Showing posts with label சரணாகதி. Show all posts
Showing posts with label சரணாகதி. Show all posts

Thursday, July 3, 2008

பக்தி சில எண்ணங்கள்......பகுதி -2


பல மாதங்கள் கழித்து நண்பனுடன் சில நாட்கள் முன் சாட்டினேன். கடந்த முறை சாட்டியதை தொடரவே நினைத்தாலும், திவாண்ணாவின் பதிவுகள் பக்கம் பேச்சு திரும்பியதால் கர்மா, கர்மயோகம் ஆகியவற்றுக்கான வேறுபாடு, ஞான யோகம், பக்தி யோகம் என்று எங்கோ சென்றுவிட்டோம். ஞான மார்க்கத்தில் இருக்கும் யம, நியம, ப்ராணாயாம, தாரண, ஆசன, சமாதி போன்றவை பற்றியெல்லாம் பேசி, இன்றைய நிலையில் அதனை செயல்படுத்துவதில் இருக்கும் கஷ்டங்களையும், பக்தி யோகத்தில் இருக்கும் 32 ப்ரம்ம வித்தைகள் என்ன என்று தெரிந்தவற்றை பட்டியலிட்டு, முடிவாக பக்தி யோகமும் சராசரியான என் போன்றவர்களுக்கு அல்ல என்றே முடிவுக்கு வந்தோம். எத்தனையோ நெறிகள். வேதம் சொல்லும் ஓராயிரம் தர்மங்களையும் இன்றைய காலத்தில் செய்ய முடிகிறதா?. நித்ய கர்மாக்களையே நம்மிடத்து எவ்வளவு பேர் செய்கிறோம்?.


இவ்வாறாக எந்த யோகமும், செய்ய இயலாத நமக்கு இறையருள் கிடையாதா என்று பேசிக்கொண்டிருக்கையில் சட்டென நினைவில் வந்தது "த்வமேவ உபாயபூதோ மே பாவ இதி ப்ரார்தநா மதி: சரணாகதி:" என்னும் கீத வாக்கியம், கீதாம்மா வாக்கியமல்ல....கீதையில் கண்ணன் சொன்னது. அதாவது கர்ம/பக்தி/ஞான யோகம் செய்தால் அடையும் கிடைக்கும் பலன்களை, பரமாத்மாவின் திருவடியைப் பற்றி சரணாகதியானாலேயே கொடுத்து விடுகிறானாம். 'என்னையே சரணடை' என்றும் அடைந்தால் எளிதில் பலனளிக்கிறேன் என்றும் கூறுகிறான் கண்ணன். இறைவன் திருவடியை பற்றிக் கொள்வதே சிறந்தது, அதுதான் சரணாகதி. "நீ தான் உபாயம்; நீ தான் உபயம்; பலனும் நீயே" என்பதாக பிடித்துக் கொள்வது சரணாகதி.


ஞான யோகம், பக்தி யோகம் போன்றவற்றில் இருப்பது போல சரணாகதிக்கும் சில விஷயங்கள் உண்டு. ஐந்து அங்கங்களுடன் கூடிய ஆறாவதான ஆத்ம சமர்ப்பணம் தான் சரணாகதி. ஐந்து அங்கங்கள் நம்மிடம் இருக்க வேண்டும், அத்துடன் கூடிய ஆத்மாவை அப்படியே சமர்ப்பித்தலே சரணாகதி. ஆக ஐந்து அங்கங்கள், ஆறாவதாக சரணாகதி. சரி, அதென்ன ஐந்து அங்கங்கள்?.


'அநூகூல்யஸ்ய சங்கல்ப: ப்ரதி கூல்யஸ்ய வர்ஜனம் ரக்ஷிஸ்யதிதி விஸ்வாஸோ கோப்த்ருத்வே வரணம் ததா ஆத்மநிஷே கார்பண்யே ஷட்விதா சரணாகதி'


[இதைத்தான் ஆண்டாள், "உய்யும் வகை ஆறை எண்ணி" (திருப்பாவை 2ஆம் பாடல்) என்று கூறினாள் என்று நண்பன் கூறினான். இதுபோன்றே அவன் பெரிய திருவந்தாதியிலும் ஒரு பாடல் சொன்னான். எனக்கு அந்த தொடர்பு தெரியவில்லை, ஆகவே அந்த பாடலை இங்கு தரவில்லை. நினைவில் வருகையில் அதை பின்னூட்டமாகத் தருகிறேன். ]


ஒவ்வொரு அங்கமாக பார்க்கலாம். "அனுகூலஸ்ய சங்கல்பம்" என்றால் இறைவனிடமும், பக்தர்களிடமும் ப்ரீதியுடன் இருத்தல் என்பதே இது. சாஸ்திரம் சொல்வதை கேட்பதும், அதன்படி நடத்தலும், இறைவனது கல்யாண குணங்களைப் பாடுவதும், போற்றுவதும், பாகவதோத்தமர்களிடத்து ப்ரியத்துடன் இருத்தலும் ஆலயங்களுக்கு சென்று வணங்குதலுமாக பகவான் நம்மை விரும்பும்படியாக நாம் இருக்க வேண்டும். இறைவன் எவனை விரும்புகிறானோ அவன் இறைவனால் அடையப்படுகிறான் என்கிறது கடோபநிஷத். சரி, பரமாத்மா தன்னிஷ்டத்துக்கு யாரை வேண்டுமானாலும் விரும்பி செல்வான் என்றால் என்ன பொருள்?. யாரையெல்லாம் விரும்புவான்?. வேதத்திற்கு அனுகூலமாய், கர்மானுஷ்டானங்களை விடாமல் செய்து கொண்டு, ஸ்வதர்மத்தை விடாது அனுசரித்துச் செல்பவனை பகவான் விரும்புவான். பகவானுக்கு எது ப்ரீதியோ அதை கட்டாயம் செய்ய வேண்டும். அதுதான் 'அனுகூலஸ்ய சங்கல்பம்'.


"பர்திகூலஸ்ய வர்ஜனம்" என்றால் என்ன?, அனுகூலத்துக்கு தடையாக இருப்பதை விலக்குதல் ப்ரதிகூலம் என்று சொல்லலாம். குடும்பத்தில் எல்லோரும் கோவிலுக்கு செல்ல நினைக்கையில் ஒருவர் அதை வேண்டாமென சொல்லும் போது, வேண்டாம் என்பவரை விடுத்து மற்றவர்கள் செல்ல வேண்டும். இறைவனை அடைவதற்கு ப்ரதிபந்தமாக இருப்பவற்றை மொத்தமாக விலக்க வேண்டும் என்பதே இரண்டாம் அங்கம்.


"ரக்ஷிஸ்யதிதி விஸ்வாசம்" - இறைவனிடத்து பூரணமான நம்பிக்கை என்பது மிக அவசியம். குமரில பட்டர் பெளத்தம் கற்பதற்காக பெளத்த மதத்தவராக நடித்துவரும் காலத்தில் பெளத்த மடலாயத்தில் இருப்பவர்கள் குமரிலரின் உண்மை நிலை அறிந்து அவர் செய்யும் வஞ்சகமான செயலுக்கு தண்டனையாக அவரை வஞ்சமாக கொல்ல மடாலயத்தின் மேல் மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொல்ல முயல்கின்றனர். அப்போது பட்டர் தனது ப்ரார்த்தனையாக 'நான் நம்பும் வேதம் உண்மையானால் அது என்னைக் காக்கட்டும்' என்று கூறுகிறார். அவர் தனது கால் ஊனமாவதுடன் உயிர் பிழைக்கிறார். அப்போது அசிரீரி பின்வருமாறு சொல்கிறது, 'உனக்கு வேதத்தின் மீது முழு நம்பிக்கை இல்லை, 'உண்மையானால்' என்று சந்தேகத்துடனேயே இருந்ததால் உன் கால்களை நீ இழக்க நேரிட்டது'. ஆக பூரண விஸ்வாசம் எப்படியிருக்கக் கூடாது என்பதற்கு இது எடுத்துக்காட்டு. இது போன்று, இறைவனது திருவடியை பற்றும்போது, அவன் ரக்ஷிப்பானா?. கைவிட்டுவிடுவானா?, கைவிட்டால் என்ன செய்வது? என்ற மாற்று சிந்தனைகளே இருக்கக் கூடாது. இவ்வாறான சந்தேகத்துடன் திருவடியைச் சரணடையக் கூடாது. பூரண விஸ்வாசத்துடன், நீயே கதி என்பதாக சரணடைய வேண்டும்.

ஸ்ரீ வைஷ்ணவத்தில் ந்யாஸ தசகம் என்று ஒரு நூல் இருக்கிறது. ஸ்வாமி வேதாந்த தேசிகனால் சொல்லப்பட்ட நூல் இது. அதில், 'விஸ்வாஸ ப்ரார்த்தநா பூர்வம் ஆத்மரக்ஷா பர்மத்வய' என்கிறார். அதாவது, ஆத்மாவை ரக்ஷிக்க வேண்டிய பொறுப்பு இறைவனுடையது என்று அவனிடம் விஸ்வாசத்துடன் ஆத்ம சமர்பணம் செய்தல் என்பது அடுத்த அங்கம்.


எனவே, யோகம் எல்லாம் பண்ண முடியல்லையே, கடைத்தேறுவது எப்படி என்று விசாரம் செய்துகொண்டே காலம் கழிக்காது, நித்திய கர்மாக்களை முடிந்தவரை கண்டிப்பாகச் செய்து கொண்டு "அவனருளால் அவன் தாள் பணிந்து" பூரண சரணாகதி செய்வோம்.