Tuesday, March 6, 2012

மாசி மாசந்தான் கெட்டி மேள தாளந்தான்....


மாசி மாதம் பல விசேஷங்கள் வருகிறது, இவற்றில் சில நமக்கெல்லாம் தெரிந்த சிவ-ராத்ரி,  மற்ற  சில விசேஷங்கள் நம்மில் பலருக்கும் தெரியாதது. இவ்வாறாக இன்று வழக்கில் (அவ்வளவாக) இல்லாத சில விஷயங்களை கோடிட்டுக் காட்டுவதாக நினைத்து இதை எழுதுகிறேன். 

மாக மாத சுக்ல சதுர்த்தி (வளர்பிறை) “குந்த சதுர்த்தி என்று வழங்கப்படுகிறது. இந்த நாளில் பகல் முழுவதும் உபவாசம் இருந்து மாலையில் குந்த (மல்லிகை) புஷ்பத்தால் சதாசிவனை அர்சித்துப் பூஜை செய்வது குறைவற்ற செல்வம் மற்றும் நிறைவான வாழ்வுக்கு அடிக்கோலும் என்று கூறுகிறார்கள். இதன் அடுத்த நாளான பஞ்சமி தினமானது “வஸந்த பஞ்சமீ என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் மஹாவிஷ்ணுவை லக்ஷ்மியுடன் சேர்த்துப் பூஜிப்பதும், நாம சங்கீர்த்தனம் போன்றவை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். இந்த வழிபாட்டால் குடும்பத்தில் ஒற்றுமையும், தம்பதியிடத்து அன்யோன்யமும் ஏற்படும் என்று கூறியிருக்கிறார்கள். இந்த இரு விசேஷங்களும் சாந்திரமான மாசி மாதத்தை அடிப்படையாக்க் கொள்ளாது, தைமாத அமாவாசைக்குப் பின்னர் வரும் சதுர்த்தி மற்றும் பஞ்சமீ திதிகளைக் கொண்டு அமைகிறது என்பது கவனிக்கத்தக்கது. 


   

சாதாரணமாக ஏகாதசி விரதம் என்பது மனிதனாகப் பிறந்த எல்லோருக்கும் அவசியம் என்று கூறுகிறது புராணங்கள். அந்த வகையில் இந்த மாதத்தில் வரும் இரு ஏகாதசிகளும் சிறப்பானவை. மாசி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு ‘ஜயா ஏகாதசி என்று பெயர். இந்திரன் சபையில் நடனமாடும் காந்தர்வர்கள் தவறாக நடனமாடியதால் சாபம் பெற்று, பின்னர் இந்த ஏகாதசி விரத்த்தின் மூலமாக விமோசனம் பெற்றதாகச் சொல்கிறார்கள். இந்த ஏகாதசியன்று விரதமிருப்பவர்கள் செயல்படும் கார்யம் யாவும் ஜெயம் என்கிறார்கள். காவிரிக்கரையில் உள்ள திரு-ஈங்கோய் மலைக்குச் சென்று அங்கு அருள் பாலிக்கும் மரகதேஸ்வரர் மற்றும் அகஸ்தியர் ஸ்தாபித்த ஸ்ரீசக்ர பீடத்தை தரிசிப்பது பல பாவங்களையும் போக்கக்கூடியதாகச் சொல்கிறார்கள். 

மாசி மாத த்தில் வரும் கிருஷ்ண பக்ஷ (தேய்பிறை) ஏகாதசிக்கு ‘ஷட்திலா ஏகாதசி என்று பெயர். இந்த நாளில் எள்ளை அரைத்துப் பூசிக் குளிப்பது, எள்ளை தானமாக அளிப்பது, எள்ளை திரவியமாகக் கொண்டு ஹோமம் செய்வது, எள் மற்றும் நீர் தானமாக அளிப்பது, எள் கலந்த உணவினை உண்பது என்பதாக எள்ளை வைத்து ஆறுவிதமான செயல்களைச் செய்வதால் இந்த ஏகாதசிக்கு இப்பெயர். தெளலப்யர் என்னும் மஹரிஷியின் சிஷ்யர் ‘பசுவைக் கொன்றவர்கள், பிறன் பொருட்களை அபகரித்தவர்கள் போன்றோருக்கு பிராயச்சித்தம் என்ன என்று கேட்ட சமயத்தில், தெளலப்யர் இந்த விரதம் குறித்துச் சொன்னதாகத் தெரிகிறது.




ஈஸ்வரனின் சாபம் பெற்ற அம்பிகை, ஒரு மாசி மகத்தில் பூமியில், காளிந்தி நதிக்கரையில், தக்ஷனின் மகளாக  அவதரித்த்தாகச் சொல்லப்படுகிறது. மாசி மகம் என்பது “ஸ்ரீ லலிதா ஜெயந்தி என்று அழைக்கப்படும் அளவிற்கு சாக்தத்தில் சிறப்பான தினமாகச் சொல்லப்படுகிறது. மாக மாசம் என்று சொல்லப்படும் மாசி மாத பெளர்ணமி தினத்தன்று மாலையில் ஸ்ரீ லலிதையின் அவதாரம் நிகழ்ந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே எல்லா பெளர்ணமி தினங்களிலும் செய்யப்படும் ஆவரண பூஜைகள் இந்த் மாசி மாத பெளர்ணமியன்று மாலை மிகச் சிறப்பாகச் செய்யப்படுகிறது.

இந்த மாசி மாத பெளர்ணமி தினமே ஹோலிப் பண்டிகை என்று வடநாட்டில் கொண்டாடப்படுவதாம். இந்த ஹோலிப் பண்டிகையானது கண்ணுக்குத் தெரியாத ராக்ஷசர்களிடத்திருந்து குழந்தைகளைக் காப்பதற்காக என்று பவிஷ்யோத்தர புராணத்தில் கூறப்பட்டிருக்கிறதாகத் தெரிகிறது.



மாசிமாத ஞாயிற்றுக் கிழமையில் அமாவாசை, திருவோணம் வருமானால் அந்த தினம் மிகச் சிறப்பானதாக ‘அர்த்தோதயம் என்று சொல்லப்படுகிறது. இதுவே ஞாயிறுக்கு பதிலாக திங்கள் வருமாயின் ‘மகோதயம் என்று கூறியிருக்கிறார்கள். இந்த தின்ங்களில் செய்யும் கர்மாக்கள் மிகுந்த விசேஷம் என்கிறார்கள் பெரியோர். மாசி மகத்தன்று கும்பகோணம் மகாமக குளத்தில் பிதுர் தர்பணம் செய்தால் பித்ரு தோஷம் நீங்குமாம்.

மாக ஸ்நானம் என்பது மிகுந்த நற்பலன்களை அளிக்க்க் கூடியது என்று கூறியிருக்கிறார்கள். தை அமாவாசைக்கு அடுத்த தினத்தில் இருந்து,  பிரம்ம முஹூர்த்த காலத்தில் சங்கல்பம் செய்து ஸ்நானம் செய்தவதற்கு என்று ஸ்லோகம் செய்து கொடுத்திருக்கிறார்கள் பெரியோர். பலகாலம் விசேஷ தீர்த்தங்களில் நீராடிய பலனை மாக ஸ்நானம் அளித்துவிடுவதாகப் புராணங்கள் கூறுகின்றன. தேவேந்திரன் மாசி மகத்தன்று துங்கபத்ராவில் நீராடி, சிவ பூஜை செய்து,  சாப விமோசனம் பெற்றதாகச் சொல்லப்படுகிறது.

“மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்” 

என்று சம்பந்தர் கூறுவதன் மூலமாக மாசியில் கடலாடுவதன் சிறப்பும், கபாலி கோவிலில் மாசி மாதச் சிறப்பு உற்சவம் பற்றியும் தெரிகிறது.

இந்த மாசி மாதத்தில் வரும் கிருஷ்ண பக்ஷ அஷ்டமி (மஹா அஷ்டகை) பித்ருக்களது ஆசிகளை நமக்கு கொடுக்கும் என்று தெரிகிறது. 

காரடையான் நோன்பு / மாசி-பங்குனி நோன்பு என்பதும் இந்த மாதத்தின் கடைசியில், பங்குனி வருவதற்கு சில நாழிகைகள் முன்னறாக மாசியிலேயே நூற்க்கும் நோன்புதான். 

இப்படியான சிறப்புக்கள் அதிகம் கொண்ட மாசியில் ஈசனை வழிபட்டு எல்லா நலங்களும் பெற்றிடுவோமாக. 

Tuesday, February 7, 2012

தைப் பூசம் - மதுரையிலே தெப்போத்ஸவம்




நேரமின்மையால் ஏதும் எழுத முடியவில்லை. காணொளியை வலையேற்றியவர்களுக்கு நன்றி. 

Sunday, January 8, 2012

2012 திருவாதிரை சிறப்புப் பதிவு : திருவதிகை வீராட்டனேஸ்வரர்


அஷ்ட வீராட்டனேஸ்வரர் கோவில்களில் திருவதிகை வீராட்டனேஸ்வரர் கோவிலும் ஒன்று. திரிபுரம் எரித்த ஈசனுக்கு பெருமாள் தானே சரமாக/அம்பாக இருந்து தாருகனை அழிக்க உதவியதாகச் சொல்லப்படுகிறது. பல்லவர்களால் கட்டப்பட்டு, சோழர்கள் மற்றும் பாண்டியர்களால் வழிபடப்பட்டு பல நிவந்தங்கள் அளித்து அவ்வப்போது புனரமைத்ததாகச் சொல்லப்படுகிறது. சமீபத்திலும் புனரமைத்திருக்கிறார்கள். மிகப் பெரிய லிங்க ரூபத்தில் ஈசன் அருளுகிறார். அருகிலேயே தனிச்சன்னதியில் அம்பிகை திரிபுரசுந்தரி நின்ற கோலத்தில் காக்ஷியளிக்கிறாள்.
  
முன்பு வாயில் தோற்றம்

கருவறையில் காட்சி அளிக்கும் வீராட்டனேஸ்வரர் 16 பட்டைகளுடன் கூடிய சுயம்பு லிங்கம். லிங்கத் திருமேனிக்குப் பின்னால் கருவறைச் சுவற்றில் பார்வதி, பரமேஸ்வரன் சுதை சிற்பமாக தரிசனம் தருகிறார்கள். கருவறை விமானம் கொள்ளை அழகு, அவ்வளவும் சிற்பங்கள். கருடன், பிரம்மா, திருமால், பஞ்சபாண்டவர் ஆகியோர் இத்தலத்தில் வீரட்டேஸ்வரரை பூஜித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.  இத்தலத்தில் இறைவன் தேரில் வந்து திரிபுரம் எரித்த காரணத்தால் இங்குள்ள கருவறையே தேர் போன்ற அமைப்பில் இருக்கிறது. இந்த கோபுரத்தை மாதிரியாக்க் கொண்டே தஞ்சை கோபுரத்தை ராஜராஜ சோழன் கட்டியதாகச் சொல்லுகிறார்கள்.  

கருவறை கோபுரம்
முன்-மண்டபத்தை கடந்தவுடன் கொடிமரத்தின் இடதுபுரத்தில் சூலை தீர்த்தக் குளம் இருக்கிறது. அப்பர் இந்த குளத்தில் குளித்துவிட்டுப் பாடல்கள் பாடியதால் சூலை நோய் தீர்ந்த்தாகச் சொல்லுகிறார்கள், ஆகவே இந்தக் குளத்தில் மூழ்கி இறைவனை வணங்குவதால் வயிற்றில் ஏற்படும் வியாதிகள் எல்லாம் நீங்கும் என்கிறார்கள். தற்போது இக்குளத்தில் நீர் இல்லை என்றாலும் பல படிகளுடன் மிகுந்த ஆழ்த்துடன் பார்க்க மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. சமீபத்தில் புனரோத்தாரணம் செய்கையில் நக்ஷத்திர தேவதைகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கல்வெட்டு செய்திருக்கிறார்கள். இந்த கல்வெட்டுகளில் அந்தந்த நக்ஷத்திரங்களுக்கான தலங்கள், மூர்த்திகள், மரம், ரத்தினம் போன்றவை சொல்லப்பட்டிருக்கின்றன. கொடிமரத்தின் வலது புரத்தில் நவகிரஹங்களுக்கான மரங்கள் வளர்க்கப்படுகிறது.  இந்த மரங்களுக்கு அருகிலேயே அப்பர் பெருமானுக்கு ஒரு தனி சன்னதி அமைத்திருக்கிறார்கள்.

கோபுர சிற்பங்களில் திரிபுர சம்ஹார கோலம்

அப்பர் ஸ்வாமிகளுக்கு சூலை நோய் தீர்த்த இறைவன் இவர். திருஞானசம்பந்தருக்குத் திருநடனங் காட்டிய திருத்தலம், அதே போல சுந்தரருக்கு இங்கே  திருவடி தீட்சை செய்தருளியதாகவும் சொல்கிறார்கள். சைவ சித்தாந்த மூல நூல்களில் ஒன்றான “உண்மை விளக்கம் என்னும் நூலை அருளிய “மனவாசகம் கடந்தார் அவர்களது ஜனன ஸ்தலம் இதுவே என்று கூறுகிறார்கள்.
 
அப்பர் தனது சகோதரி திலகவதியுடன் இத்தலத்தில் வந்து பிரார்த்தனை செய்து நோய் தீர்ந்த்தாகச் சொல்லப்படுகிறது. அப்பர் ஸ்வாமிகளின் முதல் பதிகமே இங்குதான் பாடப்பட்டிருக்கிறது. அவர் தனது சூலை நோய் நீங்குவதற்காகப் பாடப்பட்ட அப்பதிகங்களில் முதலானது கீழே!








கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன்
ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.

பொருள் : கெடில ஆற்றின் வடகரையில் விளங்கும் திருவதிகை என்னும் வீரட்டானத் திருப்பதியில் உகந்தெழுந்தருளியிருக்கும் தலைவனே! யான் இப்பிறப்பில் என் அறிவு அறியப் பல கொடுஞ் செயல்களைச் செய்தேனாக எனக்குத் தோன்றவில்லை. அவ்வாறாகச் சூலைநோய், யாருக்கும் நோய்முதல் புலப்படாத வகையில் என் வயிற்றினுள் குடலோடு ஏனைய உள் உறுப்புக்களைக் கட்டிச் செயற்படாமல் மடக்குதலால் அடியேன் அவ்வலியைப் பொறுக்க இயலாதவனாக உள்ளேன். கூற்றுவனைப் போல அந்நோய் அடியேனைத் துன்புறுத்தும் செயலை நீக்கும் ஆற்றலுடையீர். அந்நோயை விலக்கினால் எப்பொழுதும் காளை மீது ஊரும் உம் அடிக்கண் நீங்காமல் மனத்தால் துணிவும் தலையால் தணிவும் மொழியால் பணிவும் தோன்ற வணங்குவேன்

[பாடலுக்கும், பொருளுக்கும் நன்றி : தேவாரம்.காம்]

உற்சவர் திருமேனி – போருக்கான ஆயுதங்கள் கைகளில்

திருமணத் தடை அகல, எதிரிகள் அகல என்றெல்லாம் பரிகாரம் செய்ய இந்த தலம் சிறப்பானதாகச் சொல்லுகிறார்கள். நாங்கள் சென்ற சமயத்தில் “தானே” புயலின் சீற்றம் ஆரம்பமாகியிருந்தாலும் 10-15 பெண்கள் தங்களது பிரார்த்தனையைச் செலுத்த வந்திருந்தார்கள், ஆனாலும் கோவிலில் இறைவன் தனியே இருப்பது போன்ற நினைவினைத் தவிர்க்க இயலவில்லை. இம்மாதிரிக் கோவில்களுக்கு அடிக்கடிச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகிறது.


நமசிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!

Wednesday, January 4, 2012

2012 வைகுண்ட ஏகாதசி: திருவதிகை சர நாராயணப் பெருமாள் தரிசனம்....

ஒருவாரகாலம் கடலூர் மாவட்ட்த்தில் தங்கி அக்கம் பக்கம் கோவில்களுக்குச் செல்வதென முடிவாகி, உடன் செயல்வடிவம் பெற்றது கடந்த வாரம். பல இடங்களுக்கும் சென்றோம். முதலாவதாக திருவதிகை பற்றி சில இடுகைகள் எழுத முயல்கிறேன்.


*********************

சாதாரணமாக வைகுண்ட ஏகாதசியன்று ஸ்ரீரங்கம் சென்று பெருமாள் தரிசனம் செய்வது விசேஷம் என்றாலும் இயலாதவர்கள் அருகிலிருக்கும் பெருமாள் கோவில்களுக்குச் செல்வது வழக்கம். இந்த வைகுண்ட ஏகாதசி விசேஷமாக திருவதிகையில் வீற்றிருந்து நமக்கெல்லாம் வசந்தத்தை அள்ளி அருளும் சரநாராயணப் பெருமாளை தரிசிக்கலாம் வாருங்கள்.

ஆலயத்தின் முகப்புத் தோற்றம்

 கடலூர் – பண்ரூட்டி சாலையில் பண்ரூட்டிக்கு சில கிலோமீட்டர் முன்பாக இருக்கும் சிறு ஊர் திருவதிகை. இங்கு பெருமாள் கோவில்கள் மூன்றும், சிவன் கோவில் ஒன்றும் இருக்கிறது. சிவன் கோவில் திருவதிகை வீராட்டனேஸ்வரர் கோவில், இது பற்றித் தனியாக வேறு ஒரு இடுகையில் காண்போம்.


ஈசனின் வீரம் விளங்கும் தலங்களை வீராட்டனம் என்று அழைக்கின்றனர். அஷ்ட வீராட்டன தலங்கள் என்று எட்டுதலங்களைச் சொல்வர். அந்த தலங்களில் திருவதிகையும் ஒன்று. இங்கே ஈசன் முப்புரங்களை எரித்ததாகச் சொல்லப்படுகிறது. இது தவிர தாருக வதத்தின் போது ஈசனுக்கு உதவியாக எல்லா தேவர்களும் வருகின்றனர். பரமனது தேர் சக்கரமாக சூர்ய-சந்திரர்களும், ப்ரம்மா சாரதியாகவும், பெருமாள் ஈசன் தொடுக்கும் சரமாகவும் இருந்த்தாகச் சொல்லப்படுகிறது.
 


இவ்வாறு சரமாக/அம்பாக இருந்த காரணத்தால் இங்கிருக்கும் பெருமாளது திருநாம்ம் சர நாராயணப் பெருமாள், ஸ்ரீதேவியுடன் திருமணக் கோலத்தில் மூலஸ்தானத்தில் அருள்கிறார். மூலவர் அருகிலேயே மார்கண்டேய மகரிஷியும் காக்ஷி கொடுக்கிறார். இங்கு தனிச்சன்னதியில் அருளும் தேவியின் திருநாமம் ஹேமாம்புஜவல்லித் தாயார். ஹேமாம்புஜ வல்லியார் மார்க்கண்டேயரது மகள், பெருமாளுக்கே தனது பெண்ணை தாரைவார்த்துக் கொடுத்து, அவர்களது கல்யாணக் கோலத்தைக் கண்டுகளிக்கிறார்.





இந்தக் கோவிலுக்கு நாங்கள் சென்ற போது பகல் பத்து முடிந்து பட்டர் விச்ராந்தியாக உட்கார்ந்திருந்தார். கூட்டம் ஏதுமில்லை. திருமங்கையாழ்வார் அலங்காரம் கலைத்து எதாஸ்தானத்திற்கு ஏளப்பண்ணிக் கொண்டிருந்தார் பட்டரின் உதவியாளர்.

நாங்கள் உள்ளே நுழைந்த்தும் பட்டர் வந்து தரிசனம் செய்து வைத்து பெருமாள் சரமாக வந்துதவிய வரலாற்றைக் கூறினார். பெருமாள் தரிசனம் முடிந்து தாயார் சன்னதிக்குத் திரும்புகையில் அவரே எங்களை அழைத்து, தாயார் சன்னதிக்குச் செல்லும் முன்னர் இந்தக் கோவில் சிறப்பினை காணவேண்டாமா என்று கேட்டவாறு இன்னொரு சன்னதிக்கு அழைத்தார்.

பெருமாள் சன்னதிக்கு வலது புறத்தில் கதவுகள் மூடியவாறு இருந்த அந்த சன்னதியைத் திறந்து விளக்குகளை ஏற்றிக் கொண்டே எங்களிடத்தே பின்வரும் கேள்வியும் கேட்டார். “மாரி மழை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் என்று வரும் திருப்பாவை உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டார். எனது சகோதரி, உடனடியாக அந்தப் பாசுரத்தை பாட/சொல்லத் தொடங்கிவிட்டார். இந்தப் பாசுரத்தில் “மன்னிக் கிடந்துறங்கும் சிங்கம்  இங்கே இருக்கிறார் பாருங்கள். இவரைத்தான் கோதை திருப்பாவையில் சொல்லியிருக்கிறார் என்று கூறி அங்கிருந்த சயன கோலத்தைக் காண்பித்தார். அப்போதுதான் கவனித்தோம் அங்கே சயனித்திருப்பவர் நமது சிங்கமுகப் பெருமாள் என்று.  4-5 அடிகளுக்குள்ளான நீளத்தில் சிங்கப் பெருமாள் சயனத்தில் இருக்கிறார், அருகில் தேவியும் இருக்கிறார்.



பார்கடலில், ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்ட பெருமாளை ஸ்ரீரங்கம் முதலான பல திவ்யதேசங்களில் தரிசித்திருக்கிறோம். ஆனால் நமது நரசிம்ஹன் இங்கு மோகனமாக பள்ளி கொண்டிருப்பது இங்கு மட்டுமேயான விசேஷம் என்று கூறினார். அழகு என்றால் அது அந்த அர்ச்சாவதாரம்தான். என்னையாட்கொண்ட எம்பெருமான் என்று நான் இப்போதும் நினைக்கும்படியான திவ்ய கோலம். திகட்டா தீங்கரும்பு இவர். அந்த சன்னதியை விட்டு அகல மனமில்லை. ஆனால் பட்டர் தாயார் சன்னதிக்கு அழைத்த்தால் அவரை விட்டு அடுத்த சன்னதிக்குச் சென்றோம்.


ஆயிரம் வருஷங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட்து, பல்லவ, பாண்டிய, சோழ அரசர்கள் நிவந்தங்களும் புனருத்தாரணமும் செய்திருப்பதாகத் தெரிகிறது. இவ்வூரிலேயே இன்னொரு சயனப் பெருமாளும் இருக்கிறார். இக்கோவில் இரண்டாம் குலோத்துங்கன் கட்டியது என்று கூறினார் அங்கிருக்கும் பட்டர்.

இந்த இரு பெருமாள் கோவில்கள் தவிர ஒரு வரதராஜர் கோவிலும் இருப்பதாகத் தெரிகிறது. தேமேன்னு கோவிலுக்கு வந்த எங்களை காற்றும், மழையுமாய் “தானேவந்ததால் அந்தக் கோவிலுக்குச் செல்ல இயலவில்லை.  

இப்பதிவைப் படிக்கும் அன்பர்கள் என்றேனும் ஒருநாள் இந்தக் கோவிலுக்குச் செல்ல சங்கல்பித்துக் கொள்ளுங்கள், அவனருளால் செல்லும் பாக்கியம் கிட்டும். அந்த மோகன ரூப நரசிம்ஹனை கண்ணாரக் காணுங்கள்.
கோவிந்த நாம சங்கீர்த்தனம்!

கோவிந்தா! கோவிந்தா!

 
                                                                     
                                        அடுத்து திருவாதிரைச் சிறப்பாக "வீராட்டனேஸ்வரர்"

Saturday, December 31, 2011

ராமானுஜருக்கு உகந்த திருப்பாவைப் பாடல்




கடந்த 5 நாட்களில் கும்பகோணத்தைச் சுற்றியிருக்கும் பல கோவில்களுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்த்து. அதில் நாச்சியார் கோவில் என்று அழைக்கப்படும் திருநாரையூரும் ஒன்று. அங்கிருக்கும் பட்டர் ஒருவரிடத்துப் பேசிய போது கிடைத்த தகவலே இந்த பதிவு.

திருப்பாவைப் பாசுரங்கள் ராமானுஜருக்கு மிகவும் உகந்தவை என்று கூறி, ஆண்டாள் தமது பாடலில் கூறிய 100 தடா அக்காரவடிசலை பெருமாளுக்குப் படைத்தவர் ராமானுஜர் என்று கூறினார். ராமானுஜர் பிக்ஷைக்குச் செல்லும் போது பாசுரங்களைப் பாடியவாறு செல்வாராம். இவ்வாறு பிக்ஷைக்குச் செல்லுகையில் ஒருநாள் திருப்பாவைப் பாடல்களைப் பாடியவாறு சென்றிருக்கிறார். அப்போது அவர் பெரியநம்பி அவர்களது வீட்டு வாசலில் பிக்ஷை கேட்கிறாராம். பெரியநம்பியின் மகள் அத்துழாய், பிக்ஷை இடுவதற்காக தமது இல்லத்தின் வாசலுக்கு வருகிறார். அத்துழாயின் வருகையைக் கண்ட ராமானுஜர் அவள் முன் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார்.


ராமானுஜரைப் பற்றி முன்னரே அறிந்திருந்த அத்துழாய், அவர் தன்னை வீழ்ந்து வணங்கியது கண்டு அதிர்ச்சி அடைகிறாள், பின்னர் தனது தந்தையான பெரிய நம்பியிடம் நடந்த நிகழ்வினைக் கூறுகிறாள். இதைக் கேட்ட நம்பி, வீழ்ந்து வணங்கும் போது ராமானுஜர், “உந்து மதகளிறு” பாசுரம் பாடினாரா? என்று தனது மகளைக் கேட்கிறார். அத்துழாயும் ‘ஆம்’ என்று பதிலளிக்கிறாள். அப்போது அத்துழாய்க்கு சற்றுப் புரிந்திருக்கிறது.

“செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப, வந்து திறவாய் மகிழ்ந்தலோரெம்பாவாய்” என்ற இட்த்தைப் பாடியபோது அத்துழாய் தனது இல்லத்துக் கதவைத் திறந்து வெளியே வந்திருக்கிறாள். பாடிய பாசுரத்தில் தன்னை மறந்த ராமானுஜர், நம்பியின் இல்லத்துக் கதவைத் திறந்தது பாடலில் சொல்லிய நப்பின்னை தேவியே என்பதாக அத்துழாய்யை வீழ்ந்து வணங்கியிருக்கிறார். அதாவது அத்துழாய் ராமானுஜரது கண்களில் நப்பின்னையாகவே தோன்றியிருக்கிறாள். இந்த நிகழ்ச்சியைக் கொண்டு, இப்பாடாலை ராமானுஜருக்கு மிகவும் பிடித்த பாடல் என்று கூறுகிறார்கள்.

பிராட்டியை முன்னிட்டே பெருமாளைச் சரணடைய வேண்டும் என்பது வைஷ்ணவ சம்பிரதாயக் கோட்பாடு. அதனால்தான் இந்தப் பாடலில் நப்பின்னையைத் துயிலெழுப்புவதன் மூலமாக பெருமாளைச் சரணடைகிறாள் ஆண்டாள். இன்றும் இந்தப் பாசுரத்தைப் பாடும் போது இதை இரண்டு முறை ஓதுவார்களாம்.


ஆண்டாள் திருவடிகளே சரணம்.

எல்லோருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Monday, December 19, 2011

ஆழ்வார்களைத் துயிலெழுப்பும் ஆண்டாள்...




பல மாதங்களுக்குப் பிறகு நண்பன் சேஷசாயி 2-3 நாட்கள் முன்னர் தொலைபேசியில் பேசினான். அப்போது, அவன் மூலம் அறிந்த சில செய்திகளே இந்த இடுகை.



திருப்பாவை முதல் பத்து பாடல்களில் ஆண்டாள், ஆழ்வார்களைத் துயில் எழுப்பியிருக்கிறாள் என்பதாக ஒரு தாத்பர்யம் இருக்கிறதாம். அதாவது திருத் தொண்டர்களைக் குறிப்பிட்டு அவர்களைத் துயிலெழுப்பி, அதன் பின்னர் நப்பின்னையான தாயாரை முதற்க் கொண்டு பெருமாளை சரணடைகிறாளாம் கோதை. எந்தப் பாடல்களில் எந்த ஆழ்வாரைக் குறிப்பிட்டிருக்கிறாள் என்பதைப் பார்க்கலாம்.



“புள்ளும் சிலம்பின காண்” என்னும் பாசுரத்தில், ‘பிள்ளையே எழுந்திராய்’ என்று கூறியிருப்பது பொய்கை ஆழ்வாரைக் குறிப்பதாகச் சொல்லுகிறார்கள். பொய்கையார் பிள்ளைப் பிராயத்திலேயே இறையனுபவம் பெற்றிருந்தவராம்.



“கீசு கீசு என்றெங்கும்” என்ற பாசுரத்தில், ‘பேய்ப் பெண்ணே’ என்று வருவது பேயாழ்வாரைக் குறிக்கிறது என்றும், “கீழ்வானம் வெள்ளென்று” என்கிற பாசுரத்தில், ‘கோதுகுலமுடைய பாவாய்’ என்பது பூத்த்தாழ்வாரைக் குறிப்பது என்றும் சொல்லுவார்களாம். பூதத்தாழ்வார், திருமல்லையில் சயனித்திருக்கும் பெருமாளைப் பாடும் போதெல்லாம் மிகுந்த குதுகலம் அடைவாராம். ஆகவே அந்தக் குறியீட்டின் மூலமாக பூத்த்தாழ்வாரைக் குறிப்பிட்டுச் சொல்லுவதாகத் தெரிகிறது.



“தூமணி மாடத்து” என்கிற பாசுரத்தில், ‘மாமன் மகளே’ என்றது திருமழிசை ஆழ்வாரைக் குறிப்பதாம். ப்ருகு முனிவரின் புத்ரியாக அவதரித்தவள் பார்கவி என்றழைக்கப்படும் ஸ்ரீ தேவியான மஹாலக்ஷ்மி. ப்ருகு முனிவரின் புத்ரர் பார்க்கவர். இந்த பார்கவரின் புத்ரராம் திருமழிசையாழ்வார். ஆகவே ஆண்டாள் 'மாமன் மகளே' குறிப்பிடுவது திருமழிசைபிரானை என்கிறார்கள்.





“நோற்று சுவர்க்கம் புகுகின்ற” என்னும் பாசுரத்தில், ஆற்ற அனந்தனுடையார்” என்பது ஆற்றுக் கொண்ட குலசேகராழ்வாரைக் குறிப்பதாம். இவருக்கு ராமனிடத்தான ஈடுபாடு அசாத்யம். ராமாயண காவியத்தைப் கேட்கும் போது தன்னை மறந்து ராமனுக்கு உதவக் கிளம்பிடும் அளவு ஆற்றங் கொண்டவர் என்பதால் இவரைக் குறிப்பிடுகிறது என்கிறார்கள்.



“கற்றுக்கறவை” என்னும் பாசுரத்தில், ‘குற்றமொன்றில்லாத கோவலர்: என்பதாகச் சொல்லுவது பெரியாழ்வாரை. அதாவது ஆசாரம், நியம-நிஷ்டையில் வழுவாதவரான பெரியாழ்வாரே இங்கு குற்றமில்லாத கோவலர் என்று கூறுகிறார்கள்.



“களைத்திளங் கற்றெருமை” என்பதில், ‘நற்செல்வன் நங்காய்” என்பது தொண்டரடிப் பொடியாரைக் குறிப்பதாகவும், “எல்லேஇளங்கிளியே” எனும் பாசுரத்தில், ‘கிளியே’ என்பது திருமங்கையாரைக் குறிப்பிடுவதாகவும் சொல்லப்படுகிறதாம். திருமங்கையார் கிளியைத் தனது பாடல்களில் அடிக்கடிச் சொல்லியிருக்கிறதால் இவ்வாறாகச் சொல்லப்படுகிறதாம்.


“புள்ளின்வாய் கீண்டானை: என்ற பாசுரத்தில், ‘போதரிக் கண்ணினாய்’ என்றது திருப்பாணாழ்வாரைக் குறிக்கிறதாம். “அமலாதிபிரான்” என்று தொடங்கும் பாசுரம் முதலாக பல பாசுரங்களில் பெருமாளின் கண்ணழகை மிகவும் வர்ணித்தவராம் திருப்பாணாழ்வார். ஆகவே இந்த்ப் பாடல் அவரைக் குறிப்பதாகச் சொல்லுகிறார்கள் போல.



“உங்கள் புழக்கடை” என்னும் பாசுரத்தில், ‘நங்காய்’ என்பது நம்மாழ்வாரைக் குறிப்பதாம். நம்மாழ்வாரது தாயார் பெயர் நங்காய் என்பதால் இந்தக் குறியீடு அவரையே குறிப்பதாகச் சொல்லப்படுகிறது.



....................................................................................2011 மார்கழிப் பதிவுகள் தொடரும்

Saturday, December 10, 2011

திருக்கார்த்திகை - தீப கைங்கர்யச் செம்மல்கள்...




திருவண்ணாமலை மற்றும் தமிழகத்தில் சில பகுதிகளில் 2 நாட்கள் முன்னரே கார்த்திகை தீபத் திருநாள் முடிந்துவிட்டது. கார்த்திகை நக்ஷத்திரத்தை அடிப்படையாகக் கொண்டாடப்பட்டது அது. இன்றுதான் கார்த்திகைப் பெளர்ணமி, சர்வாலய தீபம். அதாவது தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றிலும் வரும் பெளர்ணமியும், அந்த பெளர்ணமியன்று இருக்கும் நக்ஷத்திரங்களும் சிறப்புடன் ஆலயங்களில் கொண்டாடப்படுவதை நாம் அறிவோம். உதாரணமாக, சித்திரா பெளர்ணமி, வைகாசி விசாகம் (வைகாசி பெளர்ணமி, ஆவணி அவிட்டம், ஐப்பசி அன்னாபிஷேகம், மாசி மகம், பங்குனி உத்திரம் போன்றவை பெளர்ணமி நாட்களே). இது போன்றே கார்த்திகையில் பெளர்ணமியன்று கார்த்திகை நக்ஷத்திரம் வரும். ஆனால் இந்த வருஷம் கார்த்திகை நக்ஷத்திரம் பெளர்ணமிக்கு இருதினங்கள் முன்னதாக வந்திருக்கிறது. ஆகவே பெளர்ணமியை அடிப்படையாகக் கொண்ட சர்வ ஆலய தீபம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த விசேஷமான நாளில் தீபத்தின் சிறப்பை உணர்ந்து கொண்டாடிய சிலரை நாமும் நினைவுக் கொண்டு வந்து அவர்கள் போன்று தீபத்தை வணங்கலாம் வாருங்கள்.


கலிநாயனார் என்பவரைப் பற்றி நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கலாம். இவர் எண்ணெய் வியாபாரம் செய்தாலும், திருவெற்றியூர் கோவிலில் தீபமேற்றும் பணியைச் செய்து வந்தவர். காலக் கிரமத்தில் தனது வியாபாரம் நொடித்துப் போன போதிலும் கோவிலில்தீபமேற்றுவதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். ஒரு சமயத்தில் வறுமை முற்றி தன்னால் விளக்கு ஏற்ற எண்ணைய் வாங்கவும் இயலாத நாளில் தனது ரத்தத்தையே விளக்கிற்கு எண்ணையாக்க முயல்கிறார். அந்த சமயத்தில் ஈசன் அவருக்கு தரிசனம் தந்து கலிநாயனாரைகாப்பாற்றியதாகச் சொல்லப்படுகிறது. தனது உடலை வருத்தி தீபம் ஏற்றத் துணிந்த கலிநாயனாருக்கு இறைதரிசனம் கிட்டியிருக்கிறது.


கலிநாயனார் போன்ற இன்னொருவர் கணம்புல்லர் என்பவர் இவரைப் பற்றி சேக்கிழார் குறிப்பிடுகையில் பின்வருமாறு கூறியிருப்பதாகத் தெரிகிறது.

அணங்குமைபாகம் ஆக அடக்கி ஆதிமூர்த்தி
வணங்குவார் இடர்கள் தீர்க்கும் மருந்து நல்வருந் தவத்த
கணம் புல்லார்க்கு அருள்கள் செய்து காதமால் அடியார்க்கு என்றும்
குணங்களைக் கொடுப்பார் போலும்


கணம்புல்லர் என்பது இவரது தொழிலை அடிப்படையாகக் கொண்ட பெயரெனத் தெரிறது. நித்தமும் காட்டிற்குச் சென்று கணம்புல்லை சேகரித்து அதை கிராமங்களில் விற்று கிடைக்கும் பணத்தைக் கொண்டு சிதம்பரம் ஆலயத்தில் விளக்கேற்றி வந்தவர்.சில காலமாக இவர்விற்று வந்த புல்லை யாரும் வாங்காத காரணத்தால் எண்ணெய் வாங்க இயலாது தவிக்கிறார். கோவிலில் தீபமேற்ற இயலாது வருந்தியவர், ஆத்மஹத்தி செய்து கொள்ள தீர்மானித்து தீ மூட்டி அதில் குதிக்க முயல்கிறார், அப்போது அவருக்கு இறைதரிசனம் கிட்டுகிறது என்பது சேக்கிழார் பெருமானது வாக்கு.


மூன்றாவதாக வருபவர் நமிநந்தி அடிகளார். இவர் திருவாரூரில் விளக்கேற்றும் திருப்பணி செய்தவர். இவருக்கும் ஒரு சமயத்தில் விளக்குக்கு எண்ணெய் கிடைக்காத நேரத்தில் சமணர்கள் இவரிடத்தில் 'உங்கள் தெய்வத்திற்கு நெய் விட்டு விளக்கேற்றத்தான் வேண்டுமோ?,தண்ணீரை விட்டு விளக்கேற்ற உங்கள் தெய்வம் அருளாதா?' என்று பரிகசித்ததாகவும், மனம் நொந்து, இறைவனைப் பணிந்த அடிகளார் குளத்து நீரை விட்டு விளக்கேற்றியபோது அவை பிரகாசமாக ஒளிர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. இவரது தொண்டை அப்பர் பாடுகையில்பின்வருமாறு பாடிச் சிறப்பித்திருக்கிறார்.


ஆராய்ந்தடித் தொண்டர் ஆணிப்பொன் ஆரூரகத்தடங்கி

பாரூர் பரிப்புத்தகம் பங்குனி உத்திரம் பாற்படுத்தான்

ஆரூர் நறுமலர் நாதன் அடித்தொண்டன் நம்பிநந்தி

நீராற் திருவிளக்கிட்டமை நாடறியுமன்றே


வள்ளலார் ஸ்வாமிகளும் அருட்பெருஞ்சோதியாகவே இறைவனை வழிபட்டவர் என்பது நாம் அறிந்ததே!.


தமிழகத்திலிருக்கும் பல கோவில்களின் வரலாற்றைச் சொல்லும் கல்வட்டுக்களிலும் கோவிலில் தீபம் ஏற்றுவதற்கு என்றே நிவந்தங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதைக் காண்கிறோம். கோவிலில் ஒரு விளக்கு எரிக்க நிவந்தம் அளிக்கையில் அதற்கு விளக்கு மட்டும் கோவிலுக்கு அளிக்கவில்லைநம் பெரியோர்கள். அந்த விளக்கெரிக்கும் செயல் தொடர்ந்து நடைபெறுவதற்கும் வைப்புநிதியாக பசுக்கள், ஆடுகள் போன்றவற்றை அளித்திருக்கிறார்கள். அவ்வாறு ஆடு/பசுக்களை அளிக்கையில் அவை பல்கிப் பெருகிட கிடாய்/எருது போன்றவற்றையும் சேர்த்து அளித்திருப்பதாகக் கல்வெட்டுக்கள்தெளிவாகச் செய்தி பகர்கின்றன.


இவ்வாறு நம் முன்னோர்கள் போன்று நாமும் நம்மால் இயன்ற அளவு தினமும் விளக்கேற்றி இறைவழிபாடு செய்வோம், குறிப்பாக திருக்கார்த்திகை தீபத்தினை சிறப்பாகக் கொண்டாடுவோம், தீப ஒளி எங்கும் வீசட்டும், அவ்வொளி நமக்கு ஞானஒளியாக திகழட்டும்.


தீப மங்கள ஜ்யோதி நமோ நம:

வேத மந்த்ர ஸ்வரூபா நமோ நம: