
அன்னை பராசக்திக்கு இந்த புண்ணிய பூமியில் எல்லா இடங்களிலும் ஆலயங்கள் உள்ளன. இவைகளில் பல தேவி பீடங்கள் என்று மிக முக்கியமாக கருதப்படுகிறது. அவற்றை பற்றி ஒரு தொடராக 2-3 பதிவுகள் எழுத எண்ணம்.
யாதேவி சர்வ பூதேக்ஷு சக்தி ரூபேண ஸ்ம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் சக்தி வடிவில் உறைகிறாளோ அவளுக்கு நமஸ்காரம்.
த்ரிகோணம் என்பது எல்லா சக்ரங்களிலும் காணப்படுவது, தேவி வழிபாட்டில் இந்த முக்கோணம் மிக முக்கியமானது. பிந்து என்று சொல்லப்படும் ஸ்ரீசக்ர மத்ய கோட்டம் த்ரிகோணத்தால் பிரித்துக் காட்டப்படுகிறது. [இதனாலேயே தேவிக்கு "த்ரிகோண மத்ய நிலையா" என்ற பெயரும் உண்டு.] பாரத தேசமே வடக்கே அகன்றும் தெற்கே குறுகியும் ஒரு முக்கோண வடிவில் இருக்கிறது. இதிலே காஷ்மீரம், காமாக்யா (இன்றைய அசாம்), கன்யாகுமரி ஆகிய மூன்று ஊர்களையும் நேர்கோட்டால் இணைத்தால் அழகான முக்கோணம் உருவாகிறது. ஆக நமது இந்த புண்ணிய பூமியே பிந்து ஸ்வரூபமாகிறது. சக்தி பீடங்கள் என்று ஆரம்பித்து ஏதோ பூ ப்ரதக்ஷிணத்துக்கு வழி சொல்ற மாதிரி போகிறது. எனினும் இந்த தேசமே தேவி மயம் என்பதே இங்கு சொல்ல வந்த கருத்து. இதுபோலவே தேகமே ஸ்ரீ சக்ரம் என்று பாவனோபனிஷத் விளக்குவதாக கேள்விப்பட்டிருக்கேன். அது ஞான மார்க்கத்தில் அந்தர்முக வழிபாட்டில் பேசப்படும் விஷயம் என்றே தெரிகிறது. நாம் இங்கு பார்க்க இருப்பது தேசமே தேவி ஸ்வரூபம் என்பது எப்படின்னுதான்.
சக்தி பீடங்கள் பல இருக்கிறது. சில புத்தகங்களில் 64 சக்தி பீடங்கள் என்றும், சிலவற்றில் 108 என்றும், சிலவற்றில் 51 மாத்ருகா அக்ஷரங்களுக்கு ஏற்ப 51 சக்தி பீடங்கள் என்றும் பலவாறு கூறப்பட்டுள்ளது. இதில் 51 மாத்ருகா பீடங்களே மிக முக்கியமாக கொள்ளப்படுவது. இமயம் முதல் குமரி வரையில், காமரூபம் முதல் கூர்ஜரம் வரை இந்த சக்தி பீடங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாய் பரவியிருக்கிறது. மார்க்கண்டேய புராணத்தில் ஸ்ரீ காமாக்ஷி விலாசம் என்று ஒரு பகுதி இருக்கிறது. இதில், பூமியானது ஐந்து கோடி யோஜனை (1 யோஜனை எத்தனை கிலோ மீட்டர் (அ) மைல் என்று யாருக்கேனும் தெரியுமா?) விசாலமுடையது என்றும் இதில் 6400 தேவி சம்ப்ந்தமான பீடங்கள் இருக்கின்றது, அதில் 64 சிறந்தவை, அந்த 64ல் 51 மிகச் சிறந்ததாகவும், இந்த 51ல் 18 உன்னதமானது என்றும் இந்த 18லும் 3 மிக உயர்ந்ததென சொல்லப்பட்டிருக்கிறது என்பர்.
மேலே சொன்ன மிக உன்னதமான மூன்று பீடங்களாவன, காமராஜ பீடம், ஜலாந்த்ர பீடம், ஒட்டியாண பீடம். இவை அமைந்துள்ள இடங்கள் முறையே காஞ்சி, ஜ்வாலாமுகி மற்றும் பூரி ஜகன்னாத் ஆகியன. காமராஜ பீடத்தில் ஹயக்ரீவர் ஸ்ரீசக்ரத்தை பூஜித்து அருள் பெற்றதாகவும், ப்ருகு முனிவர் ஜலாந்திர பீடத்திலும், வேத வியாசர் ஒட்டியாண பீடத்திலும் பூஜித்து அன்னையின் அருள் பெற்றதாகவும் தெரிகிறது.
சக்தி பீடங்கள் தோன்றிய வரலாற்றினை அடுத்த பகுதியில் காணலாம்.