

ருத்த்யாஸ்ம ஹவ்யைர் நமஸோபஸ்த்ய
மித்ரம் தேவம் மித்ரதேயம் நோ அஸ்து
அநூராதான் ஹவிஷா வர்த்யந்த:
சதம் ஜீவ சரத: ஸவீரா:
அதாவது, மித்ர தேவனை ஹோமத்தாலும், நமஸ்காரத்தாலும் உபசரித்து நிறைவு காண்போமாக!. மித்ரனே எமக்குக் கொடையருள்வாயாக!, அநூராதா நக்ஷத்திரங்களை அவியளித்துப் போற்றி வளர்த்தவாறு நாங்கள் பராக்ரமசாலிகளோடு நூற்றாண்டுகள் வாழ்வோமாக! என்று பொருள். இங்கு பராக்ரமம் என்பது உடல் வலிமை மற்றுமன்றி புலன்களை வெல்லுதலும் வீரமாகக் கொள்ள வேண்டும். அநூராதா நக்ஷத்திரங்கள் என்று கூறியுள்ளதன் காரணம் இந்த நக்ஷத்திரத்திற்குத் தொடர்புடைய விசாகத்தைச் சேர்த்தே. விசாகத்துக்கு 'ராதா'என்று ஒரு பெயர் உண்டு. அடுத்தநக்ஷத்திரமான அனுஷம் 'அநூராதா'. ராத்/ராதா என்றால் மகிழ்ச்சி, ஆராதனை, செழிப்பு போன்றவற்றைக் குறிக்கும். இவ்வாறாக சிறப்பான நக்ஷத்திரத்தில் உதித்து, நமக்கெல்லாம் ஆன்ம செழிப்பினையும், ஆராதனைக்கு வழிகாட்டியாகவும் உள்ள பரமாசார்யார் கருவிலேயே திருவுடையார் என்றால் மிகையல்லதானே?.மேலே கூறிய வேத வாக்யத்தின் படி நூறு வருஷங்கள் வாழ்ந்து நம்மை வழிப்படுத்தினவர். ஆஹா! அவரது வாழ்வும் வேதமும் எப்படியெல்லாம் பொருந்துகிறது என்று பார்க்கப்-பார்க்க பரவசமன்றோ?.
சாதாரணமாக ஜீவன் முக்தர்களது ஜெயந்தி என்பது அவர்களது பிறந்த திதியை வைத்தே சொல்லப்படுவது. அது மட்டுமல்லாது சாந்திரமானப்படி/செளரமானப்படி என்பதில்லாமல் ஒரு தினத்தில் பரமாசார்யரது ஜெயந்தி கொண்டாடுவதென்றால் அது பிறந்த திதியை அடிப்படையாக வைத்துக் கொள்ளலாம். வைகாச சுக்ல பஞ்சமி (ஆதிசங்கரர்), ராம நவமி, விநாயக சதுர்த்தி, கோகுலாஷ்டமி,என்பது போல பரமாசார்யரது ஜன்ம தினம் கொண்டாட வேண்டுமானால் அந்த புண்ய தினம், வைகாச மாத பெளர்ணமைக்கு அடுத்த தேய்பிறைப் பிரதமை.
ப்ரதமையில் சுபகார்யம் செய்யக்கூடாது என்ற பொதுக் கருத்து உண்டு. ஆனால் க்ருஷ்ண பக்ஷ ப்ரதமை திருவிழாக்கள் ஆரம்பிக்க, கோவில்களில் கொடியேற்றம் போன்றவற்றுக்கு விசேஷமாக ஜ்யோதிஷத்தில் சொல்லப்பட்டிருக்கிறதாகத் தெரிகிறது. பாக யஜ்ஞயங்களில் வரும் ஸ்தாலீபாகம், மற்றும் இஷ்டி போன்றவை ப்ரதமையில் செய்யவேண்டியதே!. வைதீகம் தழைக்கவந்த மஹானை ப்ரதமையில் வணங்கிடுதலும் சரிதான் என்றே தோன்றுகிறது. இதுமட்டுமன்றி, பரமாசார்யாரின் இஷ்ட தெய்வம் காமாக்ஷி காஞ்சியில் ஆவிர்பஹித்ததும் ஒரு தேய்பிறை பிரதமையில் தான் என்று தெரிகிறது.
இவ்வாறான விசேஷ பலன்களைக் கொண்ட தினத்தில் மீண்டும் சங்கர விஜயம் இந்த பூலோகத்தில் ஆரம்பித்தது. நம் கண்முன்னே வாழ்ந்து காட்டிய ஞான சீலர், கர்மா, பக்தி, ஞானம் ஆகியவற்றில் ஏதோ ஒன்றை மட்டும் இல்லாது மூன்றையும் கைக் கொண்டு நம்மை உய்விக்க வந்த உத்தமர். இன்றைய தினம் (07/06/09) அவரது ஜயந்தியாக உலகம் முழுவதிலுமுள்ள அவரது சிஷ்யர்களால் கொண்டாடப்படுகிறது. பரமாசார்யாருக்கு நாம் செய்யும் பூஜை என்பதில் முதலாவதானது அவர் சொற்படி வாழ்தலே!. நாமும் அவரை படங்களிலும், சிலா ரூபத்திலும் மட்டும் வணங்குவதுடன் நில்லாது அவரது சொற்களின்படி நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள, வைராக்யம், தவம் போன்றவை சித்திக்க வேண்டுவோமாக!.
ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!
காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!
[பரமாசார்யார் தேகவிதேகம் அடைந்த நாளில் எனது தந்தை கூறியதை அடிப்படையாகக் கொண்டு எழுதியது இக்கட்டுரை]