இரு வருஷங்கள் முன்னர் ஒரு பிரதோஷகாலத்தில், நண்பர் ஒருவரிடத்தில் நான் கேட்டிருந்த ஸ்ரீ சந்திர சேகர பாரதீ ஸ்வாமிகளது வரலாறு புத்தகவடிவில் கிடைத்தது. இந்த புஸ்தகம் முழுவதுமே திகட்டாத விருந்து என்றால் மிகையல்ல. புஸ்தகம் முழுவதிலும் ஸ்ரீ சந்திர சேகர பாரதீ ஸ்வாமிகளது திருஷ்ட, ஸுக்ஷ்ம விசேஷங்களை ஆசார்ய பக்தியில் சிறந்த ஸ்ரீ ஆர்.கிருஷ்ணஸ்வாமி என்பவர் எழுதியிருக்கிறார். இவ்வாசிரியர் பிற்காலத்தில் சிருங்கேரி ஆசார்யர்களிடம் ஸன்யாசம் பெற்று ஸ்ரீ ஞானாநந்த பாரதீ என்ற தீக்ஷா நாமத்துடன் விளங்கியவர் என்று தெரிகிறது.
இந்த இடுகை ஸ்ரீ ஞானாநந்த பாரதீ ஸ்வாமிகள் எழுதிய ஸ்ரீ குருகிருபா விலாஸம் என்னும் நூலில் இருந்து படித்த ஒரு விஷயமே இங்கு நமது சிந்தனைக்காக. புஸ்தகத்தைப் படிக்கத் தந்த நண்பருக்கும், இந்த புஸ்தக வெளியீட்டாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு சமயம், ஸ்ரீ சந்திர சேகர பாரதீ அவர்களின் தரிசனத்திற்கு வந்த பக்தர், தமது லோகாயதமான கர்மாக்கள் எல்லாம் முடிந்துவிட்டதாகவும், நிறைய நேரம் இருப்பதாகவும் அதை நல்ல வழியில் செலுத்த, தமக்குத் தோன்றும் பல வழிகளைக் கூறி போது ஜனங்களுக்கிடையே அவற்றைச் செயல்படுத்த பெரியவாளது ஆசிகள் வேண்டும் என்று விஞ்ஞாபிக்கிறார். ஆசாரியார் பல வித கேள்விகள் கேட்ட பின்னர், 'உங்களுக்கோ குடும்ப விஷயமான கவலையில்லை என்று தெரிகிறது. நமது சமயத்தில் தீவிரமான சிரத்தையும், அவகாசமும் இருக்கிறது என்றும் தெரிகிறது. இந்த காலத்தை உபயோகித்துக் கொண்டு நீங்கள் மேன்மேலும் பலவித கர்மானுஷ்ட்டானங்களைச் செய்து கொண்டு, இன்னும் உங்களை மேம்படுத்திக் கொள்ளலாமே?. அதில் அக்கறை செலுத்தாமல் ஊரார் விஷயமாகப் பிரவிருத்தி செய்வதில் என்ன அர்த்தம்?'. என்று கூறுகிறார். மேலும், ஜன சமுதாயம் என்பது தனித் தனி ஜனங்களின் சேர்க்கையே. அவை ஒவ்வொரு மனுஷனும் தமது ஸ்வதர்மத்தை அனுஷ்டித்துத் தனக்கு இருக்கிற அக்ஞானத்தைப் போக்கடிக்க பிரயத்தனப்பட்டானேயானால் அதுவே சமுதாயத்தின் உன்னத கதிக்கு காரணமாகும். இதை விட்டு ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு உபதேசம் செய்யத் தலைப்பட்டால் அவை பிரயோஜனம் இன்றி வீண் வியவஹாரங்களையும், மனஸ்தாபத்தையுமே ஏற்படுத்தும். நம்மை உத்தாரணம் செய்து கொள்வதற்கே எத்தனையோ ஜன்மங்கள் தேவையாக இருக்கிறது, இதில் மற்றவர்களை உத்தாரணம் செய்ய நினைப்பது கொஞ்சமேனும் நியாயமும் இல்லை, ஸாத்தியமும் இல்லை.
"நாப்ருஷ்ட: கஸ்யசித் ப்ரூயாத்" என்பதாக 'கேட்காமல் இருக்கும்போது யாருக்கும் சொல்லாதே' என்று சொல்லப்பட்டிருக்கிறது. கேட்கிற விதமும் வெறும் குதுகலத்தினால் இல்லாமல் அத்யாத்மப் பசியாக இருந்தால் மட்டுமே சொல்லப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 'தத்வித்தி ப்ணிபாதேன பரிப்ரச்னேன ஸேவயா:" என்பதாக நன்கு நமஸ்கரித்து சேவை செய்து, திரும்பத் திரும்ப கேட்டு அதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் வந்தால் மட்டுமே உபதேசம் செய்யப்பட வேண்டும் என்று கீதையில் கூறப்பட்டுள்ளது.
ஆகவே பசிப்பவன் தானே உணவினை தேடிக்கண்டு பிடிப்பான் என்று கூறுகிறார். ஆகவே, நாமும் நல்ல குரு கிடைக்கவும், குரு கிடைத்துவிட்டால் அவரிடத்தில் முழுமையாக சரணாகதி செய்து உய்யத் தலைப்படுவோம்.
[ஸ்ரீ சந்திர சேகர பாரதீ ஸ்வாமிகளது பீடாதிபத்யத்தின் ஆரம்ப காலத்திலேயே ஸ்ரீ பரமாசாரியார் காம கோடி மடத்தின் பீடாதிபத்யம் ஏற்றவர். ஸ்ரீ சந்திர சேகர பாரதி ஸ்வாமிகள் பீடாரோஹணம் 1912 முதல் 1954 வரையில். பரமாசாரியார் தனது பால்ய காலத்தில், சில விஷயங்களை சந்திர சேகர பாரதி ஸ்வாமிகளிடம் தமது சிஷ்யர்களை அனுப்பி தெளிவு செய்துகொண்டதாகச் சொல்வார்கள். இவர் துங்க பத்ராவில் ஜல சமாதியானவர். நரசிம்ஹ வனத்தில் துங்கா நதிக்கரையில் இவர் நீரில் அமிழ்ந்த இடத்தில் ஓர் மண்டபமும், அவரது பூத உடல் நரசிம்ஹ வனத்தில் அவரது குருவின் அதிஷ்ட்டானத்தருகிலேயே வைத்து பிருந்தாவனம் கட்டப்பட்டு இருக்கிறது]
