
இந்த கதை எல்லோருக்கும் தெரிந்ததுதான், கதையின் ஒரு பகுதி எல்லோருக்கும் தெரிந்தாலும், அரிதான சில விஷயங்களை இன்னும் கொஞ்சம் விஸ்தாரமாக சொல்ல முயல்கிறேன்.
சிருஷ்டித் தொழிலைச் செய்ய தனக்கு அடுத்தபடியாக பிரும்மா பத்து பிரஜாபதிகளை உருவாக்கினார். இவர்கள் ப்ரும்மாவின் மானச புத்திரர்கள் என்பர். இந்த பிரஜாபதிகளே உலகில் உள்ள புல்-பூண்டு, மக்கள், பிராணி, பக்ஷிகளை உண்டாக்குபவர்கள். இந்த 10 பேரில் ஒருவர்தான் தக்ஷ பிரஜாபதி என்று அழைக்கப்படும் தக்ஷன். தாரணி என்னும் பெண்ணை மணந்த தக்ஷன் உலகில் படைப்புக்காக பல குமாரர்களைப் பெற்றார். ஆனால் நாரதர் இந்த குமாரர்களுக்கு உபதேசம் செய்து, உலக வாழ்வில் விருப்பமில்லாத தவசிகளாக மாற்றிவிடுகிறார். இதனால் கோபமடைந்த தக்ஷன் நாரதரை, நிலையற்றுத் திரிந்து கொண்டேயிருக்கவும், கலகப்ரியனாகவும் இருக்க சபித்து விடுகிறார். இதற்கிடையில் தக்ஷனின் இன்னொரு மனைவியான அசக்னி பல பெண்களை பெறுகிறாள். இவர்கள் கன்னிகைகளாகும் சமயத்தில் சந்திரனுக்கு 27 பெண்களையும் (நக்ஷ்த்திரங்கள்), காச்யபர், ஆங்கீரஸர், கிரிசுவா போன்றவர்களுக்கும் மணம் செய்விக்கிறார்.
அப்போது பிரும்மா தக்ஷனை நீண்ட தவம் செய்யப் பணித்து, தவத்தின் பயனாக லோகமாதா அன்னை பராசக்தியே மகளாக, தாக்ஷாயினியாகப் பிறக்கிறார். காலக்கிரமத்தில் கன்னிப் பருவம் அடைந்த தாக்ஷாயினி மனதில் ஈஸ்வரனையே பதியாக வரித்து, அனுதினமும் பூஜித்து, அவரை அடைய பல விரதங்கள் இருந்தாள். அப்போது ஈசன் நீண்டகாலமாக யோக நித்திரையில் இருப்பதால் சிருஷ்டி பாதிப்படைக்கிறது. ப்ரம்மாவும், விஷ்ணுவும் ஈசனை யோகத்திலிருந்து மீளப் ப்ரார்த்திக்க, ஈசனும் கண்விழித்து தாக்ஷாயினியை ஏற்க முடிவு செய்கிறார்.
ஒரு நன்னாளில், சுபயோக, சுபஹோரையில் ப்ரம்மா, விஷ்ணு, மற்றூம் முப்பத்து முக்கோடி தேவர்கள் முன்னிலையில் தக்ஷனின் கடைக்குட்டியான தாக்ஷாயினிக்கும், சிவபெருமானுக்கும் திருமணம் நடந்தது. பெண்ணை மணமுடித்துக் கொடுத்த தக்ஷன் சில காலம் சென்று, தனது மகளை காணும் ஆவலில் கைலாயம் செல்கிறார். அவர் கையிலை அடையும் முன்பே வாயிலில் இருந்த சிவகணங்கள் அவரை போகவிடாது தடுத்து பலவாறு கேலி செய்தனர். இதனால் மிகுந்த அவமானம் அடைந்த தக்ஷன் மனம் நொந்து, மகளை பார்க்காமலேயே திரும்பிவிடுகிறான். இதன் காரணமாக கையிலை வாசனை மட்டம் தட்ட எண்ணி, வேண்டுமென்றே ஒரு பெரிய வேள்வியை செய்யத் துவங்கி நாராயணனை வேள்விக்கு அதிபதியாக்கி, சிவனை அவமதிக்க முற்படுகிறார். தனது பிறந்த வீடு என்கிற பாசத்தால் ஈசனது சொல்லைக் கேளாமல் பிறந்தகம் சென்று, அங்கு தன் கணவருக்கும் தனக்கும் நேர்ந்த தூஷணையால் மிகுந்த கோபமடைந்து தக்ஷனால் தனக்கு ஏற்பட்ட உடலை துறக்க முடிவு செய்கிறாள்.
தக்ஷனால் யாகத்திற்காக ஏற்பட்ட அக்னியில் திடீரெனப் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொள்கிறாள். உடலில் இருந்து உயிர் போனாலும் அக்னி அந்த புனித உடலைத் தீண்டவேயில்லை. இதனாலேயே தாக்ஷாயினி சதிதேவி என்ற பெயர் பெறுகிறாள். இந்த நிகழ்ச்சிகளை நாரதர் கையிலையில் இருக்கும் ஈஸ்வரனுக்கு சொல்ல, மிகுந்த ரெளத்திரத்துடன் யாகசாலையினை அடைந்த ஈசன் தனது சடையினை வேகமாக தரையில் ஓங்கி அடிக்கிறார். அந்த சடையிலிருந்து வீரபத்ரர் மிக உக்ரத்துடன் தோன்றுகிறார். ஈஸ்வரனது கட்டளைப்படி, தக்ஷனது யாக சாலையினை சின்னாபின்னப்படுத்தி, தக்ஷன் தலையைக் கொய்து வேள்வித் தீயில் எறிந்துவிடுகிறான். அப்போது உயிரற்ற பகவதியின் உடலைக் கண்ட மஹாதேவன் கடும் கோபத்துடன் தாக்ஷயினியின் உடலை எடுத்து தன் தோளில் போட்டுக் கொண்டு கூத்தாட ஆரம்பித்துவிட்டார். அது சாதாரணக் கூத்தல்ல, ஊழிப் பெரும் கூத்து, அண்டசராசரங்களும் ஆட ஆரம்பித்தது. சூரிய-சந்திரரும், மற்ற தேவர்களும் நிலைதடுமாறினர். ஈரேழு பதினாலு லோகங்களும் ஆடியது. நவக்கிரகங்களும், அஷ்ட திக்பாலகர்களும் அவர்களது திசை மாறினர்.
நிலையின் விபரீதம் உணர்ந்த மஹாவிஷ்ணு ஈசனது உக்ரதாண்டவத்தை நிறுத்த ஒரே வழி சதிதேவியின் உடலை அவரிடமிருந்து பிரிப்பதுதான் என்று முடிவு செய்து தனது சுதர்சன சக்ரத்தை ஏவுகிறார். ஈசனைத் தொடர்ந்த சக்ராயுதம் சதிதேவியின் புனித உடற்பாகங்களை துண்டு-துண்டுகளாக வெட்டி வீழ்த்திக் கொண்டே சென்றது. இவ்வாறு வெட்டப்பட்ட அங்கங்களின் துண்டங்கள் நமது புனித பாரத தேசம் மட்டுமல்லாது பூவுலகம் முழுவதும் வீழ்ந்தன. அந்த இடங்களே நாளடைவில் அம்பாளின் சக்தி பீடங்களாகின. இவ்வாறு சதிதேவியின் இதயத்துக்கு மேலுள்ள அங்கங்கள் விழுந்த இடங்கள் வைதீக மார்க்க சக்தி தரும் திருத்தலங்களாகவும், இதயத்துக்கு கீழ்ப்பட்ட அங்கங்கள் வீழ்ந்த இடம் வாம-மார்க்க சக்தி ஷேத்திரங்கங்களாகவும் ஆனதாக புராணங்கள் சொல்கின்றன. மத்ஸய புராணமும், மகாபாரதமும் இத்தகைய இடங்கள் நூற்றியெட்டு என்று அட்டவணை அளித்தாலும், மற்ற புராணங்கள் 51 இடங்களையே சொல்கிறது. ஐப்பத்தொரு பீஜாக்ஷரங்கள் தோன்றிய இடங்களில் அங்கங்கள் விழுந்ததாகவும், அணிகலன்கள், ஆடைகள் விழுந்த இடங்களையெல்லாமும் சேர்த்து 108 என்பதாகவும் கூறப்படுகிறது.
யோகினி ஹ்ருத்ய தந்த்ரம் தாக்ஷாயினி தந்த்ரம், தந்த்ர சூடாமணி முதலிய நூல்களில் சக்தி பீடங்கள் பற்றி கூறப்பட்டிருந்தாலும், இவற்றுள் வேறுபாடுகள் இருக்கின்றது. இவ்வாறாக பல்வேறு நூல்களும் பல இடங்களைச் சொன்னாலும், ப்ரம்மாண்ட புராணத்தில் ஹயக்ரீவரால் அகஸ்தியருக்கு சொல்லப்பட்ட நியாஸ விதியில் இருப்பதே சிறந்த ப்ரமாணம் என்பார்கள்.
யோகினி ஹ்ருத்ய தந்த்ரம் தாக்ஷாயினி தந்த்ரம், தந்த்ர சூடாமணி முதலிய நூல்களில் சக்தி பீடங்கள் பற்றி கூறப்பட்டிருந்தாலும், இவற்றுள் வேறுபாடுகள் இருக்கின்றது. இவ்வாறாக பல்வேறு நூல்களும் பல இடங்களைச் சொன்னாலும், ப்ரம்மாண்ட புராணத்தில் ஹயக்ரீவரால் அகஸ்தியருக்கு சொல்லப்பட்ட நியாஸ விதியில் இருப்பதே சிறந்த ப்ரமாணம் என்பார்கள்.
