நவகைலாயப் பதிவுத் தொடரில் சேரன்மாதேவிக்கு அடுத்து பார்க்க இருப்பது கோடக நல்லூர். நவகிரஹங்களில் ஐந்தாவது இடமான செவ்வாய் கிரஹத்திற்கான திருத்தலம் கோடகநல்லூர். செவ்வாய் திசை என்பது 7 ஆண்டுகள் என்பர் ஜோதிஷ சாஸ்திரத்தில். நமக்கு மிகப் பரிச்சயமான செவ்வாய் தோஷம் போன்றவற்றிற்கு இத்தலமே பரிகாரத் தலம். இது மட்டுமல்லாது, தேசத்தின் வளர்ச்சி, போர்களில் வெற்றி, கடன் தொல்லை போன்ற விஷயங்களுக்கும் செவ்வாய் அதிபதி என்று கூறக்கேட்டிருக்கிறேன்.

இத்தலம் சேரன்மாதேவி-முக்கூடல் போகும் வழியில் தெற்கே அமைந்திருக்கிறது என்று கேள்வி. இதன் பழைய பெயர் கார்கோடக நல்லூர், மறுவி கோடகநல்லூராகி முடிவாக கோடனூர் விட்டதாம். பரிஷித் மஹாராஜாவை தீண்டி உயிர் நீக்கிய கார்கோடகன் என்னும் சர்பம் தனது சாபம் தீர தபஸ் செய்த இடம் என்பதால் இந்த ஊருக்கு கார்கோடக நல்லூர் என்று பெயராம். இப்போதும் இவ்வூரில் நீண்ட கரு-நாகங்கள் அடிக்கடி தென்படுவதாக பெரியவர்கள் கூறுகின்றனர்.
இக்கோவிலும் தாமிரபரணிக் கரையில் அமைந்த கோவிலே. இங்கே தாமிரபரணி தீர்த்தத்தின் பெயர் மார்க்கண்டேய தீர்த்தம் என்பதாம். மார்க்கண்டேய மஹரிஷி இங்கு வந்து தவமிருந்ததால் இப்பெயர் பெற்றதாகத் தெரிகிறது. இக்கோவிலில் இருக்கும் கல்வெட்டில் இவ்வூருக்கு குலசேகர சதுர்வேதி மங்கலம் என்று பெயர் இருப்பதாகச் சொல்கிறார்கள். மருத மரங்கள் நிறைந்த சோலையாக இருப்பதால் கோடை வாச ஸ்தலம் போன்று குளிர்ச்சியான ஊர் என்று கூறுகிறார் எனக்குச் செய்திகள் அளித்த மூதாட்டி.

இங்குள்ள ஈசனது திருநாமம் கைலாசநாதர், அம்பிகை சிவகாமியம்மன். இவ்வூரில் இக்கோவிலைத் தவிர அபிமுக்தீஸ்வரர் என்ற சிவன் கோவிலும், பிரஹன்மாதவர் என்னும் பெருமாள் பூமி தேவி, நீளாதேவியுடன் காக்ஷி கொடுக்கும் திருக்கோவிலும் இருப்பதாகச் சொல்கிறார். இந்த பெருமாள் கோவிலே பெரிய பிரான் கோவில் என்று அழைக்கப்படுகிறதாம். பல நூறு வருடங்களாக சைவ-வைஷ்ண சமயங்கள் இணைந்து தழைத்தோங்கும் திருத்தலம் என்று தெரிகிறது. சிருங்கேரி, மற்றும் ஆண்டவன், அகோபில மடங்கள் இங்கு பல காலமாக இருக்கிறதாம்.
இக்கோவிலில் விநாயகர், வள்ளி தேவ சேனாபதி, நந்தி போன்ற தேவதைகளுடன் கைலாசநாதர் கிழக்கு நோக்கியும், சிவகாமியம்மை தெற்கு நோக்கியும் எழுந்தருளி அருள்கின்றனர். கோவிலுக்கு கொடிமரம் ஏதும் கிடையாதாம். தற்போது ஒரு நேர பூஜை மட்டுமே நடந்து வருவதாகவும், சிவராத்திரி, பிரதோஷம், திருவாதிரை போன்ற விசேஷங்கள் நடப்பதாகவும் தெரிகிறது. நான்கு வேதங்கள் முழங்க இருந்த இவ்வூர் இன்று ஈசனது ஒருகால பூஜையுடன் இருப்பது வருந்த தக்க செய்திதான். திருநெல்வேலியில் இருந்து மிக அருகில் இருக்கும் இந்த சிறப்பான தலத்திற்கு செல்ல முயல்வோம், ஈசனருள் பெறுவோம்.
தென்னாடுடைய சிவனே போற்றி!
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!.
பி.கு: கோடகநல்லூர் சிவன் கோவில் மற்றும் பெருமாள் கோவில் படங்கள் கூகிளாண்டவர் அருளியது. இப்படங்களை இணையத்திற்கு அளித்த நல்லுள்ளங்களுக்கு நன்றி.