Showing posts with label கோவிந்த ஸ்வாமிகள். Show all posts
Showing posts with label கோவிந்த ஸ்வாமிகள். Show all posts

Saturday, February 7, 2009

எம்பாரைப் போற்றுவோம்...


இன்று ஸ்ரீ வைஷ்ணவ ஆசாரியர்களுள் ஒருவரான எம்பார் திரு நக்ஷத்திரம், தை புனர்வசு. சதா சர்வ காலமும் தமது ஆசார்யரது (உடையவர்) நிழலாக வாழ்ந்தவர் எம்பார் ஸ்வாமிகள் என்று துறவற நாமம் பெற்ற கோவிந்தப் பெருமாள். இவர் அவதரித்த ஊர் ஸ்ரீ பெரும் புதூருக்கு அருகில் இருக்கும் மதுர மங்கலம் என்னும் ஊர். இவரது தாய்-தந்தையர் பெயர் முறையே, பெரிய பிராட்டி, கமலநயன பட்டர் என்பதாம். எம்பார் முதலில் சைவ சமயத்தில் ஈடுபாடு கொண்டிருந்திருக்கிறார். அவரை ஸ்ரீ-வைஷ்ணவத்தை, குலாசாரத்தினை பின்பற்ற வைத்த பெருமை பெரிய திருமலை நம்பிகளைச் சாரும் என்று படித்த நினைவு. பெரிய திருமலை நம்பிகளுடன் வாழ்ந்து எல்லா சாஸ்திர்னக்களையும், திவ்யப்ரபந்தங்களையும் கற்றவராம்.



இவரது இரக்க குணத்திற்க்கு ஈடாக ஒரு நிகழ்ச்சியைச் சொல்கின்றனர். ஒரு சமயம் நந்தவனத்தில் புஷ்ப கைங்கர்யத்திற்க்காக பூக்களைக் கொய்து கொண்டு இருந்த பொழுது ஒரு பாம்பு தனது நாவினை வெளியே நீட்டிக்கொண்டு மிகுந்த வேதனையுடன் இருப்பதைக் கண்டாராம். அந்த அரவத்தின் நாவில் முள் தைத்திருப்பதால் அது வேதனையுடன் இருப்பதை அறிந்த ஸ்வாமிகள், அம்முள்ளை எடுத்து அப்பாம்பின் வேதனையைத் தீர்த்தாராம். இவரது ஜீவ காருண்யத்திற்கு இதைவிட ஒர் உதாரணம் சொல்ல முடியுமா என்ன?


ஒருமுறை உடையவர் ஸ்ரீரங்கத்தில் ராமாயணப் பிரவசனத்தை முடித்துக் கொண்டு ஊர் திரும்புகையில் திருமலை நம்பிகளிடத்து விடைபெறுகிறார். அப்போது திருமலை நம்பிகள், உடையவரிடம் பிரவசனத்தின்னை நடத்திக் கொடுத்தமைக்கு நன்றி பகன்று, இவ்வரிய பிரவசனத்திற்கு சம்பாவனை தர தன்னிடம் ஏதும் இல்லையே என்று வருந்தினாராம். அப்போது உடையவர், அவ்வாறு சம்பாவனை தருவதாக இருந்தால், 'திருத்திப் பணி கொண்ட கோவிந்தனை' தன்னுடன் அனுப்பித் தாருங்கள் என்று கேட்டாரம். நம்பிகளும் கோவிந்தப் பெருமாளை அழைத்து, இன்று முதல் உடையவரை தானாக (நம்பிகளாக) நினைத்து இருப்பீராக என்று கூறி அனுப்பியதாகச் செய்தி.


சிறு வயதில் யாதவப் பிரகாசரது குருகுலத்தில் உடையவருடன் கல்வி கற்றிருக்கிறார் கோவிந்தப் பெருமாள். அப்போது உடையவருக்கு தீங்கு விளைவிக்க முயன்றபோது, அதிலிருந்து காப்பாற்றியவர். பிற்காலத்தில் உடையவரை விட்டகலாது, நிழல் போல் தொடர்ந்ததால் இவருக்கு 'ராமானுஜ பதச்சாயா' அதாவது ராமனுஜரின் நிழல் என்று போற்றப்படுகிறார்.


இவர் திருமணமானவராகிலும், இல்லற தர்மத்தில் நாட்டமில்லாது, எப்போதும் ஆசார்யரது திருவடியில் இருந்திருக்கிறார். இச்சமயத்தில் தமது தாயின் கட்டாயத்தினால் தனது மனைவியை சந்தித்து அந்தர்யாமியான இறைவனது குண விசேஷங்களை எடுத்துரைத்துள்ளார். இவரது வைராக்கியத்தை அறிந்த உடையவர், கோவிந்தப் பெருமாளுக்கு துறவறம் அளித்து தனது பெயரைச் சுருக்கி 'எம்பார்' என்று துறவற நாமம் கொடுத்தாராம். இவர் எப்போதும் ஆசாரியானே சர்வம் என்றும், பெருமாளது லீலாவிபூதிகளே வாழ்க்கை என்று காட்டியிருக்கிறார். இவரது நன்னாளான இன்று இவரைப் பணிவோம். இறைவன் இவரைப் போன்ற குருபக்தியை நமக்கும் அளிப்பாராக.


சில வருடங்கள் முன் ஸ்ரீ ஏ.எம்.ஆர் அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையே இவ்விடுகைக்கு ஆதாரம். படித்ததில் நினைவு இருந்ததை வைத்து எழுதியிருக்கிறேன். தவறுகள் இருந்தால் அது எனது நினைவாற்றல் குறைவே.