Showing posts with label மார்கழி மஹோத்ஸவம். Show all posts
Showing posts with label மார்கழி மஹோத்ஸவம். Show all posts

Wednesday, January 13, 2010

மார்கழி மஹோத்ஸவம் - 7 (கோதாஸ்துதி கடைசிப் பகுதி)



ரங்கே தடித்குணவதோ ரமயைவ கோதே
க்ருஷ்ணாம்புதஸ்ய கடிதாம் க்ருபையா ஸுவ்ருஷ்ட்யா
தெளர்கத்ய துர்விஷ விநாச ஸுதாநதீம் த்வாம்
ஸந்த: ப்ரபத்ய சமயந்த்யசிரேண தாபாந்

கோதே!, ஸ்ரீரங்கத்திலிருக்கும் பெருமாளே கார்முகிலோன், தாயார் ரங்கநாயகியோ மின்னல்கொடி போன்றவள். இவ்விருவரின் கருணை மழையில் தோன்றும் நதியாக நீ இருந்து, ஸம்ஸாரமென்னும் கொடிய விஷத்தை அழிக்கிறாய். இதனால்தான் ஸாதுக்கள் உன்னைச் சரணடைந்து தங்களது ஸம்ஸார தாபங்களைப் போக்கிக் கொள்கிறார்கள்.

ஜாதாபராதமபி மாமநுகம்ப்ய கோதே
கோப்த்ரீ யதி த்வமஸி யுக்தமிதம் பவத்யா:
வாத்ஸல்ய நிர்ப்பரதயா ஜநநீ குமாரம்
ஸ்தந்யேந வர்த்தயதி தஷ்ட பயோதராபி

குழந்தைக்கு பாலுட்டும் போது குழந்தை தாயின் கொங்கையைக் கடித்தாலும், சினம் கொள்ளாது பால் கொடுப்பது இயற்கை. அதுபோல, நான் பலவிதமான அபராதங்களைச் செய்திருந்தாலும், நீ அருள் சுரந்து எனது அபராதங்களைப் பொருட்படுத்தாது காத்தருள்கிறாய் ஆகவே நீ எனக்குத் தாயே!.


சதமக மணிநீலா சாரு கல்ஹர ஹஸ்தா
ஸ்தநபர நமிதாங்கீ ஸாந்த்ர வாத்ஸல்ய ஸிந்து:
அளகவிநிஹிதாபி: ஸ்ரக்பி ராக்ருஷ்ட நாதா
விலஸது ஹ்ருதி கோதா விஷ்ணுசித்தாத்மஜா ந:


இந்திர நீலமணிபோல நீல நிறமுடையவளாக, அழகிய செங்கழுநீர்ப்பூவை கையில் தரித்தவளாய், கொங்கைகளின் சுமையால் வளைந்த திருமேனியுடன், மிகுந்த அன்பினைக் கடலாகக் கொண்டு, தனது கூந்தலில் சூடிய திருமாலைகளால் நாயகனை வசப்படுத்திய விஷ்ணுசித்தரின் புதல்வியான கோதை நமது உள்ளத்தில் விளங்க வேண்டும்.



இதி விகஸித பக்தேருத்திதாம் வேங்கடாசாத்
பஹுகுண ரமணீயாம் வக்தி கோதாஸ்துதிம் ய:
ஸ பவதி பஹுமாந்ய: ஸ்ரீமதோ ரங்கபர்த்து:
சரண கமல ஸேவாம் சாச்வதீ மப்யுபைஷ்யந்

மலர்ந்த பக்தியையுடைய வேங்கடேச கவியிடமிருந்து தோன்றிய பலவிதங்களிலும் அழகியதான இந்த கோதா ஸ்துதியை யார் சொல்லுகிறார்களோ அவர்களுக்கு மஹாலக்ஷ்மியைப் பிரியாத ஸ்ரீரங்க ராஜனுடைய நித்யமான திருவடித் தாமரைகளின் கைங்கர்யத்தை பெறும் மதிப்புக்கு உரியவனாகிறான்.

இத்துடன் கோதா ஸ்துதி முடிவுக்கு வருகிறது. மார்கழியும் தான். எல்லோருக்கும் மகர சங்கராந்தி நல்வாழ்த்துக்கள்.

Monday, January 11, 2010

மார்கழி மஹோத்ஸவம் - 6 (கோதாஸ்துதி)


ரங்கேச்வரஸ்ய தவ ச் ப்ரணயாநுபந்தாத்
அந்யோந்ய மால்ய பரிவ்ருத்தி மபிஷ்டுவந்த:
வாசாலயந்தி வஸுதே ரஸிகாஸ் த்ரிலோகீம்
ந்யூநாதிகத்வ ஸமதா விஷயைர் விவாதை:

பூமிதேவியின் அம்சமான கோதே!, ரங்கேஸ்வரனுக்கும் உனக்கும் இருந்த காதலின் தொடர்ச்சியாக உங்களது திருமணத்தின் போது மாலை மாற்றிக் கொண்டிருப்பீர்கள். இன்றும் அந்த வைபவத்தை பேசும் போது சிலர் உன்னை உயர்த்தியும், சிலர் உன் மணாளனை உயர்த்தியும், சிலர் நடுநிலையாகவும் பேசுகின்றனர். இவ்வாறு அவர்கள் ஆர்வத்துடன் பேசுவது மூவுலகிலும் ஒலிக்கச் செய்கிறது.

தூர்வாதள ப்ரதிமயா தவ தேஹ காந்த்யா
கோரோசநா ருசிரயா ச ருசேந்திராயா:
ஆஸீதநுஜ்ஜித சிகாவள கண்ட்ட சோபம்
மாங்கள்யதம் ப்ரணமதாம் மதுவைரிகாத்ரம்

அருகம்புல் போன்ற உனது திருமேனியின் காந்தி/ஒளியும், கோரோசனை போன்ற அழகிய திருமேனியொளி கொண்ட மஹாலக்ஷ்மியின் ஒளியும், அடிபணிபவர்களுக்கு என்றும் நன்மை தரவல்ல பெருமாளுடைய திருமேனியை மயில் கழுத்தின் காந்தியை உடையாதாக ஆகியிருக்கிறது. பெருமாளது கருமுகில் போன்ற ஒளிமிகுந்த திருமேனியைக் கண்ணால் கண்டு அவனடி பணிபவர்களுக்கு அத்திருமேனி எல்லா நலன்களையும் தரும். கோதையின் நிறத்தை அருகம்புல் நிறமாகவும், பெருமாளது வக்ஷஸ்தலத்தில் உறையும் அன்னையின் திருமேனியின் நிறத்தை கோரோசனைக்கு ஒப்பாகவும் கூறி, இவ்வாறாக திருமகளும், கோதையும் பெருமாளைச் சூழ்ந்திருக்கையில் அவரது கருமுகில் வண்ணம் மயில் கழுத்தின் நிறத்தை அடைவதாகச் சொல்லியிருக்கிறார் ஸ்ரீதேசிகர்.

அர்ச்ச்யம் ஸமர்ச்ச்ய நியமைர் நிகம ப்ரஸுநை:
நாதம் த்வயா கமலாய ச ஸமேயிவாம்ஸம்
மாதச் சிரம் நிரவிசந் நிஜ மாதிராஜ்யம்
மாந்யா மநு ப்ரப்ருதய: மஹீக்ஷிதஸ் தே

தாயே!, மதிப்புக்கு உரிய மநு போன்ற அரசர்கள், உன்னோடும் மஹாலக்ஷ்மியுடனும் கூடி நின்றவாறு இருக்கும் உனது நாயகனை நியமங்களான ஆகமங்களில் கூறப்பட்டிருக்கும் புஷ்பங்களால் நன்கு ஆராதித்து
தங்களுடைய அரசாக்ஷியை நீண்டகாலம் அனுபவித்தனர்.

ஆர்த்ராபராதிநி ஜநேப்யபிரக்ஷணார்த்தம்
ரங்கேச்வரஸ்ய ரமயா விநிவேத்யமாநே
பார்ச்வே பரத்ர பவதீ யதி தத்ர நாஸீத்
ப்ராயெண தேவி வதநம் பரிவர்த்திதம் ஸ்யாத்

தேவி, ஜனங்கள் தொடர்ந்து பாபங்களைச் செய்துவந்தாலும், அவர்களைக் காக்கும் பொருட்டு மஹாலக்ஷ்மியானவள் திருவரங்கனிடத்து எப்போதும் விண்ணப்பம் செய்தவாறு இருக்கிறார். அப்போது அவ்விண்ணப்பத்தை தவிர்க்க பெருமாள் இன்னொருபக்கம் திரும்புவானாகில் அப்பக்கத்தில் மஹாலக்ஷ்மியைவிட கருணை நிறம்பிய நீ இருப்பதால், பாபம் செய்த ஜனங்களையும் காப்பதைத் தவிர பெருமாளுக்கு வேறு வழியேது?.

கோதே குணைரபநயந் ப்ரணதாபராதாந்
ப்ருக்ஷேப ஏவ தவ போக ரஸாநுகூல:
கர்மாநுபந்தி பல தாந ரதஸ்ய பர்த்து:
ஸ்வாதந்தர்ய துர்வ்யஸந மர்மபிதா நிதாநம்

ஜனங்கள் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ற பலனை அளிப்பவன் உனது நாயகன். நீயோ, பாபங்கள் பல செய்தவரையும் காப்பதில் உறுதியாக இருக்கிறாய். பாபங்கள் செய்தவர்களஒ தண்டனையிலிருந்து காக்கும் பொருட்டு உனது நாயகனை நோக்கி உனது புருவங்களை போகச் சுவையுடன் நெறிப்பதன் மூலமாக பெருமாள் தனது சுதந்திரமான உயிர்நிலைச் செயலையும் மறந்து எல்லோரையும் (பாப கர்மங்கள் செய்தவரையும்) ரக்ஷித்துவிடுகிறார்.

Friday, January 8, 2010

மார்கழி மஹோத்ஸவம் - 5 (கோதாஸ்துதி)



விச்வாயமாந ரஜஸா கமலேந நாபெள
வக்ஷ:ஸ்த்தலே ச கமலா ஸ்தந சந்தநேந!
ஆமோதித:-அபி நிகமைர் விபுரங்க்ரி யுக்மே
தத்தெ நதேந சிரஸா தவ மெளளிமாலாம் !!

உலகங்களை ஆளுகின்ற பிரபுவின் நாபியிலிருக்கும் கமலத்தின் மணமும், அவனுடைய திருமார்பில் வசிக்கும் மஹாலக்ஷ்மியின் திருமுலையில் சாற்றப்பட்டிருக்கும் சந்தன மணமும் அவனை மணக்கச் செய்கின்றன. வேதங்கள் அவனுடைய திருவடியைப் பற்றியே பேசி அவனது திருவடிகளை மணக்கச் செய்கின்றன. இவ்வாறாக இறைவனது திருமேனி முழுவதும் மணமிகுந்து இருந்தாலும், அதனால் திருப்தியில்லாது அவற்றை எல்லாம் விஞ்சச் செய்யும்படியான உயர்ந்த பரிமளத்தைப் பெறுவதற்காகவே நீ சூடிக் கொடுத்த திருமாலைகளை தலையில் தரித்து பரிமளம் நிறைந்து காக்ஷியளிக்கிறான்.


சூடா பதேந பரிக்ருஹ்ய தவோத்தரீயம்
மாலாமபி த்வதளகை ரதிவாஸ்ய தத்தாம்!
ப்ராயேண ரங்கபதிரேஷ பிபர்த்தி கோதே
செளபாக்ய ஸம்பதபிஷேக மஹாதிகாரம் !!


கோதே!, உன்னுடைய மேலாடையையும், உன் தந்தையால் செய்யப்பட்டு, உன் குழற்கற்றையில் நீ அணிந்த மலர்மாலையையும் ஆர்வத்துடன் சூடிக் கொள்கிறான் ஸ்ரீரங்க ராஜன். மங்கள ஸ்வரூபனாக இருக்கும் அவன், உனது மேலாடை மற்றும் மலர் மாலையை அணிவதாலேயே மங்களத்தை அருளும்
பெருமையைப் பெறுகிறான். இதன் காரணமாகவே அவன் ரங்க ராஜனாக முடிசூடுவதற்கு வேண்டிய தகுதியைப் பெறுகிறான்.


துங்கை ரக்ருத்ரிமகிர: ஸ்வயமுத்தமாங்கை:
யம் ஸர்வகந்த இதி ஸாதர முத்வஹந்தி!
ஆமோத மந்யமதிகச்சதி மாலிகாபி:
ஸ:அபி த்வதீய குடிலாளக வாஸிதாபி:!!


வேதங்கள் யாராலும் இயற்றப்படாத நித்யமானது. அவ்வேதங்களின் உயந்த முடிகளான உபநிஷதங்கள் பெருமாளை எல்லா நறுமணங்களும் நிறம்பியவன் என்று ஆதாரத்துடன் கூறுகின்றன. அப்படிப் புகழப்பட்ட பெருமாள், உன்னுடைய சுருண்ட கூந்தலில் சூடப்பட்ட மலர் மாலையை அணிந்து ஒப்புயர்வற்ற அற்புத மணத்தை அடைகிறான். இவ்வாறான அளவிட முடியாத ஆனந்த மணமானது கோதை சூடிக் கொடுத்த மாலையால் அல்லவோ பெருமாளுக்கு கிடைக்கிறது?.


தந்யே ஸமஸ்த ஜகதாம் பிதுருத்தமாங்கே
த்வந்மெளளி மால்யபர ஸம்பரணேந பூய:!
இந்தீவர ஸ்ரஜமிவாதததி த்வதீயாநி
ஆகேகராணி பஹுமாந விலோகிதாநி!!


கோதே!, எல்லா உலகிற்கும் தந்தையானவன் பெருமாள். உனது மாலையை அவன் தனது திருமுடியில் சூடிக் கொள்வதால் அவனது அன்பினை கண்டு ஆனந்தித்து பெருமதிப்புடன் அவனை அரைக்கண்ணால் காண்கிறாய் நீ.அவ்வாறு நீ உனது கண்களால் அவனைப் பார்ப்பது பெருமாளுக்கு கருநெய்தல் மலர்களால் இன்னுமொரு மாலையை அவனுக்கு அணிவித்தது போல காக்ஷி தருகிறது.

***ஸ்துதி தொடரும்***

Friday, December 25, 2009

மார்கழி மஹோத்ஸவம் - 4 (கோதாஸ்துதி)


நாகேசய: ஸுதநு பக்ஷிரத: கதம் தே
ஜாத: ஸ்வயம்வரபதி: புருஷ: புராண:!
ஏவம் விதா: ஸமுசிதம் ப்ரணயம் பவத்யா:
ஸந்தர்சயந்தி பரிஹாஸகிர: ஸகீநாம்!!

அழகிய திருமேனியுடையவளே!, கொடிய பாம்பில் படுப்பதும், பறவையை வாகனமாகவும் கொண்ட முதுமை கொண்ட ஒருவரை நீ உன் மணாளராக எப்படி வரித்தாய்? என்றெல்லாம் தோழிகள் பரிஹாஸம் செய்யும் சொற்களைத் தாண்டி நீ வரித்திருக்கிறாய் என்றால் அது உனக்கு உள்ள காதலையன்றோ காட்டுகிறது.

நேரடிப் பொருள் இப்படியாக இருப்பினும், ஸ்ரீதேசிகர் இங்கே சொல்லியிருப்பது பின்வருமாறு. கோதை நீ உன் பெருமைக்கு ஏற்ற வரனையே வரித்திருக்கிறாய் என்பது தான். எப்போதும் கைங்கர்யம் செய்பவனாகவும், அழகு, குளிர்ச்சி, மேன்மை, மற்றும் உயர்வு பொருந்திய ஆதிசேஷனை படுக்கையாகவும்ம், வேதஸ்வரூபன் என்று கூறப்படும் சகல சக்திகளையும் உடைய கருடனை வாஹனமாகவும் கொண்ட பரம்பொருளை வரனாக வரித்திருக்கிறாய் என்கிறார்.


த்வத் புக்த மால்ய ஸுரபீக்ருத சாருமெளளே:
ஹித்வா புஜாந்தா கதாமபி வைஜயந்தீம்!
பத்யுஸ் தவேச்வரி மித: ப்ரதிகாத லோலா:
பர்ஹாத்பத்ர ருசி மாரசயந்தி ப்ருங்கா:!!

சகல லோகங்களுக்கும் தலைவியானவளே!, பெருமாள் தனது திருமார்பில் வைஜயந்தி என்னும் மாலையை அணிந்திருக்கிறார். அந்த வைஜயந்தியின் நறுமணத்தால் அம்மாலையின் மீது வண்டுகள் மொய்த்துக் கொண்டிருந்தன. நீ சூடிக்கொடுத்த மாலையை பெருமாள் தனது முடியில் சூடியதால் மணம் மிகுந்த திருமுடிகளாயிற்று. இதன் காரணமாக வைஜயந்தி மாலையைச் சுற்றி வந்த வண்டுகள் அதிலிருந்து அகன்று பெருமாள் தலையில் சூடியிருக்கும், நீ சுடிக் கொடுத்த மாலையைச் சுற்றத் துவங்குகின்றன. அவ்வண்டுகள் அவ்வாறு சுற்றுவது மயில் தோகையால் பெருமாளுக்கு குடை அமைத்தது போல விளங்குகிறது.

ஆமோதவத்யபி ஸதா ஹ்ருதயங்கமாபி
ராகாந்விதாபி லளிதாபி குணோத்தராபி!
மெளளி ஸ்ரஜா தவ முகுந்த கிரிடபாஜா
கோதே பவத்யதரிதா கலு வைஜயந்தீ!!

கோதையே!, பெருமாள் அணிந்திருக்கும் வைஜயந்தி என்னும் மாலையானது எப்போதும் மணம் வீசக்கூடியதுதான், அவனது திருவுளத்துக்கு உவப்பானதுதான், நல்ல செம்மை நிறமும், மென்மையும் உடையதுதான். இத்துணை பெருமையுடயதாக அம்மாலை இருந்தாலும், அது பெருமாளுடைய திருமுடியில் இடம்பெறும் பேறு கிட்டவில்லை. ஆனால் நீ களைந்து கொடுத்த மாலையோ அவனது திருமுடியை அலங்கரித்து வைஜயந்தி மாலையின் தரத்தைத் தாழ்த்திவிடுகிறதே. நீ சூடிக்களைந்த மாலையைத் தலையில் தாங்கி மதிப்பளிக்கிறான் உனது மணாளன்.

த்வந்மெளளி தாமநி விபோ: சிரஸா க்ருஹீதே
ஸ்வச்சந்த கல்பித ஸபீதி ரஸ ப்ரமோதா:!
மஞ்ஜுஸ்வநா மதுலிஹோ விதது: ஸ்வயம் தே
ஸ்வாயாம்வரம் கமபி மங்களதூர்ய கோஷம்!!

பெருமான் தன் தலையில் அணிந்துள்ள, நீ சூடிக் கொடுத்த மாலையை வண்டுகள் சுற்றி வந்து தமது இஷ்டப்படி தேனைக் குடிக்கின்றன. அவ்வாறு அவை மகிழ்ச்சியுடன் தேனைப் பருகி, இனிமையாக ரீங்காரம் பாடுகின்றன. அப்போது அவ்வண்டுகள் ஏற்படுத்தும் ஒலியானது உனது சுயம்வரத்துக்கான மங்கள வாத்தியங்களின் முழக்கமாக இருக்கிறது.

தொடர்ந்து ஸ்துதிப்போம்

Wednesday, December 23, 2009

மார்கழி மஹோத்ஸவம் - 3 (கோதாஸ்துதி)




மாத: ஸமுத்திதவதீ மதிவிஷ்ணுசித்தம்
விச்வோபஜீவ்ய மம்ருதம் வசஸா துஹாநாம்!
தாபச்சிதம் ஹிம ருசேரிவ மூர்த்திமந்யாம்
ஸந்த: பயோதி துஹிது: ஸஹஜாம் விதுஸத்வாம்

தாயே!, நீ சந்திரனது இன்னொரு வடிவமானவள்.நீ விஷ்ணு சித்தரின் மகளாக அவதரித்தாய், சந்திரனோ மஹாவிஷ்ணுவின் மனதிலிருந்து தோன்றியதாக வேதம் கூறுகிறது. சந்திரன் உலகிலுள்ள எல்லோரையும் மகிழ்விக்கும் ஒளியைத் தருகிறான். நீ உனது வாக்கிலிருந்து வந்த அமுத மொழிகளாலும், உனது அழகிய திருமேனி தரிசனத்தாலும் உலகிலுள்ள எல்லோருடைய ஸம்ஸாரதாபத்தை போக்குகின்றாய். கற்றறிந்த பெரியவர்கள் உன்னை பார்கடலில் உதித்த மஹாலக்ஷ்மியின் சகோதரியாகச் சொல்கின்றனர். பாற்கடலில் பிறந்த சந்திரன் மஹாலக்ஷ்மிக்கு சகோதரன் என்றால் உனக்கும் சகோதரனன்றோ.

தாதஸ் து தே மதுபித: ஸ்துதிலேச வச்யாத்
கர்ணாம்ருதை: ஸ்துதிசதை ரநவாப்த பூர்வம்!
தவந்மெளளி கந்த ஸுபகா முபஹ்ருத்ய மாலாம்
லேபே மஹத்தர பதாநுகுணம் ப்ரஸாதம்!!

சிறிதளவே துதித்தாலும் வசப்படும் பெருமாளை, பலரும் செவிக்கு இனிமையான பலநூறு பாடல்கள் பாடி மகிழ்வித்தாலும், உன் தந்தைமட்டுமே 'பெரியாழ்வார்' என்று பெயர் பெற்றார். நீ சூடிக்கொடுத்த மலர் மாலைகளை பெருமாளுக்கு அளித்ததால் அல்லவா, அவருக்கு பெரியாழ்வார் என்ற பெயர் கிடைத்தது. பெருமாளுக்கு உன் மேல் இருக்கும் அன்பாலேயே மற்றவர்களுக்குக் கிடைக்காத அப்பெயரை உன் தந்தை பெற்றார்.

திக் தக்ஷிணாஸபி பரிபக்த்ரிமா புண்ய லப்யாத்
ஸர்வோத்தரா பவதி தேவி தவாவதாராத்!
யத்ரைவ ரங்கபதிநா பஹுமாந பூர்வம்
நித்ராளுநாஸபி நியதம் நிஹிதா: கடாக்ஷா:!!

தேவி, தெற்குப் பகுதியில் (ஸ்ரீவில்லிப்புத்தூரில்) நீ அவதரித்ததால் அத்திசை மிகவும் புண்ணியம் செய்ததாக, எல்லாவற்றிலும் மேம்பட்ட திசையாகிறது. ஸ்ரீரங்கப் பெருமான் உலக நன்மையை நினைத்தவாறே உறங்கினாலும், அவன் நீ அவதரித்த தெற்குத் திசையை உற்று நோக்கியவாறே உறங்குகின்றான். உனது அவதாரத்தால்தான் அவனது தெற்கு நோக்கிய பேறு கிட்டியது.

ப்ராயேண தேவி பவதீ வ்யபதேச யோகாத்
கோதாவரீ ஜகதிதம் பயஸா புநீதே!
யஸ்யாம் ஸமேத்ய ஸமயேஷு சிரம் நிவாஸாத்
பாகீரதீ ப்ரப்ருதயோசபி பவந்தி புண்யா:!!

விசேஷ காலங்களில் கங்கை போன்ற புனித நதிகள் கோதாவரி நதிக்கு வந்து வசிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. அந்த விசேஷகாலங்களில் கோதாவரி நதி தன்னிடத்தில் கூடும் மற்ற நதிகளை மட்டுமல்லாது உலகத்தையே தூய்மையாக்குகிறது. இவ்வாறு கோதாவரி நதி தூய்மையாக்குவது எங்கனம் என்று பார்த்தால் அது உனது பெயரைத் தாங்கியிருப்பதாலேயே என்று தெரிகிறது. உனது பெயரைத் தரித்ததால்தான் உலகனைத்தையும் தூய்மையாக்கும் சக்தி அந்நதிக்கு வாய்த்தது.

*********ஸ்துதி தொடரும்***********

Wednesday, December 16, 2009

மார்கழி மஹோத்ஸவம் - 1

மார்கழி மாதம் பற்றி 2007ல் 4 பதிவுகள் இட்டேன். அதன் தொடர்ச்சியாக இன்னும் 3 பதிவுகள் இட நினைத்திருந்தேன், ஆனால் சில தவிர்க்க இயலாத காரணங்களால் அதனை அப்போது தொடர இயலவில்லை. தற்போது அதனை தொடர எண்ணம் இருக்கிறது, பார்க்கலாம்.

மார்கழி பற்றிய முந்தைய இடுகைகளின் லிங்க் கிழே!



"ஸ்ரீ தேசிக ஸ்தோத்ரமாலா" என்னும் ஸ்ரீ தேசிகரால் செய்யப்பட்ட ஸ்தோத்ரங்கள் பற்றிய திரட்டு ஒன்றினை நண்பர் ராகவ் உதவியால் படிக்கக் கிடைத்தது. மார்கழியில் கோதையை வழிபடுதல் சிறப்பல்லவா?, அதிலும் ஸ்ரீ தேசிகர் அருளிய ஸ்தோத்ரங்களால் நாச்சியாரை வணங்குதல் விசேஷம் என்று தோன்றுகிறது. ஆகவே "கோதாஸ்துதி" என்ற பெயரில் ஸ்ரீதேசிகர் அருளிய 29 ஸ்லோகங்களைப் ப்ளாக்கில் போடலாம் என்றிருக்கிறேன்.


செளந்தர்ய லஹரி போல விளக்கங்கள் சொல்லுமளவுக்கு எனக்கு இதில் பரிச்சயம் இல்லை. புத்தகத்தில் இருப்பதை மட்டும் தட்டச்சு செய்து சற்றே விளக்கங்களுடன் போடப் போகிறேன். மார்கழி 30 நாட்களில் ஒருமுறையானும் இந்த ஸ்லோகங்களை படித்து இறையருளை வேண்டுவோம்.

ஸ்ரீவிஷ்ணுசித்த குலநந்தந கல்பவல்லீம்
ஸ்ரீரங்கராஜ ஹரிசந்தக யோக த்ருச்யாம்!
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம்
கோதாமநந்யசரண: சரணம் ப்ரபத்யே!!

சாதாரணமாக இல்லங்களில் பிறக்கும் குழந்தையை வம்சம் தழைக்க வந்த குலக்கொடி, குலக்கொழுந்து என்றெல்லாம் இன்றும் பெரியவர்கள் சொல்லக் கேட்கிறோம். இங்கு ஸ்ரீதேசிகரும் அதே வார்த்தையைச் சொல்கிறார். பெரியாழ்வார் என்று போற்றப்படும் ஸ்ரீவிஷ்ணு சித்தரது குலக்கொடியாம் கோதை. அதிலும் நந்தன கல்பவல்லி என்று இந்திரனது உத்தியான-வனமாகிய நந்தவனத்தில் உதித்த, கேட்பவற்றையெல்லாம் கொடுக்கும் கற்பகவல்லிக் கொடி என்று நாச்சியாரை விளிக்கிறார். ஸ்ரீரங்க ராஜனையும் அடியாருக்கு எல்லாந்தரும் சந்தனமரம் போன்றவன் என்று கூறி, ஆண்டாள் என்னும் கற்பகவல்லிக் கொடி தவழும் ஹரிசந்தன மரமானது பார்க்கத் திகட்டாத பரிபூரணமாக இருக்கிறது என்று சொல்கிறார். பொறுமைக்கு உதாரணமாக பூமிதேவியைச் சொல்வது வழக்கம். அதையே ஸ்ரீ தேசிகரும், பூமிதேவியே கோதை நாச்சியாராக வந்தாளோ அல்லது ஸ்ரீமஹா லக்ஷ்மியே மற்றொரு திருவுருக்கொண்டு வந்தாளோ என்று நினைக்கத் தோன்றுகிறது என்று கூறி, வேறு கதியற்ற நான் கோதை நாச்சியாரைச் சரணடைகின்றேன் என்று கூறுகிறார்.

வைதேசிக: ச்ருதிகிராமபி பூயஸீநாம்
வர்ணேஷு மாதி மஹிமா ந ஹி மாத்ருசாம் தே!
இத்தம் விதந்தமபி மாம் ஸஹஸைவ கோதே
மெளநத்ருஹோ முகரயந்தி குணாஸ் த்வதீயா:!!

கோதே!, வேதங்களும் உனது பெருமையைக் கூறத்தொடங்கி வெற்றியடைய முடியாத அளவு பெருமையுடையவள் நீ. அப்படியான உன் பெருமைகள என் போன்ற சிற்றறிவினர்களது தோத்திரத்தில் கூறயிலாதென்பதை அறிவேன். ஆனாலும் உனது குணாதிசயங்கள் எனது மெளனத்தைக் கலைத்து பேசவைக்கும் ஆற்றலைக் கொடுக்கிறது. உனது கல்யாண குணங்கள் எனக்கு வலிமையளித்து உன் புகழைப் பேசவைப்பதால் உன்னைத் துதிக்க முயல்கிறேன்.

த்வத் ப்ரேயஸ: ச்ரவணயோ ரம்ருதாயமாநாம்
துல்யாம் த்வதீய மணிநூபுர சிஞ்ஜிதாநாம்!
கோதே த்வமேவ ஜநநி த்வதபிஷ்டவார்ஹாம்
வாசம் ப்ரஸந்ந மதுராம் மம ஸம்விதேஹி!!

கோதையம்பா!, உன்னைப் போற்றிப்பாடும் திறத்தையும் எனக்கு நீயே அருளவேண்டும். நீ நடந்து வருகையில் உன்கால் சிலம்பு ஏற்படுத்தும் ஒலியினால் மகிழும் பெருமாளுக்கு, நீயருளும் அந்த வாக்குத்திறனால் உன்னை நான் பாடுவது திருவமுதாய் இருக்கும். நீயெனக்கு அருளும் வாக்கு கேட்பவர்களுக்கு தெளிவாய், செவிக்கு இனிதாய் இருக்கும்படியாக அருள்வாய்.

க்ருஷ்ணாந்வயேந தததீம் யமுனா நுபாவம்
தீர்த்தைர் யதாவதவ்காஹ்ய ஸரஸ்வதீம் தே!
கோதே விகஸ்வர தியாம் பவதீ கடாக்ஷாத்
வாச: ஸ்ப்புரந்தி மகரந்தமுசள் கவீநாம்!!

கோதைப் பிராட்டியே!, க்ருஷ்ணனுடைய திருவிளயாடல்களால் பெயர் பெற்றது யமுனை நதி. அந்த கண்ணனின் புகழைப்பாடிய உனது பாடல்கள் (திருப்பாவை, நாச்சியார் திருமொழி), அதே கண்ணனின் சம்பந்தத்தால் பெருமை பெற்று விளங்குகின்றது. உனது பாடல்களின் மூலமாக ஆசார்யர்கள் தத்துவார்த்தங்களை உணர்ந்து அநுபவித்து ஞானம் பெறுகின்றனர். நாவன்மை பெற்ற உனது கடாக்ஷத்தால் ஆசார்யார்கள் சொல்வதில் தேன்-மழை போன்ற கருத்துக்கள் பிறந்து உலகை காக்கின்றன.

**ஸ்துதி தொடரும்**