Showing posts with label annabhishekam. Show all posts
Showing posts with label annabhishekam. Show all posts

Thursday, November 10, 2011

அன்னாபிஷேகம்





பல விசேஷ தினங்களிலும் ஈசனுக்கு பலவித அபிஷேகங்கள் நடந்தாலும், அன்னாபிஷேகம் என்பது ஐப்பசி-பெளர்ணமியில் மட்டுமே செய்யப்படுகிறது. நானறிந்தவரையில் தமிழகத்திலுள்ள எல்லாக் கோவில்களிலும் இன்று மட்டுமே அன்னாபிஷேகம்.

அபிஷேகப்ரியனான ஈசனுக்கு எழுபது விதமான பொருட்களால் அபிஷேகம் செய்யச் சொல்லப்பட்டிருக்கிறது, அதில் அறுவடையாகி வரும் நெல்லை அரிசியாக்கி, அதனைச் சமைத்து சுத்த அன்னத்தால் அபிஷேகம் செய்வதும் ஒன்று. இதனால் உணவுத் தட்டுப்பாடு இல்லாது இருக்கும் என்று கூறுகிறார்கள். வெகுசில இல்லங்களில் கூட, தங்களது இல்லத்தில் வழிபடப்படும் சிவலிங்கங்களுக்கு அன்னாபிஷேகம் செய்கிறார்கள்.


அன்னாபிஷேகத்தை தரிசிப்பதன் மூலம் அன்று கோடிலிங்கதரிசனம் செய்த பலன் என்று கூறியிருக்கிறார்கள் பெரியவர்கள். அதாவது அன்னாபிஷேகத்தின் போது அதற்கு உபயோகமாகும் ஒவ்வொரு பருக்கை அன்னமும் சிவலிங்கமாகிறதாம், ஆகவே அபிஷேகத்தின் போது பார்க்கும் அன்னங்கள் எல்லாம் சேர்ந்து கோடி லிங்கங்களை தரிசித்ததாகிறதாம்.


மதுரையில் அன்னாபிஷேகம் செய்து முழுப் புடலங்காயை வேகவைத்து அதனையே மாலையாக அணிவித்திருப்பார்கள். புரட்டாசி கடைசியில் நவராத்ரி வந்து, ஐப்பசியில் ஒரே பெளர்ணமி வருமாயின் மதுரையில் அம்பிகைக்கு சாந்தாபிஷேகமும், சுந்தரேசனுக்கு அன்னாபிஷேகமும் ஒரே நாளில் நடைபெறுவதைப் பார்த்திருக்கிறேன். இல்லங்களிலிருந்து அன்னாபிஷேகத்திற்கு அரிசியும், சாந்தாபிஷேகத்திற்கு இளநீர், அரைத்த மஞ்சள் போன்றவை கொடுப்பது மதுரைக்காரர்களுக்கு வழக்கம். சாந்தாபிஷேகம் என்பது நவராத்ரியில் அசுரர்களை வதை செய்து கோபத்தில் இருக்கும் அம்பிகையைக் குளிர்விப்பதற்காக என்று கூறுவார்கள்.

சாதாரணமாக சாயரக்ஷை பூஜையின் முடிவில் அன்னாபிஷேகம் செய்வது வழக்கமானாலும், தஞ்சை பிரகதீஸ்வரர், கங்கை கொண்ட சோழபுரத்து ஈசன் போன்றவர்களுக்கு உச்சிகால பூஜை ஆனவுடனேயே அன்னாபிஷேகம் செய்யப்படுவதாகத் தெரிகிறது. 

அன்னாபிஷேகத்தின் முடிவில் ஈஸ்வரனது மேல் சாற்றியிருக்கும் அன்னதை ஆறு, குளம், கடல்களில் கறைத்தும், கருவறைப் படிகள் மற்றும் இறைவன் முன்னால் படைக்கப்பட்ட அன்னம் மற்றும் காய்கள்,பக்ஷணங்கள் பக்தர்களுக்கு பிரசாதமாகவும் அளிக்கிறார்கள்.  இந்தப் பிரசாதத்தை ஸ்வீகரிப்பதன் மூலம் குழந்தை பாக்யம் கிட்டும் என்பது நம்பிக்கை.

"சோறு கண்ட இடம் ஸ்வர்கம்" என்ற பழமொழியைக் கேட்டிருக்கிறோம், அது சோற்றால் அபிஷேகம் செய்த சிவனை தரிசிப்பதால் ஸ்வர்கம் என்பதே என்கிறார்கள்.

 ஐப்பசி பெளர்ணமியாகிய இன்றைய நன்னாளில் நாமும் அருகிலுள்ள சிவன் கோவிலுக்குச் சென்று அன்னாபிஷேகத்தை தரிசிப்போம், இறையருளைப் பெறுவோம்.