்த பூஜா முறைகள் பற்றி பல புத்தகங்களில் பலவாறு எழுதப்பட்டிருக்கிறது. அவரவர் இல்லத்தில் தொன்று தொட்டு வரும் வழக்கமே ப்ராதான்யமாக கொண்டு செய்தல் நலம்.


இந்த 9 தினங்களில் கொலு வைத்து அம்பிகையை பூஜிப்பது பலர் இல்லங்களில் வழக்கம். கொலுவானது 9 படிகளாக வைப்பதே வழக்கம். ஆனால் காலப் போக்கில் அவரவர் இடம்/பொருள் வசதிக்கேற்ப ஒற்றைப்படையில் இருந்தால் போதும் என்று மாற்றிக் கொண்டுவிட்டனர். இப்படிகளில் பொம்மைகளை வைக்க முறையும் இருக்கிறது. மேலிருந்து வருகையில் முதல் படியில் மரப்பாச்சி, கலசம், இறை உருவங்கள் போன்றவை வைக்கப்பட வேண்டும். இன்று மரப்பாச்சி பொம்மைகளுக்கு மவுசு இல்லை. ஆனால் அவை கதிரம் என்று கூறப்படும் கருங்காலி மரத்தால் ஆனது. இம்மரம் அக்னி ஸ்வரூபமாக கருதப்படுகிறது. இது இருக்கும் இடத்தை தீய சக்திகள் அணுகாது என்பர்.


ஒன்பது படிகள் என்பது நவ-ராத்ரிகளையும், உடலில் இருக்கு நவ துவாரங்களையும், ஸ்ரீ சக்ரத்தில் இருக்கும் நவ கோணங்களையும், நவ கண்டங்களையும் குறிப்பது என்று சொல்வதுண்டு. இந்த ஒன்பது படிகளுக்கு இன்னொரு விளக்கமும் உண்டு. அம்பாளை வழிபடுபவர்கள் நற்கதி அடைதலை சோபான பதவி என்பர். இந்த சோபான பதவி அடைய 9 படிகளைக் கடக்கவேண்டும் என்ற தத்துவமும் உண்டு. அந்த 9 படிகளாவது, விவேகம், சலிப்பு/நிர்வேதம், விரக்தி/தாபம். பீதி, நல்வழி, எண்ணங்களில் உயர்வு, ரூப வழிபாடு, க்ஷேத்ர வழிபாடு, பகவத் அனுபவம் ஆகியவை.


நவராத்ரி பூஜை 9 நாட்கள் என்றாலும் இதை செய்பவர்கள் மேற்ச் சொன்னபடி கலசத்தில் அம்மனை ஆவிர்பஹித்தல், கொலு வைத்தல் ஆகியவற்றை அமாவாசையன்றே ஆரம்பிப்பது வழக்கம். அது போல அமாவாசையாகிய இன்று, இந்த இடுகையுடன் மதுரையம்பதியில் நவராத்ரி ஆரம்பிக்கிறது. முப்பெருந்தேவியர் அருள்வேண்டி, இன்று முதல் தினம் ஒரு இடுகை இந்திய நேரப்படி மாலையில் இங்கே இடப்படும்.

பராம்பிகை திருவடிகளே சரணம்.

Wednesday, September 24, 2008

நாத ரூபா, நீல சிகுரா



ஸவ்ய-அபஸவ்ய மார்க்கஸ்தா என்று சஹஸ்ரநாமத்தில் அம்பிகைக்கு ஒரு நாமம். இதன் பொருளைப் பார்க்கலாம். ஸவ்யம் -வலது; அபஸவ்யம் - இடது. மார்கஸ்தா - எந்த மார்க்கத்திலும் வழிபடப்படுபவள். தன்னை வழிபடுபவர்களது வலது-இடது புறங்களில் இருந்து வழி நடத்துபவள் என்று பொருள் கொள்ளலாம். வேதவழியில் செய்யும் வழிப்பாட்டிற்கு ஸவ்யம் என்று சொல்வது வழக்கம். அஸவ்யம் என்பது தாந்திரிக வழிபாடு. ஆக, இந்த இரு முறைகளில் வழிபட்டாலும் அன்னையை அடையலாம் என்றும் பொருள் கொள்ளலாம். இன்னும் சொன்னால் பண்டிதர்கள் செய்யும் வழிபாடு ஸவ்யம், என்னைப் போல பாமரர்கள் செய்யும் வழிபாடு அஸவ்யம். ஆக எப்படி வழிபட்டாலும் அருளுபவள் அம்பிகை. இங்கு வழிபாடுதான் முக்கியமாக கொள்ள வேண்டியது. எந்த முறையில் வழிபாடு என்பது முக்கியமல்ல. பாஸ்கர ராயர் என்று ஒரு மஹான், மராட்டிய தேசத்தவர், ஆனால் காவிரிக்கரையில் வாழ்ந்தவர். [இப்போதும் பாஸ்கர ராய புரம் என்ற ஊர் மயிலாடுதுறைக்கு அருகில் இருக்கிறது] பெரிய சக்தி தாசர். அவர் சஹஸ்ர நாமாவுக்கு பாஷ்யம் எழுதுகையில் அம்பிகையே கிளியாக வந்து அவர் தோளில் அமர்ந்து கேட்டு, சரி பார்த்ததாகச் சொல்வர். இவர் செய்த வழிபாடு ஸவ்ய-மார்க்கம் ஆனால் காளிதாசன் அம்பிகையை வழிபட்ட முறையோ அபஸவ்ய மார்க்கத்தில் என்பார்கள். ஆக, எவ்வழியில் சென்றாலும் அன்னையின் அருளுண்டு.

லலிதா சஹஸ்ர நாமங்களை சற்றே உற்று கவனித்தவர்களுக்கு பின்வரும் செய்தி தெரிந்திருக்கும். சஹஸ்ர நாமம் ஆரம்பிக்கையில் அன்னையின் தோற்றம், பதவி, பண்டாசுர வதம், குண்டலினி சக்தி பற்றிச் சொல்லி, பிறகு தேவியின் நிர்குண வர்ணனை வரும். ஆனால், இந்த நிர்குண வர்ணனை வருகிற போதே ஒரு நாமம், நீல சிகுரா என்று. அப்படின்னா என்ன?. கருமையான கூந்தலை உடையவள் என்று அர்த்தம். அன்னையின் முன்பு சஹஸ்ரநாமத்தை அரங்கேற்றும் சமயத்தில் வசிநீ-வாக் தேவதைகள் நிர்குணத்தை போற்றுகையில் அம்பிகையை பார்த்த போது அவளது கருங்கூந்தலில் தமது மனதைப் பறிகொடுத்து சகுணத்தைப் போற்றும்படியாக நீல-சிகுரா என்றனராம்.

திருக்கோலக்கா என்று ஒரு ஊர், தஞ்சாவூர் ஜில்லாவில் (இன்று பல மாவட்டங்கள் பிரிந்ததால் சரியாக தெரியவில்லை)இருக்கிறது. அங்கு அன்னைக்கு "ஓசை கொடுத்த நாயகி" என்று பெயர். அதென்ன இப்படி ஒரு பெயர்?, இங்குதான் திருஞான சம்பந்தருக்கு அம்பாள் தாள-வாத்யம் கொடுத்தாளாம். (கையில் வைத்துக் கொண்டு பாட்டிற்கு தாளம் போடுவது, ஜால்ரா தானா, இல்லை சிப்ளா கட்டையா என்று தெரியல்ல, ஆனா படங்களில் ஜால்ரா தான் அவர் கையில் இருக்கிறது). இந்தக் கதையால் வந்த நாமம் தான் அங்குள்ள அம்பிக்கைக்கு அப்பெயர் வரக் காரணம். இதற்கு இணையான ஒரு நாமம் "நாத ஸ்வரூபா" என்பது. அன்னை நாதமாக, லயத்துடன் கூடிய ஸப்தமாக இருக்கிறாளாம். குண்டலினி யோகம் செய்பவர்களுக்கு ஒவ்வொரு சக்ரத்திலும் ஒவ்வொரு வித நாதம் எழுமாம். அன்னைக்கே குண்டலினீ என்று பெயர் என்பது அறிந்ததே!. பாரதியும் "நாத வடிவானவளே!, நல்லுயிரே கண்ணம்மா" என்று கூறியிருக்கிறார்.

ஆனந்தலஹரியின் கடைசி சில ஸ்லோகங்களில் மஹா-பைரவ, பைரவி ஐக்கியத்தைப் பார்த்தோம். சிவ-சக்தி ஐக்கிய ஸ்வரூபிணி என்பது சஹஸ்ர நாமத்தில் ஒரு நாமம். அதாவது சிவன், சக்தி ஆகியோர் இணைந்த கோலத்தில் இருப்பவள். சக்தியில்லையேல் சிவமில்லை என்பார்களே, அதுதான். அந்த சக்தி-சிவத்துடன் கூடிய ஐக்கிய ஸ்வரூபம். இந்த இணைந்த கோலத்தை திருவெம்பாவையில் மாணிக்க வாசகர் பொய்கை வடிவில் கண்டதாக கூறுகிறார். பராசக்தியிடத்து தோன்றியதுதான் எல்லா சக்திகளும். அது எப்படி என்று நவராத்ரி பதிவில் காண்போம்.

Thursday, September 18, 2008

நீலகண்ட தீக்ஷதர்....

அப்பைய தீக்ஷிதர் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். அவரது தம்பியின் பேரன் நீலகண்ட தீக்ஷிதர். இவர் மதுரையில் நாயக்க அரசுகள் இருந்த காலத்தில் மந்திரியாக இருந்தவர். அப்பைய தீக்ஷதர் 72 வயது வரை வாழ்ந்தவர், அப்போது நீலகண்ட தீக்ஷிதரது வயது 8. அப்பைய தீக்ஷதருக்கு குழந்தை நீலகண்டன் மிது அலாதி ப்ரியம்.அப்போதெல்லாம் ஸம்ஸ்கிருதம் சிறுவயதிலிருந்தே கற்று தரப்பட்டு, அதிலேயே பேசுவது வழக்கமாயிருந்த காலம்.

தீக்ஷதர் தனது கடைசிக் காலத்தில் குழந்தையிடம் விளையாட்டாக "ஆபதி கிம்கரணீயம்" என்று கேட்டாரம். அதற்கு பதிலாக நீலகண்ட குழந்தை, "ஸ்மரணாயாம் சரண யுகளம் அம்பாயா" என்று சொன்னதாம். "ஆபதி கிம்கரணீயம்" என்றால் "ஆபத்து வந்தால் என்ன செய்ய வெண்டும் " என்று அர்த்தம். இதற்கு குழந்தை சொன்ன பதிலின் பொருள் என்னவென்றால், 'பரதேவதையின் பாதாரவிந்தத்தை நினைக்க வேண்டும்' என்பது. இத்துடன் நின்றதா இந்த சம்பாஷணை என்றால் இல்லை. அடுத்ததாக அப்பையர் "தத் ஸ்மரணம் கிம் குருதே" என்று கேட்கிறார், அதாவது 'அப்படி நினைத்தால் என்ன பலன்'. அதற்கு குழந்தை 'ப்ரும்மாதீன பி இங்கரீ குருதே' அதாவது பராம்பிகையின் பாதாரவிந்தத்தை ஸ்மரணித்தவனுக்கு ப்ரும்மாதி தேவர்கள் சேவகர்கள் ஆகிறார்கள்' என்று பொருள். இவ்வாறாக சிறு குழந்தைப் பருவத்திலேயே அம்பிகையருளால் வாக்விலாஸத்தைப் பெற்றவர் நீலகண்ட தீக்ஷதர்.

இவர் ஆனந்த ஸாகரஸ்தவம் என்று மீனாக்ஷியம்மன் மேல் ஒர் ஸ்லோகம் பண்ணியிருக்கார். அதிலே, "த்வத் பாதபக்தி ரஹிதோம் மம மாஸ்து வம்ச: த்வத் சேவயா விரஹிதம் மம மாஸ்து சாயு" என்று சொல்கிறார். இதன் பொருள்,அம்பிகே!, அடுத்ததாக எனக்கு எந்த பிறவி வேண்டுமானாலும் வரலாம், எங்கு வேண்டுமானாலும் பிறக்கலாம், அது என் கையில் இல்லை.ஆனால் ஒரேயொரு வேண்டுகோள் என்று சொல்லி, 'உன்பாதார விந்தத்தில் பக்தியில்லாத வம்சத்தில் எனக்கு அடுத்த பிறவி வேண்டாம்' என்கிறார். இவர் சாக்தர், ஆயினும் பராசக்தியை மட்டுமில்லாது எல்லா தெய்வங்ளையும் போற்றி ஸ்லோகங்கள் செய்திருக்கிறார். ஒரு இடத்தில் அம்பாளை தாயாராக விளித்து, உனக்கும் எனக்கும் தாய்-குழந்தை என்ற சம்பந்தம் இருக்கிறது. நான் என்ன தவறு செய்தாலும், அசட்டுத்தனமாக, அ-விவேகமாக உன்னை நினைக்காதிருந்தாலும் நீ என் காதைப் பிடித்து இழுத்து உன்பக்கதிருத்திக் கொள்ள வேண்டும் என்று உரிமையுடன் சொல்கிறார்.


மதுரையை நாயக்க அரசர்கள் ஆண்ட காலத்தில், மந்திரியாக பணியாற்றிய சமயத்தில் இவரது மேற்பார்வையில் கட்டப்பட்டதுதான் புதுமண்டபம். இங்குள்ள சிற்பங்கள் மிகுந்த வேலைப்பாட்டினை உடையவை. சாதாரணமாக நாயக்க அரசர்கள் தமது சிலைகளையிம் தமது துணைவியார் சிலைகளையும் தாம் நிவந்தமளித்து சிறப்புச் செய்யும் கோவில்களில் நிறுவது வழக்கம். அது போல புது மண்டபத்திற்கு சிற்பங்கள் செதுக்கும் சமயத்தில் வணங்கிய நிலையில் தமது துணைவியாருடன் கூடிய தமது சிலையினையும் வடிக்க உத்தரவிடுகிறார் அரசர். [இன்றும் இச்சிலைகளை அங்கே காணலாம்]. தலைமை சிற்பியே அரசர், மற்றும் ராணிகளது சிலையினை வடிக்கிறார். பட்டத்துராணி சிலை வடிக்கையில் அச்சிலையின் முழங்காலுக்கு மேலாக கல் பெயர்ந்துவிடுகிறது. மிகுந்த கவலையுற்ற சிற்பி வேறு சிலை மீண்டும் செய்ய கல் தேர்ந்தெடுக்க முயல்கிறார். மேற்பார்வை பார்க்க வந்த நீலகண்ட தீக்ஷதர், இதை அறிந்து சிலையினை பார்த்த பின், சிற்பியிடம் அரசிக்கு அங்கு மச்சம் இருப்பது உண்மைதான், எனவே அச்சிலை அவ்வாறே இருக்கட்டும் என்று கூறிச் சென்றுவிடுகிறார். அரசர் சிலையை பார்வையிட வருகையில் இச்செய்தி சொல்லப்பட்டு அரசியின் சிலையாக பின்னப்பட்ட அச்சிலையே இருக்கலாமா என்று கேட்க, அரசியின் அந்தரங்கம் எப்படி தெரிந்தது என அரசர் நீலகண்டர் மீது மிகுந்த கோபம் அடைகிறார். அரசியை தவரான கண்ணோட்டத்தில் பார்த்தமைக்காக அவருக்கு தண்டனை அளிக்க முடிவு செய்து சபா மண்டபத்திற்கு வரவழைக்கிறார்.

சேவகர்கள் நீலகண்டர் இல்லத்துக்கு வந்த சமயத்தில் அவர் நித்ய-பூஜையில் இருக்கிறார். அப்போது அரச சேவகர்கள் தமக்காக காத்திருப்பதை உணர்ந்து, தமது ஆத்ம சக்தியிலேயே அரசனது எண்ணத்தை அறிந்து, அவன் தரும் தண்டனைக்கு சமமாக தாமே தமது பூஜையில் இருக்கும் சுடரொளியால் தமது கண்களை அவித்துக் கொள்கிறார். பின்னர் அரச சேவகர்களுடன் அரசவை வருகிறார். யாரும் ஏதும் சொல்லும் முன்னரே தாமாக அரசனது மனதில் இருப்பதை அறிந்து, அவன் தரும் தண்டனையை தாமே அளித்துக் கொண்ட நீலகண்டரது செயலைக் கண்ட அரசன், அவரது திருஷ்டாந்தத்தையும், தமது தவறை நினைத்து வருந்துகிறான். அப்போது தீஷதர் அன்னை சன்னதிக்குச் சென்று பாடியதுதான் ஆனந்த ஸாகர ஸ்தவம். பாடி முடித்தபின் அன்னை மீனாக்ஷியருளால் தமது பார்வை கிடைக்கப் பெற்றார் தீக்ஷதர்.


வெளியில் அதிகம் தெரியாதவாறு இருப்பினும் இவரது சாக்த குரு பரம்பரை இன்னும் தொடர்கிறது. தமது அமைச்சுப்பதவியை துறந்து, இறுதிக் காலத்தில் திருநெல்வேலி அருகில் வாழ்ந்து இறைவனடி சேர்ந்தார் என்று சொல்கின்றனர்.

Tuesday, September 2, 2008

விநாயகர் - சில செய்திகள்...

நான் இந்த வலைப்பூவில் பதிவுகள் போட ஆரம்பித்த போது விநாயகரை பற்றி 3 இடுகைகள் இட்டேன். பிறகு கணேச ருணஹர ஸ்தோத்திரப் பொருளை போன வருட விநாயக சதுர்த்தியன்று பதிந்தேன். இந்த வருட பிள்ளையார் சதுர்த்தி சிறப்பாக ஒரு இடுகை இட தோன்றியது. அதன் விளைவே இந்த இடுகை. இது விநாயகர் சம்பந்தமான சில செய்திகள் தொகுப்பாக இருக்கும்.

கணபதி, விநாயகர், என்றெல்லாம் அழைக்கப்படுபவர் ஏன் பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார்? பொதுவாக கிராமங்களிலும், சிற்றூர்களிலும் ஊரின் பெரிய குடும்பத்து/செல்வாக்கான குடும்பத்து தலைவரை, ஐயா, எஜமான் என்று குறிப்பிடுவதும், அவரது குடும்பத்து பிள்ளையை பெரியவீட்டுப் பிள்ளை, சின்ன எஜமான் என்றெல்லாம் குறிப்பிடுவது வழக்கம். [இன்றும் கிராமத்துக் கதையைக் கொண்ட சினிமாக்களில் இந்த முறைகளைப் பார்க்க முடிகிறது] இந்த முறையிலேயே அகில-உலகங்களுக்கும் தாய்-தந்தையான பார்வதி-பரமேஸ்வரனின் புத்திரனான கணபதியும் 'பிள்ளை' என்று அழைக்கப்பட்டு, அந்த பிள்ளைக்கு மரியாதை தரும் விதமாக ('அவர்' என்பது போல) 'யார்' சேர்த்து 'பிள்ளையார்' என்று வழங்கப்படுகிறார் என்று பரமாச்சார்யார் சொன்னதாக படித்த நினைவு. வேறு ஏதேனும் காரணங்களும் இருக்கலாம். தெரிந்தவர் பகிர்ந்தால் நலம்.

பிள்ளையாரை எல்லோருக்கும் பிடிக்கும். பார்த்த மாத்திரத்தில் மனதில் ஒரு நிம்மதியும் மகிழ்ச்சியும் பரவும். இதற்கு காரணம் அவருடைய யானை முகம். சாதாரணமாகவே நமக்கு யானை, கடல், சந்திரன் போன்றவற்றை எத்துணை முறை பார்த்தாலும் அலுப்பே தோன்றாது. பிள்ளையார் நன்கு வளர்ந்த குழந்தை, அதுவும் பரமாச்சார்யார் சொன்னது போல, பெரிய வீட்டுப் பிள்ளைக்கு ஊரிலிருக்கும் எல்லோரும் சக்தியான உண்பண்டங்களை கொடுத்து இன்புற, அவரும் அவற்றை எல்லாம் செரித்து கொழு-கொழுவென பெருத்த சரீரத்துடன், மந்தகாச புன்னகை வீசிக் கொண்டிருப்பது நமக்கும் மகிழ்ச்சியை தருகிறது என்றால் அது சரிதானே?

இந்த திருமேனியானது தியானிப்போரைப் பரவசத்தில் ஆழ்த்தக் கூடியது, தத்வார்த்தமானது. யானை முகமானது விநாயகர் பிரணவ ஸ்வரூபி என்பதை குறிப்பது. ஐங்கரங்கள் பஞ்சகிருத்தியங்களின் உள்ளடக்கத்தையும், மூன்று கண்கள் [இன்று நாம் வாங்கும் விநாயகர் சிலைகளில் மூன்றாம் கண்ணை பார்க்க இயலாது] சோம, சூர்ய, அக்னியையும், விசாலமான இரு காதுகள் ஆன்மாக்களை வினை என்னும் வெப்பத்தால் தாக்காது காக்கவும், உண்மையின் விளக்கமாகவும், அண்ட-சராசரங்களின் அடக்கமாகவும் பெரு-வயிறும் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. காணாபத்திய முறையில் உபாசிக்கும் அடியவர்கள் கணநாயகனின் உருவில் எல்லா தெய்வங்களையும் வணங்கிடுவதாகச் சொல்லப்படும். அது எப்படியென்றால்,

"அவ்யாக்ருத ப்ரும்மணோ கணேசஸ்ய சரீரே,
நாபிர்-பிரும்மா, முகம் விஷ்ணு; நேத்ரம் ருத்ர:
வாமபார்ச்வம் சக்தி; தக்ஷிணம் சூர்ய: ஆத்மா ஸ்மிதா மய:


அதாவது, கணபதியின் நாபி பிரும்மாவாகவும், முகம் விஷ்ணுவாகவும், கண்கள் ருத்திரனாகவும், இடதுபாகம் சக்தியாகவும், வலது பாகம் சூர்யனாகவும் இருப்பதாக மேலே இருக்கும் ஸ்துதி கூறுகிறது. இது காணாபத்தியத்திய வழிபாட்டில் வரும் ஒரு முக்கிய தியான ஸ்லோகம். எல்லா தெய்வங்களும் கணபதியை ஏதோ ஒரு சமயத்தில், ஏதேனும் ஒரு காரணத்திற்காக வணங்கியதாக புராணங்களில் படித்திருக்கலாம். உதாரணத்திற்கு லலிதையின் பண்டாசுர வதத்தில் ஒருநாள் அன்னையின் சக்தி சேனை தோல்வியை சந்திக்கும் நிலை, அம்பாள் அந்த நிலை ஏற்படக் காரணம் என்ன என்று ஆராய்ந்ததில், பண்டாசுரனது சைன்யத்தில் இருந்த விசுக்ரன் என்பவன் யுத்தகளத்தில் அமைத்த விக்ன யந்தரம் என்று அறிந்து, கணபதியை தொழுது அதை தகர்த்ததாக தெரிகிறது. லலிதா ஸஹஸ்ர நாமத்தில், "மஹா-கணேச நிர்ப்பின்ன விக்னயந்திர பிரஹர்ஷிதா" என்பது இதைக் குறிக்கும் நாமாவளி. இதே போல் திரிபுர சம்ஹாரத்தின் முன்பாக பரமசிவன் விநாயகரைத் தொழுததாக கணேச புராணத்தில் இருக்கிறது.

விநாயகர் பிரம்மச்சாரி என்பது எல்லோரும் அறிந்தாலும், சில ஆலயங்களில் அவர் ஒரு மனைவியுடனோ அல்லது இரண்டு மனைவியருடனோ காக்ஷி அளிப்பதைப் பார்த்திருக்கலாம். அப்படியானால் அவர் எப்படி பிரம்மச்சாரி என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். சித்தி-புத்தி விநாயகர் என்ற பெயரில் இரு தேவிகளாக இருப்பது இச்சா சக்தியும், க்ரியா சக்தியும் ஆகும், விநாயகரோ பிரம்ம ஸ்வரூபம். ஆக இச்சையும், கிரியையும் வைத்து ஞானத்தால் சிருஷ்டி பரிபாலனம் செய்வதாகச் சொல்லப்படுகிறது. பிரபஞ்சம் ஒடுங்கும் போது இந்த இரு சக்திகளையும் தன்னுள்ளேயே லயப்படுத்திக் கொண்டு ஞானமயமாகிறார்.

உலகில் முதலில் எழுத்துருவை ஏற்படுத்தியவர் விநாயகர்.
மஹாபாரத்தை தனது தந்தம் கொண்டு எழுதியவர். அதனால்தான் இன்றும் பெரியோர் எழுத ஆரம்பிக்கும் முன் பிள்ளையார் சுழியினை போடுகிறார்கள். தற்போதைய குழந்தைகளுக்கு இவை சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை என்றே நினைக்கிறேன். மஹாபாரத்தை எழுத தனது ஒரு தந்தத்தை இழந்ததால் ஏக தந்தர் என்ற பெயர் பெற்றார்.


முடிந்தால் இன்னும் சிலவற்றை நாளை பதிவிடுகிறேன்...

எல்லோருக்கும் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...